ஏன்? ஏனம்மா?

ஏன்? ஏனம்மா?
இத்தனை வேகம்
உ‎ன் வடிவம் பொலிவாக்கிட
பல்லாயிரம் உயிர்கள்
உதிர்ந்த சோகம்

ஏ‎ன்? ஏனம்மா?

பிய்த்து எறியபட்ட
எம்பிஞ்சுகளுக்கு தெரிந்திருக்கது.
உ‎ன் அதிர்வி‎ன் அர்த்தம்
தாய் மார்புச்சூடென்று நினைத்திருக்கும்..

தமிழ்த்தாகம்
தீரவில்லையோ
பொங்கிப் புகுந்த
உ‎ன் உவர் வெள்ளத்திற்கு

உயிரோடு ஒவ்வொரு நாளும்
உணவுக்காக
உன்மடியில் மிதந்தவனுக்கு
உன்னாலே
மரணப் பரிவட்டம்

தினமும் செத்துசெத்து
வாழ்ந்தவனுக்கு
மரண வாழ்வும்
கொந்தளிப்பில்
ஏ‎ன்? ஏனம்மா?

வணங்கும் வடிவில் எல்லாம்
வந்து வழக்கு தீர்க்கிறாயே.

ஏன்?
ஏனம்மா?

இருளின் வீதிகளில்

தேய்தலும் வளர்தலுமாய்
உன் நினைவுகளின்
ஆக்கிரமிப்புகளினூடாக
தொடர்கிறதென்
தனிமைப்பயணம்
நிலவோடு

வெளிச்ச இரைச்சல்களினால்
உணர்ந்திட முடியாது போன
உன் நேசத்துளிகளை
தேடவே
இமை மூடுகிறேன்
இருளின் வீதிகளில்

அப்பாவின் சட்டை

முன்னும் பின்னும்
மிடுக்காய் நடந்து
மீசையைத் தடவி
கண்ணாடிக்கு அறிவித்தேன்
வளர்ந்துவிட்டேன் என்று.
அது
சிரித்துக்கொண்டே
பழைய நினைவுகளை
தோகை விரித்தது
நான் சட்டென
சிறுபிள்ளையாகிப் போனேன்

கைபற்றி நடைவண்டி பழக்க
விரும்பாது அவர் கை உதறி
தனியாய் ஓட்ட முயன்று
விழுந்தெழுந்த போது
புன்னகையோடு முட்டித் தளும்பிய
கண்ணீர்

என் மலத்துணி கசக்கி கசக்கி
தேய்ந்து போன கைரேகைகள்

கோவத்தில் அடித்துவிட்டு
தோளில் எனை சுமந்து நடந்த
அந்த நீண்ட இரவு....

அவர் குணமுறிந்து
என் தேவைகள் தீர்க்க
நடத்திய உண்ணாவிரதங்கள்

என் ரகசியமும் பகிர்ந்திட
வைத்திட்ட
நட்பு(பூ).

நினைவுகள் கலைய
என் கர்வத்தின் காரணம்
உணர்ந்தேன்

அது என் உடல்மீதிருந்த
இறுக்கமான
அப்பாவின் சட்டை

தேசப் பற்று

ஜெய்கிந்த்! ஜெய்கிந்த்!!
சட்டையில்
கீரீன் கார்ட்

நிவா''ரணம்''

ஓடிக் கொண்டிருக்கும் வரை
மதிப்பற்ற இதயம்
நின்றதும்
கிடைக்கிறது
இலட்சம் ரூபாய்
கேட்காமலே வழங்கப்படுகின்றன
பசி தூண்டா வாக்கரிசிகள்.
மாறுவதேயில்லை
மரணக்கும் போது
ம(மி)திக்கப்படும்
வறுமை.


புதைக்கும் முன்னமே
அழுகுகின்றன
அவர்கள் உடல்கள்
கொத்தித் தின்னும்
அரசியல் புழுக்களால்

எனக்கு பிடித்த வலைப்பூக்கள்

என் பெயரை பரிந்துரைத்த அப்பிடிபோடு(மரம்) அவர்களுக்கும், எனக்கு அந்த செய்தியைத் தெரியப்படுத்திய மதி கந்தசாமி அவர்களுக்கும் எனது நன்றி.

நான் தீவிரமாக வலைப்பதிவுகளில் பங்கு பெறுவது கடந்த ஒரு மாதமாகத்தான். அதனால் நிறைய பேருடையதை வாசிக்கவில்லை. வாசித்தவைகளில் என் மனதிற்கு பிடித்த மூன்று பதிவுகளை இங்கு குறிப்பிடுகிறேன்...

1. பரஞ்சோதியின் சிறுவர் பூங்கா:
தன் மேல் வெளிச்ச வட்டம் விழ வேண்டும் என்று துடிப்போடு இணையத்தில் இயங்கி வருகிற பலருக்கு மத்தியில் மெல்லிய நதியாய் சலனமில்லாமல் பயணத்தை தொடர்ந்து கொண்ட வலைப்பூ இது. விதைக்கின்ற ஒரு நல்ல விதை நிச்சயம் நல்ல பலனைத் தரும். அது போலத்தான் குழந்தைகள் வளர்ப்பும். அன்பையையும், சகோதரத்துவத்தையும் குழந்தைகளிடம் நாம் விதைத்தால் அது பிற்காலத்தில் உலகை அமைதி வனமாக்கி காட்டும். எளிய கதைகள், கதைகளின் வாயிலாக நீதிகள் என தேனைக் கலந்து தருகிறார். குழந்தைகளுக்கான இதுவும் இலக்கியமே. இன்னும் சித்திர கதைகள் படங்கள் எனத் தந்தால் குழந்தைகளை எளிமையாக கவரும். குழந்தைகள் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை பரஞ்சோதி தொடுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

2. சிவாவின் கீதம் சங்கீதம்:
ஓய்வு எல்லோருக்கும் பிடித்தமானது. பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் நம்மை நாமேதான் உற்சாகப்படுத்தி கொள்ள வேண்டி இருக்கிறது.
மரத்தின் நிழல் போல் வீசும் தென்றல் காற்று போல் நமக்குத் தேவையான மகிழ்வைத் தரக்கூடிய பொதுகுணங்கள் சிலவற்றிற்கு உண்டு. அதில் முதன்மையானது இசை. எந்த வித எல்லைகளுக்கும் சுருங்கி விடாதது இசை. கேட்கும் ஒலிகள் வேண்டுமானால் மனங்களுக்கு ஏற்ப வித்தியாசப்படலாம். ஒரு கலைஞனுக்கு சிறந்த ரசிகனாக இருப்பதும் ஒரு கலையே. அதிலும் ரசனையும், அதைப்பற்றிய அறிவும் இருந்து விட்டால் இன்னும் குதுகலமே. எனக்கு அதுமாதிரித்தான் இளையராஜாவின் இசை. அது எனக்கு பல சுகங்களை தந்திருக்கிறது. இளையராஜா இசை பிடிக்கும். அந்த இசை விரும்பும் எவரும் என் உள்வட்டத்திற்குள் வந்து விடுவதை என்னால் எப்போதுமே தவிர்க்க முடிவதில்லை. அந்த வகையில் சிவாவை எனக்கு நெருக்கமானவராகவே உணருகிறேன்....

3. ஆசிப் மீரான்:

சாத்தான்குளத்து வேதத்தை பற்றி இந்த பூதம் சொல்லித்தான் தெரிய வெண்டுமா என்ன? ஆளை கிறங்கடிக்கும் வட்டார நடை, அங்கதம் தொனிக்கும் சமூக பார்வை, தெளிவான சிந்தனை ஆழ்ந்த இலக்கிய அறிவு, அதை வெளிக்காட்டிக் கொள்ளா நிறை குடத் தன்மை என எழுதிக் கலக்கும் அன்பர், நண்பர். கை தேர்ந்த சிறுகதை எழுத்தாளர். இவரின் நல்லா இருங்கடேக்காகாவே ரசிகர்களாக இருப்பவர் பலரில் அடியேனும் ஒருவன். ஆனால் அப்பப்ப தலை மறைவாயிடுவது ஒன்றுதான் ஒரு குறை

இந்த மூவரும் இந்தபதிவுத்தேரை நகர்த்தி செல்ல கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்
முத்துகுமரன்

(பி.கு. என் உடல்நலம் விசாரித்த அனைத்து நண்பர்களின் அன்புக்கு எனது நன்றிகள்.)
Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP