இதய அஞ்சலி - பெரியார் சீலன்

நேற்று அந்த செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்தே போய் விட்டேன். அது எனது நண்பனின் தந்தையின் மரணம் என் பெற்றோரை தவிர்த்து நான் அம்மா அப்பா என்று கூப்பிட்டது அவர்களைத்தான். கிட்டத்தட்ட அது எனது இரண்டாம் தாய் வீடு. அவர்கள் வீட்டின் 5 வது பிள்ளையாகவே நான் வலம் வந்தேன். அப்பாவும் சரி அம்மாவும் சரி. அவர்கள் 4 பேருக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் காட்டியது கிடையாது. பசித்தால் நானாகவே தட்டை எடுத்து சாதம் போட்டு சாப்பிட்டுக் கொள்வேன் கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து வரும் உறவு இது. அப்பா ஒரு வாரத்திற்கு முன் இறந்துவிட்டார்கள் என்று என் தம்பி சொன்னபோது மனம் அறுபட்டு துடித்தேன். என் மனம் மேலும் வேதனைப்படக் காரணம் 15 நாட்களுக்கு முன் நான் கண்ட கணவு. அதில் பெரியார்சீலன் அப்பா இறந்துவிடுவது போலவும் நான் பாலாஅம்மாவை கட்டிக் கொண்டு விம்மி அழுவதாகவும் அண்ணன்கள் என் தோளைப்பற்றி அழுவதுமான கனவு அது, கனவில் நான் மொத்தமாக அழுது தீர்த்துவிட்டேன். இப்போது செய்தியறிந்தும் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழ வாய்ப்பில்லாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறேன். பெரியார்சீலன் உண்மையிலே பெரியார் சீலனாக வாழ்ந்தவர். இறுதிவரை, கடவுள் மறுப்பு, சுயமரியாதை, ஒழுக்கம், குறிப்பாக அவர் தன் குழந்தைகளுக்கு கொடுத்த சுதந்திரம், அவர்களின் கடவுள் நம்பிக்கையில் தலையிடாது வாழ்ந்தவர். நான் பலமுறை அவர்கள் வீட்டிற்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டையுடன் பலமுறை சென்றிருக்கிறேன். ஒரு முறை கூட எனது நம்பிக்கையை கிண்டல் செய்ததில்லை. எப்போதும் என்னடா முத்து செய்ற என்று அன்புடன் விசாரிப்பார். இன்று நண்பனின் தொலைபேசி எண் தொலைந்து விட்டது. எல்லா வகையிலும் தேடிப்பார்த்துவிட்டேன். என்று அம்மாவிடம் பேசுகிறோனோ அன்றுதான் என் பாரம் குறையும். என் சோகத்தை என் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன் நானறிந்த கவிதை மொழியில்.

இதயம் அறுப்பட்டுக் கிடக்கிறது அப்பா..
கேட்ட நொடியிலிருந்து
இதயம் அறுபட்டுக்கிடக்கிறது அப்பா.
இனி என்றும் பேசமுடியாது அப்பா
இனி என்றுமே பேசமுடியாதே அப்பா
ஏனிந்த தண்டனை அப்பா

எனக்கெல்லாம் ஞாபகம் வருதே
பழையது எல்லாம்
உங்கள் பாசமெல்லாம்
அய்யோ
அதை தடுப்பது எப்படி அப்பா

தாய்க்கு தலைமகன்
தந்தைக்கு கடைமகன் தானே
கடை மகன் நானின்று
கண்களின் நீரில் உங்கள் முகம் நிறுத்தி
கடைசியாய் பார்க்க முடியாமலே
போய்விட்ட தூரத்தில் நின்றின்று
துடிக்கிறேன் அப்பா
துடிக்கிறேன்

எப்படி பார்ப்பேன் அம்மாவை
இனி நீங்களில்லாமல்
நீங்களில்லாத அம்மாவை
எப்படி பார்ப்பேன்

என்ன பேசுவேன் அம்மாவிடம்
உங்களை பார்க்க வராததற்கு
என்ன காரணம் சொல்வேன் அப்பா
என்ன காரணம் சொல்வேன் அப்பா

எப்படி கழித்தேன் மகிழ்ச்சியாய்
அந்த நாளை
நீங்கள் இல்லாது தெரியாமலே
எப்படிக் கழித்தேன்
அந்த நாளை

எதற்கு என் மீதத்தனை
பாசம் உங்களுக்கு
ஏன் ஏன்
எல்லோரும் என்னை நேசித்தீர்கள்
வேதனையில் நானிங்கு
துண்டு துண்டாகிக் கிடக்கிறேன்

இப்படித் தவிப்பேன் என்றா
என் கனவில் இறந்தீர்கள்
அம்மாவை நான் கட்டியழ
பாருடா அப்பாவை
பாருடா அப்பாவையென
அம்மா சொல்லியழ
வாய் பொத்தி
நானும் அண்ணன்களோடு கதறியழ
எல்லாக் கடமையும் செய்யத்தான்
என் கனவில் வந்தீர்களோ
அத்துணை பாசமா அப்பா உங்களுக்கு?

கனவிற்கே நொறுங்கிவிட்ட எனக்கு
எப்படித் தாங்க முடியும் இதை
எப்படித் தாங்க முடியும் இதை
என்னடா பண்ற முத்து
என்னடா பண்ற முத்து
நீங்கள் கேட்பதுதான்
என் காதுகளில் நிறைஞ்சிருக்கு அப்பா
காதுகளில் நிறைஞ்சிருக்கு அப்பா

அழுது கொண்டுதான் இருக்கிறேன் அப்பா
அழுது கொண்டுதான் இருக்கிறேன் அப்பா
உங்களுக்கு கேட்குதாப்பா
என் அழுகை
உங்களுக்கு கேட்குதாப்பா
என் அழுகை

கனவிலாவது வந்து சொல்லுங்கள் அப்பா
கனவிலாவது வந்து சொல்லுங்கள் அப்பா

17 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

பரஞ்சோதி said...

முத்துக்குமரன்,

இது அதிர்ச்சியான செய்தி.

முன்பு எல்லாம் நீங்க கண்ட கனவுகள் உங்களுக்கு எத்தனை மகிழ்ச்சி கொடுத்தன என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

அய்யா பெரியார்சீலன் அவர்களின் மறைவு உங்களுக்கு எத்தனை சோகத்தை கொடுத்திருக்கும் என்று நினைக்கையில் கண்ணீர் வருகிறது.

மனதை தேற்றிக் கொள்ளுங்கள். அய்யாவின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

மூர்த்தி said...

உற்ற நண்பன் வேதனையில் நாமும் பங்கு பெறுதல்தான் சரி. உங்களையும் தன் சொந்த மகனைபோல் பாவித்து அன்பு செலுத்திய அந்த பெரிய உள்ளம் நிச்சயம் நல்ல உள்ளம்தான். உங்களின் சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன் முத்துக்குமரன்.

ஜெகதீஸ்வரன் said...

We share our condolence. May God give him rest in peace for his soul.

முத்துகுமரன் said...

என்னோடு துயரத்தை பகிர்ந்து கொண்ட பரஞ்சோதி, மூர்த்தி மற்றும் ஜெகதீஸ்வரனுக்கு என் நன்றிகள்

சிங். செயகுமார். said...

அன்புடன் முத்துவுக்கு
சினேகமுடன் சிங்கார குமரன்
உயிர் கொடுத்த உத்தம்ர்க்கே
வயிற்றுக்கு சொறிடா உலகிலே
நன்பணின் தந்தை நமக்கும் தந்தை
அன்பே எனை பிரிந்தாய்
என்று காண்பேன் உனை
தேற்ற முடியா பிரிவு
மாற்றம் பெற்று மற்றோரை
சுற்றமும் நட்பையும்
தேற்ற வேண்டும் நாம்

முத்துகுமரன் said...

நன்றி சிங்காரகுமரன்... என்னை இந்த மரணம் மிகவும் பாதித்துவிட்டது. கவிதை எழுதும் போது என் விழிகளில் தெறித்த வந்த கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இது போன்ற தருணங்கள்தான் இந்த தூர தேசத்து வாழ்க்கையின் நிதர்சணமான அவலம்....

நண்பர்களின் ஆறுதல்கள் என்னைத் தேற்றுகின்றன. இந்த ஆறுதல்கள் அந்த தாய்க்கே போய்ச் சேரட்டும்.

முத்துகுமரன் said...

இந்த அஞ்சலிப் பதிவில் கூட ''-'' போட்டுச் சென்றிருக்கும் அந்த குரூர மிருகத்தை அப்பாவின் ஆன்மா மன்னிக்கட்டும்

Manmadan said...

உங்களின் துயரத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம். அப்பா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

G.Ragavan said...

வருந்த வேண்டாம் முத்துக்குமரன். அன்னாருடைய ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுவோம். துயரம் நிறைந்த உங்கள் உள்ளங்களில் அமைதி திரும்பவும் பிரார்த்திக்கிறேன்.

மதுமிதா said...

முத்துகுமரன்

மரணம் புதுப்புது பாடங்களைக் கற்றுக்கொடுத்துச் செல்கிறது
காலம் துயரத்தை ஆற்றுப்படுத்தட்டும்.
நீங்கள் கொஞ்சம் அமைதியடைந்தால் தான் வீட்டில் அனைவருக்கும் ஆறுதல் அளிக்க இயலும்.

முத்துகுமரன் said...

சோகத்தை பகிர்ந்து கொண்ட மன்மதன், ராகவன், மதுமிதா ஆகியோருக்கு எனது நன்றி...

மதுமிதா அக்கா நீங்கள் என் தந்தையென்று நினைத்திருகிறீர்கள் என கருதுகிறேன். அவர் எனது நண்பனினின் தந்தை. எனக்கும் தந்தைதான். சில மரணங்களில்தான் இழப்பின் வீச்சை அறிய முடிகிறது. என் மனதில் என்றும் ஆறா ரணமாகி விட்டது இந்த மரணம்...

கவிமதி said...

தோழர் முத்துக்குமரன் அவர்களின் துயரத்தில் நமது தோழர்களுடன் நானும் என் பங்கை செலுத்துகிறேன்

அய்யா பெரியார்சீலன் அவர்களின் மறைவிற்கு தோழர்கள் சார்பிலும் துவக்கின் சார்பிலும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

இ.இசாக் said...

ஆறுதல்சொல் மிக இலகுவானது.
ஆனால் மிகமிக பலமானது.
வன்முறைகளாலான உலக இயல்பியம் சாதாரணர்களுக்கு இழப்புகளை மட்டுமே பரிசாக்குவது போல.

வாழ்க்கைப் பயணத்தில் இழப்புகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
அன்பிற்கினியரை இழந்த உள்ளத்துக்கு..
என் அன்புகள்..
வேறு என்ன செய்ய..
ஆறுதல் அன்புகளால் நிறைந்தது.

முத்துகுமரன் said...

ஆறுதல் தெரிவித்த தோழர்கள் கவிமதி மற்றும் இசாக்கிற்கு எனது நன்றி.....

மதி கந்தசாமி (Mathy) said...
This comment has been removed by a blog administrator.
மதுமிதா said...

முத்துகுமரன்.
இப்பதான் உங்க பதிலைப் பார்த்தேன்.

அதுதான் விளக்கமாக முதலிலேயே தந்திருக்கிறீர்களே
///அது எனது நண்பனின் தந்தையின் மரணம் என் பெற்றோரை தவிர்த்து நான் அம்மா அப்பா என்று கூப்பிட்டது அவர்களைத்தான். ///


அப்படி நினைத்து தான் எழுதியுள்ளேன்.
அது உங்கள் இரண்டாம் தாய்வீடு என்றும் கொடுத்திருக்கிறீர்கள்.

அதனால் எழுதியது தான்.

நீங்கள் கொஞ்சம் அமைதியடைந்தால் தான் வீட்டில் அனைவருக்கும் ஆறுதல் அளிக்க இயலும் என்று.

கொஞ்சமாவது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியாச்சா?

முத்துகுமரன் said...

அம்மாவிடமமும், அண்ணன்களோடும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது என் மனதிற்கு ஆறுதல் தந்தது. இப்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன். அம்மா மனதளவில் தைரியமாக இருப்பது ஒருவிதமான நிம்மதியைத் எனக்குள் தந்திருக்கிறது.
தங்கள் பதிலுக்கு நன்றி மதுமிதா

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP