ஏன்? ஏனம்மா?

ஏன்? ஏனம்மா?
இத்தனை வேகம்
உ‎ன் வடிவம் பொலிவாக்கிட
பல்லாயிரம் உயிர்கள்
உதிர்ந்த சோகம்

ஏ‎ன்? ஏனம்மா?

பிய்த்து எறியபட்ட
எம்பிஞ்சுகளுக்கு தெரிந்திருக்கது.
உ‎ன் அதிர்வி‎ன் அர்த்தம்
தாய் மார்புச்சூடென்று நினைத்திருக்கும்..

தமிழ்த்தாகம்
தீரவில்லையோ
பொங்கிப் புகுந்த
உ‎ன் உவர் வெள்ளத்திற்கு

உயிரோடு ஒவ்வொரு நாளும்
உணவுக்காக
உன்மடியில் மிதந்தவனுக்கு
உன்னாலே
மரணப் பரிவட்டம்

தினமும் செத்துசெத்து
வாழ்ந்தவனுக்கு
மரண வாழ்வும்
கொந்தளிப்பில்
ஏ‎ன்? ஏனம்மா?

வணங்கும் வடிவில் எல்லாம்
வந்து வழக்கு தீர்க்கிறாயே.

ஏன்?
ஏனம்மா?

இருளின் வீதிகளில்

தேய்தலும் வளர்தலுமாய்
உன் நினைவுகளின்
ஆக்கிரமிப்புகளினூடாக
தொடர்கிறதென்
தனிமைப்பயணம்
நிலவோடு

வெளிச்ச இரைச்சல்களினால்
உணர்ந்திட முடியாது போன
உன் நேசத்துளிகளை
தேடவே
இமை மூடுகிறேன்
இருளின் வீதிகளில்

அப்பாவின் சட்டை

முன்னும் பின்னும்
மிடுக்காய் நடந்து
மீசையைத் தடவி
கண்ணாடிக்கு அறிவித்தேன்
வளர்ந்துவிட்டேன் என்று.
அது
சிரித்துக்கொண்டே
பழைய நினைவுகளை
தோகை விரித்தது
நான் சட்டென
சிறுபிள்ளையாகிப் போனேன்

கைபற்றி நடைவண்டி பழக்க
விரும்பாது அவர் கை உதறி
தனியாய் ஓட்ட முயன்று
விழுந்தெழுந்த போது
புன்னகையோடு முட்டித் தளும்பிய
கண்ணீர்

என் மலத்துணி கசக்கி கசக்கி
தேய்ந்து போன கைரேகைகள்

கோவத்தில் அடித்துவிட்டு
தோளில் எனை சுமந்து நடந்த
அந்த நீண்ட இரவு....

அவர் குணமுறிந்து
என் தேவைகள் தீர்க்க
நடத்திய உண்ணாவிரதங்கள்

என் ரகசியமும் பகிர்ந்திட
வைத்திட்ட
நட்பு(பூ).

நினைவுகள் கலைய
என் கர்வத்தின் காரணம்
உணர்ந்தேன்

அது என் உடல்மீதிருந்த
இறுக்கமான
அப்பாவின் சட்டை

தேசப் பற்று

ஜெய்கிந்த்! ஜெய்கிந்த்!!
சட்டையில்
கீரீன் கார்ட்

நிவா''ரணம்''

ஓடிக் கொண்டிருக்கும் வரை
மதிப்பற்ற இதயம்
நின்றதும்
கிடைக்கிறது
இலட்சம் ரூபாய்
கேட்காமலே வழங்கப்படுகின்றன
பசி தூண்டா வாக்கரிசிகள்.
மாறுவதேயில்லை
மரணக்கும் போது
ம(மி)திக்கப்படும்
வறுமை.


புதைக்கும் முன்னமே
அழுகுகின்றன
அவர்கள் உடல்கள்
கொத்தித் தின்னும்
அரசியல் புழுக்களால்

எனக்கு பிடித்த வலைப்பூக்கள்

என் பெயரை பரிந்துரைத்த அப்பிடிபோடு(மரம்) அவர்களுக்கும், எனக்கு அந்த செய்தியைத் தெரியப்படுத்திய மதி கந்தசாமி அவர்களுக்கும் எனது நன்றி.

நான் தீவிரமாக வலைப்பதிவுகளில் பங்கு பெறுவது கடந்த ஒரு மாதமாகத்தான். அதனால் நிறைய பேருடையதை வாசிக்கவில்லை. வாசித்தவைகளில் என் மனதிற்கு பிடித்த மூன்று பதிவுகளை இங்கு குறிப்பிடுகிறேன்...

1. பரஞ்சோதியின் சிறுவர் பூங்கா:
தன் மேல் வெளிச்ச வட்டம் விழ வேண்டும் என்று துடிப்போடு இணையத்தில் இயங்கி வருகிற பலருக்கு மத்தியில் மெல்லிய நதியாய் சலனமில்லாமல் பயணத்தை தொடர்ந்து கொண்ட வலைப்பூ இது. விதைக்கின்ற ஒரு நல்ல விதை நிச்சயம் நல்ல பலனைத் தரும். அது போலத்தான் குழந்தைகள் வளர்ப்பும். அன்பையையும், சகோதரத்துவத்தையும் குழந்தைகளிடம் நாம் விதைத்தால் அது பிற்காலத்தில் உலகை அமைதி வனமாக்கி காட்டும். எளிய கதைகள், கதைகளின் வாயிலாக நீதிகள் என தேனைக் கலந்து தருகிறார். குழந்தைகளுக்கான இதுவும் இலக்கியமே. இன்னும் சித்திர கதைகள் படங்கள் எனத் தந்தால் குழந்தைகளை எளிமையாக கவரும். குழந்தைகள் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை பரஞ்சோதி தொடுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

2. சிவாவின் கீதம் சங்கீதம்:
ஓய்வு எல்லோருக்கும் பிடித்தமானது. பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் நம்மை நாமேதான் உற்சாகப்படுத்தி கொள்ள வேண்டி இருக்கிறது.
மரத்தின் நிழல் போல் வீசும் தென்றல் காற்று போல் நமக்குத் தேவையான மகிழ்வைத் தரக்கூடிய பொதுகுணங்கள் சிலவற்றிற்கு உண்டு. அதில் முதன்மையானது இசை. எந்த வித எல்லைகளுக்கும் சுருங்கி விடாதது இசை. கேட்கும் ஒலிகள் வேண்டுமானால் மனங்களுக்கு ஏற்ப வித்தியாசப்படலாம். ஒரு கலைஞனுக்கு சிறந்த ரசிகனாக இருப்பதும் ஒரு கலையே. அதிலும் ரசனையும், அதைப்பற்றிய அறிவும் இருந்து விட்டால் இன்னும் குதுகலமே. எனக்கு அதுமாதிரித்தான் இளையராஜாவின் இசை. அது எனக்கு பல சுகங்களை தந்திருக்கிறது. இளையராஜா இசை பிடிக்கும். அந்த இசை விரும்பும் எவரும் என் உள்வட்டத்திற்குள் வந்து விடுவதை என்னால் எப்போதுமே தவிர்க்க முடிவதில்லை. அந்த வகையில் சிவாவை எனக்கு நெருக்கமானவராகவே உணருகிறேன்....

3. ஆசிப் மீரான்:

சாத்தான்குளத்து வேதத்தை பற்றி இந்த பூதம் சொல்லித்தான் தெரிய வெண்டுமா என்ன? ஆளை கிறங்கடிக்கும் வட்டார நடை, அங்கதம் தொனிக்கும் சமூக பார்வை, தெளிவான சிந்தனை ஆழ்ந்த இலக்கிய அறிவு, அதை வெளிக்காட்டிக் கொள்ளா நிறை குடத் தன்மை என எழுதிக் கலக்கும் அன்பர், நண்பர். கை தேர்ந்த சிறுகதை எழுத்தாளர். இவரின் நல்லா இருங்கடேக்காகாவே ரசிகர்களாக இருப்பவர் பலரில் அடியேனும் ஒருவன். ஆனால் அப்பப்ப தலை மறைவாயிடுவது ஒன்றுதான் ஒரு குறை

இந்த மூவரும் இந்தபதிவுத்தேரை நகர்த்தி செல்ல கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்
முத்துகுமரன்

(பி.கு. என் உடல்நலம் விசாரித்த அனைத்து நண்பர்களின் அன்புக்கு எனது நன்றிகள்.)

இதய அஞ்சலி - பெரியார் சீலன்

நேற்று அந்த செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்தே போய் விட்டேன். அது எனது நண்பனின் தந்தையின் மரணம் என் பெற்றோரை தவிர்த்து நான் அம்மா அப்பா என்று கூப்பிட்டது அவர்களைத்தான். கிட்டத்தட்ட அது எனது இரண்டாம் தாய் வீடு. அவர்கள் வீட்டின் 5 வது பிள்ளையாகவே நான் வலம் வந்தேன். அப்பாவும் சரி அம்மாவும் சரி. அவர்கள் 4 பேருக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் காட்டியது கிடையாது. பசித்தால் நானாகவே தட்டை எடுத்து சாதம் போட்டு சாப்பிட்டுக் கொள்வேன் கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து வரும் உறவு இது. அப்பா ஒரு வாரத்திற்கு முன் இறந்துவிட்டார்கள் என்று என் தம்பி சொன்னபோது மனம் அறுபட்டு துடித்தேன். என் மனம் மேலும் வேதனைப்படக் காரணம் 15 நாட்களுக்கு முன் நான் கண்ட கணவு. அதில் பெரியார்சீலன் அப்பா இறந்துவிடுவது போலவும் நான் பாலாஅம்மாவை கட்டிக் கொண்டு விம்மி அழுவதாகவும் அண்ணன்கள் என் தோளைப்பற்றி அழுவதுமான கனவு அது, கனவில் நான் மொத்தமாக அழுது தீர்த்துவிட்டேன். இப்போது செய்தியறிந்தும் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழ வாய்ப்பில்லாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறேன். பெரியார்சீலன் உண்மையிலே பெரியார் சீலனாக வாழ்ந்தவர். இறுதிவரை, கடவுள் மறுப்பு, சுயமரியாதை, ஒழுக்கம், குறிப்பாக அவர் தன் குழந்தைகளுக்கு கொடுத்த சுதந்திரம், அவர்களின் கடவுள் நம்பிக்கையில் தலையிடாது வாழ்ந்தவர். நான் பலமுறை அவர்கள் வீட்டிற்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டையுடன் பலமுறை சென்றிருக்கிறேன். ஒரு முறை கூட எனது நம்பிக்கையை கிண்டல் செய்ததில்லை. எப்போதும் என்னடா முத்து செய்ற என்று அன்புடன் விசாரிப்பார். இன்று நண்பனின் தொலைபேசி எண் தொலைந்து விட்டது. எல்லா வகையிலும் தேடிப்பார்த்துவிட்டேன். என்று அம்மாவிடம் பேசுகிறோனோ அன்றுதான் என் பாரம் குறையும். என் சோகத்தை என் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன் நானறிந்த கவிதை மொழியில்.

இதயம் அறுப்பட்டுக் கிடக்கிறது அப்பா..
கேட்ட நொடியிலிருந்து
இதயம் அறுபட்டுக்கிடக்கிறது அப்பா.
இனி என்றும் பேசமுடியாது அப்பா
இனி என்றுமே பேசமுடியாதே அப்பா
ஏனிந்த தண்டனை அப்பா

எனக்கெல்லாம் ஞாபகம் வருதே
பழையது எல்லாம்
உங்கள் பாசமெல்லாம்
அய்யோ
அதை தடுப்பது எப்படி அப்பா

தாய்க்கு தலைமகன்
தந்தைக்கு கடைமகன் தானே
கடை மகன் நானின்று
கண்களின் நீரில் உங்கள் முகம் நிறுத்தி
கடைசியாய் பார்க்க முடியாமலே
போய்விட்ட தூரத்தில் நின்றின்று
துடிக்கிறேன் அப்பா
துடிக்கிறேன்

எப்படி பார்ப்பேன் அம்மாவை
இனி நீங்களில்லாமல்
நீங்களில்லாத அம்மாவை
எப்படி பார்ப்பேன்

என்ன பேசுவேன் அம்மாவிடம்
உங்களை பார்க்க வராததற்கு
என்ன காரணம் சொல்வேன் அப்பா
என்ன காரணம் சொல்வேன் அப்பா

எப்படி கழித்தேன் மகிழ்ச்சியாய்
அந்த நாளை
நீங்கள் இல்லாது தெரியாமலே
எப்படிக் கழித்தேன்
அந்த நாளை

எதற்கு என் மீதத்தனை
பாசம் உங்களுக்கு
ஏன் ஏன்
எல்லோரும் என்னை நேசித்தீர்கள்
வேதனையில் நானிங்கு
துண்டு துண்டாகிக் கிடக்கிறேன்

இப்படித் தவிப்பேன் என்றா
என் கனவில் இறந்தீர்கள்
அம்மாவை நான் கட்டியழ
பாருடா அப்பாவை
பாருடா அப்பாவையென
அம்மா சொல்லியழ
வாய் பொத்தி
நானும் அண்ணன்களோடு கதறியழ
எல்லாக் கடமையும் செய்யத்தான்
என் கனவில் வந்தீர்களோ
அத்துணை பாசமா அப்பா உங்களுக்கு?

கனவிற்கே நொறுங்கிவிட்ட எனக்கு
எப்படித் தாங்க முடியும் இதை
எப்படித் தாங்க முடியும் இதை
என்னடா பண்ற முத்து
என்னடா பண்ற முத்து
நீங்கள் கேட்பதுதான்
என் காதுகளில் நிறைஞ்சிருக்கு அப்பா
காதுகளில் நிறைஞ்சிருக்கு அப்பா

அழுது கொண்டுதான் இருக்கிறேன் அப்பா
அழுது கொண்டுதான் இருக்கிறேன் அப்பா
உங்களுக்கு கேட்குதாப்பா
என் அழுகை
உங்களுக்கு கேட்குதாப்பா
என் அழுகை

கனவிலாவது வந்து சொல்லுங்கள் அப்பா
கனவிலாவது வந்து சொல்லுங்கள் அப்பா

ஹைக்கூ.....

இது எனது முதல் ஹைக்கூ


ஊரெங்கும் வெள்ளம்
மூச்சு விடும்
ஆற்று மணல்கள்....

மரணச் சமன்

நீண்ட நாட்களாக
நிற்க காத்திருக்கிறது துடிப்பு...
அருகில் செல்லாமல்
நாடி பார்க்காமல்
நாள் குறிக்கப்பட்டிருக்கிறது
அவரவர் ஞானத்திற்கேற்ப

உள்ளிருக்கும் கறைகள்
சமனாகும்
நம்பிக்கை தந்தது.
காதில் விழுந்த
என்
மரணத்தின் பலன்கள்.

வாழ்க்கையெனும் ஓடம்

ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
அறிவிக்கிறது அவர்களை
வள்ளல்களாக

பட்டங்களை
பரிவட்டங்களை
சூட்டுகிறது
அவர்களின்
நன்கொடைகள்

உழைத்தவன்
உயிரைப் பொசிக்கிய
சாதனைகளை முழங்குகிறார்கள்
ஆயிரக்கணக்கான வீடுகளில்
அடுப்பெரிகிறது எங்களாலென்று


விதவைக் கணவன்களின்
விடுமுறை விண்ணப்பங்கள்
கப்பல்களாக மிதக்கின்றன
வள்ளல் குழந்தைகளின்
விளையாட்டில்

எதற்கு வேண்டுமந்த நாகரீகம்

அவர்க்கு
இனத்தை
இழிவு செய்வதென்பது சுதந்திரம்
எம் மானத்தை
பெருமை கொள்வதென்பது ஆதிக்கம்

நச்சு அம்புகளின்
ரத்தவெறிக்கு
மலர் ஒத்தடம் செய்வதுதான்
நாகரீகமென்றால்

எதற்கு வேண்டுமந்த நாகரீகம்

கனவின் முகங்கள் - 3

மழை ஓய்ந்த அதிகாலைப்பொழுதில்
மிகப்பிரமாண்டமாகவே
இருக்கிறதென் வீடு.
செம்மண் தோட்டத்தில்
என் உயர வாழைகளுக்கு நடுவே
மருதாணிச் செடி சாமரம்வீச
அரசனைப்போல கம்பீரமாய் நடக்கிறேன்.

நேர்த்தியாய் தோகை விரித்திருக்கும்
கீரைப்பாத்தியை கைகளால் தழுவ
தன் பனிக்கீரிடங்களை முத்துகளாய்
என் கைகளில் சூட்டுகிறது

புழக்கடை கிணற்று
நீரிறைத்தென்மேல்
ஊற்ற ஊற்ற
நனைகிறது
மனசு

சென்ற வருட கவிதைகள் - முத்தம்

உதிர்ந்த இலைகள்..
வெப்ப காற்று...
வெறுமை...
உலர்ந்த உதடு.
பாலையே
உன்னைதவறாக பொருள் கொண்டனரே
என் மக்கள்.

வெள்ளை(ளி) முடி முகத்தில்
வெள்ளமாய்
தந்தையின் சிரிப்பு.
தொலைபேசியில் பேசிடும் தாய்,
பாச அலையாய்.....
"வாடா" என்று மட்டும் அழைத்து
சண்டையிட்ட தங்கை
அண்ணா என்றாளே
ஒவ்வொரு அழைப்பிலும்...

வெப்பம் போல் குறையாமல்
அவள் மேலான காதல்
எத்தனையோ
சுக பிரளயங்கள்...

உச்சி வெயில்பாலையில்
மண்டியிட்டு முத்தமிடுகிறேன்...
அதிசயம் பாருங்கள்
என்னுள்
பனி மலை

கனவின் முகங்கள் - 2

உறவினர் வந்த போதெல்லாம்
நெரிசலான என் இருப்பிடத்தை சுற்றி
எரிந்து கொண்டேதான் இருக்கிறது.
காரணங்கள் மட்டும் வெவ்வேறாக..
உயிர் காப்பதிலே கவனிமிருப்பதால்
அன்பைக் காட்ட இயலுவதில்லை.
நேற்றும் கூடபக்கத்து விடுதியில் கண்டேன்
கல்லூரி தோழர் தோழிகளை.
பேச அழைத்த போது
ஏனோ மெளனம் என்னை சூழ்ந்து கொண்டது.
திருமனத்திற்கும் அழைக்கமறந்த
என்னுயிர்த் தோழி
சிரித்துக்கொண்டே காத்திருக்கச் சொன்னாள்
என்னோடு பேசுவதற்கு,

கனவின் முகங்கள் - 1

நெல்லைக்குள் புகுந்த தண்ணீர்
நாம் சொந்த ஊருக்குப் போன போதும் வந்துவிட்டது.
கரை தேடி நானொதுங்க நீ வேகமாக செல்கிறாய்.
எதிர்கரையில் நிற்கிறான் எனது நண்பனொருவன்
நம் பழைய வீட்டிற்கு சென்ற பின்
நீ என்னை அணைத்துக் கொண்ட அந்த நேரத்தில்
.உன் உயிர் பிரியத் துவங்குவதாய் உணர்கிறேன்
ஒருவித வாசம் என்னை குலையச் செய்ய
நகர்ந்த என்னை ஓரக்கண்ணால் அழைத்தபோது
மடி தந்தேன் நீ அடங்க...
சட்டெனன்று ஒரு மாற்றம் -
நீ
ஒற்றைப்பல் இருக்கும் பச்சிளங்குழந்தையாகிவிட
என் மகளாய் பிறந்துவிடு என்றானது
எனது பிராத்தனைகள்..
உறவுகள் கூடி நிற்க
நான் உன் மரணத்தைச் சொன்ன நேரத்தில்
அப்பா உன்நெஞ்சில் கைவைத்தழுத்த
மறுபடியும் சுருங்கிய தேகத்தோடு எழுகிறாய்
என் கனவை முடித்து....

கனாக் காலங்கள்....

1.

வந்த வரை
என்னுள் வந்தவரை
கருவறையிலிருந்து
கல்லறை வரை
கண்டவர்
நெஞ்சிலிருக்கும்
கனவுகளை
எழுத்தில் கொணர்ந்திடவே
இந்தத் தேடல்


2.

மேவிய வயிற்றை தொடும் போதெல்லாம்
உன் பிஞ்சு உடலைத் வருடும்
சுகமே எனக்கு.
என்னவருடன் பேசிய கணங்களைவிட
எனக்குள் உன்னிடம் பேசுகிற கணங்களிலேயே
எங்கள் காதல் இனிக்கிறது.
முகம் தெரியாமலே
என் உயிரில் வளர்கிறாய்.
உன் அசைவுகள் உணர்ந்தே
உன் தேவைகளறிந்தே
உண்ணவோ
உட்காரவோ
நிமிரவோ,
ஒருக்களித்து படுக்கவோ செய்கிறேன்.
மார் முட்டி நீ பால்குடிக்கவிருக்கும்
அந்த நிமிடத்தில்தான்
என் ரத்தம் புனிதப்படவிருக்கிறது.
காத்திருக்கிறேன் என் கண்ணே
நீ வர

3.

மலர் மேல் விளையாடும்
வண்ணத்துபூச்சிகளாய்
திரியவிடாமல்
சிறகுகளை செதுக்கி
கூண்டுக்குள் அடைப்பதுதான்
அவசியமாகிறது
அக்கறையாகிறது

தொப்புள் கொடி
அறுக்கும் முன்னே
மழலைப் பள்ளியின்
விண்ணப்பங்கள் நிரப்பும்
உங்களுக்கு
தாய்வாசம் தேடும்
எங்கள் பிஞ்சுக் கதறல்கள்
யாழிசையாக இனிக்கிறது.

உங்கள் முற்பகல் தன்னிற்கு
பிற்பகலாய்த் தானே
ஊரெங்கும்
முதியோர் இல்லங்கள்

உன் காதல்

என் ஆவி பிரியும்
முன் நொடியில் சொன்னாலும்
உள்ளம் புரிந்து வரும்
உன் காதல் புனிதமானதே

கவிதை

எண்ணம் சொல்ல
ஒவ்வொரு முறையும்
காத்திருப்பேன்
ஒன்றுமில்லாதது போல்
எங்கோ ஒளிந்திருப்பாய்

உணர்ச்சி,
பாசம்,
காதல்
உறவு என
பன்முகமாய் விரிந்து
கடைசியில் பதுங்கிக் கொள்வாய்

எதையும் சொல்லவிடினும்
உமிழ்நீரைப் போல
மீண்டும் மீண்டும்
சுரக்கிறாய்
எனக்குள்

பாலையில்

தன் மண் விட்டுப்
பிறிதொரு இடத்தில் வளராத
தாவரங்களைப் போலவே
ஒட்ட வைக்கப்பட்ட
மலர்களாக நகர்கிறது
வாழ்க்கை

செந்நிறம் கண்டு வியப்பவர்கள்
அறிவதில்லை
பிரிவின் வலி மறைக்க
பூசிக்கொண்ட
ஒப்பனைகளே அவையென

வெம்மை தாக்கிட
தனிமையில் நடக்கையில்
கானலாகிவிட்ட
வீட்டு முற்றத்தின்
ஈரம் நினைத்து
கரைகிறது மனம்.

( இந்தக் கவிதை துவக்கு மின்னிதழின் இரண்டாவது இதழில் வெளிவந்தது )

தீபங்கள் பேசும் - தொகுப்பிலிருந்து

விரைவில் வெளிவர இருக்கிற எனது தீபங்கள் பேசும் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்


களவு புரிந்தேன்.
கைதாகவில்லை.
உன்னுள் சுதந்திரமாய்
நான்..

xxxxxxxxxxxxxxxxxxxx

நகைக்கடை-
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்!
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்!!

xxxxxxxxxxxxxxxxxxxxxxx

கால்கள் தழுவிய
சலங்கையைக் களவாடி
முகம் பதித்தேன்

மணி(கண்) ஒன்று
கன்னம் கிழித்தது
வந்தது குருதியல்ல..

ம்ம்ம் ம்ம்ம்ம்

எத்தனை மென்மையடி
உன் மனம்
மருந்தாய்
வியர்வைத் துளிகள்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

எ‎ங்கள் வாழ்வின் ‏இனிய வசந்தம் நீ,,,,,
ஆளுக்கொரு பெயர்சொல்ல
நா‎ன் அழைத்த பெயருக்கு சிரித்து
எ‎ன் முதல் வெற்றி தந்தவள்,,,,

கைகளில் ஏந்தி,
தலைமுடி வருடி,
விரலைத் தொடுகையில்
லேசாய் நீ சிரிக்க
பாப்பாக்கு எ‎ன்னை தெரியுதுப்பா
என மகிழ வைத்தவள்...

உ‎ன்னோடு தரையில் படுத்துகொண்டு
கதைகள் சொல்லி
கடைசியில்கன்னம் கிள்ளுவே‎ன் -
நிறம் கூடிய ரோஜாவாகிடுவாய்

உனக்குத் தலைசீவி,
மையிட்டு,
புருவம் இ‏டையே சந்திர பொட்டு வைத்து,
அழகு பாதத்தில் கொலுசணிவித்தே‎ன்...
மயில்தோகையாய்
பட்டுப் பாவாடை பிடித்து நீ ஆட கண்டது
இறைவனாலும் பெறமுடியாத
அற்புத வரம் ...,,,,

வாயாடி பெண்ணானாய்...
சீண்டிச் சீண்டி தேனாய் ருசித்தோம்...,,
‏இன்னும் இன்னும்

எத்தனை ‏எத்தனை
இனிய நினைவுகள் .,,
நினைத்து நினைத்து உள்ளம் பூரிக்கிறே‎ன்

தினம் பெயர் சொல்லி
சண்டை போட முடியாமல் -
இன்று தொலைவில்...
வருந்தாமல் பிரிந்திருக்க பழகி கொள்கிறே‎ன் -

அதற்காய்த்தானே
இந்த பாலைக்கே வந்தே‎ன்

எப்படிச் சொல்லுவாய்

உன் இமைகள்
வேகமாகப் படபடக்கக் காரணம்
பிறர்க்குத் தெரியாமல்
களவாடிய என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??

அப்பத்தா

முத்துகுமரன் - அன்பை விரும்பும் மனிதன். மானமும் உணர்வுமுள்ள தமிழன்,

விருப்பங்கள் - கவிதை, கதை, விவாதங்கள், திரைப்பட இயக்கம்,

நண்பர்களே எனது முதல் பதிப்பாக அப்பத்தா கவிதையை பதிக்கிறேன்


இலையுதிர்காலம்..
பாதையெங்கும்
உதிர்ந்த சருகுகள்..
காத்திருக்கிறது
சருகான இலையொன்று
மரத்திலிருந்து மண்ணிற்கு பயணப்பட....

சருகுகள் எல்லாம்
குப்பைகள் அல்ல
அது பசுமையின் பரிணாமம்....

பெண்மையின் தன்மையாய்
செடியாய் இருக்கையிலே
நிழல் தந்தவள் நீ..
வயது பதினான்கில் தாரமாய்
ஆனவள் நீ..

அணைக்காத உன்வீட்டு அடுப்பு...
பிள்ளை சோறு பொங்கிப் பொங்கி
ஈரமான உன் மனது..
சித்தமருந்துகள் அரைத்து அரைத்து
அழகான உன் கைகள்....

உலகின் சுழற்சியில்
துக்கங்களும் நேசம் கொண்டன
உன்னிடம்...
திடீரென்று ஓய்வெடுத்த

உன்னவரின் இதயம்
திசைமாறிய காற்றாய்
உன் வாழ்வு...

ஈன்ற தலைமகனை
மடியெடுத்தாய் மறுபடியும்
சடலமாய்......
உன் சோகம் சொல்ல
முடியாமல் தடுமாறுகிறது
என் தமிழறிவு...

எண்ணிப் பார்க்கிறேன் உன்னுடனான என் நாட்களை......
நீ கூறிய பாட்டிகதை முதல்
கைலாயத்தில் தாத்தாவைப்
பார்த்ததாக கூறிய செய்திவரை...
அவை கற்பனை அல்ல

நீ உணர்ந்த மரணத்திற்குப்பிறகான
வாழ்வது........


வயது உயர
உயரம்குன்றி
குழந்தையாய் உன் உருவம்
எதை உணர்த்துகிறாய்.....

மறைந்த பார்வை
மறந்த தன்னிலை
குறைந்த உணவு
குழறிய பேச்சு
மரணத்தோடும் வாழ்கிறாயே....

சத்தம் எழும்பா உன்கடைசி உணர்வுகளில்
என்னென்ன நினைக்கிறாய் ....
பிறர் சொல்ல கடினம்தான்..
எனக்கு மட்டும் தெரியும்

உன் மெளனப் பிராத்தனை.....
பேத்திகளின் வயிற்றில்
பிறந்திடவேண்டுமென்ற அந்த,,,,,,,,
Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP