இதய அஞ்சலி - பெரியார் சீலன்

நேற்று அந்த செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்தே போய் விட்டேன். அது எனது நண்பனின் தந்தையின் மரணம் என் பெற்றோரை தவிர்த்து நான் அம்மா அப்பா என்று கூப்பிட்டது அவர்களைத்தான். கிட்டத்தட்ட அது எனது இரண்டாம் தாய் வீடு. அவர்கள் வீட்டின் 5 வது பிள்ளையாகவே நான் வலம் வந்தேன். அப்பாவும் சரி அம்மாவும் சரி. அவர்கள் 4 பேருக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் காட்டியது கிடையாது. பசித்தால் நானாகவே தட்டை எடுத்து சாதம் போட்டு சாப்பிட்டுக் கொள்வேன் கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து வரும் உறவு இது. அப்பா ஒரு வாரத்திற்கு முன் இறந்துவிட்டார்கள் என்று என் தம்பி சொன்னபோது மனம் அறுபட்டு துடித்தேன். என் மனம் மேலும் வேதனைப்படக் காரணம் 15 நாட்களுக்கு முன் நான் கண்ட கணவு. அதில் பெரியார்சீலன் அப்பா இறந்துவிடுவது போலவும் நான் பாலாஅம்மாவை கட்டிக் கொண்டு விம்மி அழுவதாகவும் அண்ணன்கள் என் தோளைப்பற்றி அழுவதுமான கனவு அது, கனவில் நான் மொத்தமாக அழுது தீர்த்துவிட்டேன். இப்போது செய்தியறிந்தும் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழ வாய்ப்பில்லாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறேன். பெரியார்சீலன் உண்மையிலே பெரியார் சீலனாக வாழ்ந்தவர். இறுதிவரை, கடவுள் மறுப்பு, சுயமரியாதை, ஒழுக்கம், குறிப்பாக அவர் தன் குழந்தைகளுக்கு கொடுத்த சுதந்திரம், அவர்களின் கடவுள் நம்பிக்கையில் தலையிடாது வாழ்ந்தவர். நான் பலமுறை அவர்கள் வீட்டிற்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டையுடன் பலமுறை சென்றிருக்கிறேன். ஒரு முறை கூட எனது நம்பிக்கையை கிண்டல் செய்ததில்லை. எப்போதும் என்னடா முத்து செய்ற என்று அன்புடன் விசாரிப்பார். இன்று நண்பனின் தொலைபேசி எண் தொலைந்து விட்டது. எல்லா வகையிலும் தேடிப்பார்த்துவிட்டேன். என்று அம்மாவிடம் பேசுகிறோனோ அன்றுதான் என் பாரம் குறையும். என் சோகத்தை என் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன் நானறிந்த கவிதை மொழியில்.

இதயம் அறுப்பட்டுக் கிடக்கிறது அப்பா..
கேட்ட நொடியிலிருந்து
இதயம் அறுபட்டுக்கிடக்கிறது அப்பா.
இனி என்றும் பேசமுடியாது அப்பா
இனி என்றுமே பேசமுடியாதே அப்பா
ஏனிந்த தண்டனை அப்பா

எனக்கெல்லாம் ஞாபகம் வருதே
பழையது எல்லாம்
உங்கள் பாசமெல்லாம்
அய்யோ
அதை தடுப்பது எப்படி அப்பா

தாய்க்கு தலைமகன்
தந்தைக்கு கடைமகன் தானே
கடை மகன் நானின்று
கண்களின் நீரில் உங்கள் முகம் நிறுத்தி
கடைசியாய் பார்க்க முடியாமலே
போய்விட்ட தூரத்தில் நின்றின்று
துடிக்கிறேன் அப்பா
துடிக்கிறேன்

எப்படி பார்ப்பேன் அம்மாவை
இனி நீங்களில்லாமல்
நீங்களில்லாத அம்மாவை
எப்படி பார்ப்பேன்

என்ன பேசுவேன் அம்மாவிடம்
உங்களை பார்க்க வராததற்கு
என்ன காரணம் சொல்வேன் அப்பா
என்ன காரணம் சொல்வேன் அப்பா

எப்படி கழித்தேன் மகிழ்ச்சியாய்
அந்த நாளை
நீங்கள் இல்லாது தெரியாமலே
எப்படிக் கழித்தேன்
அந்த நாளை

எதற்கு என் மீதத்தனை
பாசம் உங்களுக்கு
ஏன் ஏன்
எல்லோரும் என்னை நேசித்தீர்கள்
வேதனையில் நானிங்கு
துண்டு துண்டாகிக் கிடக்கிறேன்

இப்படித் தவிப்பேன் என்றா
என் கனவில் இறந்தீர்கள்
அம்மாவை நான் கட்டியழ
பாருடா அப்பாவை
பாருடா அப்பாவையென
அம்மா சொல்லியழ
வாய் பொத்தி
நானும் அண்ணன்களோடு கதறியழ
எல்லாக் கடமையும் செய்யத்தான்
என் கனவில் வந்தீர்களோ
அத்துணை பாசமா அப்பா உங்களுக்கு?

கனவிற்கே நொறுங்கிவிட்ட எனக்கு
எப்படித் தாங்க முடியும் இதை
எப்படித் தாங்க முடியும் இதை
என்னடா பண்ற முத்து
என்னடா பண்ற முத்து
நீங்கள் கேட்பதுதான்
என் காதுகளில் நிறைஞ்சிருக்கு அப்பா
காதுகளில் நிறைஞ்சிருக்கு அப்பா

அழுது கொண்டுதான் இருக்கிறேன் அப்பா
அழுது கொண்டுதான் இருக்கிறேன் அப்பா
உங்களுக்கு கேட்குதாப்பா
என் அழுகை
உங்களுக்கு கேட்குதாப்பா
என் அழுகை

கனவிலாவது வந்து சொல்லுங்கள் அப்பா
கனவிலாவது வந்து சொல்லுங்கள் அப்பா

ஹைக்கூ.....

இது எனது முதல் ஹைக்கூ


ஊரெங்கும் வெள்ளம்
மூச்சு விடும்
ஆற்று மணல்கள்....

மரணச் சமன்

நீண்ட நாட்களாக
நிற்க காத்திருக்கிறது துடிப்பு...
அருகில் செல்லாமல்
நாடி பார்க்காமல்
நாள் குறிக்கப்பட்டிருக்கிறது
அவரவர் ஞானத்திற்கேற்ப

உள்ளிருக்கும் கறைகள்
சமனாகும்
நம்பிக்கை தந்தது.
காதில் விழுந்த
என்
மரணத்தின் பலன்கள்.

வாழ்க்கையெனும் ஓடம்

ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
அறிவிக்கிறது அவர்களை
வள்ளல்களாக

பட்டங்களை
பரிவட்டங்களை
சூட்டுகிறது
அவர்களின்
நன்கொடைகள்

உழைத்தவன்
உயிரைப் பொசிக்கிய
சாதனைகளை முழங்குகிறார்கள்
ஆயிரக்கணக்கான வீடுகளில்
அடுப்பெரிகிறது எங்களாலென்று


விதவைக் கணவன்களின்
விடுமுறை விண்ணப்பங்கள்
கப்பல்களாக மிதக்கின்றன
வள்ளல் குழந்தைகளின்
விளையாட்டில்

எதற்கு வேண்டுமந்த நாகரீகம்

அவர்க்கு
இனத்தை
இழிவு செய்வதென்பது சுதந்திரம்
எம் மானத்தை
பெருமை கொள்வதென்பது ஆதிக்கம்

நச்சு அம்புகளின்
ரத்தவெறிக்கு
மலர் ஒத்தடம் செய்வதுதான்
நாகரீகமென்றால்

எதற்கு வேண்டுமந்த நாகரீகம்
Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP