ஆகாயத்திற்கு அடுத்தவீடு

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் தமிழ் புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான திரு.மு.மேத்தா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

விருது பெற்ற ''ஆகாயத்திற்கு அடுத்த வீடு'' கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை


''கவிதையின் கதை''

அலங்கார வளைவுகளைத்

தாண்டிய பின்னும்

அரங்கிற்குள் நுழையத்

தயங்கி நின்றது கவிதை!

''உன்னைப்பற்றித்தான்

பேசுகிறார்கள்!

உள்ளே போ''

உபசரித்தார் ஒருவர்!

உள்ளே

நிற்கவும் இடமில்லா

நெருக்கடி!

அலட்டிக் கொள்ளத் தெரியாத

மேடைவரை நடந்துபோய்

மீண்டும் திரும்பி

இருக்கை தேடி

ஏமாற்றமடைந்தது!

சாகித்ய மண்டல

சண்ட மாருதங்கள்..

ஞானபீட

வாணவேடிக்கைகள்..

இசங்களைக் கரைத்து

ரசங்களாய் குடித்தவர்கள்..

தமிழ்

செத்துப் போய்விடக்கூடாதே

என்ற

கருணையால்

பேனாவைப் பிடித்திருக்கும்

பிரும்மாக்கள்...

ஒருவர் கூட

கவிதையை

உட்காரச் சொல்லவில்லை!

இடம் தேடும் கவிதையை

ஏறிட்டும் பார்க்கவில்லை!

சுற்றிச் சுற்றிப் பார்த்து

சோர்ந்த கவிதை

அரங்கிலிருந்து

வெளியே வந்தது!

விமர்சனத்தின்

கிழக்கு மேற்கு அறியாத

கிராமத்து ரசிகர் ஒருவர்

கேட்டார்:

''உன்னைப் பற்றித்தான்

விவாதம் நடக்கிறது..

நீயே வெளியேறுவது

நியாயமா?''

கவிதை அவரிடம்

கனிவுடன் உரைத்தது:

''அவர்களின் நோக்கமெல்லாம்

என்னைப் பற்றி

விவாதிப்பது அல்ல..

தம்மைப் பற்றித்

தம்பட்டம் அடிப்பதே!''

இடைவேளை

ஒன்றரை வருடங்களாக இயங்கினாலும் இதுவரை 101 பதிவுகளே பதிந்திருக்கிறேன். இணையத் தொடர்புக்கு பின் என்னுள் எழுந்த மாற்றங்கள் பல. நான் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை சரியானதாகவே இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. எப்போதாவது பதிவிடுவதற்கு முதல் காரணமாக நான் நினைப்பது எனது சோம்பேறித்தனமே. புத்தாண்டில் அதை களைவதாய் உத்தேசம். ஒரு கவிஞானாய் எனக்குள் ஒரு தேக்கம் இருப்பதை உணர்கிறேன். அதற்காகவே இந்த சிறிய இடைவேளை. எழுதுவதிலிருந்து வாசிப்பதிலிருந்து. ( இப்ப மட்டும் என்ன வாழுதாம் என்று கேட்பவர்களுக்கு நற நற :-) ).

மீண்டும் புதுப்பொலிவுடன் வருகிற தமிழ்ப் புத்தாண்டாம் ''தை'' திங்களில் இனிப்பான செய்தியோடு வருகிறேன்.

என் பங்கிற்கு ஒரு அறிவிப்பு

வேற எதாயாச்சும் எதிர்பார்த்து வந்து இருந்தீங்கனா நான் பொறுப்பு அல்ல:-)

இன்று தமிழ்மணத்தின் அறிவிப்பு பகுதியில் இடம் பெற்றிருந்த
பதிவில் வாசித்த போது என்னுடைய பெயரும் இருந்தது. அங்கே பின்னூட்டமிட வசதியில்லாததால் என் பதிவிலே என் எண்ணத்தை சொல்லிச்விடுகிறேன்.

//தமிழ்மணத்திலே திரட்டப்பட்ட ஒரு பதிவிலே சொல்லப்பட்டதுபோல, தமிழ்மணம் நியோ, பாலச்சந்தர் கணேசன், முத்துக்குமரன், வரனையான் ஆகியோரின் பதிவுகளை நீக்கவோ ஓரம் கட்டவோ எத்தருணத்திலும் முயலவில்லை என்பதைத் தெளிவாக இவ்விடத்திலே தெரிவிக்க விரும்புகிறது. //

நான் எந்த தருணத்திலும் தமிழ்மணத்தால் ஓரங்கட்டப்படுவதாக உணரவில்லை. வலைபதிய தொடங்கிய சில மாதங்களிலேயே நட்சத்திர வாய்ப்பை வழங்கியது தமிழ்மணம்தான் என்பதை இன்றும் நினைவு கூற விரும்புகிறேன்.

பொதுவாக அவதூறுகளை நான் பதிலளிப்பதில்லை என்பதோடு அதற்கு எதிர்வினை புரியாதிருப்பது அதனை நான் நிராகரிக்கிறேன் என்பதால்தான். என் பதிவுகள் விதிகளுக்குட்படாததாக இருந்தால் அதை நீக்க அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் மதிக்கவே செய்கிறேன்.

என்னுடைய நூறாவது பதிவில் சொன்னது போல் பதிவொழுக்கம் என்பது தனிமனித விடயம். அதற்கு திரட்டிகளோ இன்ன பிற அமைப்புகளோ பொறுப்பாகாது. எப்போதும் போல ''தமிழ்மணத்தில்'' தொடர்கிறேன் என்று தெரிவித்து கொள்கிறேன்.

பதிவுகள் தேவையா?? 100வது பதிவு

99 பதிவு எழுதி இருந்த எனக்கு சோதனை, மாநாடு கண்டான் ஆசிப் வடிவில் வந்தது. நேற்று 2.12.2006 துபாயில் நடைபெற்ற வலைபதிவர் சந்திப்பில் வாசித்த அல்லது பேசிய தலைப்புதான் ''பதிவுகள் தேவையா''.
இதை விட சொந்த செலவில் சூன்யம் யாராலும் வைத்துக்கொள்ள முடியாது :-).

பதிவுகள் தேவையா? என் பதில் நிச்சயம் தேவை. இன்னும் அதிகமாகவே பதிவுகள் வர வேண்டும் என்பதே என் விருப்பமும். இணையம் ஒரு சுதந்திரவெளி. கட்டுப்பாடுகளற்ற வெளி. கணினியும் ஆர்வமும் இருக்கும் அனைவருமே பங்கேற்கும் சாத்தியம் உள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு. இணையத்தின் வழியான கருத்துப்பரிமாற்றத்திற்கு பயன்படும் ஒரு வடிவம் வலைப்பதிவுகள்.

எழுத்தும், கருத்தும் ஒரு சாராருக்கு என்று இருந்து வந்த நிலையை இணையம் தகர்த்திருக்கிறது. எழுத்து அனைவருக்குமானது. இங்கு பல குரல்கள் இருக்கின்றன. பல பார்வைகள் இருக்கின்றன. பல சூழல்கள் இருக்கின்றன. அவற்றின் தேவைகளும் முக்கியமானவை. கவனம் பெறப்பட வேண்டியவை. பொது என்ற சொல் அனைத்தையும் உள்ளடக்கியது என்பதை குறிப்பது. ஆனால் இன்றய பொதுத்தன்மை என்பது அனைவருக்குமானது என்றில்லாமல் திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துவருகிறது. வரலாறு முதல் வாழ்வியல் வரை பன்முகத்தன்மை பிரதிபலிக்க, பன்முகத்தன்மையை அனுமதிக்கும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இன்றி ஆதிக்கம் செய்வதாகவே இருந்துவருகிறது.

இத்தகைய சூழலிலில்தான் கருத்தியல் தளத்தில் வலைப்பதிவுகள் முக்கியம் வகிக்கின்றது. அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளியிட ஏதுவானதாக இருக்கிறது. இங்கும் ஆதிக்க மனோபாவம் இருக்கத்தான் செய்கின்றது. தர நிர்ணயாளர்களவும், அங்கீகார மையங்களாகவும் தங்களை பாவித்து கொள்ளும் போக்கு இருக்கிறது. அதற்கான மறுப்புகளும், எதிர்வினைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

சுதந்திரம் இருக்கும் அளவிற்கு இதில் ''இடர்களும்'' இருக்கத்தான் செய்கின்றது. ஒரு ஆரோக்கியமான கருத்து பகிர்வுக்கு, விவாதங்களுக்கு என மிகச்சிறப்பாக வலைப்பதிவுகளை பயன்படுத்த முடியும்.

''கருத்தில் நேர்மையும் உண்மையும் இருந்தால் எதிராளியை உன் வார்த்தைகள் காயம் செய்யாது''
. ஆனால் கருத்தை கருத்தால் எதிர் கொள்ளாது கீழ்த்தரமான, மனித தன்மையற்ற வகையில் எதிர்வினை புரிவது என்று மிகவும் வேதனை கொள்ளும் வகையிலும் எதிர்வினைகள் நிகழ்ந்து வருகிறது.

பதிவுக்கான பின்னூட்டங்களாகவோ, கருத்தாகவோ இல்லாமல் பதிவருக்கான கருத்துகளாகவே அணுகும் முறையும் தொடர்ந்து வருகிறது. அறிந்தோ அறியாமலோ, இந்த சுழலில் பெரும்பாலோனோர் சிக்கிக்கொள்ளும் போக்கும் இருந்தும் வருகிறது. இந்த குறை களையப்பட வேண்டும். இதை நாம் அனைவரும் இணைந்து களைய வேண்டும். இங்கு தேவைப்படுவது ''மனமுதிர்ச்சியே''

நேர்மையாகவும் உண்மையாகவும் இயங்குவது, கீழ்த்தரமாக இயங்குவது இது எல்லாமே தனிமனிதனின் குணநலனே. வலைப்பூ என்ற வடிவத்திற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. ஒரு சில தனிமனித ஒழுக்க குறைவினர்களால் இந்த வலைப்பதிவுகளை அச்சத்தோடு அணுகத்தேவையில்லை. விலகியிருக்கவும் தேவையில்லை. ஏனெனில் வலைப்பதிவுகள் என்பதை அச்சப்படக்கூடிய ஒன்றாக்கும் பிம்பங்களும் கட்டப்படுகின்றன. அவைகளும் நிராகரிக்கத்தக்க ஒன்றே.


''அணுவைக் கொண்டு ஆக்கமும் செய்யலாம்
அழிவும் செய்யலாம்
. ''

பயன்படுத்துபவர் கைகளில் இருக்கிறது ஆக்கமும் அழிவும். அணு ஆயுதங்கள் ஆபத்தானவை என்பதற்காக யாரும் அணுவைப் புறக்கணிப்பதில்லை.

**

நூறாவது பதிவாக இணையம் மூலம் நான் பெற்ற அனுபவங்களை எழுதலாம் என்ற யோசனையில், அசைபோடலில் நாட்களை கடத்திக்கொண்டிருந்த்தேன். 100வது பதிவை நண்பர்கள் முன் வாசித்ததும் ஒரு இனிமையான அனுபவமே. இணைய அனுபவங்கள் அடுத்த பதிவில்

பெரியார்

நஞ்சாய் தழைத்திருந்த
வேத விருட்சங்களில்
அமிலம் பாய்ச்சியவன்

செல்வங்களை துரத்தி
கோபுரங்களில் வீற்றிருந்த
குப்பைகளை
துடைத்தெறிந்த சூறாவளி

ஆதிக்கத்தின்
ஆணிவேரை சாய்க்க வந்த
கோடாரி

கற்பனைக் கவிதைகளில்
பெண்ணியம் பேசாது
வாழ்வில் பேசிய
மக்கள் கவி

குப்பைக் கழிவுகளே!
உம்
ஆணவ மழையில் கரைந்திட
அவன் உப்புத் துகளல்ல
பகைவர் நடுங்கிடும்
கரும் பாறை!
கரும் பாறை!

இலவசமானவன்

பத்து மாத கருவறை
நீள் துயிலும் கல்லறை
இரண்டுக்கும் இடையே
உயிரூட்டிய காற்று.

வாழ்க்கைப் பாதையெங்கும்
உள்ளும் புறமும்
விலையிட்டு வாங்கிட முடியா
இயற்கையின்
இலவசங்களாலானவன்
மனிதன்

பூமாலையே தோள் சேரவா....

இன்று ஒரு இனிப்பான நாள் எனக்கு.

எனது அன்பு நண்பன் லட்சுமிநாரயணனுக்கு இன்று திருமணம்.

கல்லூரியில் ஒரே வகுப்பில், ஒரே அறையில் என் கூட இருந்த நண்பன். மிக நெருக்கமான நண்பன். எப்போதும் எல்லோரும் நலமாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். என் மீது தனிப்பட்ட பிரியம் கொண்டவன். அரியர் எனும் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த என் மீது கவனம் செலுத்தி, மீள உதவி செய்தவன். தன்னுடைய ரகசியங்களை மற்ற நண்பர்களைவிட என்னிடம் மட்டுமே உரிமையாய் இயல்பாய் பகிர்ந்து கொள்பவன்.

காதலர்கள் என்றாலே கிண்டல் செய்து மகிழ்பவன். அவர்களை கோபப்படுத்தி ரசிப்பவன். இன்று திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறான்.

அவன் திருமணம்!! காதல் திருமணம்!!

நண்பர்கள் குழாம் எல்லாம் மண்டபத்தில் இருக்கிறது. நான் மட்டும் கணினி முன்பே. வெளிநாட்டிற்கு வந்தபின்பு தனிமையை உணர்த்தும் மற்றுமொரு தினம். கடந்த ஆகஸ்டில் திருமணம் வைக்கிறேன் என்று என்னிடம் சொல்லியிருந்தான். நானும் அந்த மாதத்தில் விடுப்பு எடுத்து சென்றேன். ஆனால் திருமணம் தள்ளி போய் விட்டது. இந்த வருடத்தில் இது இரண்டாவது ஏமாற்றம். இன்னொரு உயிர் நண்பன் குப்புசாமி திருமணம் மே மாதம் நடந்தது. இவனுடையது நவம்பர். மூன்று மாத முன் பின்னாக இருவரின் திருமணத்திலும் கலந்து கொள்ள இயலாது போயிற்று.

கல்லூரி படிக்கும்போது சொல்லிக்கொண்டேயிருப்பேன் உங்கள் திருமணத்தில் எல்லா வேலைகளும் நான் பார்ப்பேன் என்று. ஆனால் சொன்ன சொல்லை காக்க இயலாத சூழல் எனக்கு!!

காலையில் தொலைபேசினேன். திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. நண்பர்களின் ஆரவார இரைச்சலை கேட்க கேட்க மகிழ்வாய் இருந்தது.

உங்களோடு இணைந்து லட்சுமிநாராயணன் - வளர்மதி தம்பதியினருக்கு எனது இனிய திருமண வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க பல்லாண்டு!!
எல்லா வளங்களோடும், நலங்களோடும்

வாழ்க பல்லாண்டு!!

மன அடுக்குகள்

ஓவியத்திலிருந்து சிதறி
உறைந்து போன நிறங்களாய்
என் மனது
சிலபிம்பங்கள்,
சில மயக்கங்கள்,
சில தேடல்கள்,
சில தவிப்புகள்,
சில தெளிவுகள் என
மனதின் அடுக்குகளெங்கும்
திரைகளாய்
வெவ்வேறு முகங்கள்..

யாரும் பார்த்திடா
அடுக்குகளில்
வடிகட்டப்படாது
வலியோடு மிதக்கிறதென்
சுயம்
நிர்வாணத்தை தேடுகிறேன் நானும்
உடைகளிணிந்து...

உடையாது

பத்திரப்படுத்த கொடுத்தாய்
உன் கண்ணாடி இதயத்தை
நானும் ஒரு கல்லெறிந்துவிட்டேன்
உடையாது காத்தது
உன் தாய்மை!!

தாய்மை

2.
மறுக்க முடியா
இறைமை
தாய்மை!

தாய்மை

1.
வளர்ந்தபின்பு
நினைவிலிருப்பதில்லை
தாய்ப்பாலின் சுவை.
மார்பு வற்றியபின்பும்
சுரந்து கொண்டேயிருக்கிறது
தாய்மை

தேவைப்படுகிறது

தேசபக்தி வளர்க்க
தேவைப்படுகிறது
தீவிரவாதம்...

இறுகிக்கிடக்கும் தனிமை

மெளனத்திற்கும் வாய்ப்பின்றி
இறுகிக்கிடக்கிறது தனிமை
உயிரோடு
ஏதேனும் ஒரு கூட்டில்
அடைந்துவிட தேடுகிறது
நீண்டகாலமாக.

எனக்கானதில் நிரம்பாமல்
எல்லாப் பிரதிகளிலும்
எல்லாக் கூடுகளும்
நிரம்பி வழிந்துதான்
கொண்டிருக்கின்றன.

மெளனத்திற்கும் வாய்ப்பின்றி
மிதக்கிறதென் தனிமை
எண்ணைய்திவலைகளாய்

அப்பத்தாவிற்கு அஞ்சலி

இன்று காலை 8.17, மணி அளவில் எனது அப்பத்தா மரணம் அடைந்தார்கள். நீண்ட காலமாய் உடல்நலன் குன்றியிருந்த அவர்கள் இன்று தனது வாழ்க்கைப்பயணத்தை நிறுத்தி கொண்டுவிட்டார்கள். இந்த நேரத்தில் என் தந்தை என்னிடம் பேசியதுதான் நினைவிற்கு வருகிறது. குமரா என் அம்மா ராணி போல வாழ்ந்தவர்கள் அவர்கள் மரணம் வாடகை வீட்டில் நடக்ககூடாது சொந்த வீட்டில்தான் நடக்க வேண்டும் என்று. தந்தையின் அந்த விருப்பத்தை நிறைவேற்றிய நிறைவில்தான் நான் கலந்து கொள்ளமுடியாத வருத்தத்தை தேற்றிக் கொள்கிறேன். நீண்ட வருடங்களால குழந்தை பேறில்லாமல் இருக்கும் என் அக்காவின் மகளாக மறுபடியும் எங்களிடம் வருவார்கள் என்ற பிராத்தனையோடு என் அஞ்சலிகளை அவர்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். இந்த நேரத்தில் அப்பத்தா பற்றி நான் எழுதிய கவிதையை மட்டும் இங்கு இடுகிறேன்.

வருத்தத்துடன்
முத்துகுமரன்.
*
அப்பத்தா

இலையுதிர்காலம்..
பாதையெங்கும்
உதிர்ந்த சருகுகள்..
காத்திருக்கிறது
சருகான இலையொன்று
மரத்திலிருந்து மண்ணிற்கு பயணப்பட....

சருகுகள் எல்லாம்
குப்பைகள் அல்ல
அது பசுமையின் பரிணாமம்....

பெண்மையின் தன்மையாய்
செடியாய் இருக்கையிலே
நிழல் தந்தவள் நீ..
வயது பதினான்கில் தாரமாய்
ஆனவள் நீ..

அணைக்காத உன்வீட்டு அடுப்பு...
பிள்ளை சோறு பொங்கிப் பொங்கி
ஈரமான உன் மனது..
சித்தமருந்துகள் அரைத்து அரைத்து
அழகான உன் கைகள்....

உலகின் சுழற்சியில்
துக்கங்களும் நேசம் கொண்டன
உன்னிடம்...
திடீரென்று ஓய்வெடுத்த
உன்னவரின் இதயம்
திசைமாறிய காற்றாய்
உன் வாழ்வு...

ஈன்ற தலைமகனை
மடியெடுத்தாய் மறுபடியும்
சடலமாய்......
உன் சோகம் சொல்ல
முடியாமல்
தடுமாறுகிறதுஎன் தமிழறிவு...

எண்ணிப் பார்க்கிறேன் உன்னுடனான என் நாட்களை......
நீ கூறிய பாட்டிகதை முதல்
கைலாயத்தில் தாத்தாவைப்
பார்த்ததாக கூறிய செய்திவரை...
அவை கற்பனை அல்ல
நீ உணர்ந்த மரணத்திற்குப்பிறகான
வாழ்வது........

வயது உயர
உயரம்குன்றி
குழந்தையாய் உன் உருவம்
எதை உணர்த்துகிறாய்.....

மறைந்த பார்வை
மறந்த தன்னிலை
குறைந்த உணவு
குழறிய பேச்சு
மரணத்தோடும் வாழ்கிறாயே....

சத்தம் எழும்பா உன்கடைசி உணர்வுகளில்
என்னென்ன நினைக்கிறாய் ....
பிறர் சொல்ல கடினம்தான்..
எனக்கு மட்டும் தெரியும்
உன் மெளனப் பிராத்தனை.....
பேத்திகளின் வயிற்றில்
பிறந்திடவேண்டுமென்ற அந்த,,,,,,,,

மீண்டும்

அப்பாடா

மறுபடியும் அமீரகம் வந்து சேர்ந்தாகிவிட்டது. இந்த விடுமுறை மிக பரபரப்பான விறுவிறுப்பான விடுமுறையாக இருந்தாலும் மனநிறைவானதொரு விடுமுறையாக அமைந்துவிட்டது.
எத்தனை அலைச்சல், எத்தனை குடைச்சல்கள் என ஓடிக்கொண்டே இருந்தாலும் ஒருவழியாக 14ம் தேதி துபாய்க்கரையோரம் ஒதுங்கிவிட்டேன்.

ஆம். நிறைய மனநிறைவுகள் இந்த விடுமுறையில்

1.சொந்த வீடு வாங்கி குடியேறியாகிவிட்டது.

2. ஒப்புதல் கிடைத்துவிட்ட அண்ணா- அண்ணி காதல்

3. வலை நண்பர்கள் உடனான சந்திப்பு(டோண்டு முதல் சந்திப்பு வரை)

4. திராவிட தமிழர்களுடனான சந்திப்பு.

5.லிவிங் ஸ்மைல் உடனான சந்திப்பு

6. அறிவுமதி அண்ணனுடனான சந்திப்பு (கொளத்துர் மணியுடன்)

6.புலவர். கலியபெருமாளின் மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்தேசிய சிந்தனையாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் ஒருங்கே காணும் வாய்ப்பு பெற்றது

7. சுப.வீ அவர்களுடனான சந்திப்பு

8. முத்து தமிழினியுடன் சென்று அய்யா. பழ. நெடுமாறனுடன் கழித்த அந்த ஒன்றரை மணி நேரம்

9. குமுதம் உதவியாசிரியர் கடற்கரய் மற்றும் ஓவியர் கண்ணாவுடன் கழித்த மணித்துளிகள்

10. மதுரை புத்தகக்கண்காட்சியில் கவிஞர்.பிரான்சிஸ்கிருபாவுடன் செலவிட்ட மணித்துளிகள், புத்தகங்கள் வாங்கசெலவழித்த 4 மணி நேரங்கள்

இடைவிடாத ஒட்டத்தில் மனதிற்கு இதமளித்த சந்திப்புகள் புத்துணர்வைத் தந்தன. ஓடிக்கொண்டே இருந்ததால்தான் என்னவோ வீட்டை விட்டு பிரியும் போது மனம் வலித்தது. வெறுப்புடன் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு ஏக்கப் பெருமூச்சோடு சென்னை புறப்பட்டேன். துபாய் வந்தும் சேர்ந்தேன்.

சந்திப்புகளை நேரம் கிடைத்தால் விரிவாக எழுதுவேன்.

எனவே மக்களே

மத்தபடிக்கு

கச்சேரி

மீண்டும் ஆரம்பம்..

வீட்டுச் சாப்பாடு!!!

ஆமா!
நினைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. ஒரு மாதம் அம்மா கைச்சமையல். வருட விடுமுறைக்காக வருகின்ற 11ம் தேதி தமிழகம் செல்கிறேன். அடுத்த மாதம் 13ம் தேதி வரை இருப்பேன். இந்த பயணம் மகிழ்ச்சிகரமாக அமையவிருக்கிறது. ஆமாம். என்னுடைய சம்பாத்தியத்தில் சொந்த வீடு வாங்க இருக்கிறேன். என் பெற்றோருக்கு இது என் அன்பு பரிசாக இருக்கும் என்று நம்புகிறேன்!!.

சென்றமுறை போல் இல்லலமல் விடுமுறையின் பெரும்பகுதியை அவர்கள் உடனே கழிக்க வேண்டும் என ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் முடிந்தவரை வலை நண்பர்களை, சந்திக்கவிரும்புகிறேன் சென்னையிலோ, மதுரையிலோ. சந்திக்க விரும்புவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். இன்னும் சில நாட்களுக்கு வலைப்பதிவுகளில் செலவிடும் நேரம் குறைவாகவே இருக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.( இப்ப மட்டும் என்ன வாழுதானு மனசாட்சி இடித்த போதிலும் :-) ).

திராவிடத் தமிழர்களளின் முதல் தமிழக மாநாடு நடக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. நண்பர்களின் ஒத்துழைப்பை பொறுத்து இது அமையும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

வீட்டில் எ-கலப்பை இறக்கி உங்களை தொல்லை செய்தாலும் செய்வேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.:-)

வரட்டா!!!

திருமண மலர்கள் தருவாயோ.....நன்றி: ஜி.கெளதம் http://gpost.blogspot.com/2006/08/blog-post_05.html

நன்றி நண்பர்களே...

தேன்கூடு - ஜூலை மாதப்போட்டியில் வென்ற நிலா, லிவிங் ஸ்மைல் வித்யா, பொன்ஸ் ஆகியோருக்கு மனமார்ந்த பாரட்டுகள்...

அப்புறம் என்னுடைய கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மொத்தம் 11 ஓட்டுல 1 ஜி.கெளதம் போட்ட தர்ம ஓட்டு ஒண்ணு. அவருக்கு எனது நன்றி. ஒண்ணு யாருன்னு தெரிஞ்சு போச்சு மீதி பத்து ஆளுங்க யாருன்னு தெரியாம மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது. பின்னூட்டத்தில் வந்து தெரியப்படுத்தினால் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வசதியாக இருக்கும்... :-))

அப்புறம் அற்புதமான தலைப்பைத் தந்த வாத்தி ''இளவஞ்சிக்கு'' நன்றி. கிட்டத்தட்ட இருபது நாட்கள் எடுத்ததெனக்கு ''காற்றுக் குமிழி'' கதையை எழுத. ஆனாலும் மனதில் நினைத்தது எழுத்தில் வரவில்லை. அதில் கொஞ்சம் ஏமாற்றமே. அப்போதய பணிச்சூழலில் அதற்கு மேல் மண்டையை உடைத்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் முக்கிய காரணம். வெற்றிக்கோட்டைத் தொட இன்னும் அதிகம் உழைக்க வேண்டும், எழுதும் கலையை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதே இந்த போட்டி எனக்கு தந்திருக்கும் பரிசு. அறிவிப்பு கொடுத்தவுடன் பட் பட்டென்று படைப்புகளை எழுதுபவர்களைக் கண்டால் ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களின் திறமை வியக்க வைக்கிறது. ஆகஸ்டு மாத போட்டி இன்னும் விறுவிறுப்பாகவும், நல்ல பயிற்சி களனாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அடுத்த மாதம் வெல்ல போகின்றவர்களுக்கு என் முன் தேதியிட்ட வாழ்த்துகள்..

இறுதியாக

வாக்களித்த நண்பர்களுக்கு மீண்டுமொருமுறை

நன்றி! நன்றி!! நன்றி!!!

அமீரகத்தில் உமர்தம்பி அவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி
சமீபத்தில் மறைந்த தமிழ் கணிமை கொடையாளர் திரு. உமர்தம்பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அமீரகத்தில் வரும் வியாழன்(27.07.2006) மாலை 8 மணி அளவில் துபாய், கராமா சிவ்ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற இருக்கிறது. அமீரகத்தைச் சேர்ந்த இணைய நண்பர்களை இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புக்கு
பரத் வெள்ளைச்சாமி - 050 -5581859
முத்துகுமரன் - 050-6243115

முருகா!!

முருகா!!
பழநியில் நின்றது போதும்
புறப்படு சிதம்பரத்திற்கு.,

உங்கய்யனை மீட்டு வர.

காற்றுக் குமிழி - தேன்கூடு போட்டி

பரபரப்பின் உச்சத்திலிருந்தது மருத்துவமனை. வெளிச் சூழல்களால் எதுவும் பாதித்திடாத அமைதியோடு தீவிர சிகிச்சை பிரிவு. உடலில் உயிர் தொடர்வதற்கும் மரணம் வருவதற்கும் இடைப்பட்ட இடம். கண்விழித்திட வேண்டும், ஓரிரு வார்த்தைகளாவது கேட்டிட வேண்டும் என்னும் தவிப்புகளோடும், பிராத்தனைகளோடும் வெளியே கலக்கத்தோடு மனித
முகங்கள். பேரமைதிக்குத் தயார்படுத்தும் ஒத்திகை அறை போல் படுக்கைகளின் மேல் சலனமற்ற நோயாளிகள்.

உயிர்காக்கும் இயந்திரங்களும் அமைதியாக இயங்கிக்கொண்டிருக்க கடிகாரம் மட்டும் அதன் சத்தத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறது. வட்டத்தின் முற்றுப்புள்ளிக்கு அருகே துணையாக என் உயிரும் வந்துகொண்டிருக்கிறது. இந்த சுற்று
எத்தனை நேரத்திற்கென்று தெரியாது.

படுக்க வைக்கப்பட்டிருக்கிறேன் முக்கால் பிணமாக. இயந்திரங்கள் வரையும் படங்கள் சரியாக வருகிறதா என பார்த்துக்கொள்ள ஒரு செவிலி. இருக்கட்டும் என் பயணத்தின் செய்தியை அறிவிக்கக்கூடும். எனக்கோ கழுத்திற்கீழே ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. இதயம் துடிப்பதால்தான் இருக்கிறேன். ஆனால் இதயம் இருக்கும் இடம் தெரியவில்லை கால்கள், கைகள், உறுப்புகள் எல்லாம் மிதந்து கொண்டிருக்ககூடும். ஆன்மா என்று சொல்கிறார்களே
இப்படித்தான் திரியுமா??

என்ன இது மூளை அதிகமாக சிந்திக்கிறதே. நின்றுவிடப்போவதற்கு முன்னால் அதற்கு எத்தனை வேலைகளோ!

சமுத்திரம் போல கிடக்கிறேன். வெளிப்பார்வைக்கு சலனமில்லாத தோற்றம். உள்ளுக்குள் எண்ணக் குமிழ்களால் நுரைத்துத் ததும்பும் பேரலைகள். ஓயாத அலைகள் அல்ல இவை. நின்றிடப்போகும் அலை.என்ன நடக்க போகிறது எனக்கு?

மெல்ல மெல்ல இதயத்துடிப்பு குறையுமா? பார்வையின் ஒளி மங்குமா? வெளிச்சத்தங்கள் மறைந்து சத்தங்களற்ற அமைதி
தோன்றூமா? உள்ளே வந்து போய்க்கொண்டிருக்கும் மூச்சு நின்றுவிடக்கூடுமா? இதுவரை எத்தனை முறை உள்ளே போய்
வந்திருக்கிறது. ஒவ்வொரு சுவாசத்திற்கும் காத்து மரணமடைந்திருக்கிறதே! அப்போது அதைப்பற்றி கவலைப்படாத மனது
இப்போ நின்னிடுமோன்னு தவிக்குதே! ஏன்?
இன்னும் எவ்வளவு நேரத்திற்கு எனக்கிது புரியும்? பிறகென்னாகும்?
ஒளியமுடியுமா? இல்லை விடுபட முடியுமா? தடுக்க முடியுமா?
எல்லாம் ஒவ்வொன்றாய் நடக்கும்.பிறப்பின் போதே உறுதியான இறப்பும் வரவிருக்கிறது. நிரந்திரமாக வரவிருக்கிறது.

எதுவும் முடியாது. எனது இறுதி இயக்கம் என் கட்டுபாட்டில் இல்லை. நான் பிரபஞ்சத்தின் கட்டுக்குள் போய்க் கொண்டிருக்கிறேன். எனதுயிர் பிரபஞ்ச பெருவெளியில் ஒன்றுமேயில்லாதகப் போகிறது. நான் காற்றோடு கலக்கப்
போகிறேன். சுவாசித்த காற்றின் சுவடுகள் இல்லாததுபோல் நானும் சுவடற்று கரையப் போகிறேன். நிச்சயம் எல்லாம் நடக்கவிருக்கிறது. எல்லோருக்கும் நடந்தது என் அப்பாக்கும் அம்மாவுக்கும் நடந்தது எனக்கும் நடக்கப்போகிறது.

ஓயப்போகும் எண்ண அலைகளின் ஒழுங்கற்ற முட்டல் மோதல் தொடர்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக என் ஞாபக எல்லைகளிலிருந்து எல்லாம் விடுபடுகிறது. சின்ன வயசில் வசித்த கிராமத்து வீடு, சகதியில் விளையாடி கிணற்றில் குளித்து விளையாடிய வயக்காடு, பேச்சுத்துணையாயிருந்து தென்னை மரமும்,
நடந்துபோகும் பள்ளிக்கூட பாதை, இருளப்பசாமி கோயில், கல்லூரி, புதுவீடு எல்லாம் எல்லாம். வீடு முழுசும் நிறைச்சு வச்சிருந்த அமுதனோட பரிசுகள். இப்பத்தான் அவனை கையில் எடுத்து கொஞ்சியது போல இருந்தது. அவன் தூக்கிக் கொஞ்ச பிள்ளையும் வந்துவிட்டது. காலம் ஓடுவதே தெரியாதிருக்கிறது.

ஒன்றுமில்லாத வெற்றிடம் நோக்கி துவங்கிவிட்டது பயணம்.

கண்களின் திரைகளில் உதறமுடியாத உறவுகளின் பிம்பங்கள். ஒளி மங்குமுன் மீண்டுமொருமுறை பார்த்திட வேண்டும். வந்திடுவார்களா? என் துடிப்பை எல்லாம் சொல்லனும் மனசு ஏங்குதே. நாக்கும் மறத்துக்கொண்டிருக்கிறதே. வார்த்தை வருமா?பேச வருமா. வந்தாலும் எவ்வளவு நேரத்திற்கு? கண்ணாலதான் சொல்லனும். ஆனால் கண்ணீர்த்திரை தாண்டி அது போகுமா?

பாதியில விட்டுட்டு போறேனே! பாவம் அமுதன். எப்படித்தான் எல்லாத்தையும் தாங்குவான். இன்னும் எத்தனை நாளுக்கு இங்கிருக்கப்போறேன். இப்போ சுவாசிக்கிற காத்துக்கு விலை இருக்கே! அவந்தானே கொடுக்கணும். கொடுத்திட்டு சிரமப்படுவானே. பொழச்சு முக்காப்பொணமா சிரமப்படுத்தாம போகனும். இங்க வேணாம். வீட்டுல போனும். என் உசிரும்
உழைப்பும் கலந்திருக்கிற வீட்ல போகணும்

விக்கலெடுக்கிறது நிற்காமல்.

உள்ள போயிட்டு வரமுடியாம சிரமப்படுது மூச்சு.

என் சுயநினைவு குறைந்து குறைந்து எல்லாம் மறக்கத் தொடங்குகிறது

**


விமானத்தில் நுழைவதற்கு இறுதி அழைப்பு வர வெறுமையாக நடந்து வருகிறான் அமுதன். மகிழ்ச்சியாக வரும் போதெல்லாம் கிடைக்காத சன்னலோரம் இன்று கிடைத்திருக்கிறது. தளர்வாய் சாய்ந்து கொண்டான். விமான சிப்பந்தகளின் குரல்களேதும் அவனுக்கு கேட்கவில்லை. சன்னல் வழியே பார்க்க மேகம் மிதந்து கொண்டிருக்கிறது. விமானமும் கூட.விமானத்தின் கனமாய் அப்பாவின் நினைவுகள் அழுத்துகிறது. தன்னையறியாது உதடுகள் அப்பா அப்பா என உச்சரிக்கிறது. கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டான்.
எப்படிப்பா அமைதியா இருக்கீங்க. அசையாமலே இருக்கிங்களா? மத்த எல்லாத்தவிடவும் எனக்குத்தெரியும்பா,

என்னைப் படிக்க வைக்க காசுக்காக நடந்தே தேஞ்ச காலும், கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்த கையும், நான் உடஞ்சு போனப்ப ஆறுதலா சாஞ்சுகிட்ட தோளும் அசையாம இருக்கா? எப்படிப்பா அமைதியா இருக்கீங்க. அப்பா எனக்காக எத்தனை சிரமப்பட்டிருக்கீங்க. எனக்கு உயிர் தந்ததே நீங்க தான. இந்த உடம்பும் உங்க உடம்புதாம்பா. அப்பா நான் வந்திடுவேன்.
என்னை விட்டுப் போயிடாதிங்கப்பா. என் கூடவே வச்சுக்குவேன். நான் பார்த்துக்குவேன் உங்களை. நீங்க வேணும்பா. என்ன
செலவானாலும் பரவாயில்லை.

ஆண்டவா அப்பா பொழச்சுக்கணும்!

வேக வேகமாக விமான நிலைத்திலிருந்து வெளிவந்து நேராக மருத்துவமனைக்கு நுழைந்தான். அமரர் ஊர்தி தயாராக
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பதட்டம் கூடியவனாய் விறுவிறுவென உள்ளே சென்றான். அப்பாக்கு ஒன்னும் ஆயிருக்காது.அப்பா வந்துட்டேன்பா!
தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு வெளியே எல்லோரும் அழுது கொண்டிருக்க ஏதோ விபரீதமாக நடந்துவிட்டது என ஓடினேன்.

உள்ளா பார்த்தால் அப்பாவுக்கு மூச்சுத் திணறல். எவ்வளவோ போராடியும் கட்டுக்குள் வராமல் மெல்ல மெல்ல அடங்கி விட்டது. எனக்கு உயிர்நாடியே ஒடுங்கியது போலிருந்தது.

எதுவும் பேசவில்லை.
இருவரும்
எதுவும் பேசவில்லை

அப்பா இனி இல்லை.

இத்தனை நாள் பார்த்துகிட்டு இருந்தனே. இனிமே எப்பவுமே பாக்க முடியாது.

மரணம்

என் அப்பாவின் மரணம்.நிமிடமாய் கரைந்துவிட்டது ஓராண்டு...

வாழ்க்கையின் ஓட்டமும்தான்.

மரணம் இழப்புகளைத் தந்தாலும் அது வாழக்கற்றுக் கொடுக்கிறது. இழப்புகளைக் கடந்து வாழும் பக்குவம் மனித இனத்திற்கு
இருக்கிறது.

''எல்லா மரணங்களையும் கடந்து செல்லமுடியும்
நம் மரணத்தைத் தவிர...''

நிலவுநண்பனுக்கு திருமணம்..

மகிழ்ச்சியான செய்தியோடு உங்கள் முன்னே....

கவிதைகளாலும், கருத்துகளாலும் மென்மையான உணர்வுகள் மூலமாகவும் நம் இதயம் நனைக்கும் நண்பர் நிலவுநண்பன் (ரசிகவ் ஞானியார்) தன் மனம் நிறைந்த நிலவை(ஜஹான்) கரம்பிடிக்கவிருக்கிறார். **காதல் திருமணம்**. :-)

திருமணம் வருகிற ஜுலை இரண்டாம் தேதி 02.07.2006, திருநெல்வேலி பாளையங்கோட்டை அன்னை திருமண மண்டபத்தில், காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் நடைபெற இருக்கிறது. அவரின் சார்பாகவும் அவர்களிருவரின் குடும்பத்தார் சார்பாகவும் அனைவரையும் திருமணத்தில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்.

* நிலவு நண்பன் இன்று இரவு இந்தியா செல்லவிருப்பதால் கொஞ்சம் பரபரப்பாக இருக்கிறார். வலைப்பூ அன்பர்களுக்கான அவரின் தனிப்ப்பட்ட அழைப்பும் விரைவில் வரும். **

மணமக்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்
மு.முத்துகுமரன்

கால்களின் ஆல்பம் - வா.மணிகண்டனுக்காக

நண்பர் வா.மணிகண்டன் கவிஞர். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை தன் வலைப்பூவில் இட்டு இருந்தார். இந்த கவிதை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டார். அவருக்காக இந்தப்பதிவு.

இன்றைய கவிஞர்களில் மிக முக்கியமான கவிஞர் திரு.மனுஷ்யபுத்திரன்.
அவருடைய என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் தொகுப்பின் முதல் கவிதையிது.

நுட்பமாண உணர்வகளை துல்லியமாக எழுத்தில் கொண்டுவரும் ஆற்றல் கொண்ட அவரின் கவிதைத் திறனுக்கு கட்டியம் கூறுவது போல் அமைந்திருக்கும் கவிதை இது.

வாசித்து முடித்தவுடன் கண்களின் ஓரத்தில் ஒரு துளி கண்ணீர்.

**

கால்களின் ஆல்பம்


ஆல்பம் தயாரிக்கிறேன்
கால்களின் ஆல்பம்

எப்போதும்
முகங்களுக்கு மட்டும்தான்
ஆல்பமிருக்க வேண்டுமா?

திட்டமாய் அறிந்தேன்
எண்சான் உடலுக்குக்
காலே பிரதானம்

படிகளில் இறங்கும் கால்கள்
நடனமாடும் கால்கள்
பந்துகளையோ
மனிதர்களையோ
எட்டி உதைக்கும் கால்கள்

கூட்டத்தில் நெளியும் கால்கள்
பூஜை செய்யப்படும் கால்கள்
புணர்ச்சியில் பின்னும்
பாம்புக் கால்கள்

கறுத்த வெளுத்த சிவந்த
நிறக்குழப்பத்தில் ஆழ்த்துகிற
மயிர் மண்டிய வழுவழுப்பான
கால்கள்

சேற்றில் உழலும் கால்கள்
தத்துகிற பிஞ்சு கால்கள்
உலகளந்த கால்கள்
அகலிகையை எழுப்பிய கால்கள்
நீண்ட பயணத்தை நடந்த
சீனன் ஒருவனின் கால்கள்

பாதம் வெடித்த கால்கள்
மெட்டி மின்னுகிற கால்கள்
ஆறு விரல்களுள்ள கால்கள்
எனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்குப்
பெருவிரல் நகம் சிதைந்த
நீளமான கால்கள்

குதிக்கிற ஓடுகிற தாவுகிற
விதவிதமாய் நடக்கிற
(ஒருவர்கூட மற்றவரைப் போல் நடப்பதில்லை)
பாடல்களுக்கு தாளமிடுகிற
நீந்துகிற மலையேறுகிற
புல்வெளிகளில் திரிகிற
தப்பியோடுகிற
போருக்குச் செல்கிற
(படைவீரர்கள் கால்கள் உண்மையானதல்ல)
நேசித்தவரை நாடிச் செல்கிற
சிகரெட்டை நசுக்குகிற
மயானங்களிலிருந்து திரும்புகிற
விலங்கு பூட்டப்பட்ட
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட
வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற
வரிசையில் நிற்கிற
தையல் எந்திரத்தில் உதறுகிற
சுருங்கிய தோலுடைய
நரம்புகள் புடைத்த
சிரங்கு தின்ற
குஷ்டத்தில் அழுகிய
முத்தமிட தூண்டுகிற கால்கள்

யாரைப் பார்த்தாலும்
நான் பார்ப்பது கால்கள்
ஒட்டுவேன்
என் கால்கள் ஆல்பத்தில்
எல்லாக் கால்களையும்

பெட்டிக்கடியில்
ஒளித்து வைத்துவிடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல்
என் போலியோ கால்களை மட்டும்.

வலைப்பூ ஆய்விற்காக - என்னைப் பற்றி கொஞ்சம்

வலைப்பதிவர் பெயர்:முத்துகுமரன்

வலைப்பூ பெயர் : முத்துகுமரன், என் பார்வையில்

சுட்டி(url) : www.muthukumaran1980.blogspot.com ; www.eenpaarvaiyil.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: துபாய் தற்சமயம். சொந்த ஊர் மதுரை
நாடு:தமிழ்நாடு
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நண்பன்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
முத்துகுமரன் - ஜூன் 25 2005
என் பார்வையில் - அக்டோபர் 21 2005

இது எத்தனையாவது பதிவு: 76
இப்பதிவின் சுட்டி(url): http://muthukumaran1980.blogspot.com/2006/06/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் எண்ணங்களை, கவிதைகளை வெளிப்படுத்த.
சந்தித்த அனுபவங்கள்: பலதரப்பட்ட மனிதர்களும், அவர்கள் குணங்களும்,
பெற்ற நண்பர்கள்: நேரில் காணாவிடினும் நெருங்கிய உறவுகள் போன்று கிடைத்திருக்கும் நண்பர்களும், ஒத்த சிந்தனையுடைய நண்பர்களும், மாற்றுச் சிந்தைனையிருபினும் பண்போடு பழகும் நண்பர்களும் என நிறைவான நண்பர்கள்.
கற்றவை: கற்றது கொஞ்சமே. கற்க வேண்டியிருப்பது நிறைய.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எனக்குள் தோன்றும் எண்ணங்களை சிந்தனைகளை சுயதணிக்கைக்குப்பிறகு எந்த வித தடையுமின்றி வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதே மிகப்பெரிய சுதந்திரம்தான்.
கிடைத்த சுதந்தரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதிலும் கவனம் கொண்டிருக்கிறேன்.

இனி செய்ய நினைப்பவை: சமூகத்திற்கு பயன்படத்தக்க வகையில் வாழ்க்கையை அமைத்துகொள்ள வேண்டும்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
வீட்டிற்கு மூத்தவன், பிறந்தது பின்பு பெரும்பகுதி வளர்ந்தது திருவரங்கம் என்றாலும் எப்போதும் மதுரைக்காரனாகவே உணர்பவன். படித்தது பொறியியல். பணிபுரிவது அமீரகத்தின் துபாயில். தமிழ் மீதும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் பற்று கொண்டிருப்பவன். கவிதைகளில் ஆர்வமுடையவன். விரைவில் முதல்கவிதைத் தொகுப்பு ''தமிழ்அலை'' வெளியீடாக விரைவில் வர இருக்கிறது.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
பெரியாரை நோக்கி என்னைத் திருப்பிய பேராசிரியர்.சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

அப்பா அம்மாவிற்கு இன்று 30ம் ஆண்டு மணநாள்.

அப்பா அம்மாவிற்கு இன்று 30ம் ஆண்டு மணநாள்.

அப்பா - அம்மாவிற்கு இன்று முப்பதாம் ஆண்டு மணநாள்(7-6-76). தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த நாளில் அவர்களோடு இருந்து வாழ்த்துகளைப் பெறமுடியவில்லை. அவர்கள் இன்று போல் என்றும் உடல் ஆரோக்கயத்தோடும், மன மகிழ்வோடுமிருந்து எங்களை வழிநடத்த வேண்டிக்கொள்கிறேன். அவர்களின் ஆசிர்வாதங்களுடன் என் மகிழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

காலம் சொல்லுமெந்தன் உயிர்ப்பை...

வார்த்தைகளின் தயவில்
மறைந்தொதுங்கி
வேடந்தரித்துகொண்டு
ஓலமிடும் அற்பமே

நாங்களியங்குவதும்
எழுதுவதும்
முகங்காட்டித்தான்
ஒளிந்தல்ல..

நீ கோமியம் தெளித்து
புனிதப்படுத்த
வாயிலில் காத்துக்கொண்டிருக்கும்
எழுத்துகளல்ல எமது.

காலம்
உரத்துச் சொல்லுமதன்

உயிர்ப்பை..

மீள்பதிவு - ஓடுகாலிகள்

பீடங்களின் பிடறிகளில்
விழுந்தன மரண அடிகள்
பெருவலியின் வேதனைகளை
கீரிடங்களைச் சரிசெய்யும் சாக்கில்
சமாளிக்கின்றன.
அக்கம் பக்கம்
யாருமில்லையென்பதை
உறுதி செய்துகொண்டு
வேகமாய் வருகின்றன
வீர முழக்கங்கள்.

எப்போதும் புறமுதுகிட்டு
ஓடத்தயாராயிருக்கும்
ஓடுகாலிகளே...
முதுகெலும்பற்ற
புழுக்களான உம்மோடு
போரிட அல்ல
என் வீரம்

உனக்கான கவிதைகளோடு...


சூல் கொண்டிருக்கிறது
பூந்தோட்டத்தில் புதுமலர்.
காதுகள் நனைய கேட்டேன்
கண்ணே!
பூமிதொட நீ வரவிருக்கும் செய்தியை..

பூரித்திருக்கும் மகிழ்வோடு
நான் யாரென்று சொல்லி
அறிமுகப்படுத்திக் கொள்ளுமந்த
தருணத்திற்காக
தேன்நிரப்பி காத்திருக்கிறேன்
கண்கள் நிறைய அன்போடு
உயிர்மலரே,


உறவற்றவனாகி போனதால்
காத்திருக்கிறேன்
ஓர் அனுமதிக்காக


இல்லையென்றாலும்
வாழ்த்திக் கொண்டேயிருப்பேன்
உனக்கான கவிதைகளோடு...

இதம்தரும் காதல்கவிதைகள் எழுதிடும் நேரம்

04-05-06 வெறும் எண்களாகத் தெரியலாம் பலருக்கு.

ஆனால் ஒரு நீண்டகாதல் திருமணமாக மலர்ந்திருக்கிறது இன்று. என் கல்லூரித்தோழன் குப்புசாமி- ராஜேஸ்வரியின் திருமணம் இன்று. நான் மிக மிக மிக விரும்பிய ஒரு நாள். பக்கத்தில் இல்லாவிட்டாலும் என் மகிழ்ச்சியில் எள்ளவிலும் குறைவில்லை. எங்கள் நண்பர்கள் அத்தனை பேரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு அற்புதத் திருநாள். அவர்களின் பத்தாண்டு அன்பின் புதிய பரிணாமம். புதிய உறவில் அதே இனிமையான காதலோடு பயணிக்க இருக்கிறார்கள்.

எப்படி ஆரம்பித்தது எங்களுக்குள் நட்பு...

1997 அக்டோபர் மாதம் கல்லூரியில் சேர்ந்து எல்லோரும் விடுதிக்கு போகிறோம். மொத்தம் 16 பேர் இருவர் ஆந்திரா, ஒருவன் டில்லி, ஒருவன் மலையாளி ஒருவன் சென்னை, மீதி பதினொன்றும் மதுரை, மதுரைக்கு தெற்கே. விடுதிக்கு நான் என் தந்தை தாயாரோடு,குப்புசாமி அவன் அப்பாவோடு, சாரி வாங்க காலர நடந்திட்டு வருவோம்னு எங்க அப்பா சொல்ல நடக்க ஆரம்பித்தோம். என் கையில் குடை,பெரியவர்கள் பேசிக்கொள்ள நாங்கள் இருவரும் பேசத் தொடங்கினோம்.

நான் முத்துகுமரன்..

நான் குப்புசாமி, வீட்ல கூப்பிடறது கணேஷ்.

குப்புசாமி உங்க சொந்த ஊர்

திருநெவேலி

நான் வத்திராயிருப்பு ஆனா இப்ப மதுரை...

லைப்ல என்ன செய்ய ஆசை முத்து

நல்லா படிக்கணும்... படிச்சி முடிச்சோன வேலைக்கு போகனும்... போனவுடனே மாமா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்( எதுவும் சரியா நடக்கலை என்பது உபரித் தகவல்)

நிசமா முத்து

ஆமா

நான் ஒரு வருசம் இம்புரூவ்மெண்ட் எழுதி வந்திருக்கேன்... உன்னை மாதிரி ஆளுங்களோட இருக்கணும்( ஆனா நடந்த கதை வேற)

முன்னேறனும்..

நாம ரெண்டு பேரும் ரெம்ப நெருங்கிட்டோம்
எப்படி குப்ஸ்
நானும் மாமா பொண்னை லவ் பண்றேன்..
நீங்க ட்புள் சைடா??
ஆமா!!
இங்க சிங்கிள் சைட்... ஒரு தலை ராகம்....

கவலைப்படாத நிச்சயம் நடக்கும்..
ம். உன் வார்த்தை பலிக்கட்டும்
பத்து நண்பர்களிலும் இவன் மேல் எனக்கு கொஞ்சம் கூடுதல் பிரியம்... காதல் பற்றி பேசலாம், நம்ம ஜாதி என்று..
இப்படி ஆரம்பித்தது எங்கள் நட்பு...

குப்ஸ் நாம எப்பவும் மச்சினன் உறவுதான்.. நான் பொண்ணு வீட்டுகாரந்தான்.
டேய் இப்பதான் பழக ஆரம்பிச்சே இருக்கோம். அதுக்குள்ள அந்தப்பக்கம் போயிட்ட:-))

அதுதாண்டா பாதுகாப்பு... பொண்ணு வீட்டுகாரங்கனா எப்பவும் சாப்பாடு கிடைக்கும். நமக்குள்ள பிரச்சனை வந்தாலும் வீட்டுக்கு வர்றதுக்கு ஒரு சாக்கு வேணும்ல

முத்து இதுதாண்டா உன்கிட்ட பிடிச்சது.

இப்படியாக தொடங்கியது..

அடுத்த ஒராண்டிலே எங்களிருவருக்கும் சண்டை
அதுவும் காதல் விசயத்திற்காகதான்...
விளையாட்டுதனமாக என் காதலை கிண்டல் பண்ண எனக்கு கோவம் வந்துவிட்டது. பேசுவதை குறைத்து கொண்டேன்..
பொதுவாக வேறு வழியின்றி கல்லூரியில் பேசும் சூழல்களில் மட்டும் பேசிக் கொள்வோம்.. ஆனால் வெளியாட்களிடம் எப்போதும் விட்டுக்கொடுத்ததே கிடையாது...

ஆனால் அவன் காதல் பற்றி பேசும் போது மட்டும் விதிவிலக்கு. ஏனோ அவனும் என்னிடம் மட்டும்தான் மனம் விட்டு பேசுவான்...

ஒருமுறை அவர்களுக்குள் ஊடல்...

மிகவும் மனம் நொந்து பேசினான். சரி வா நான் போன் பண்ணி பேசுறேன் சிஸ்டர்கிட்ட...

பேசினன்

அண்ணா அவர்கிட்ட கொடுங்க.

பேசினான்...
குப்ஸ் மன்னிச்சிக்கடா?
எதுக்குடா
உன்கிட்ட சரியா பேசமா இருந்ததுக்கு...

அதன் பிறகு இன்று வரை நெருக்கம் இறூக்கமாகவே இருக்கிறது.
எங்கள் நண்பர் குழாமின் மற்றொரு முக்கிய அங்கம் லஷ்மிநாரயணன்.. அவனுக்கு பொழுது போக்கே குப்ஸை வம்பிழுப்பதுதான்..
காதாலாம் காதல்... முன்னேற பாருடா குப்பா?
இன்னும் மாமா பொண்ணுன்னு....

பயங்கரமாக வெறுப்பேத்துவான். அப்ப நாங்க ரெண்டு பேரும் நகர்ந்திடுவோம். எங்களுக்குள்ள பேசி உற்சாகப்படுத்திகிட்டு அவன கலாய்ப்போம்...

எங்கள் குழுவிலே வெற்றி பெற்ற காதல் என்பது அவனுடையதுதான். மத்த பத்து பேருக்கும் கல்லூரி கால சுபயோக சுபதினத்திலேயே ஆப்பு மற்றும் சங்கூதப்பட்டு விட்டது.

சகோதரி குப்ஸ்ற்கு மிகப்பொருத்தமானவர். அமைதி. அவன் மேல் அளவு கடந்த அன்பு. ஆனால் வெளிக்காட்டிக்காத குணம்.

என்ன செய்ய நம்மாள் கொஞ்சம் ரொமாண்டிக் டைப்....

முத்து காதல் வசனம் பேசுனா எந்த உணர்ச்சியும் காட்டாம தேமேனு இருக்காடா... எப்பிடி காலத்த கடத்த போறேனோ

கல்யாணம் பண்ணுடா, அப்புறம் பாரு பிரியமா நடந்துக்குவாங்க

அது தெரியும்டா

மனுசனுக்கு லவ்வுனா ஒரு திரில் வேணாமா?

திரில் வேணூமா கல்யாணம் பண்ணு..

டே எனக்காக பேசவே மாட்டியா...

நிச்சயம் மாட்டேன்.
**
கல்லூரி முடிந்து மேற்படிப்புக்காக ஜெர்மனி போனான். இப்போது அங்கு ஆராய்ச்சியாளனாக இருக்கிறேன்.
இந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் அதிகம் பேசியதும் காதலைப்பற்றியும் அவன் திருமணத்தை பற்றியும்தான்....
மனசு சங்கடமாய் இருக்கும் போதெல்லாம் என்னோடு பேசுவான். சின்ன சின்ன அழுத்தங்களை என்னோடு பரிமாறி இளைப்பாற்க் கொள்வான். அப்படிப்பட்ட ஒரு நண்பனாய் இருப்பதே எனக்கு அதிகப்படியான மகிழ்ச்சி...
**
இன்று திருமணம்...

ஆனால் நான் இங்கு துபாயில்...

ஆனால் திருமண நிகழ்வத்தனையும் என் கண்களுக்குள்.

பொண்ணு வீட்டுகாரன் இல்லையா.. அதுனால கொஞ்சம் பரபரப்புதான்...

திருமண மண்டபம்.. காலையில்
குப்புசாமி அப்பா: வாடா முத்து... ஆளே மாறிட்டியே..
நரம்பா இருந்த.. ம்ம்ம் சதையெல்லாம் வச்சு அசத்துற
கிண்டல் பண்ணாதீங்கபா.
நீங்க இன்னும் அப்படியே இருக்கீங்க...
உங்க 60ம் கல்யாணம் எப்பப்பா
அதை ஏன்பா ஞாபகப்படுத்திற... மறுபடியும் அதே பொண்ணுன்னு சொல்றாங்க்... மனசனுக்கு ஒரு மாற்றம் வேணாமா??
இருங்க அம்மாகிட்ட சொல்றேன்.. புதுப்பொண்ணு கேக்குறீங்கனு...
வேண்டாம்டா சரினு வேறொருத்தியை கட்டி வச்சாலும் வச்சிடுவா... அவளே போதும்...
அது...
குப்பன் சாதிச்சிட்டன்லாபா...
என் பையன்ல. அதான்..
குப்புசாமி அப்பாதான் எனக்கு ரெம்ப நெருக்கம்... தடலாடி ஆனால் அணுகிபார்த்தால் மென்மையானவர்..

அப்பாவை சந்தித்துவிட்டு வந்தால் நண்பர்கள் படை....

வழக்கமான நலம் விசாரிப்பகளோடு அவனவனுக்கு எப்போது திருமணம் என்ற அதிமுக்கியமான விசாரணைகள்..வேலை சூழல் பற்றிய செய்திகளோடு அடுத்த திருமணம் யாருக்கு என்பதை உறுதி செய்து கொள்கிறோம்.அவன் லஷ்மி நாரயணன்....( மகனே ஊருக்கு வரும் போது கல்யாணம் வைக்கல மாறுகால் மாறுகைதான்!!!).
சடங்குகள் ஆரம்பிக்கிறது.

மணமேடையில் குப்பனுடைய ஒவ்வொரு செய்கைக்கும் ரன்னிங் கமெண்டரி நடக்கிறது..
அங்க பாரு மாப்பிள்ளைய
என்னா பவ்யம்.. என்னா பொறுப்பு....
பொறில மாட்டுன எலிகதைதாண்டா இனிமே அவன் வாழ்க்கை...
லக்ஸ்(லஷ்மி) அடுத்த எலி நீங்கிறத மனசுல வச்சுகிட்டு பேசு... அதே மாதிரி நான் சொன்ன பட்டு வேட்டி விவகாரமும் ஞாபகம் இருக்கடும்
அய்யர் சொல்றதை வரி மாறாம ஒப்பிக்கிறான் பாரு... குப்ஸ் எங்கயோ போயிட்டாண்டா!!!

மாங்கல்யம் தன்ந்துனானே........

கெட்டி மேளம் கெட்டி மேளம்.........


எல்லோருடய அட்சதைகளோடு என்னுடையதும்.....
ஒவ்வொருத்தாராய் வாழ்த்து சொல்ல நண்பர்கள் முறை வரும் வரை காத்திருந்தோம்...

மாப்ள... வாழ்த்துகள்
ஒருவழியா எல்லாம் நல்லபடியா முடிஞ்சது... உண்மையிலே சாதிச்சிட்டடா... எல்லாரும் இதைப்பாக்கத்தான ஆசப்பட்டோம்... நல்ல நினைப்புக்கு எப்பவும் நல்லதேதான் நடக்கும்..

சிஸ்டர் எங்க கண்ணையே ஒப்படைக்கறோம்.. கண்ணீர் வராமா பார்த்துக்குங்க....:-)))

கிண்டல்கள்... கேலிகள்....................................


வழக்கம் போல பந்தி பறிமாறலிலும் பந்தியிலும் எங்கள் குழாம் பட்டையை கிளப்பியது......


இதுதான் நடந்திருக்கும்...
என்ன இந்த ஜீவன் அங்கில்லாம் இங்கிருக்கிறது......

குப்பா
இனிய திருமண வாழ்த்துகள்டா!!!!


லே ஞாபகம் இருக்கா? உன் கல்யாணத்துக்கு நீங்க இரண்டு பேரும் சேர்ந்து எடுத்து கொடுக்கிற புகைப்படம்தான் என் அன்பளிப்புனு சொன்னனே...
நிறைவேத்த முடியலடா....


எல்லாம் முடிஞ்சிட்டா எப்படி,,,,


வாழ்க்கை முழுக்க உங்களுக்கு ஒருவகையில நான் கடன்பட்டுத்தான் இருக்கறதவே இருக்கட்டும்....
அடைக்கும் வரைக்கும் தொடரலாமே... அதனாலா சந்தோசம்தான்.


உங்களுக்கான கவிதை உங்களுக்காக மட்டுமே...


அஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்


அன்புடன்

முத்துகுமரன்அறிவுமதி

மதி

தம்பி என்றழைக்கும் தாய்மை
அண்ணன்
அறிவுமதி

பகைவர்க்கு
தமிழறிவும''தீ''

மானமற்று
மூடித் திரியும் நீங்களெல்லாம்
வருமானம் போனாலும்
தன்மானம் இழக்காத
அவருக்கு
இல்லை
அவர் மயிருக்குக் கூட சமமல்ல

தனியார்மயம்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்
பல்லிளிக்கிறது
தனியார்மயம்

கனவில் நீ வந்ததைப் பற்றி...

கனவில் நீ வந்ததைப் பற்றி
எழுத நினைத்து நினைத்து
தாமதமாகிக்கொண்டே போகிறது.
உன் வருகை
என்னை அழுத்தவில்லை
அழ வைக்கவும் இல்லை.
நெருடலில்லாது
சிரிக்கவும் பழகிவிட்டோம்
ஆனால்
அதைச் சொல்லும் போதுமட்டும்
ஏதோ ஒரு
மெல்லிய சுமையேறியது போல்
கனக்கிறதென் மனம்

முத்துக்கள் நான்கு

சங்கிலிப்பதிவு மாலையில் இந்த முத்துவை கோர்த்துவிட்ட ஜோ அவர்களுக்கு நன்றி. இந்த விளையாட்டு ஆரம்பித்தவுடனேயே நான் எந்தப்பக்கம் இருந்து கொக்கி வரும் என்று யோசித்து ஒரு நான்கு பேரை குறித்து வைத்திருந்தேன். முதல் ஆளே கூப்பிட்டு விட்டார்.:-) அவருக்கு நன்றி.

பிடித்த நான்கு விசயம்:

அரசியல்: நான் மட்டும் விதிவிலக்கா என்ன. எனக்கு மிகவும் பிடித்த விசயம் அரசியல். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கூடியது இது. அதனால் ஒதுங்கிப் போகாமல் உள்ளே குதித்துவிடுவதுதான் நல்லது. அரசியல் தொடர்பான விவாதங்கள் மிகச் சுவையாக இருக்கும். பேச்சுத்திறனை வளர்க்க இது ஒரு சிறப்பான வழி.

கவிதை: எனக்குள் முதன்முதலில் ஒரு பெருமித உணர்வைத் தந்தது கவிதை. முதல் கவிதை எழுதி முடித்த போது ஏதோ சாதனை நிகழ்த்தியது போன்றதொரு உணர்வு. நமது எண்ணங்களை சிந்தனைகளை பதிவு செய்துகொள்ள வாய்த்திருக்கிற அற்புதமான வடிவம். எல்லா விதமான கவிதைகளும் பிடிக்கும். சமூகம் சார்ந்த கவிதைகளில் கவிஞனின் குரலாய் கவிதை இருக்க வேண்டுமே தவிர புனைவாக இருப்பதில் ஒப்புமை இல்லை.

கிரிக்கெட்: கிரிக்கெட் கிறுக்குப் பிடித்த கோடானு கோடி இந்திய திருமகன்களில் அடியேனும் ஒருவன். தோல்வி அடைந்து விடுவோம் என்று தெரிந்த ஆட்டங்களை கூட கடைசி பந்து வரை பார்க்கும் ஆள். கூட்டு முயற்ச்சிக்கும் இறுதி வரைக்கும் போராடக்கூடிய எண்ணத்திற்கும் இது ஒரு வினையூக்கி. கல்லூரியில் மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் இல்லாத எங்கள் அணி பலமுறை வெல்லக்காரணமாக இருந்தது கூட்டு முயற்ச்சியும் போராட்ட குணமும்தான்.

காதல் & திருமணம்: மனித வாழ்வின் மிக முக்கியமான உணர்வு மட்டும் உறவு. இதன் மேல் எப்போதும் ஒரு மயக்கமுண்டு. உன்னை விரும்பக்கூடிய இதயத்திற்கு சொந்தக்கரானாய் இருப்பதே மாபெரும் சாதனை என்பேன். அதே போல் இறுதி மூச்சிருக்கும் வரை இணைந்திருக்கும் திருமண உறவு அழகான ஒன்று.
(மனசாட்சியின் பாடல்:
காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாரும் இல்லை
வாலிபத்தில் காதலிக்க வழியுமில்லை...

அதுனால கல்யாணம் பண்ணிக்க போற ஆளையே காதலிச்சுக்கலாம்னு முடிவு பண்ணி வச்சிருக்கேன்:-)))))) )


பிடித்த நான்கு தலைவர்கள்:

நேதாஜி: தேச விடுதலைக்காக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தியவர். இவரது தலைமையில் சுதந்திரப்போராட்டத்தை நாம் எதிர்கொண்டிருந்தால் நமது இன்றைய பல துயரங்கள் வராமலே இருந்திருக்கும்.

டாக்டர். அம்பேத்கார்: தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர். இந்த சட்ட மேதை மட்டுமரசியல் நிர்ணய சபையில் இல்லாதிருந்தால் இந்தியா இன்று இந்துத்துவ நாடாகி இருந்திருக்கும்.

தந்தைப் பெரியார்: வாழ்நாள் முழுவதும் தமிழர் நலனுக்காகவே சிந்தித்து செயலாற்றிய பெரிய மனிதர். தமிழன் முன்னேற்றத்திற்கு தடையாக எது வந்தாலும் அது தமிழாக இருந்தாலும் சரி ஆன்மீகமாக இருந்தாலும் சரி அதை தூக்கி எறி என்று சொன்ன மாவீரன்.

முத்துலெட்சுமி அம்மையார்: தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்டவர்


மோசமான தலைவர்கள்:

மகாத்மா காந்தி
சர்தார் வல்லபாய் பட்டேல்
ராஜாஜி

பிடித்த திரைப்படத்துறையினர்:
கண்ணதாசன்
மொட்டை@ இளையராஜா
இயக்குநர். பாலா
ரஜினிகாந்த். ( நடிப்பு மட்டும், அரசியலில் அல்ல)

மீண்டும் மீண்டும் பார்த்த திரைப்படங்கள்.
1.காதல் ஓவியம்
2. முதல் மரியாதை
3. காதலுக்கு மரியாதை
4. சேது

நான் வசித்த நான்கு இடங்கள்:
பள்ள பட்டி, கரூர் - 7 ம் வகுப்பு வரை
திருவரங்கம் - 12ம் வகுப்பு வரை
தர்மபுரி- கல்லூரி முடிய
துபாய்- தற்போதய நொடி வரை

எனக்குப் பிடித்த நான்கு உணவு:

சோறு + ரசம் + உருளைக்கிழங்கு பொறியல்
பழைய சோறு + சின்ன வெங்காயம்
வெண் பொங்கல் + சாம்பார்
கோழி வறுவல்

நான் தினமும் பார்வையிடும் இணையதளம்:

1. தமிழ் மணம்
2. ஜி.மெயில்
3. கூகுள்
4. என்னுடைய வலைப்பூ

நான் அழைக்க விரும்பும் நான்கு முத்துகள்:
1. அப்படிப் போடு
2. மதுமிதா அக்கா
3. J.S. ஞான சேகர்
4. பொட்டீக்கடை ''சத்யா''
*அழைக்க நினைத்த சிவாவையும், பரஞ்சோதியையும் முன்பே அழைத்த ராகவனுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.:-))))))))))))))*

ஒரு காதல் கவிதை

மலர் கொத்துகள்
வாழ்த்து அட்டைகள்
பரிசுப் பொருட்கள்
தொலைபேசி உரையாடல்கள்
எதுவுமற்ற தனிமையில்
ஈரம் குறையமலே இருக்கிறது
நம் காதல்
சிட்டாங் கல்லெறிந்த குளத்தைப்போல
நினைவுகள் விரிய
ஒருவருக்கொருவர்
சமாதனம் சொல்லிக் கொண்டு.

ஓடுகாலிகள்

பீடங்களின் பிடறிகளில்
விழுந்தன மரண அடிகள்
பெருவலியின் வேதனைகளை
கீரிடங்களைச் சரிசெய்யும் சாக்கில்
சமாளிக்கின்றன.
அக்கம் பக்கம்
யாருமில்லையென்பதை
உறுதி செய்துகொண்டு
வேகமாய் வருகின்றன
வீர முழக்கங்கள்.

எப்போதும் புறமுதுகிட்டு
ஓடத்தயாராயிருக்கும்
ஓடுகாலிகளே...
முதுகெலும்பற்ற
புழுக்களான உம்மோடு
போரிட அல்ல
என் வீரம்

நட்சத்திர வாரம் எப்படி


என் நட்சத்திர வாரம்என் நட்சத்திர வாரம் எப்படி


ஏமாற்றமே
பரவாயில்லை
நன்று
சிறப்பாக இருந்தது
எதிர்பார்த்த அளவிற்கு இல்லை

Current Results

*நட்சத்திரம்* - நிறைவு செய்கிறேன் - நன்றி அறிவித்தலோடு

ஒரு வழியாக என்னுடைய நட்சத்திர வாரம் இன்றுடன் இனிதே நிறைவு பெறுகிறது. விடைபெறுமுன் நான் முக்கியமாக செய்ய வேண்டியது நன்றி அறிவித்தல்.

நன்றி தெரிவித்தல் ஒரு பண்பாடு. நம்மை மரியாதை செய்த சக மனிதனுக்கு நாமும் அதே மரியாதைத் தருவது. இதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதமெல்லாம் இல்லை. அதனால்தான் பெரும்பாலான பின்னூட்டங்களுக்கு பதில் அல்லது நன்றியைத் தெரிவித்திருக்கிறேன். யாரேனும் விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்

ஏறத்தாழ நட்சத்திர வாரம் தொடங்கியதிலிருந்து 1500 பார்வைகள். 13 பதிவுகள். நட்சத்திர அறிமுகத்தில் சொன்னதை ஓரளவிற்காவது செய்திருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழ் சார்ந்த சில கட்டுரைகளை எழுதத் திட்டமிட்டுருந்தாலும் அரைகுறையாக அவைகள் பதியப்படக்கூடாது என்பதாலேயே இந்த நட்சத்திர வாரத்தில் அந்த பதிவுகள் இடம் பெறவில்லை.மேலும் இது எனது 50வது பதிவு என்பது மகிழ்ச்சிகரமான ஒரு தற்செயல் நிகழ்வே.

என் பதிவுகளுக்காக நேரமொதுக்கி என்னை வாழ்த்தியும், வாசித்து, மனதில் தோன்றிய கருத்துகளையுச் சொன்ன குமரன், அப்படிப்போடு, ஜோ, என்னார், ஞானவெட்டியான், டி.பி.ஆர் ஜோசப், கோ.ராகவன், பிரதீப், வசந்தன், சிவா, சிங்.செயகுமார், அழகப்பன், ராமச்சந்திரன் உஷா, ஆசிப் மீரான், நிலா, துளசிகோபால், நண்பன், முத்து(தமிழினி), மூர்த்தி, பொட்டி கடை, நிலவு நண்பன், சதிஸ், பரஞ்சோதி, கமலியோன், நியோ, தருமி, கீதா, சந்திப்பு, ரவிசங்கர் இளவஞ்சி, சுந்தர், இலவச கொத்தனார், பூங்குழலி, மோகன்தாஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பின்னூட்டமிடாவிட்டாலும் வாசித்த நண்பர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.

விடைபெறும் எனக்குபட்ட சில எண்ணங்கள்.

முன்பு இணைய உலகைப் பற்றி ஒரு மிகப்பெரிய பிம்பம் இருந்தது. இன்று அது என்னிடம் இல்லை. இலக்கியம் சார்ந்து இயங்க நினைப்பவர்கள் எவருக்கும் இணையம் எந்த வகைப் பயனையும் தரப்போவதில்லை. அதை இந்த வலைப்பூ
உலகில் தெளிவாக உறுதிப்படுத்திக் கொண்டேன்.

சுயபிம்ப முன்னிறுத்தலுக்காக நண்பர்கள் படும் சிரமங்களை பார்க்கும் போது, மாயைகளின் மீது மயக்கமில்லாதார் யார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
ஒரு கலைக்கூத்தாடியின் வாழ்க்கையைப் போன்றுதான் வலைப்பதிவர்கள் நிலை இருக்கிறது. அவன் வாழ்க்கை நிலையைப் போன்றே நிச்சயமில்லாத சூழல்தான் பதிவுகளில் இருக்கிறது.

சிலர் மட்டும், மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே சிறப்பாக இயங்குகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தங்களை உயர்த்திபிடிக்க, முற்போக்கு சிந்தானாவாதிகளாகவும், சமாதான புறாக்களாகவும், தங்கள் நம்பிக்கைகளுக்கு மாறானவைகளாக இருந்தாலும் சரி, அதனால் தனக்கு பயனும், புகழும் வருகிறதென்றே பொருந்தாத அரிதாரங்களை எல்லாம் பூசிக்கொண்டு கோமாளிகளாக வந்து நிற்பதை காணும் போது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

ஆனாலும், அவ்வப்போது சிலரின் சுய வடிவங்கள் வீதிக்கு வருவதும் இது போன்ற தன்முனைப்புகளினால்தான் என்பது சற்று மகிழ்ச்சிக்குரிய விசயம்.

பொதுவாக ஓரளவிற்கு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட மனிதனிடம் காணும் மனநிலை, இருக்கும் இந்த செளகர்யத்தை இழக்க வேண்டாமே என்று சமரசங்களுடன் வாழத் தொடங்கிவிடுவது, மென்மையான அதிர்வுகளற்ற வாழ்க்கைச் சூழலின் மீதான ஒரு மயக்கம். ஒரு இலகுவான புழங்குதற்குரிய இயங்குதளத்திலேயே இயங்குவது. இப்படி இருப்பவர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஒருவன் முன்னேறுகிறான், முன்னேறி இருக்கிறான் என்பது அவனோடு முடிந்து போக வேண்டிய ஒரு நிகழ்வல்ல. அது ஒரு சங்கிலித் தொடர். தன்னைத் தொடர்ந்தும், தூரமாய் தன்னை பின் தொடர்ந்து வருபவனுக்கும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. அதைத் தட்டிக் கழிக்கும் போக்கே மிகப்பரவலாக காணபடுகிறது. இந்த மனப்பாங்கு வாழ்க்கையின் மிகக் கீழான நிலையிலிருந்து உயர்ந்தி நிலைக்கு வந்தவர்களிடத்தில் வந்துவிடுவதுதான் பெரும் சோகம். அது அவரைச் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒரு பின்னடவை, சறுக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

அதே போலத்தான் கலை, இலக்கியம் என எதுவானாலும் வாழும் சமூகத்திற்கும், மனிதர்களுக்கும் பயன்படாத எவையும் குப்பைத் தொட்டிக்கு போக வேண்டியதே. மக்கள் பிரச்சனைகளைப் இலக்கியங்களில் பேசுவதால் அதற்குண்டான புனிததன்மைக்கு பங்கம் வருகிறது என்று எவரரவது சொன்னார்கள் என்றால் தேவையில்லை அந்தப் புனிதப் புண்ணாக்குகள் என்று உண்மைகளை நிர்வான நிலையிலே உரத்து சொல்வோம் ஊருக்கு.

வலைப்பூவில் தீவிரமாக இயங்கத் தொடங்கிய குறிகிய காலத்திலேயே எனக்கு வாய்ப்பளித்த தமிழ்மணம் நிர்வாகத்திற்கும், காசி மற்றும் மதி கந்தசாமி அவர்களுக்கும் எனது நன்றிகள்.

எனக்கு மிகவும் பிடித்த இன்குலாப் அய்யா அவர்களின் கவிதையோடு என் நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன்.

எழுதமாட்டேன்

எழுதமாட்டேன்
ஒருவரி கூட
நீ
ஒப்பும்படி

எழுத்திலும் அதிரும்
என் பறையொலி
நாராசமாய்
உன்
செவியில் இறங்குதல் போல்

உன்
மெளனவரியும்
அருவருக்க ஊரும்
என்
கண்ணிலூம் மனசிலும்
ஒரு
கம்பளிப் புழுவாய்

என்
கவிதை முளைவிடும்
மனுசங்க வெளியை
உன்
கால்விரல் நகமும்
தீண்டாதது போலவே
மேட்டிமைத் திமிரும்
உன்
சபை வாசலில் கூட
நீளவே நீளாது
என் மயிரின்
நிழலும்

**
அன்புடன்
முத்துகுமரன்.

*நட்சத்திரம்* - ஆகஸ்ட் 5, அண்ணன் அறிவுமதியுடன்

சென்ற முறை விடுமுறைக்காக தாயகம் சென்ற போது அண்ணன் அறிவுமதி அவர்களைச் சந்தித்தேன். அவருடனான சந்திப்பு என் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

பாசத்தோடு தம்பி, தம்பி என அவரழைக்கும் போதெல்லாம் எனக்குள் எப்போதுமில்லாத இனிமையான அதிர்வுகள்.

மதுரையிலிருந்து ஆகஸ்ட் 4 ம் தேதி காலையில் சென்னை சென்றேன். அன்று மாலை 3 மணிக்கு அறிவுமதி அண்ணனை தொடர்பு கொண்டேன். தான் முக்கிய அலுவலில் இருப்பதாகவும் மாலை 6 மணிக்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். நான் அண்ணனுக்கு தொலைபேசி செய்யாமலே மாலை 5 மணிக்கு மாமாவின் இல்லத்திலிருந்து புறப்பட்டு மாம்பலம் ரயில் நிலையமடைந்தேன். சென்னையில் வாங்க வேண்டிய புத்தகங்களை பற்றி இசாக்கும், நண்பணும் பட்டியலிட்டிருந்த மின்னஞ்சலை பிரதியெடுத்துக்கொண்டு அவரது அலுவலக முகவரியான அபிபுல்லா சாலையை விசாரிக்க தொடங்கி நடந்தேன். நடந்தேன். கோடம்பாக்கம் ரயில்நிலையத்தின் கிழக்குப்பகுதியே வந்துவிட்டது. அண்ணனின் அலுவலகமும் அங்குதான்.

அலுவலகம் சென்றால் பூட்டிக் கிடந்தது. இப்போதுதான் கிளம்பிப் போனார் என்று சொன்னார்கள். எனக்கு மிகுந்த ஏமாற்றமாகி விட்டது. அண்ணனை மறுபடியும் தொலைபேசியில் அழைத்தேன். மறுநாள் காலை சந்திக்கலாம் என்றார். பிறகு பேராசிரியர் திரு. சுப.வீரபாண்டியன் அவர்களின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். சுப.வீ அவர்களே எடுத்தார்கள். அன்புடன் பயணம் பற்றியும் தாய் தந்தையர் நலம் பற்றியும் விசாரித்தார். அன்று முழுவதும் தமிழ் முழக்கம் அலுவலகத்திலே இருந்ததாகவும் மாலையில் திரு. பழ.நெடுமாறன் ஐயாவை சந்தித்துவிட்டு வந்ததையும் கூறினார். அடடா நல்ல வாய்ப்பை நான் இழந்துவிட்டேன் அய்யா என்றேன். சிரித்துக் கொண்டே கண்டிப்பாக நாம் சந்திப்போம் என்றார்.

நான் அண்ணன் அலுவலகத்திற்கு செல்ல அவரும் அப்போது ஆட்டோவிலிருந்து இறங்கிவந்தார். நான் துபாயிலிருந்து வந்திருக்கிறேன் எனச் சொல்ல வாங்க முத்துகுமரன் என்று அழைக்க நான் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன். முதலில் எனக்கு லேசாக பிரமிப்பாகயிருந்தாலும் அவரின் இயல்பான பேச்சால் எனக்கிருந்த தயக்கத்தை போக்கிவிட்டார். அவருடனான சந்திப்பு எனக்கு அளவிலாத மகிழ்ச்சியைத் தந்தது, நான் அவரைப் பற்றி கொண்டிருந்த எண்ணங்களைப் பற்றியும் பொதுவான மதிப்பீடுகளையும் தெரிவித்தேன். அவரிடம் நாங்கள் வாங்க திட்டமிட்டிருந்த புத்தகங்களைப்பற்றி அவரின் கருத்துகளையும் கேட்டேன். எல்லாம் நல்ல புத்தகங்கள்தான் என்றும் மேலும் சில புத்தகங்களையும் சொன்னார்.நான் குறித்துக் கொண்டேன். பெரும்பாலான புத்தகங்கள் நீயு உட்லேண்ஸ் புத்தக கடையிலே கிடைக்குமென்றும் பத்து சதவீதமாது கழிவு கொடுத்தால் மட்டும் வாங்கு என்றார். நானும் சரி அண்ணா என்று சொன்னேன்.

அப்புறம் தமிழைப் பற்றியும் இன்றைய சூழல்களைப் பற்றியும் எனது எண்ணங்களை அவரோடு பகிர்ந்து கொண்டேன். எல்லா வற்றறயும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு அவ்வப்போது எனது ஐயங்களையும் தெளிவுபடுத்தினார்.

அவருடைய நீலம் குறும்படத்தை பற்றியான லயோலா கல்லூரி மாணவர்களுடன் கலந்தாய்வு இருப்பதால் நான் அங்கு செல்கிறேன், நீ புத்தகங்கள் வாங்கிய பின் என்னைத் தொடர்பு கொள் நானும் அதற்குள் வந்துவிடெவேன் என்று சொல்லிவிட்டு அவருடைய உதவியாளரையும் என்னுடன் புத்தகக் கடடக்கு அனுப்பி வைத்ததர்.

ஏற்கனவே வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் இருந்ததால் எனது பணி எளிதாக இருந்தது. ஒரு சில புத்தகங்கள் இல்லை. அவைகளை புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகங்களிலிருந்து வரவழைத்து தந்தார்கள். இலக்கியம் தொடர்பான திறனாய்வு புத்தகங்கள், கவிதைப் புத்தகங்கள் என நிறையய வாங்கினேன். நான் திரைக்கதை புத்தகங்கள் ( உதிரிப்பூக்கள், பாரதிகண்ணம்மா, த்ரோன் ஆப் பிளட் ) ஆகிய புத்தகங்களும், நடுகற்கள் என்ற புத்தகமும் வாங்கினேன். எல்லாவற்றையும் ஒரு பெரிய மூட்டையாக கட்டிக் கொண்டு மறுபடியும் அண்ணன் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தேன், அலுவலகத்தில்தான் இருப்பதாகவும் அதனால் நீ வா என்றார்.

மெதுவாக பேச ஆரம்பித்தேன். இளவேனில் கால பஞ்சமி பாடலிலிருந்தே உங்கள் கவிதைகளின் ரசிகன் என்றேன். நீங்கள் காதல் புத்தகம் என்ற படத்திற்கு எழுதிய கவிதைகளை விளம்பரங்களில் பார்த்திருக்கிறேன், அப்போதே எனக்கு உங்கள் எழுத்துகளை பிடிக்கும் என்றேன் . அப்படியே வெளிவரயிருக்கிற எனது '' தீபங்கள் பேசும்'' கவிதை தொகுப்பை பற்றி பேசிவிட்டு அவரது நட்புக்காலம் கவிதை தொகுப்பு எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும் சொன்னேன். அது ஒரு நாள் இரவில் எழுதினதுடா தம்பி என்று சொன்னார்.

பல இளம் கவிஞர்களுக்கு தாயாய் இருக்கும் அவரது அன்பினாலே ஏராளமானவர்கள் தங்கள் கவிதைகளைக் கொடுத்து அவரின் கருத்துகளை அறிய காத்திருப்பதை அவரது அலுவலகத்தில் வந்து சேர்ந்திருந்த கவிதை தொகுப்புகளிலிருந்து உணர முடிந்தது. ஆனால் இந்த அன்பு பிணைப்பே அவர் எழுத்துக்கு மிகப் பெரிய தடையாய் இருப்பதாக அவர் எதேச்சையாகச் சொல்ல எனது தொகுப்பை பற்றிய கருத்துகளை நான் வற்புறுத்திக் கேட்கவில்லை. அவரது உள்ளம் அத்தனை அன்பு நிறைந்தது. கருத்துக்காக கொடுக்கும் கவிதைகளை மேம்போக்காக வாசித்து சம்பிரதாய வார்த்தைகளை இட்டு பதில் சொல்வதில்லை. ஒவ்வொன்றையும் ரசித்து தனது ஊக்கத்தை தருபவர் அவர்.

'' எழுதுங்கடா தம்பி''

என்பதுதான் சந்திக்கும் அனைவரிடமும் அவர் சொல்லக்கூடிய வார்த்தை. அவரரிடம் அண்ணா பல்வேறு கவிதைப் புத்தகங்களை வாசிக்க வாசிக்க எனக்கு ஒருவகையான மிரட்சி வருகிறது. அடிக்கடி நான் எழுதுவதெல்லாம் கவிதைதானா என்ற சந்தேகம் வருகிறது என்றேன். அவர் இதுதான் கவிதை என்று யாரும் தீர்மானிக்க முடியாது. கவிதை புனிதமானது போன்றவற்றை கண்டு அஞ்சாமால் எழுது என்றார். எழுத எழுதத்தான் சிந்தனைகளையும், மொழியையும் கையாளக்கூடிய திறமை வரும், அதனால் எந்த மிரட்சிக்கும் ஆளாகமல் தொடர்ந்து எழுது என்றார்.

சுனாமி பேரழிவை மையமாக வைத்து அவர் இயக்கிய நீலம் குறும்படத்தை பற்றி என் பேச்சு திரும்பியது. நீலம் படத்தின் இரண்டு புகைப்படங்களை காட்டினார். சுனாமியால் உறவுகளை இழந்த ஒரு சிறுவனின் கண்ணீரை வெளிப்படுத்தும் படம் அது. சிறப்பாக இருக்குது அண்ணா என்றேன்.
சிறுவன் அரவிந்த் பச்சான் நன்றாக நடித்திருப்பான் போலிருக்கண்ணா என்றேன். அவரும் ஆமாம் என்றார். மிகச் சிறப்பாக செய்திருக்கிறான் என்றார்.

நான் அவரை சந்திக்க சென்ற அந்த சமயம் அந்தப் படம் தொடர்பாகவும், சுனாமி பாடல்கள் தொகுப்பு சம்பந்தமாகவும் அவர் மிக்கப் பரபரப்பாக இருந்த சூழல் அது. (**சுனாமி பாடல்கள் தற்போது கடலே கடம்மா என்னும் பெயரில் குறுந்தகடுடாக வெளியிடப்பட்டிருக்கிறது. பல்வேறு இசை அமைப்பாளர்களின்(பத்து) ஒத்துழைப்போடு வெளிவந்திருக்கிறது. அத்தனையும் உயிரை உருக்கும், உலுக்கும் பாடல்கள்.** )

ஆனா தமிழ் பத்திரிக்கைகள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லையே என்றேன். விருது கிடச்சா எல்லாரும் கேமராவையும், பேப்பரையும் தூக்கிட்டு ஓடி வருவாங்கடா என்றார். குமுதம் மட்டும் செய்தியை போட்டிருந்தது. அருவருக்கத்தக்க ஆபாசங்களை அச்சிலிற்றி, தமிழனின் சிந்தனை உணர்வுகளை காயடிப்பதில் தெளிவாக இயங்கும் இந்த ஊடகங்கள், ஒரு தமிழன் தன் இனம் சந்தித்த மிக கொடூரமான ஒரு பேரழிவை, வரலாற்று துயரை தனது மொழியில் பதிவு செய்திருப்பதை கண்டும் காணாதிருந்ததை நினைத்து எரிச்சல் வந்தது.

ஆனால் அண்ணன் இதையெல்லாம் சுத்தமாக எதிர்பார்ப்பதே இல்லை.

அவரது மொழி சிறிது வளைந்தால் பணத்தை கொட்டிக் கொடுக்க காத்திருக்கிறார்கள். ஆனால் மொழியின் மீதும், இந்த சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள பாசமும், அதை ஒரு கோள்கையாகவே கடைபிடிப்பதையும், அதனால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளும் ஏராளம். இப்போது ஏன் திரைப்படத்திற்கு பாட்டெழுத மாட்டேன் என்று சொல்கிறீர்கள். திரையுலகில் உங்களைப் போன்றிருக்கும் ஒருசில சிந்தனையாளர்களும் எழுத மறுப்பது எந்த வகை நியாயம் என்று கேட்டேன். அதற்கு சவாலான வாய்ப்புகள் எதுவும் வருவதில்லை. வருவதெல்லாம் ஆபாசத்தை முன்னிறுத்தியும், பெண்களின் அங்கங்களை வர்ணித்து எழுதச் சொல்கிற பாடல்கள்தான். அது மாதிரி எழுத எனக்கு விருப்பமில்லை என்றார். சேதுவில் எங்கே செல்லும் இந்த பாதை எழுதினேன். அது காலம் கடந்தும் என் பெயர் சொல்லும். அது மாதிரி சவாலாக வந்தா கண்டிப்பா எழுதுவேன் என்றார்.

நான் மெதுவாக எனக்கும் திரைப்பட இயக்குனராகும் ஆசை இருக்கிறது என்றேன். நன்கு ஸ்கிரிப்ட் எழுத கற்றுக் கொள் என்றார். யாரிடமாவது உதவி இயக்குனராய் சேர்ந்து எடுபிடி வேலை செய்து, தொழில் கற்று இயக்குனர் ஆக வேண்டும் என்று எண்ணாதே. முறையாக படித்து விட்டு நேரிடையாக வா என்றார். கதை பற்றிய அறிவைப் பெற கிழக்கில் தேடு. தொழில் நுட்ப விசயங்களை மேற்கிலிருந்து பெற்றுக் கொள் என்றார். ஆம் எத்தனையோ வித்தியாசமான கதைகள் படிப்பினைகள் நமக்கு கிழக்கு ஆசியாவிலிருந்து கிடைக்கும் என்பதை மிக எளிமையாகச் சொல்லிவிட்டார்.

இடையில் அவரது தம்பிகள் சிலர் வந்தனர். அவர்களிடமெல்லாம் இவர் இசாக்கின் நண்பர் என அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் வேடிக்கையாக தம்பிகள் கூடிக்கிட்டே போறாங்க என்றனர். நான் சிரித்துக் கொண்டேன். அப்போது துபாயிலிருந்து வந்திருந்த இன்னொரு நண்பரும் வந்து சேர்ந்தார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு தோலைபேசி அழைப்பு.

அது பேராசிரியர் சுப.வீ அவர்களிடமிருந்துதான்.....

அண்ணன் பேசிவிட்டு என்னிடம் கொடுக்க, அடடா நீங்க மதி அலுவலகத்தில் இருக்கிறேன் என்று சொல்லியிருந்தால் நான் வந்து கலந்து கொண்டிருப்பேனே என்றார். நாம் நாளை கண்டிப்பாக சந்திப்போம் என்றார்.

பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாலை 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. உங்களுடனான சந்திப்பு எனக்கு மிகவும் மகிழ்வாய் இருந்தது என்றேன். அவர் சிரித்து கொண்டே வழியனுப்பி வைத்தார்.

சுப. வீ அவர்களுடனான சந்திப்பும் மிக இனிமையான ஒன்றுதான்.

அதைப் பற்றி பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

****

இந்தப் பொங்கல் கவிதை ஆர்வலர்களுக்கும், குறிப்பாக எங்களுக்கு தித்திப்பான சக்கரைப் பொங்கலாகவே அமைந்துவிட்டது. கவிதைகளுக்காகவும், கவிஞர்களுக்காகவும் அண்ணன் ''தை'' என்னும் பெயரில் புதிய கவிதை இதழை தை முதல் தேதியிலிருந்து தொடங்கி இருக்கிறார். இதழியல் உலகில் அது சிகரங்களைத் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அண்ணனுக்கு அன்பான வாழ்த்துகள்.......

*நட்சத்திரம்* - பிடித்த கவிதைகள் ஆறு - கவிதை 6

புரிந்து கொள்ளுங்கள்!

புரிந்து கொள்ளுங்கள்-எதிரியைப்
புரிந்து கொள்ளுங்கள்!

சூரியனை அப்பிய முகங்களுக்குள்ளே
சூனிய இருள்கள் புதைந்து கிடைக்கும்
உதட்டில் நெளியும் சாத்வீக மந்திரம்
உள்ளத்தில் ஆயிரம் ஓநாயின் ஓசை

அகிம்சை உறைக்குள் ரத்தவாடை
அமைதிவனத்தில் நச்சுப் பூக்கள்
தருமச் சக்கரம் சுழலும் தடங்களில்
புதையும் மானுட உயிரின் ஓலம்

இதனது முகத்தை எவர் கிழிப்பார்கள்
இவனது தோலை எவர் உரிப்பார்கள்
இந்த எதிரையைப் புரிந்தவர் எவரோ
இந்த வரலாற்றைப் படைப்பவர் அவரே!

-கவிஞர். இன்குலாப்

** ஒவ்வொரு புல்லையும் - இன்குலாப் கவிதைகள், இயல் 4**

*நட்சத்திரம்* - பிடித்த கவிதைகள் ஆறு - கவிதை 5

தேசிய நீரோட்டம்

அணைகளை உடைத்து
கரைகளைத் தகர்த்து
மரங்களைச் சாய்த்து
இதோ
பாய்ந்து வருகிறது
தேசிய நீரோட்டம்

ஏன் விலகி நிற்கிறீர்கள்!
குதியுங்கள்.

நவீன பாவங்களை
கழுவௌவதற்காகவே
புறப்பட்டு வந்த
புண்ணிய தீர்த்தம் இது.

அதோ
சாக்கடைகள் எல்லாம்
இதில்
சங்கமாகிப்
பவித்திரமடைவதை நீங்கள்
பார்க்கவில்லையா?

இதோ தங்கள் தீட்டுத் துணிகளை
இதில்
துவைத்துக்கொள்கிறவர்களை-
தங்கள்
வலையை வீசி இதில்
மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களை-
நீங்கள் பார்க்கவில்லையா?

நீங்கள் மட்டும் ஏன்
விலகி நிற்கிறீர்கள்?

வான் பொய்த்தாலும்
தான் பொய்க்காத
நீரோட்டம் இது
தாகம் தணித்துக்கொள்ளுங்கள்;
வறண்ட வயல்களுக்கு
வாய்க்கால் வெட்டிப் பாய்ச்சுங்கள்.

உங்கள்
கப்பரைகளுக்கு இதனால்
ஞானஸ்நானம் கொடுங்கள்.

உங்கள் தீபங்களை இதில்
மிதந்து போக விட்டுவிடுங்கள்

உங்கள் முகவரிச் சுவடிகளை இதில்
போட்டு விடுங்கள்

உங்கள் கனவுகளின் அஸ்தியை இதில்
கரைத்து விடுங்கள்

உங்கள் ரத்தத்தை
வெளியே கொட்டி விட்டு
இதை நிரப்பிக் கொள்ளுங்கள்

இனி
நீர்களுக்கு
தனி விலாசங்கள் தேவையில்லை

நதிகள் குளங்கள் கிணறுகள்
எல்லாம் மூழ்கிவிட்டன.
கண்ணீரும் மூழ்கிவிட்டது

நீங்களும் மூழ்கிவிடுங்கள்.

கவிக்கோ. அப்துல் ரகுமான்
**சுட்டுவிரல் தொகுப்பிலிருந்து, 3.11.87.**

*நட்சத்திரம்* - பிடித்த கவிதைகள் ஆறு - கவிதை 4

அணுத் திமிர் அடக்கு


சலுகை
வெறு


திணித்தலை
எதிர்


மிரட்டலைச்
சந்தி


அடங்க
மறு


திமிறு
திமிறு


மூச்சு
என்பது
உரிமைக்குப்
பிறகு

-இலட்சியக் கவி. அறிவுமதி
** அணுத் திமிர் அடக்கு தொகுப்பிலிருந்து**

*நட்சத்திரம்* - பிடித்த கவிதைகள் ஆறு - கவிதை 3

காவல்

விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்-

- கவிஞர். மு. மேத்தா

**கண்ணீர் பூக்கள் தொகுப்பிலிருந்து**

*நட்சத்திரம்* - பிடித்த கவிதைகள் ஆறு - கவிதை 2

ஒரு சுயசரிதைக் கவிதை

அன்றொரு நேற்று
'அருணாச்சலம் பேரன்
லட்சுமி மவன்'

அடுத்தொரு நேற்று
'சுசி புருசன்'

நேற்றொரு நேற்று
'சுடர் அப்பா...
கதிர் அப்பா...
கண்மணி அப்பா'

இன்று
காவியா தாத்தா
ஓவியா தாத்தா
அபூர்வா தாத்தா


எனக்கொரு பெயர் இருப்பது
எப்படித் தெரியாமல் போனது
என் தெருக்காரர்களுக்கு...

-கவிஞர் மீரா

**கோடையும் வசந்தமும் தொகுப்பிலிருந்து**

*நட்சத்திரம்*- பிடித்த கவிதைகள் ஆறு - கவிதை 1

மந்தை -

மேடை.

'தமிழா!
ஆடாய்
மாடாய்
ஆனாயடா...
நீ'
என்றேன்.

கை
தட்டினான்

-''உணர்ச்சிப் பாவலர் காசி.ஆனந்தன்"

(காசி ஆனந்தன் நறுக்குகள் தொகுப்பிலிருந்து )

*நட்சத்திரம்* - வேரோடு பெயர்ந்த உயிர்

வெளியே மழை விட்டிருந்தது.

காலையிலிருந்து பெய்த மழைக்குபிறகு வானம் இப்போதுதான் சற்று வெறித்திருக்கிறது. கையில் குடையை எடுத்துக் கொண்டு நானும் தேனும் பூங்காவிற்கு நடக்கத் தொடங்கினோம். சாலைகள் எல்லாம் ஈரப்பதமாக இருக்க காலை கவனமாக ஊன்றி நடக்க வேண்டியிருந்தது. சாலைகள் மரங்கள் சுவர்கள் எல்லாம் புதுக்குளியலை முடித்த புத்துணர்வோடு பளிச்சென இருந்தன. இந்த பாதையில் நடப்பது 40 வருடங்களாக தொடரும் விசயம். எங்கள் வாழ்க்கையைப் போலவே காலவோட்டத்தில் இந்தச் சாலையின் மாற்றங்களும் ஏராளம். நாங்கள் வரும் போது இது சின்னத் தோட்டமும் கொஞ்சம் காலிமனையும் உள்ள வீடாக இருந்தது. இன்றுநெரிசல்களால் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.

தேனு, செந்தில் போன் பண்ணினா?.

எப்ப ஊர்ல இருந்து வர்றேன்னு எதுவும் சொன்னானா? மருமக, பேரன் எல்லாம் சொகந்தானா?

எல்லாம் சொகந்தானாம். அவனுக்கு இப்ப வேல கொஞ்சம் அதிகம். இன்னும் ஒரு மாசந்தான, பொங்கலை ஒட்டி வந்தா சேர்ந்த மாதிரி நாளுஞ்சு நாளைக்கு இருக்கலாம்ன்னு சொன்னான், அப்புறம் எம்பேரந்தான் பள்ளிக்கூடத்தில பர்ஸ்ட் ரேங்காம், ஸ்கூல் டீச்சரெல்லாம் அவளப் பத்தித்தான் பேசிக்கிறாங்களாம், சொல்லும் போதே தேனுவின் முகம் சந்தோசத்தில் பூரித்தது.

வாங்கய்யா, வாங்கம்மா, பூங்காவிற்கு அருகில் பூ விற்கும் ரஞ்சிதத்தின் கணீர் குரல். செளக்கியங்களா, நல்ல செளக்கியம்தான். 100மல்லிகைப்பூ கொடுத்தா. மறக்காமா பொங்க நாள்ல வீட்டு வந்து பூ கொடுத்திடு. அப்புறம் மல்லிகைப்பூ, கனகாம்பரம் எல்லா சேத்து எடுத்திட்டு வா. ஊர்ல இருந்து மருமக பேரன்லாம் வர்றாங்க.சரிம்மா. நான் கடைக்கு வர்றப்ப அப்படியே வீட்ல கொடுத்திட்டு வந்திடறேன்.

இருவரும் பூங்காவின் பெரிய அரச மரத்திற்கு கீழிருக்கும் அந்த மூலை பெஞ்சை நோக்கி நடந்தோம். எனக்கு ரெம்ப பிடித்த மரம். விவரம் தெரிந்ததிலிருந்து அதற்கும் எனக்கும் ஏதோ ஒரு உறவு இறுக்கமாக இருக்கிறது.பலமுறை அதன் நிழலில் இளைப்பாறியிருக்கிறேன். தேனுவோடு பலமுறை இங்கு வந்திருக்கிறேன். என் கவலைகள் மறந்திருக்கிறேன். இப்பவும் பேரனை கூட்டி வந்து விளையாட்டு காட்டினது, அவங்கூட ஓடியாடி, ஒளிஞ்சு விளையாண்டது எல்லாம் இந்த மரத்தை சுத்திதான்.என்ன உங்க சிநேகதருகூட எதுவும் பேசலையா, மரத்தையும் என்னையும் பார்த்து கிண்டலடித்தாள். போறப்ப பேசிக்க வேண்டியதுதான். சரி ஈரமா இருக்கு நான் துண்ட விரிக்கிறேன், அப்புறமா உக்காரு.

தேனு, உனக்கு பொங்கலப்ப வேலை அதிகமாகப்போகுது, எல்லாத்தையும் இழுத்து போட்டுகிட்டு செஞ்சா ஒத்துக்குமா? அப்புறம் மூட்டு வலிக்குது , இடுப்பு வலிக்குதுன்னு சொல்லப் போற?

என்ன பேசுறீங்க, ஜீவன் இருக்கும் வரை உழைக்கபோறேன், மருமவதான் கூடமாட ஒத்தாசை பண்ணுவாள அப்புறம் என்ன. எம்புள்ளைங்களுக்கு செய்யுறதுனால நோவுன்னு ஒன்னும் சொல்ல மாட்டேன்?

ம் நல்ல மாமியார்தான். விட்டுக் கொடுக்காம பேசுறியே. அதுக்குதான் தூரத்தில இருக்கிறது எப்பவுமே நல்லது.

அடடா, வயசாயிட்டாலே என்ன பேசுறோம்ன்னு தெரியாதா உங்களுக்கு?

நான் சிரித்தேன்.

என்ன சிரிக்கிறீங்க.

இல்லை கல்யாணமான புதுசுல உன்னை அடிக்கடி சீண்டுவேன் ஞாபகம் இருக்கா? கோவத்துலதான் நீ ரொம்ப அழகா இருப்ப, அதை ரசிக்கத்தான்அப்படி செய்வேன். அது மாதிரித்தா இப்பவும் நீ அழகா இருக்க...

அட ராமா, விவஸ்தையே கிடையாதா, எந்த வயசில எதை பேசனும்ன்னு,
இது என்னடி புதுக்கூத்தா இருக்கு, எம்பொண்டாட்டி அழகுன்னு நான் சொன்னா தப்பா? அறுபதாம் கல்யாணம் முடிஞ்சு இரண்டு வருசந்தானடி ஆகுது.நான் இன்னும் புது மாப்பிள்ளைதான்.

சரி சரி போதும் உங்க ராமயணம். இந்த வாட்டியும் பேரனை கூட்டிக்கிட்டு இதே பூங்காவுக்கு வராம வேற இடங்களுக்கெல்லாம் கூட்டிட்டு போங்க
சரி ஆத்தா, நேரம் ஆயிடுச்சு, இருட்ட ஆரம்பிச்சிடுச்சு, நாம புறப்படலாம்.
அதிகம் பேசாமலே வீடு வந்து சேர்ந்தோம்.

மழை திரும்பவும் வலுவாக பெய்ய மார்கழி குளிர் இன்னும் அதிகமாக வாட்ட ஆரம்பித்துவிட்டது இந்த வருசம் ரெம்ப ஜாஸ்திதான். ஸ்வெட்டர் போட்டும் நல்ல குளிர். கம்பளியை போர்த்திக் கொண்டு தூங்கினோம். காலிங் பெல் அடிக்க, முழிப்பு வந்தது, பால்காரன் வந்துட்டானா என்றவாரே அடுப்படியிலிருந்து பால்பாத்திரத்தை எடுத்து கொண்டு போனேன்.
தேனு நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்

பாவம் ரெம்ப அசதி போல இருக்கு, விலகியிருந்த போர்வையை நன்கு போர்த்தி விட்டு நானும் மறுபடியும் படுத்துக் கொண்டேன்.
குட்டித் தூக்கம் முடித்து எழுந்த போதும் எழுந்திருக்கவில்லை

தேனு, தேனு,

என்ன உடம்புக்கெதுவும் சொகமில்லையா, இவ்வளவு நேரம் தூங்க மாட்டியே, அவளிடம் பதிலேதும் இல்லை. எனக்கு அடிவயிறு பிசைய ஆரம்பித்துவிட்டது என்னம்மா என்னாச்சு என்று தலையில் கை வைத்து பார்த்தேன். உடம்பு ஜில்லுன்னு இருக்கே.எனக்குள் பதட்டமாக மூக்கின் அருகே விரலை கொண்டு போனேன், என் இதயம் நின்று விட்டது. அவளிடம் மூச்சு இல்லை. இருக்காது தேனு, உனக்கும் ஒன்னும் இல்ல, இரு இப்பவே நான் டாக்டரை கூட்டிட்டு வரேன், என்உதடுகள் உளரத் தொடங்கின. ற்கும் அவசியமில்லாது போல் உன் இறுதி தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாய்.

போர்வையை விளக்கி அவள் தலையை என் மடியில் வைத்துக் கொண்டேன். உங்கள்ட்ட சொல்லாம எதாவது செஞ்சிருக்கேனான்னு சொல்லுவியே, இதை மட்டும் ஏம்ம சொல்லாம செஞ்ச, ஏன் என்கிட்ட சொல்லிட்டு போகுறதுக்கு ஒன்னுமே இல்லையா? எம் மேல அப்படி என்னமா கோபம் உனக்குதலையில் அடித்து கொண்டேன். உண்மையை மறுக்க முடியாது. நீ என்னை விட்டு போயிட்ட, என்னை விட்டுட்டு போயிட்டியே?தள்ளாடியபடியே எழந்து செந்திலுக்கு சேதியைச் சொன்னேன்.

செந்திலும் மருமகளும், பேத்தியும் வந்து சேர, எல்லாக் காரியங்களும் நடக்கத் தொடங்கியது. பாவம் பேரன்தான் ரெம்ப ரெம்ப அழுதுதீர்த்து விட்டான்.பாட்டி திரும்ப வரமாட்டாங்களா சொல்லுதாத்தா, சொல்லு என்றவனை பதிலில்லாமல் என்னோடு இறுக அணைத்து கொண்டேன்.

நேற்று இருவரும் சேர்ந்து போன அதே சாலையில் இன்றும் பயணம்.

இன்று அவள் மட்டும் அலங்காரமாய், ரதத்தில்

பூங்காவைக் கடந்த போது பேரன் சொன்னான்.

தாத்தா உம் மரம் சாஞ்சி கெடக்கு.

ஆமாண்டா,

என் உயிர்தான் வேரோடு பெயர்ந்து என்னை விட்டு போயிட்டிருக்கே....

*நட்சத்திரம்* - தம்பிக்கொரு கவிதை

நாம்
அதிகமாக பேசியது கிடையாது
சேர்ந்திருக்க வேண்டிய பருவத்தில்
பிரிந்தே இருந்து விட்டோம்

கேபிள்டீவிக்காக
தெருத்தெருவாய்
ஆளுக்கொரு பக்கம் சுற்ற
ஒழுக்கம் வர வைக்க
நீ விடுதிச் சிறையில்
வயது விதிகளினால் நான் தப்ப
வெற்றி பெற்ற ஏழாம் வகுப்பே
மறுபடி பயிலும் தண்டனை உனக்கு

நானோ தினம் அம்மாவுடன் இருக்க
உனக்கோ பார்ப்பதற்கே
மாதமிருமுறைதான் அனுமதி
பச்சப்பிள்ளை நீ எப்படி துடித்திருப்பாய்
அதனால்தானோ
அம்மாவைக் காணும்போதெல்லாம்
புன்னகையால்
விரிப்பாய்

அப்பாவும் நானும்
உன்னை பார்க்க வந்தது குறைவுதான்
விடுமுறைகலெல்லாம்
அம்மாவின் முந்தானை பிடித்து திரிந்தது
புரிகிறது இன்று

நீ யாரோடும் ஒட்டாது
நீ மெளனம் கொள்ள
நாங்களே காரணமென்றுணர்ந்த மனம்
அழுத்துகிறது

உன் உடல்நலனறிந்துதான்
விருப்பத்திற்கு மாறாய்
கல்லூரியிலும்
விடுதிச் சிறை நீட்டிப்பு

நான்
உன் ஆசைகளை காயப்படுத்தியே
இத்துணை நாள் வாழ்ந்திருக்கிறேன்

உணர உணர
உறுத்தாலாய் இருக்குதுடா
இருந்தாலும்
நிச்சயம் தெரியும்
வழக்கமான உன் மெளனப்புன்னைகையாலே
என்னை புரிந்து கொண்டதை
உணர்த்துவாய்
நீ என் தம்பியென்று

*நட்சத்திரம்* - விபஸன்னா - வாழும் கலைப்பயிற்சி

விபஸன்னா(Vipassanna): வாழும் கலை பயிற்சி.

நண்பர்களே இந்த பதிவு விபஸ்ன்னா என்னும் வாழும் கலைப் பயிற்சியைப் பற்றியது. இந்த பயிற்ச்சியை நான் 2002 ஆம் ஆண்டு மேற்கொண்டேன்.இந்த தியான முறை பற்றியும், அதைப் பற்றியான எனது அனுபவங்களையும் கலந்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இது மிகப்பழமையான தியான முறை அல்லது வாழும் கலை பயிற்சி முறை. புத்தர் ஞானம் பெற்ற தியான முறை இது.

இங்கு ஒரு விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். புத்தர் என்பது ஒரு தனிப்பட்ட மனிதரை குறிப்பது இல்லை. ஞானம் பெற்றவர்கள் அனைவரும் புத்தர்கள்என்றே அழைக்கப்படுகின்றர். நாம் இப்போது புத்தர் என்று வழிபடுபவர் இந்த முறையில் வந்த ஒருவர். அவருக்கு முன்னும் பின்னும் புத்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.இது முறையாக குருக்களால் கற்பிக்கபட்டு ஒரு தொடர் சங்கிலியாய் இன்றும் தொடர்கிறது. இடையில் பல காலம் இந்தியா இந்த முறையை மறந்திருந்த போதும்,இந்தியர்கள் பரவிக்கிடந்த பர்மா நாட்டில் தொடர்ந்து பயிற்றுவிக்கப்பட்டு அழியாமல் காத்து வரப்பட்டது. வரப்படுகிறது. இதுதிரு S.N.கோயங்கா என்பவரால் இந்தியாவில்மறு அறிமுகம் செய்யப்பட்டு பல இடங்களில் இந்த வாழும் கலை பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது.
இது குறித்த அனைத்து விளக்கங்களும் இங்கு
நான் இங்கு என் புரிதல்களோடு அதை பகிர்ந்து கொள்கிறேன்.

விபஸ்ன்னா என்பது பாலி மொழிச் சொல். passanna என்றால் வழக்கமான முறையில் கண்களை திறந்து பார்ப்பது, Vipassanna என்றால் நிகழ்வுகளை அதன் உண்மை வடிவிலேயே பார்த்தல்அது எப்படி தோன்றுவது என்று இல்லாமல் அது என்னவாக இருக்கிறது என்று தேடிப் பார்த்தல், உடல் மனங்களின் உண்மையான நிலையை பார்த்தல்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால்,

விருப்பு, வெறுப்புகளுக்கு ஆட்படாமல் நமக்குள் நடக்கும் நிகழ்வுகளை ஒரு மூன்றாம் மனிதனாக கவனிப்பது, பழைய நிகழ்வுகளை வெளியேற்றுவது.

மனித மனம் என்பது நன்மை தீமைகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது. இவைகளை சம்பந்தபட்டவர்களின் இன்ப துன்பத்திற்கு காரணமாக அமைகிறது.ஒரு மனிதன் தான் எப்படி இருக்கிறனோ அது மாதிரியே தன் சூழலையும் ஆக்கிவிடுகிறான். கோபமாக, வெறுப்பாக, அமைதியற்றவனாக துன்புறபுவனாக எனஎப்படி இருக்கிறானோ அப்படியே அவனைச் சுற்றியும் ஆக்கிவிடுகிறான். இதைக் கொண்டுதான் அந்த காலத்திலேயே நல்லதை நினை, நல்லதை பேசு, நல்லதை செய் என்றுசொல்லி இருக்கிறார்கள்.

மனிதனுடைய இந்த தீயகுணநலன்கள் அவனுக்குள் கடுமையான துயரத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதை எப்படி சரி செய்வது? அதற்குதான் இந்த பயிற்சி விடை சொல்கிறது.

இந்த பயிற்ச்சியின் நோக்கம் - ஒரு சமமான மனநிலையை உருவாக்குவது. பழைய விருப்பு வெறுப்பு எண்ணங்களை மேலே கொண்டு வந்து அவைகளை நம் மனத்திலிருந்து நீக்குவது

மனதனுக்கும் உலகிற்கும் இருக்கும் ஒரே தொடர்பு காற்று.

அந்த காற்று முறையாக போய் வரும் வரை அவன் மனிதன். உயிருள்ளவன். காற்று போய் வர இயலாத போதுஅவன் மரணித்து விடுகிறான். இந்த உலகத்துக்கும் அவனுக்குமான தொடர்பு இல்லாமல் போய் விடுகிறது. எனவே மனிதனுக்கு உரிமையான காற்றை கொண்டே அவனுடைய உண்மையான நிலையை அறிய முனைவதுதான் இப்பயிற்சி.

இந்த பயிற்சி மேற்கொள்ள ஐந்து இன்றியமையாத கட்டுபாடுகளை கடைபிடிக்கவேண்டும். அவை

1. பேசாதிருத்தல் - வாயால் மற்றும் உடலால்(கண்களால் பேசுதல் முதலியன)
2. எந்த சிறு உயிரையும் கொல்லாதிருத்தல்
3. திருடாதிருத்தல்
4. பாலுறவு கொல்லாதிருத்தல்
5. பொய் சொல்லாதிருத்தல்.

முதல் விதியைப் பார்த்தவுடனேயே எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இது நம்மால முடியாது. பத்துநாளைக்கு பேசாமா இருக்கிறதா? விளையாட்டா?என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனைக்கும் நான் இந்த பயிற்சி வகுப்பிற்கு சென்றிருந்தது எனது நெருங்கிய தோழனோடு.ஆனால் பத்து நாட்களும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

நம் வாழ்வில் நாம் எப்போதும் பிறருடன் மட்டுமே பேசி வாழ்கிறோம். தனக்குள் பேசுவது இல்லை அல்லது குறைவு. ஏனென்றால் இன்றைய வாழ்க்கை சூழல் அப்படி.நிர்ணயிக்கப்ப்பட்ட ஒரு வித சுழற்சியோடு வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த இயந்திரத்தனத்தில் தனக்குள் பேசுதல் என்பது இயலாத காரணம்.ஆனால் இந்த பயிற்சி ஒருவன் தனக்குள் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தி தருகிறது. அதன் மூலம் அவன் தன்னை யார் என்று உணர வாய்ப்பு ஏற்படுகிறது.


நான் இந்த பயிற்சி பெற்றது தம்மாசேது-சென்னை,

சென்னையில் திருமுடிவாக்கம் ன்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. பல்லாவரத்திலிருந்து மேற்கே ஒரு 10 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது.சென்னைக்குள் இருக்கும் ஒரு கிராமம் அது. போகும் வழியில் திருநீர்மலை. அடுத்து சிப்காட் தொழிற்பேட்டை. தொழிற்பேட்டையை கொஞ்சம் தாண்டிப் போனால் வயக்காட்டிற்குள் அமைந்திருக்கிறது தம்மாசேது. மிகப்பெரிய இடம். ஆண்கள் பெண்கள் தங்குவதற்கு தனித்தனியான அறைகள், அறை ஒன்றிற்கு இருவர் எனும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது.அறை எல்லா வகையான வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கொசுத்தொல்லையில்லிருந்து காத்து கொள்ள ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனி கொசுவலைகள். மெத்தை,தலையணை என தேவையான அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார்கள்.மொத்தம் பன்னிரண்டு நாட்கள் , பயிற்சி பத்து நாட்கள், பயிற்சிக்கு முந்தைய நாள் மதியத்திற்கு மேல் அங்கு செல்ல வேண்டும்மாலையில் ஒவொருவருக்கும் அவரவருக்குரிய அறைகள் ஒதுக்கப்ட்டு அறைச்சாவி கொடுக்கபட்டது. எல்லோரும் அறைக்கு சென்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்பு அன்றை மாலையில் ஒரு அமர்வு.இந்த பயிற்ச்சியைப் பற்றி, பயிற்ச்சியின் போது பின்பற்ற வேண்டிய முறைகள் பற்றி தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டது. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் பயிற்சி. அதில் மூன்று முறை கூட்டுத் தியான வகுப்புகள்.


முதலிலேயே தெளிவாக அறிவித்து விட்டார்கள். இந்த பயிற்சி எந்த மதச் சார்பும் உடையது அல்ல. இந்த பயிற்சி செய்வதினால் யாரும் அவரவர்நம்பிக்கைகளை மாற்றி கொள்ளத் தேவையில்லை. உங்கள் நம்பிக்கைகளை ஒரு பத்து தினங்களுக்கு ஒதுக்கி வைத்து விட்டு, அதாவது அது தொடர்பான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துஇந்த பயிற்சியை பின்பற்றுங்கள். பின்பு இந்த பயிற்சியைத் தொடர்வது உங்களுடைய விருப்பம். ஆனால் எந்த நம்பிக்கையையும் இந்த பயிற்ச்சியோடுபோட்டு குழப்பி கொள்ளாதீர்கள், எந்த இலக்கும் வைத்து பயிற்ச்சியில் ஈடுபடாதீர்கள், ஏதேனும் ஒன்றை மனதில் நினைத்து அதை நோக்கி பயணிக்காதீர்கள் என்று தெளிவாக கூறிவிட்டார்கள். நான் அமரும் போது நினைத்து கொண்டது மெய்ஜோதியை எப்படியும் அடைவது என்பதே.


இந்த பயிற்சி மனதை ஒருமுகப்படுத்துவதற்காக மட்டும் அல்ல. மனதை ஒருமுகப்படுத்துவதென்பது இதில் ஒரு சிறு நிகழ்வே. அதைக் கொண்டு நம் பழைய சம்ஹாரங்களை எல்லாம் வெளியில் கொண்டுவந்து அதன் நன்மை தீமைகளைஎல்லாம் அப்புறப்படுத்தி, மனதை ஒரு சமமானதாக மெய்யானதாக்கத்தான். அதாவது ஞானம் பெறுவதுதான். ஞானத்தை அடைய இந்த பயிற்சி ஒரு தொடக்க நிலை அல்லது முதல் அடி அவ்வளவுதான். தொடர்ச்சியான பயிற்ச்சியின் மூலமே இதனை அடைய முடியும்.


பயிற்ச்சி கடினமானது. ஆமாம் நம் சுவாசத்தை நாம் கவனிக்க வேண்டும். அது எப்படி உள் செல்கிறது, எப்படி வெளிச் செல்கிரது என்பதை உணர வேண்டும். அதற்காக நமது முகத்தில் மிகச்சிறிய பகுதியில் நம் கவனத்தை குவிக்கவேண்டும்.எடுத்துகாட்டாக மூக்கிற்கும் மேலுதட்டிற்கும் இடைப்பட்ட முக்கோணம். முதலில் மிகத் தடுமாற்றமாகத்தான் ஒருந்தது. மனசு எவ்வளவு தூரம் அலை பாய்கிறது என்பதை அப்போதுதான் உணர முடிந்தது. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி என்பதால் மெல்ல மெல்ல சுவாசத்தைஉணர முடிந்தது. இங்கு குறீப்பிடத்தக்கது நம்மால் உணரமுடியாவிட்டாலும் வருந்தக்கூடாது. தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறாக முகம் முழுவதும் உணர வேண்டும்.
இந்த பயிற்சியின் தத்துவமே மனித உடலே நுண்ணிய காற்று முடிச்சுகளால் ஆனது. அதன் பண்பு தோன்றி மறைவது. நாம் அந்த தோன்றி மறைவதை உணர வேண்டும். அதன் மீதுநமது வினைகளை ஏற்றாமல் ஒரு மூன்றாம் மனிதனாக கவனிக்க வேண்டும்.

பயிற்ச்சி தொடங்கி 3ம் நாள் மதியம் 3 -5 வரை முதல் கூட்டுதியானம். இந்த தியானத்தின் போது உடலை ஆடாமல் அசையாமல் வைத்து சுவாசப்பயிற்ச்சி செய்ய வேண்டும். இப்போது முகத்திலிருந்துஉடலின் மற்ற பாகங்களிலும் இதை உணரும் பயிற்சி கற்பிக்கப்படுகிறது. இந்த அமர்வுக்கு அதிட்டானம் என்று பெயர். அதிலிருந்துஅடுத்த ஆறு நாட்களுக்கும் இந்த பயிற்சிதான். உடல் முழுவதும் காற்றின் முடிச்சுகளை நாம் உணர உணர எலும்புகளை ஊடுருவி அவை செல்வதை உணர முடியும். நம் உடம்புக்குள் ஒரு free flow ஆக காற்று போய் வருவதை உணரமுடியும்.என்னால் 8 வது நாள்தான் ஒரளவிற்கு அதுமாதிரியான அனுபவம் கிடைத்தது.

பயிற்சி நேரங்கள்:
காலை 4.30 லிருந்து 6.30 வரை - தியானப் பயிற்சி
காலை 6.30லிருந்து 8.00 வரை காலைச்சிற்றுண்டி +ஓய்வுகாலை
8.00 லிருந்து 9.00 வரை கூட்டுத் தியானம்
9.00லிருந்து 9.05 சிறு இடைவெளி
9.05 லிருந்து 11.00 மணி வரை - தியான பயிற்சி( இடைவேளைகள் அவரவர் விருப்பம் போல)
நண்பகல்11.00லிருந்து 1 மனி வரை - மதிய உணவு, இடைவேளை
மதியம் 1.00 லிருந்து 3 மணி வரை - தியானம் ( இடைவேளைகள் அவரவர் விருப்பம் போல)
மதியம் 4.00லிருந்து 5 மணி வரை - கூட்டுத் தியானம்
மாலை 5.00லிருந்து 6 வரை- தேனீர் இடைவேளை
மாலை 6.00லிருந்து 7.30 வரை - தியானப் பயிற்சி
7.30 -8.00 வரை கோயங்காவின் தம்ம பேருரை

சென்னை முகவரி:

Vipassana Meditation Centre,
Dhamma Setu 533 Pazhan Thandalam Road,
Thiruneermalai Via, Thirumudivakkam
Chennai 600 044. India
Ph : +91-44-24780953
Email Id : dhammasetu@vsnl.net
Web site : http://www.dhammasetu.org/

இந்த பயிற்சி முறையான ஆசிரியர் துணை கொண்டே கற்க வேண்டுமென்பதாலே நான் மேலெலுந்த வாரியாக சொல்லியிருக்கிறேன்.
நான் சொன்னது எல்லாம் என் நினைவில் இருந்த செய்திகளை வைத்துதான்.
இதில் தவறுகளோ, தகவல் பிழைகளோ இருக்கலாம். சுட்டிக் காட்டினால் நான் அதை திருத்தி கொள்வேன்.

மேலும் அவர்களின் வலைதளத்திற்கு சென்று இதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதைப் பற்றி மேலதிக விபரம் அறிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்

அன்புடன்
முத்துகுமரன்.

பி.கு:
விபஸன்னாவை பற்றி எழுத வேண்டுமென்றால் அது மிக நீண்ட பதிவாகி விடும். அதற்கான நேரம் இப்போது இல்லை. அதனால் மிகச் சுருக்கமாக சொல்ல முயற்ச்சித்திருக்கிறேன்.

நான் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யவில்லை. காரணம் எல்லாவற்றையும் ஒட்டுதல் இன்றி என்னால் பார்க்க முடியவில்லை. குறிப்பாக பெற்றோரிடம்.

அவர்களோடு நான் என்றும் சமநிலையில் இருக்க விரும்பவில்லை. அவர்களின் பாசத்தை உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்தான் தொடரவில்லை. மெய்ஞானத்தை விட என் பெற்றோரின் மீதான அன்புதான் எனக்கு முக்கியமாகப் பட்டது. அவ்வப்போது ஒரு உடற்பயிற்சி மாதிரி மட்டும் செய்வதுண்டு.

*நட்சத்திரம்* - ஊரோடு ஒத்து வாழ் !!!( வணிக இடைவேளை)

6 வித்தியசமல்ல. 1வித்தியாசம்தான்:

புகைப்படங்கள் நன்றி :
www.thinnai.com
http://pksivakumar.blogspot.com.

பி.கு: மேற்கூறியதில் இருந்து நீதியோ, நகைச்சுவையோ, காழ்ப்புணர்வோ - அப்பிடி ஏதாவது இருந்தால் எடுத்து கொள்வது அவரவர் திறனுக்குரியது.

இது ஒரு வணிக இடைவேளை மாதிரி.

ஆசுவாசப்படுத்திகொள்வதற்காக

இடைவேளைக்கு பின் நாளை புதுப் பதிவோடு வருகிறேன்

*நட்சத்திரம்* -

வெளிச்சப் புள்ளிகள்
காரிருள் வெளியில்
நட்சத்திரங்கள்.

மொட்டை மாடி, எப்போதுமே மகிழ்ச்சியின் அடையாளம். அலங்காரப் பொருட்களால் அழகு படுத்தப்பட்டிருக்கும்வீட்டை விட மொட்டை மாடி மிகவும் அழகனாது. குறிப்பாக இரவுகளில், பரந்து விரிந்த வான் வெளியைப் தன் கூரையாக விரித்து பால் கிண்ணமாய் நிலவையும், முத்துச் சிதறல்களாய் நட்சத்திரங்களையும் உடுத்தி கொண்டு வேர்வை துடைக்கும் தென்றலோடு வாழும் தருணங்கள் மிக அழகானவை.

தனியாகவோ, கூட்டமாகவோ, எப்படி இருந்தாலும் அங்கே முக்கியமாக நிகழ்வது நிலாப் பார்த்தல் மற்றும் நட்சத்திரங்களை எண்ணுதல். அதிலும் சிறுகுழந்தை போல் விளையாட்டு காட்டி ஓடிச் சொல்லும் நட்சத்திரங்களுடனான உறவு மிக இன்பமானது.

என்ன கதை சொல்ற மாதிரி இருக்கா?

இல்லைங்க.

இந்த வார நட்சத்திரம்(நட்சத்திர பதிவர்) நானாம். (எல்லாம் நேரம்ன்னு சிலர் முணுமுணுக்கிறது கேக்குது:-) )

தமிழர் திருவிழா நாட்களில் எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு என்னை மகிழ்விக்கிறது.

பரவலாக அறிமுகமின்றி இருக்கும் நண்பர்களுக்காக மேடை அமைத்து அவர்கள் உள்ளிருக்கும் தீயை ஊருக்கு அறிவிக்கும் முயற்சி இந்த நட்சத்திர பதிவர் முறை. வாய்ப்பு பெற்ற அத்தனை பேரும் தங்கள் வெளிச்ச வெள்ளத்தை நிரம்பவே பாய்ச்சி இருக்கிறார்கள். தங்கள் இருப்பை அழுத்தமாகவும் அறிவித்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துகள். வரப்போகும் நட்சத்திரங்களுக்கும் எனது வாழ்த்துகள்

வலைப்பூவில் தீவிரமாக இயங்க தொடங்கிய குறுகிய காலத்திற்குள் எனக்கு இந்த வாய்ப்பளித்த தமிழ்மணம் நிர்வாக குழுவினருக்கு நன்றி. இது குறித்து என்னை தொடர்பு கொண்ட மதி கந்தசாமிக்கும், முறையாக அறிவித்த காசிக்கும் நன்றிகள்.

இது ஒரு பெரிய சவால். நட்சத்திரமா மின்னுறது இல்ல.(ஏன்னா நட்சத்திரம் தன்னைப் பொறுத்தவரை எப்போதும் அதன் ஒளியை இழப்பதில்லை. அது பார்ப்பவரை பொறுத்து) தினமும் தொடர்ந்து எழுதுறதுதான். ஒழுங்கா எழுதி விதிகளை காப்பாத்திடுவேன்னு நினைக்கிறேன். (இப்ப பார்த்து அலுவலகத்தில படுத்த ஆரம்பிச்சிட்டாங்க.... )

அதுனால இந்த வாரம் என்னை பொறுத்த வரை நட்சத்திர இரவு வாரம்:-)

ஒரு வாரம் எல்லோரையும் என்னை கவனிக்க வைக்க ஒரு வாய்ப்பு. இதை எப்படி பயன்படுத்துவது, என்ன மாதிரியான விசயங்களை எழுதுவது. எனக்குள் ஏகப்பட்ட சிந்தனைகள் வருகிறது. நிறைய எழுதத்தான் ஆசை.
ஆசைப்படறதுக்காக என் எண்ணத்தை எல்லாம் ஏழு நாளைக்குள்ள எழுதறதுங்கிறது கடினமானது. ஆனா முடிந்தவரை என்னை நிரூபிக்கும்/ விரும்பும் எழுத்துகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கடந்த சில நாட்களாக நண்பர்கள் சிலருக்கு ஒரு விதத் தவிப்பு. நான் பரபரப்பிற்காக எழுத ஆரம்பித்திருக்கிறேனோ என்று. நிச்சயம் பரபரப்படைய வேண்டும் என்பதற்காக மலிவான உத்திகளை கையாண்டு எழுதுவதில்லை. இனியும் அவ்வாறு செய்யப் போவதில்லை. என் மனதிற்கு நேர்மை என, உண்மை என படும் எதையும் தயங்காமல் சொல்லுவேன். எந்த காலத்திலும் நடுநிலை என்னும் அயோக்கியதனத்தைச் செய்யமாட்டேன்.

விதையின் பயணம் மென்மையானது அல்ல. கரடு முரடானதுதான். அதுபோலத்தான் கட்டுகளை உடைத்து கொண்டு வருபவன் குரலும். என் நியாயங்களை தயக்கமின்றி எப்போதும் உரத்துச் சொல்லுவேன். மற்றவர் அதை ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும்.

நான் எத்துனை மென்மையானவன் என்று என்னோடு பழகியிருக்கும், பழகும் நண்பர்களுக்கு தெரியும். அதே மென்மையை எழுத்தில் காட்டவேண்டும் எதிர்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் எனக்குள் எல்லைகள்
வைத்திருக்கிறேன். என் எழுத்துகள் கண்ணியமாக இருக்க வேண்டும், நாகரீகமாக இருக்க வேண்டும், உண்மையாக இருக்கவேண்டும். அதே போல் எந்த சூழலிலும் தனிமனித தாக்குதலில் இறங்க மாட்டேன்.

இந்த வாரத்தில் ஒரு கலவையான படைப்புகளாகவே தர எண்ணி இருக்கிறேன். எந்த வித வேடங்களுமின்றி, எந்த வித சாயங்களுமின்றி. கவிதைகள் முதல் கடவுள் வரை என் எண்ணங்களை என் புரிதல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அது மார்கழிப் பனியாகவும் இருக்கலாம். சித்திரை வெயிலாகவும் இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் உங்கள் இதயம் நனைப்பேன்

என்ற நம்பிக்கை இருக்கிறது

அன்புள்ள
முத்துகுமரன்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள்(பொங்கல்) நல்வாழ்த்துகள்.

''தை'' தமிழர் வாழ்வில் வளத்தை சேர்க்கட்டும்.


அன்புடன்
முத்துகுமரன்
Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP