*நட்சத்திரம்* - பிடித்த கவிதைகள் ஆறு - கவிதை 5

தேசிய நீரோட்டம்

அணைகளை உடைத்து
கரைகளைத் தகர்த்து
மரங்களைச் சாய்த்து
இதோ
பாய்ந்து வருகிறது
தேசிய நீரோட்டம்

ஏன் விலகி நிற்கிறீர்கள்!
குதியுங்கள்.

நவீன பாவங்களை
கழுவௌவதற்காகவே
புறப்பட்டு வந்த
புண்ணிய தீர்த்தம் இது.

அதோ
சாக்கடைகள் எல்லாம்
இதில்
சங்கமாகிப்
பவித்திரமடைவதை நீங்கள்
பார்க்கவில்லையா?

இதோ தங்கள் தீட்டுத் துணிகளை
இதில்
துவைத்துக்கொள்கிறவர்களை-
தங்கள்
வலையை வீசி இதில்
மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களை-
நீங்கள் பார்க்கவில்லையா?

நீங்கள் மட்டும் ஏன்
விலகி நிற்கிறீர்கள்?

வான் பொய்த்தாலும்
தான் பொய்க்காத
நீரோட்டம் இது
தாகம் தணித்துக்கொள்ளுங்கள்;
வறண்ட வயல்களுக்கு
வாய்க்கால் வெட்டிப் பாய்ச்சுங்கள்.

உங்கள்
கப்பரைகளுக்கு இதனால்
ஞானஸ்நானம் கொடுங்கள்.

உங்கள் தீபங்களை இதில்
மிதந்து போக விட்டுவிடுங்கள்

உங்கள் முகவரிச் சுவடிகளை இதில்
போட்டு விடுங்கள்

உங்கள் கனவுகளின் அஸ்தியை இதில்
கரைத்து விடுங்கள்

உங்கள் ரத்தத்தை
வெளியே கொட்டி விட்டு
இதை நிரப்பிக் கொள்ளுங்கள்

இனி
நீர்களுக்கு
தனி விலாசங்கள் தேவையில்லை

நதிகள் குளங்கள் கிணறுகள்
எல்லாம் மூழ்கிவிட்டன.
கண்ணீரும் மூழ்கிவிட்டது

நீங்களும் மூழ்கிவிடுங்கள்.

கவிக்கோ. அப்துல் ரகுமான்
**சுட்டுவிரல் தொகுப்பிலிருந்து, 3.11.87.**

5 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

குமரன் (Kumaran) said...

தலைப்பை 'உலகமயம்' என்று கொஞ்சம் மாற்றிப் பாருங்கள். கவிஞர் சொன்ன அத்தனையும் அங்கேயும் பொருந்தும். :-)

அப்டிப்போடு... said...

தேசிய நிரோட்டத்தில் வலைவிரிப்பவர்கள்., அதில் மூழ்கிப் போனவர்கள்., தேசிய நீரோட்டத்திற்கு கரை எழுப்பி விட்டு., எவனோ அதில் நீர் பருக., காணமல் போனவர்கள். காயம்பட்டவனுக்கு இல்லாத உரிமை, பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்தவர்களுக்கு வந்த விந்தை. இந்நிரோட்டத்தில் தன் உடமை தொலைத்து, சுற்றம் தொலைத்து ஏன் உயிர் தொலைத்தாலும் மரம் விழும் போது அழியும் சிறு பூச்சியாய் கண்டு கொள்ள ஆள் இல்லாமல் போன கூட்டம் ஏராளம். ஆனால் இது எந்த நாட்டின் வரலாற்று ஏடுகளைப் புரட்டினாலும் கண்ணில் படமால் மறைந்திருக்கும் உண்மைதானே?. அழிவுகள், ஆக்கங்கள் நிரையிட்டுப் பார்த்தால்... எது அதிகம் வரும்?. என் வரை கூட்டமைப்பை நான் ஆதரிக்கவே செய்வேன். தனித்திருப்பதால் வரும் பாதகத்தை விட இதில் குறைவுதானே?.

முத்துகுமரன் said...

நன்றீ குமரன்.

உலகமயம் என்றாலும் சரியாக பொருந்த கூடிய கவிதைதான். அதுதான் கவிஞனின் வெற்றி. கவிதையின் வெற்றி. காலங்கள் கடந்தும் நிற்கும் படைப்புகளைத் தந்தவர் கவிக்கோ. அப்துல் ரகுமான்.

முத்துகுமரன் said...

நமது உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தான் கூட்டமைப்பில் இருக்க முடியும் என்ற நிலை பாரபட்சமானது. கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது.

நன்றி அப்படிபோடு

அப்டிப்போடு... said...

//நமது உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தான் கூட்டமைப்பில் இருக்க முடியும் என்ற நிலை பாரபட்சமானது. கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது//.

இதைப் பற்றி ஒரு பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன். முத்துகுமரன். இதைக் கேள்விக்கு உட்படுத்தியவர்கள் நிலை உங்களுக்கு தெரியும்தானே?.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP