*நட்சத்திரம்* - ஆகஸ்ட் 5, அண்ணன் அறிவுமதியுடன்

சென்ற முறை விடுமுறைக்காக தாயகம் சென்ற போது அண்ணன் அறிவுமதி அவர்களைச் சந்தித்தேன். அவருடனான சந்திப்பு என் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

பாசத்தோடு தம்பி, தம்பி என அவரழைக்கும் போதெல்லாம் எனக்குள் எப்போதுமில்லாத இனிமையான அதிர்வுகள்.

மதுரையிலிருந்து ஆகஸ்ட் 4 ம் தேதி காலையில் சென்னை சென்றேன். அன்று மாலை 3 மணிக்கு அறிவுமதி அண்ணனை தொடர்பு கொண்டேன். தான் முக்கிய அலுவலில் இருப்பதாகவும் மாலை 6 மணிக்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். நான் அண்ணனுக்கு தொலைபேசி செய்யாமலே மாலை 5 மணிக்கு மாமாவின் இல்லத்திலிருந்து புறப்பட்டு மாம்பலம் ரயில் நிலையமடைந்தேன். சென்னையில் வாங்க வேண்டிய புத்தகங்களை பற்றி இசாக்கும், நண்பணும் பட்டியலிட்டிருந்த மின்னஞ்சலை பிரதியெடுத்துக்கொண்டு அவரது அலுவலக முகவரியான அபிபுல்லா சாலையை விசாரிக்க தொடங்கி நடந்தேன். நடந்தேன். கோடம்பாக்கம் ரயில்நிலையத்தின் கிழக்குப்பகுதியே வந்துவிட்டது. அண்ணனின் அலுவலகமும் அங்குதான்.

அலுவலகம் சென்றால் பூட்டிக் கிடந்தது. இப்போதுதான் கிளம்பிப் போனார் என்று சொன்னார்கள். எனக்கு மிகுந்த ஏமாற்றமாகி விட்டது. அண்ணனை மறுபடியும் தொலைபேசியில் அழைத்தேன். மறுநாள் காலை சந்திக்கலாம் என்றார். பிறகு பேராசிரியர் திரு. சுப.வீரபாண்டியன் அவர்களின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். சுப.வீ அவர்களே எடுத்தார்கள். அன்புடன் பயணம் பற்றியும் தாய் தந்தையர் நலம் பற்றியும் விசாரித்தார். அன்று முழுவதும் தமிழ் முழக்கம் அலுவலகத்திலே இருந்ததாகவும் மாலையில் திரு. பழ.நெடுமாறன் ஐயாவை சந்தித்துவிட்டு வந்ததையும் கூறினார். அடடா நல்ல வாய்ப்பை நான் இழந்துவிட்டேன் அய்யா என்றேன். சிரித்துக் கொண்டே கண்டிப்பாக நாம் சந்திப்போம் என்றார்.

நான் அண்ணன் அலுவலகத்திற்கு செல்ல அவரும் அப்போது ஆட்டோவிலிருந்து இறங்கிவந்தார். நான் துபாயிலிருந்து வந்திருக்கிறேன் எனச் சொல்ல வாங்க முத்துகுமரன் என்று அழைக்க நான் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன். முதலில் எனக்கு லேசாக பிரமிப்பாகயிருந்தாலும் அவரின் இயல்பான பேச்சால் எனக்கிருந்த தயக்கத்தை போக்கிவிட்டார். அவருடனான சந்திப்பு எனக்கு அளவிலாத மகிழ்ச்சியைத் தந்தது, நான் அவரைப் பற்றி கொண்டிருந்த எண்ணங்களைப் பற்றியும் பொதுவான மதிப்பீடுகளையும் தெரிவித்தேன். அவரிடம் நாங்கள் வாங்க திட்டமிட்டிருந்த புத்தகங்களைப்பற்றி அவரின் கருத்துகளையும் கேட்டேன். எல்லாம் நல்ல புத்தகங்கள்தான் என்றும் மேலும் சில புத்தகங்களையும் சொன்னார்.நான் குறித்துக் கொண்டேன். பெரும்பாலான புத்தகங்கள் நீயு உட்லேண்ஸ் புத்தக கடையிலே கிடைக்குமென்றும் பத்து சதவீதமாது கழிவு கொடுத்தால் மட்டும் வாங்கு என்றார். நானும் சரி அண்ணா என்று சொன்னேன்.

அப்புறம் தமிழைப் பற்றியும் இன்றைய சூழல்களைப் பற்றியும் எனது எண்ணங்களை அவரோடு பகிர்ந்து கொண்டேன். எல்லா வற்றறயும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு அவ்வப்போது எனது ஐயங்களையும் தெளிவுபடுத்தினார்.

அவருடைய நீலம் குறும்படத்தை பற்றியான லயோலா கல்லூரி மாணவர்களுடன் கலந்தாய்வு இருப்பதால் நான் அங்கு செல்கிறேன், நீ புத்தகங்கள் வாங்கிய பின் என்னைத் தொடர்பு கொள் நானும் அதற்குள் வந்துவிடெவேன் என்று சொல்லிவிட்டு அவருடைய உதவியாளரையும் என்னுடன் புத்தகக் கடடக்கு அனுப்பி வைத்ததர்.

ஏற்கனவே வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் இருந்ததால் எனது பணி எளிதாக இருந்தது. ஒரு சில புத்தகங்கள் இல்லை. அவைகளை புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகங்களிலிருந்து வரவழைத்து தந்தார்கள். இலக்கியம் தொடர்பான திறனாய்வு புத்தகங்கள், கவிதைப் புத்தகங்கள் என நிறையய வாங்கினேன். நான் திரைக்கதை புத்தகங்கள் ( உதிரிப்பூக்கள், பாரதிகண்ணம்மா, த்ரோன் ஆப் பிளட் ) ஆகிய புத்தகங்களும், நடுகற்கள் என்ற புத்தகமும் வாங்கினேன். எல்லாவற்றையும் ஒரு பெரிய மூட்டையாக கட்டிக் கொண்டு மறுபடியும் அண்ணன் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தேன், அலுவலகத்தில்தான் இருப்பதாகவும் அதனால் நீ வா என்றார்.

மெதுவாக பேச ஆரம்பித்தேன். இளவேனில் கால பஞ்சமி பாடலிலிருந்தே உங்கள் கவிதைகளின் ரசிகன் என்றேன். நீங்கள் காதல் புத்தகம் என்ற படத்திற்கு எழுதிய கவிதைகளை விளம்பரங்களில் பார்த்திருக்கிறேன், அப்போதே எனக்கு உங்கள் எழுத்துகளை பிடிக்கும் என்றேன் . அப்படியே வெளிவரயிருக்கிற எனது '' தீபங்கள் பேசும்'' கவிதை தொகுப்பை பற்றி பேசிவிட்டு அவரது நட்புக்காலம் கவிதை தொகுப்பு எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும் சொன்னேன். அது ஒரு நாள் இரவில் எழுதினதுடா தம்பி என்று சொன்னார்.

பல இளம் கவிஞர்களுக்கு தாயாய் இருக்கும் அவரது அன்பினாலே ஏராளமானவர்கள் தங்கள் கவிதைகளைக் கொடுத்து அவரின் கருத்துகளை அறிய காத்திருப்பதை அவரது அலுவலகத்தில் வந்து சேர்ந்திருந்த கவிதை தொகுப்புகளிலிருந்து உணர முடிந்தது. ஆனால் இந்த அன்பு பிணைப்பே அவர் எழுத்துக்கு மிகப் பெரிய தடையாய் இருப்பதாக அவர் எதேச்சையாகச் சொல்ல எனது தொகுப்பை பற்றிய கருத்துகளை நான் வற்புறுத்திக் கேட்கவில்லை. அவரது உள்ளம் அத்தனை அன்பு நிறைந்தது. கருத்துக்காக கொடுக்கும் கவிதைகளை மேம்போக்காக வாசித்து சம்பிரதாய வார்த்தைகளை இட்டு பதில் சொல்வதில்லை. ஒவ்வொன்றையும் ரசித்து தனது ஊக்கத்தை தருபவர் அவர்.

'' எழுதுங்கடா தம்பி''

என்பதுதான் சந்திக்கும் அனைவரிடமும் அவர் சொல்லக்கூடிய வார்த்தை. அவரரிடம் அண்ணா பல்வேறு கவிதைப் புத்தகங்களை வாசிக்க வாசிக்க எனக்கு ஒருவகையான மிரட்சி வருகிறது. அடிக்கடி நான் எழுதுவதெல்லாம் கவிதைதானா என்ற சந்தேகம் வருகிறது என்றேன். அவர் இதுதான் கவிதை என்று யாரும் தீர்மானிக்க முடியாது. கவிதை புனிதமானது போன்றவற்றை கண்டு அஞ்சாமால் எழுது என்றார். எழுத எழுதத்தான் சிந்தனைகளையும், மொழியையும் கையாளக்கூடிய திறமை வரும், அதனால் எந்த மிரட்சிக்கும் ஆளாகமல் தொடர்ந்து எழுது என்றார்.

சுனாமி பேரழிவை மையமாக வைத்து அவர் இயக்கிய நீலம் குறும்படத்தை பற்றி என் பேச்சு திரும்பியது. நீலம் படத்தின் இரண்டு புகைப்படங்களை காட்டினார். சுனாமியால் உறவுகளை இழந்த ஒரு சிறுவனின் கண்ணீரை வெளிப்படுத்தும் படம் அது. சிறப்பாக இருக்குது அண்ணா என்றேன்.
சிறுவன் அரவிந்த் பச்சான் நன்றாக நடித்திருப்பான் போலிருக்கண்ணா என்றேன். அவரும் ஆமாம் என்றார். மிகச் சிறப்பாக செய்திருக்கிறான் என்றார்.

நான் அவரை சந்திக்க சென்ற அந்த சமயம் அந்தப் படம் தொடர்பாகவும், சுனாமி பாடல்கள் தொகுப்பு சம்பந்தமாகவும் அவர் மிக்கப் பரபரப்பாக இருந்த சூழல் அது. (**சுனாமி பாடல்கள் தற்போது கடலே கடம்மா என்னும் பெயரில் குறுந்தகடுடாக வெளியிடப்பட்டிருக்கிறது. பல்வேறு இசை அமைப்பாளர்களின்(பத்து) ஒத்துழைப்போடு வெளிவந்திருக்கிறது. அத்தனையும் உயிரை உருக்கும், உலுக்கும் பாடல்கள்.** )

ஆனா தமிழ் பத்திரிக்கைகள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லையே என்றேன். விருது கிடச்சா எல்லாரும் கேமராவையும், பேப்பரையும் தூக்கிட்டு ஓடி வருவாங்கடா என்றார். குமுதம் மட்டும் செய்தியை போட்டிருந்தது. அருவருக்கத்தக்க ஆபாசங்களை அச்சிலிற்றி, தமிழனின் சிந்தனை உணர்வுகளை காயடிப்பதில் தெளிவாக இயங்கும் இந்த ஊடகங்கள், ஒரு தமிழன் தன் இனம் சந்தித்த மிக கொடூரமான ஒரு பேரழிவை, வரலாற்று துயரை தனது மொழியில் பதிவு செய்திருப்பதை கண்டும் காணாதிருந்ததை நினைத்து எரிச்சல் வந்தது.

ஆனால் அண்ணன் இதையெல்லாம் சுத்தமாக எதிர்பார்ப்பதே இல்லை.

அவரது மொழி சிறிது வளைந்தால் பணத்தை கொட்டிக் கொடுக்க காத்திருக்கிறார்கள். ஆனால் மொழியின் மீதும், இந்த சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள பாசமும், அதை ஒரு கோள்கையாகவே கடைபிடிப்பதையும், அதனால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளும் ஏராளம். இப்போது ஏன் திரைப்படத்திற்கு பாட்டெழுத மாட்டேன் என்று சொல்கிறீர்கள். திரையுலகில் உங்களைப் போன்றிருக்கும் ஒருசில சிந்தனையாளர்களும் எழுத மறுப்பது எந்த வகை நியாயம் என்று கேட்டேன். அதற்கு சவாலான வாய்ப்புகள் எதுவும் வருவதில்லை. வருவதெல்லாம் ஆபாசத்தை முன்னிறுத்தியும், பெண்களின் அங்கங்களை வர்ணித்து எழுதச் சொல்கிற பாடல்கள்தான். அது மாதிரி எழுத எனக்கு விருப்பமில்லை என்றார். சேதுவில் எங்கே செல்லும் இந்த பாதை எழுதினேன். அது காலம் கடந்தும் என் பெயர் சொல்லும். அது மாதிரி சவாலாக வந்தா கண்டிப்பா எழுதுவேன் என்றார்.

நான் மெதுவாக எனக்கும் திரைப்பட இயக்குனராகும் ஆசை இருக்கிறது என்றேன். நன்கு ஸ்கிரிப்ட் எழுத கற்றுக் கொள் என்றார். யாரிடமாவது உதவி இயக்குனராய் சேர்ந்து எடுபிடி வேலை செய்து, தொழில் கற்று இயக்குனர் ஆக வேண்டும் என்று எண்ணாதே. முறையாக படித்து விட்டு நேரிடையாக வா என்றார். கதை பற்றிய அறிவைப் பெற கிழக்கில் தேடு. தொழில் நுட்ப விசயங்களை மேற்கிலிருந்து பெற்றுக் கொள் என்றார். ஆம் எத்தனையோ வித்தியாசமான கதைகள் படிப்பினைகள் நமக்கு கிழக்கு ஆசியாவிலிருந்து கிடைக்கும் என்பதை மிக எளிமையாகச் சொல்லிவிட்டார்.

இடையில் அவரது தம்பிகள் சிலர் வந்தனர். அவர்களிடமெல்லாம் இவர் இசாக்கின் நண்பர் என அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் வேடிக்கையாக தம்பிகள் கூடிக்கிட்டே போறாங்க என்றனர். நான் சிரித்துக் கொண்டேன். அப்போது துபாயிலிருந்து வந்திருந்த இன்னொரு நண்பரும் வந்து சேர்ந்தார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு தோலைபேசி அழைப்பு.

அது பேராசிரியர் சுப.வீ அவர்களிடமிருந்துதான்.....

அண்ணன் பேசிவிட்டு என்னிடம் கொடுக்க, அடடா நீங்க மதி அலுவலகத்தில் இருக்கிறேன் என்று சொல்லியிருந்தால் நான் வந்து கலந்து கொண்டிருப்பேனே என்றார். நாம் நாளை கண்டிப்பாக சந்திப்போம் என்றார்.

பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாலை 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. உங்களுடனான சந்திப்பு எனக்கு மிகவும் மகிழ்வாய் இருந்தது என்றேன். அவர் சிரித்து கொண்டே வழியனுப்பி வைத்தார்.

சுப. வீ அவர்களுடனான சந்திப்பும் மிக இனிமையான ஒன்றுதான்.

அதைப் பற்றி பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

****

இந்தப் பொங்கல் கவிதை ஆர்வலர்களுக்கும், குறிப்பாக எங்களுக்கு தித்திப்பான சக்கரைப் பொங்கலாகவே அமைந்துவிட்டது. கவிதைகளுக்காகவும், கவிஞர்களுக்காகவும் அண்ணன் ''தை'' என்னும் பெயரில் புதிய கவிதை இதழை தை முதல் தேதியிலிருந்து தொடங்கி இருக்கிறார். இதழியல் உலகில் அது சிகரங்களைத் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அண்ணனுக்கு அன்பான வாழ்த்துகள்.......

6 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

வசந்தன்(Vasanthan) said...

//கவிதைகளுக்காகவும், கவிஞர்களுக்காகவும் அண்ணன் ''தை'' என்னும் பெயரில் புதிய கவிதை இதழை தை முதல் தேதியிலிருந்து தொடங்கி இருக்கிறார்.//

ஏற்கெனவே "மண்" என்றொரு இதழ் நடத்தி வந்தாரே, இப்போதும் வருகிறதா?

நல்ல அனுபவக்கட்டுரை.
சு.ப.வீ. சந்திப்பையும் எதிர்பார்க்கிறேன்.

முத்துகுமரன் said...

//ஏற்கெனவே "மண்" என்றொரு இதழ் நடத்தி வந்தாரே, இப்போதும் வருகிறதா?//

வசந்தன், பல்வேறு காரணங்களால் ''மண்'' இதழ் தொடர்ந்து வெளிவரவில்லை

ரவிசங்கர் said...

கவிஞர் அறிவுமதி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது அவரது எளிமையை அறிய உதவியது

neo said...

இன்னமும் சொரணை மிச்சமுள்ள ஒரு சில தமிழ்க் கவிஞர்களில் அறிவுமதி அவர்கள் முக்கியமானவர். அவருடைய தம்பியாய் தனைக் கருதும் முத்துக்குமரன் அவர்களுக்கு என் 'வாழ்த்துக்கள்' (நன்றி : மு. சுந்தரமுர்த்தி அவர்களுடைய இலக்கணப் பதிவு!)

சுப.வீரபாண்டியன் அய்யா அவர்களும் இன்றைய தமிழ்ச்சூழலில் தேசிய இன உணர்வு பிழைத்திருப்பதற்கு முக்கிய காரணம்.

அவருடைய 'பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' நூல் பெரியார் பற்றிய விஷமக் கருத்துக்களை விதைக்கிற புல்லுறுவிகளுக்கு நல்ல சாட்டையடி. அதையும் படியுங்கள் நண்பர் முத்து அவர்களே! :)

முத்துகுமரன் said...

//
அவருடைய 'பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' நூல் பெரியார் பற்றிய விஷமக் கருத்துக்களை விதைக்கிற புல்லுறுவிகளுக்கு நல்ல சாட்டையடி. அதையும் படியுங்கள் நண்பர் முத்து அவர்களே! :)//

பெரியாரின் இடதுசாரித் தமிழ்தேசியம் குறித்துதான் எனக்கும் சுப.வீ அய்யாவிற்கும் அறிமுகமே. முதல் பதிப்பை வாசித்து விட்டு அவரைத் தொடர்பு கொண்டு என் கருத்துகளையும், எனக்குள் ஏற்பட்ட தெளிவுகளையும் சொன்னேன். என் எண்ணங்களை விரிவாக கடிதமாக எழுதி அவருக்கு அனுப்பி இருந்தேன். தாயகச் சந்திப்பின் போது அதை மகிழ்வுடன் நினைவு கூர்ந்தார்.

இப்போது வெளிவந்திருக்கும் இரண்டாம் பதிப்பின் அட்டைப் படத்தை இறுதி செய்யும்போது அவருடன் நானிருந்தேன். இப்போது மேலதிக தகவல்களோடு வந்திருக்கும் அதை படித்து கொண்டிருக்கிறேன்.

உண்மையாகவே பெரியாரைப் பற்றியும், அவரின் சமூகப் பார்வையையும் தெளிவாக சொல்லக்கூடிய நூல் இது

பரஞ்சோதி said...

முத்துக்குமரன்,

அருமையாக சொல்லியிருக்கீங்க.

அண்ணன் அறிவுமதியை குவைத்தில் சந்திக்கும் வாய்ப்பை நான் இழந்து விட்டேன், காரணம் உங்க மருமகள் சக்தி தான்.

அடுத்த முறை நாம் இருவரும் சேர்ந்தே போய் அவரை பார்ப்போம்.

சமீபத்தில் பொதிகை தொலைக்காட்சியில் அவரது பேச்சை கேட்டேன், அருமையாக பேசினார். குறுந்திரைப்படங்களை நன்றாக அலசினார்.

(ஆமாம் வாங்கி வைத்த புத்தகங்கள் பத்திரமாக இருக்குது தானே).

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP