தீபங்கள் பேசும் - தொகுப்பிலிருந்து

விரைவில் வெளிவர இருக்கிற எனது தீபங்கள் பேசும் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்


களவு புரிந்தேன்.
கைதாகவில்லை.
உன்னுள் சுதந்திரமாய்
நான்..

xxxxxxxxxxxxxxxxxxxx

நகைக்கடை-
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்!
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்!!

xxxxxxxxxxxxxxxxxxxxxxx

கால்கள் தழுவிய
சலங்கையைக் களவாடி
முகம் பதித்தேன்

மணி(கண்) ஒன்று
கன்னம் கிழித்தது
வந்தது குருதியல்ல..

ம்ம்ம் ம்ம்ம்ம்

எத்தனை மென்மையடி
உன் மனம்
மருந்தாய்
வியர்வைத் துளிகள்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

எ‎ங்கள் வாழ்வின் ‏இனிய வசந்தம் நீ,,,,,
ஆளுக்கொரு பெயர்சொல்ல
நா‎ன் அழைத்த பெயருக்கு சிரித்து
எ‎ன் முதல் வெற்றி தந்தவள்,,,,

கைகளில் ஏந்தி,
தலைமுடி வருடி,
விரலைத் தொடுகையில்
லேசாய் நீ சிரிக்க
பாப்பாக்கு எ‎ன்னை தெரியுதுப்பா
என மகிழ வைத்தவள்...

உ‎ன்னோடு தரையில் படுத்துகொண்டு
கதைகள் சொல்லி
கடைசியில்கன்னம் கிள்ளுவே‎ன் -
நிறம் கூடிய ரோஜாவாகிடுவாய்

உனக்குத் தலைசீவி,
மையிட்டு,
புருவம் இ‏டையே சந்திர பொட்டு வைத்து,
அழகு பாதத்தில் கொலுசணிவித்தே‎ன்...
மயில்தோகையாய்
பட்டுப் பாவாடை பிடித்து நீ ஆட கண்டது
இறைவனாலும் பெறமுடியாத
அற்புத வரம் ...,,,,

வாயாடி பெண்ணானாய்...
சீண்டிச் சீண்டி தேனாய் ருசித்தோம்...,,
‏இன்னும் இன்னும்

எத்தனை ‏எத்தனை
இனிய நினைவுகள் .,,
நினைத்து நினைத்து உள்ளம் பூரிக்கிறே‎ன்

தினம் பெயர் சொல்லி
சண்டை போட முடியாமல் -
இன்று தொலைவில்...
வருந்தாமல் பிரிந்திருக்க பழகி கொள்கிறே‎ன் -

அதற்காய்த்தானே
இந்த பாலைக்கே வந்தே‎ன்

எப்படிச் சொல்லுவாய்

உன் இமைகள்
வேகமாகப் படபடக்கக் காரணம்
பிறர்க்குத் தெரியாமல்
களவாடிய என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??

அப்பத்தா

முத்துகுமரன் - அன்பை விரும்பும் மனிதன். மானமும் உணர்வுமுள்ள தமிழன்,

விருப்பங்கள் - கவிதை, கதை, விவாதங்கள், திரைப்பட இயக்கம்,

நண்பர்களே எனது முதல் பதிப்பாக அப்பத்தா கவிதையை பதிக்கிறேன்


இலையுதிர்காலம்..
பாதையெங்கும்
உதிர்ந்த சருகுகள்..
காத்திருக்கிறது
சருகான இலையொன்று
மரத்திலிருந்து மண்ணிற்கு பயணப்பட....

சருகுகள் எல்லாம்
குப்பைகள் அல்ல
அது பசுமையின் பரிணாமம்....

பெண்மையின் தன்மையாய்
செடியாய் இருக்கையிலே
நிழல் தந்தவள் நீ..
வயது பதினான்கில் தாரமாய்
ஆனவள் நீ..

அணைக்காத உன்வீட்டு அடுப்பு...
பிள்ளை சோறு பொங்கிப் பொங்கி
ஈரமான உன் மனது..
சித்தமருந்துகள் அரைத்து அரைத்து
அழகான உன் கைகள்....

உலகின் சுழற்சியில்
துக்கங்களும் நேசம் கொண்டன
உன்னிடம்...
திடீரென்று ஓய்வெடுத்த

உன்னவரின் இதயம்
திசைமாறிய காற்றாய்
உன் வாழ்வு...

ஈன்ற தலைமகனை
மடியெடுத்தாய் மறுபடியும்
சடலமாய்......
உன் சோகம் சொல்ல
முடியாமல் தடுமாறுகிறது
என் தமிழறிவு...

எண்ணிப் பார்க்கிறேன் உன்னுடனான என் நாட்களை......
நீ கூறிய பாட்டிகதை முதல்
கைலாயத்தில் தாத்தாவைப்
பார்த்ததாக கூறிய செய்திவரை...
அவை கற்பனை அல்ல

நீ உணர்ந்த மரணத்திற்குப்பிறகான
வாழ்வது........


வயது உயர
உயரம்குன்றி
குழந்தையாய் உன் உருவம்
எதை உணர்த்துகிறாய்.....

மறைந்த பார்வை
மறந்த தன்னிலை
குறைந்த உணவு
குழறிய பேச்சு
மரணத்தோடும் வாழ்கிறாயே....

சத்தம் எழும்பா உன்கடைசி உணர்வுகளில்
என்னென்ன நினைக்கிறாய் ....
பிறர் சொல்ல கடினம்தான்..
எனக்கு மட்டும் தெரியும்

உன் மெளனப் பிராத்தனை.....
பேத்திகளின் வயிற்றில்
பிறந்திடவேண்டுமென்ற அந்த,,,,,,,,
Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP