*நட்சத்திரம்* - விபஸன்னா - வாழும் கலைப்பயிற்சி

விபஸன்னா(Vipassanna): வாழும் கலை பயிற்சி.

நண்பர்களே இந்த பதிவு விபஸ்ன்னா என்னும் வாழும் கலைப் பயிற்சியைப் பற்றியது. இந்த பயிற்ச்சியை நான் 2002 ஆம் ஆண்டு மேற்கொண்டேன்.இந்த தியான முறை பற்றியும், அதைப் பற்றியான எனது அனுபவங்களையும் கலந்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இது மிகப்பழமையான தியான முறை அல்லது வாழும் கலை பயிற்சி முறை. புத்தர் ஞானம் பெற்ற தியான முறை இது.

இங்கு ஒரு விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். புத்தர் என்பது ஒரு தனிப்பட்ட மனிதரை குறிப்பது இல்லை. ஞானம் பெற்றவர்கள் அனைவரும் புத்தர்கள்என்றே அழைக்கப்படுகின்றர். நாம் இப்போது புத்தர் என்று வழிபடுபவர் இந்த முறையில் வந்த ஒருவர். அவருக்கு முன்னும் பின்னும் புத்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.இது முறையாக குருக்களால் கற்பிக்கபட்டு ஒரு தொடர் சங்கிலியாய் இன்றும் தொடர்கிறது. இடையில் பல காலம் இந்தியா இந்த முறையை மறந்திருந்த போதும்,இந்தியர்கள் பரவிக்கிடந்த பர்மா நாட்டில் தொடர்ந்து பயிற்றுவிக்கப்பட்டு அழியாமல் காத்து வரப்பட்டது. வரப்படுகிறது. இதுதிரு S.N.கோயங்கா என்பவரால் இந்தியாவில்மறு அறிமுகம் செய்யப்பட்டு பல இடங்களில் இந்த வாழும் கலை பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது.
இது குறித்த அனைத்து விளக்கங்களும் இங்கு
நான் இங்கு என் புரிதல்களோடு அதை பகிர்ந்து கொள்கிறேன்.

விபஸ்ன்னா என்பது பாலி மொழிச் சொல். passanna என்றால் வழக்கமான முறையில் கண்களை திறந்து பார்ப்பது, Vipassanna என்றால் நிகழ்வுகளை அதன் உண்மை வடிவிலேயே பார்த்தல்அது எப்படி தோன்றுவது என்று இல்லாமல் அது என்னவாக இருக்கிறது என்று தேடிப் பார்த்தல், உடல் மனங்களின் உண்மையான நிலையை பார்த்தல்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால்,

விருப்பு, வெறுப்புகளுக்கு ஆட்படாமல் நமக்குள் நடக்கும் நிகழ்வுகளை ஒரு மூன்றாம் மனிதனாக கவனிப்பது, பழைய நிகழ்வுகளை வெளியேற்றுவது.

மனித மனம் என்பது நன்மை தீமைகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது. இவைகளை சம்பந்தபட்டவர்களின் இன்ப துன்பத்திற்கு காரணமாக அமைகிறது.ஒரு மனிதன் தான் எப்படி இருக்கிறனோ அது மாதிரியே தன் சூழலையும் ஆக்கிவிடுகிறான். கோபமாக, வெறுப்பாக, அமைதியற்றவனாக துன்புறபுவனாக எனஎப்படி இருக்கிறானோ அப்படியே அவனைச் சுற்றியும் ஆக்கிவிடுகிறான். இதைக் கொண்டுதான் அந்த காலத்திலேயே நல்லதை நினை, நல்லதை பேசு, நல்லதை செய் என்றுசொல்லி இருக்கிறார்கள்.

மனிதனுடைய இந்த தீயகுணநலன்கள் அவனுக்குள் கடுமையான துயரத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதை எப்படி சரி செய்வது? அதற்குதான் இந்த பயிற்சி விடை சொல்கிறது.

இந்த பயிற்ச்சியின் நோக்கம் - ஒரு சமமான மனநிலையை உருவாக்குவது. பழைய விருப்பு வெறுப்பு எண்ணங்களை மேலே கொண்டு வந்து அவைகளை நம் மனத்திலிருந்து நீக்குவது

மனதனுக்கும் உலகிற்கும் இருக்கும் ஒரே தொடர்பு காற்று.

அந்த காற்று முறையாக போய் வரும் வரை அவன் மனிதன். உயிருள்ளவன். காற்று போய் வர இயலாத போதுஅவன் மரணித்து விடுகிறான். இந்த உலகத்துக்கும் அவனுக்குமான தொடர்பு இல்லாமல் போய் விடுகிறது. எனவே மனிதனுக்கு உரிமையான காற்றை கொண்டே அவனுடைய உண்மையான நிலையை அறிய முனைவதுதான் இப்பயிற்சி.

இந்த பயிற்சி மேற்கொள்ள ஐந்து இன்றியமையாத கட்டுபாடுகளை கடைபிடிக்கவேண்டும். அவை

1. பேசாதிருத்தல் - வாயால் மற்றும் உடலால்(கண்களால் பேசுதல் முதலியன)
2. எந்த சிறு உயிரையும் கொல்லாதிருத்தல்
3. திருடாதிருத்தல்
4. பாலுறவு கொல்லாதிருத்தல்
5. பொய் சொல்லாதிருத்தல்.

முதல் விதியைப் பார்த்தவுடனேயே எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இது நம்மால முடியாது. பத்துநாளைக்கு பேசாமா இருக்கிறதா? விளையாட்டா?என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனைக்கும் நான் இந்த பயிற்சி வகுப்பிற்கு சென்றிருந்தது எனது நெருங்கிய தோழனோடு.ஆனால் பத்து நாட்களும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

நம் வாழ்வில் நாம் எப்போதும் பிறருடன் மட்டுமே பேசி வாழ்கிறோம். தனக்குள் பேசுவது இல்லை அல்லது குறைவு. ஏனென்றால் இன்றைய வாழ்க்கை சூழல் அப்படி.நிர்ணயிக்கப்ப்பட்ட ஒரு வித சுழற்சியோடு வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த இயந்திரத்தனத்தில் தனக்குள் பேசுதல் என்பது இயலாத காரணம்.ஆனால் இந்த பயிற்சி ஒருவன் தனக்குள் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தி தருகிறது. அதன் மூலம் அவன் தன்னை யார் என்று உணர வாய்ப்பு ஏற்படுகிறது.


நான் இந்த பயிற்சி பெற்றது தம்மாசேது-சென்னை,

சென்னையில் திருமுடிவாக்கம் ன்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. பல்லாவரத்திலிருந்து மேற்கே ஒரு 10 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது.சென்னைக்குள் இருக்கும் ஒரு கிராமம் அது. போகும் வழியில் திருநீர்மலை. அடுத்து சிப்காட் தொழிற்பேட்டை. தொழிற்பேட்டையை கொஞ்சம் தாண்டிப் போனால் வயக்காட்டிற்குள் அமைந்திருக்கிறது தம்மாசேது. மிகப்பெரிய இடம். ஆண்கள் பெண்கள் தங்குவதற்கு தனித்தனியான அறைகள், அறை ஒன்றிற்கு இருவர் எனும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது.அறை எல்லா வகையான வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கொசுத்தொல்லையில்லிருந்து காத்து கொள்ள ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனி கொசுவலைகள். மெத்தை,தலையணை என தேவையான அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார்கள்.மொத்தம் பன்னிரண்டு நாட்கள் , பயிற்சி பத்து நாட்கள், பயிற்சிக்கு முந்தைய நாள் மதியத்திற்கு மேல் அங்கு செல்ல வேண்டும்மாலையில் ஒவொருவருக்கும் அவரவருக்குரிய அறைகள் ஒதுக்கப்ட்டு அறைச்சாவி கொடுக்கபட்டது. எல்லோரும் அறைக்கு சென்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்பு அன்றை மாலையில் ஒரு அமர்வு.இந்த பயிற்ச்சியைப் பற்றி, பயிற்ச்சியின் போது பின்பற்ற வேண்டிய முறைகள் பற்றி தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டது. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் பயிற்சி. அதில் மூன்று முறை கூட்டுத் தியான வகுப்புகள்.


முதலிலேயே தெளிவாக அறிவித்து விட்டார்கள். இந்த பயிற்சி எந்த மதச் சார்பும் உடையது அல்ல. இந்த பயிற்சி செய்வதினால் யாரும் அவரவர்நம்பிக்கைகளை மாற்றி கொள்ளத் தேவையில்லை. உங்கள் நம்பிக்கைகளை ஒரு பத்து தினங்களுக்கு ஒதுக்கி வைத்து விட்டு, அதாவது அது தொடர்பான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துஇந்த பயிற்சியை பின்பற்றுங்கள். பின்பு இந்த பயிற்சியைத் தொடர்வது உங்களுடைய விருப்பம். ஆனால் எந்த நம்பிக்கையையும் இந்த பயிற்ச்சியோடுபோட்டு குழப்பி கொள்ளாதீர்கள், எந்த இலக்கும் வைத்து பயிற்ச்சியில் ஈடுபடாதீர்கள், ஏதேனும் ஒன்றை மனதில் நினைத்து அதை நோக்கி பயணிக்காதீர்கள் என்று தெளிவாக கூறிவிட்டார்கள். நான் அமரும் போது நினைத்து கொண்டது மெய்ஜோதியை எப்படியும் அடைவது என்பதே.


இந்த பயிற்சி மனதை ஒருமுகப்படுத்துவதற்காக மட்டும் அல்ல. மனதை ஒருமுகப்படுத்துவதென்பது இதில் ஒரு சிறு நிகழ்வே. அதைக் கொண்டு நம் பழைய சம்ஹாரங்களை எல்லாம் வெளியில் கொண்டுவந்து அதன் நன்மை தீமைகளைஎல்லாம் அப்புறப்படுத்தி, மனதை ஒரு சமமானதாக மெய்யானதாக்கத்தான். அதாவது ஞானம் பெறுவதுதான். ஞானத்தை அடைய இந்த பயிற்சி ஒரு தொடக்க நிலை அல்லது முதல் அடி அவ்வளவுதான். தொடர்ச்சியான பயிற்ச்சியின் மூலமே இதனை அடைய முடியும்.


பயிற்ச்சி கடினமானது. ஆமாம் நம் சுவாசத்தை நாம் கவனிக்க வேண்டும். அது எப்படி உள் செல்கிறது, எப்படி வெளிச் செல்கிரது என்பதை உணர வேண்டும். அதற்காக நமது முகத்தில் மிகச்சிறிய பகுதியில் நம் கவனத்தை குவிக்கவேண்டும்.எடுத்துகாட்டாக மூக்கிற்கும் மேலுதட்டிற்கும் இடைப்பட்ட முக்கோணம். முதலில் மிகத் தடுமாற்றமாகத்தான் ஒருந்தது. மனசு எவ்வளவு தூரம் அலை பாய்கிறது என்பதை அப்போதுதான் உணர முடிந்தது. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி என்பதால் மெல்ல மெல்ல சுவாசத்தைஉணர முடிந்தது. இங்கு குறீப்பிடத்தக்கது நம்மால் உணரமுடியாவிட்டாலும் வருந்தக்கூடாது. தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறாக முகம் முழுவதும் உணர வேண்டும்.
இந்த பயிற்சியின் தத்துவமே மனித உடலே நுண்ணிய காற்று முடிச்சுகளால் ஆனது. அதன் பண்பு தோன்றி மறைவது. நாம் அந்த தோன்றி மறைவதை உணர வேண்டும். அதன் மீதுநமது வினைகளை ஏற்றாமல் ஒரு மூன்றாம் மனிதனாக கவனிக்க வேண்டும்.

பயிற்ச்சி தொடங்கி 3ம் நாள் மதியம் 3 -5 வரை முதல் கூட்டுதியானம். இந்த தியானத்தின் போது உடலை ஆடாமல் அசையாமல் வைத்து சுவாசப்பயிற்ச்சி செய்ய வேண்டும். இப்போது முகத்திலிருந்துஉடலின் மற்ற பாகங்களிலும் இதை உணரும் பயிற்சி கற்பிக்கப்படுகிறது. இந்த அமர்வுக்கு அதிட்டானம் என்று பெயர். அதிலிருந்துஅடுத்த ஆறு நாட்களுக்கும் இந்த பயிற்சிதான். உடல் முழுவதும் காற்றின் முடிச்சுகளை நாம் உணர உணர எலும்புகளை ஊடுருவி அவை செல்வதை உணர முடியும். நம் உடம்புக்குள் ஒரு free flow ஆக காற்று போய் வருவதை உணரமுடியும்.என்னால் 8 வது நாள்தான் ஒரளவிற்கு அதுமாதிரியான அனுபவம் கிடைத்தது.

பயிற்சி நேரங்கள்:
காலை 4.30 லிருந்து 6.30 வரை - தியானப் பயிற்சி
காலை 6.30லிருந்து 8.00 வரை காலைச்சிற்றுண்டி +ஓய்வுகாலை
8.00 லிருந்து 9.00 வரை கூட்டுத் தியானம்
9.00லிருந்து 9.05 சிறு இடைவெளி
9.05 லிருந்து 11.00 மணி வரை - தியான பயிற்சி( இடைவேளைகள் அவரவர் விருப்பம் போல)
நண்பகல்11.00லிருந்து 1 மனி வரை - மதிய உணவு, இடைவேளை
மதியம் 1.00 லிருந்து 3 மணி வரை - தியானம் ( இடைவேளைகள் அவரவர் விருப்பம் போல)
மதியம் 4.00லிருந்து 5 மணி வரை - கூட்டுத் தியானம்
மாலை 5.00லிருந்து 6 வரை- தேனீர் இடைவேளை
மாலை 6.00லிருந்து 7.30 வரை - தியானப் பயிற்சி
7.30 -8.00 வரை கோயங்காவின் தம்ம பேருரை

சென்னை முகவரி:

Vipassana Meditation Centre,
Dhamma Setu 533 Pazhan Thandalam Road,
Thiruneermalai Via, Thirumudivakkam
Chennai 600 044. India
Ph : +91-44-24780953
Email Id : dhammasetu@vsnl.net
Web site : http://www.dhammasetu.org/

இந்த பயிற்சி முறையான ஆசிரியர் துணை கொண்டே கற்க வேண்டுமென்பதாலே நான் மேலெலுந்த வாரியாக சொல்லியிருக்கிறேன்.
நான் சொன்னது எல்லாம் என் நினைவில் இருந்த செய்திகளை வைத்துதான்.
இதில் தவறுகளோ, தகவல் பிழைகளோ இருக்கலாம். சுட்டிக் காட்டினால் நான் அதை திருத்தி கொள்வேன்.

மேலும் அவர்களின் வலைதளத்திற்கு சென்று இதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதைப் பற்றி மேலதிக விபரம் அறிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்

அன்புடன்
முத்துகுமரன்.

பி.கு:
விபஸன்னாவை பற்றி எழுத வேண்டுமென்றால் அது மிக நீண்ட பதிவாகி விடும். அதற்கான நேரம் இப்போது இல்லை. அதனால் மிகச் சுருக்கமாக சொல்ல முயற்ச்சித்திருக்கிறேன்.

நான் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யவில்லை. காரணம் எல்லாவற்றையும் ஒட்டுதல் இன்றி என்னால் பார்க்க முடியவில்லை. குறிப்பாக பெற்றோரிடம்.

அவர்களோடு நான் என்றும் சமநிலையில் இருக்க விரும்பவில்லை. அவர்களின் பாசத்தை உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்தான் தொடரவில்லை. மெய்ஞானத்தை விட என் பெற்றோரின் மீதான அன்புதான் எனக்கு முக்கியமாகப் பட்டது. அவ்வப்போது ஒரு உடற்பயிற்சி மாதிரி மட்டும் செய்வதுண்டு.

28 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

முத்து(தமிழினி) said...

//அவர்களின் பாசத்தை உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்தான் தொடரவில்லை. மெய்ஞானத்தை விட என் பெற்றோரின் மீதான அன்புதான் எனக்கு முக்கியமாகப் பட்டது. அவ்வப்போது ஒரு உடற்பயிற்சி மாதிரி மட்டும் செய்வதுண்டு. //

மெய்ஞானம் வந்தால் பெற்றோர் மீது உள்ள அன்பு போய்விடுமா? எனக்கு புரியவில்லை...
மற்றபடி நல்ல பதிவு...

முத்துகுமரன் said...

முத்து,

மெய்ஞானமடைய முதல் தேவையே இந்த உலகத்தின் மீது பற்றற்று இருப்பதுதான். பெற்றோர்களின் மீது பற்றற்று என்னால் இருக்க முடியாது. அதனால்தான் இந்த பயிற்சியை, வாழ்க்கைமுறையை நான் தொடரவில்லை. மற்றபடி மனநலத்திற்கு இது ஒரு சிறப்பான பயிற்சி முறை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

G.Ragavan said...

முத்துக்குமரன். நல்ல அறிமுகம். இது தமிழுக்குப் புதிதல்ல என்றே எனக்குத் தோன்றுகின்றது. கால் என்றால் தமிழில் காற்று. இது தொடர்பான பழம் பாடல்களைப் படித்த நினைவிருக்கிறது. தேடிப் பார்க்க வேண்டும். வாரியார் பேச்சில் கூட இது தொடர்பாக எப்பொழுதோ கேட்ட நினைவு. சைவ சித்தாந்தம் போலவும் உள்ளது. யாராவது தெரிந்தவர்கள் சொல்லக் கூடாதா?

G.Ragavan said...

// மெய்ஞானமடைய முதல் தேவையே இந்த உலகத்தின் மீது பற்றற்று இருப்பதுதான். பெற்றோர்களின் மீது பற்றற்று என்னால் இருக்க முடியாது. //

முத்துக்குமரன், நீங்கள் என்ன! பட்டினத்தாராலேயே முடியவில்லை. இத்தனைக்கும் காவியைக் கொடுத்தவளே அந்தத் தாய்தான். தாயிருக்கும் வரைக்கும் அவர் பூம்புகாரை விட்டுப் போகவில்லை. பிறகே அனைத்தும் துறந்தார். அதுவும் அம்மா அம்மா என்று கதறி ரெண்டு பாட்டுகளைப் பாடி விட்டுதான்.

ஜோ / Joe said...

வித்தியாசமான,பயனுள்ள பதிவு.

எடுத்தவுடனே 'தவமாய் தவமிருந்து' ரேஞ்சுக்கு ஒரு பதிவு கொடுத்திருக்கீங்க.

இந்த படத்துக்கு முன்னால போட்ட நியூஸ் ரீல் பாத்துட்டு வேற மாதிரி படம் எதிர் பார்த்தேன்.சுகமான ஏமாற்றம்!

நல்ல பதிவோடு ஆரம்பிச்சுருக்கீங்க .பல்சுவையிலயும் கலக்குங்க!

முத்துகுமரன் said...

//இந்த படத்துக்கு முன்னால போட்ட நியூஸ் ரீல் பாத்துட்டு வேற மாதிரி படம் எதிர் பார்த்தேன்.சுகமான ஏமாற்றம்!//
பரபரப்பான காட்சிகள் தொடக்கத்திலே வந்தா நல்லாவா இருக்கும். மென்மை தொடங்கி விறுவிறுப்பா முடியுறதுதான நம்ம தமிழ் திரைப்பட பாணி....இறுதி காட்சிகள் எல்லோரும் விரும்பும் வகையில் இருக்கும்:-))))))

முத்துகுமரன் said...

//தாயிருக்கும் வரைக்கும் அவர் பூம்புகாரை விட்டுப் போகவில்லை. பிறகே அனைத்தும் துறந்தார். //.

பயிற்சிக்கு போயிட்டு வீட்டுக்கு வந்த முத நாலு நாள் முதல்நாள் ரெம்ப அமைதியா இருந்தேன். என் மவுனத்தால் அம்மா முகமே மாறுறதை பார்த்த போது எனக்கே ரெம்ப சங்கடமா போயிடுச்சு. அப்பவே மெய்ஞானத்தேடலை மூட்டை கட்டி தூக்கி பரணில் போட்டுவிட்டேன்.
தாய்க்கு பிள்ளையா இருப்போன்னு இருந்துட்டேன்

ஜோ / Joe said...

//தாய்க்கு பிள்ளையா இருப்போன்னு இருந்துட்டேன்//

இதுல்ல புள்ளைக்கு அழகு.நல்லா சொன்னீங்க போங்க..தாயை விட எதுவும் சிறந்ததில்லை.

அழகப்பன் said...

இதில் கூறப்பட்டுள்ள செயல்முறையில் எனக்கு உடன்பாடு இல்லை எனினும் 25 வயது வாலிபர் தியானம் குறித்து எழுதவதில் மகிழ்ச்சியே.

பிரதீப் said...

நல்ல பதிவு.
நானும் ஈஷா யோகா மையத்தில் பிராணாயாமம் மற்றும் தியானம் கற்றுக் கொண்டேன். அங்கும் இந்தப் பற்றற்று இருக்கும் பிரச்சினை வந்தது. பற்றற்று இருக்கும்போது தியானத்தில் சுலபமாக மூழ்க இயலுமாம்.

நான் பிராணாயாமம் மட்டும் செய்து கொண்டிருந்தேன். சோம்பேறித்தனத்தால் கொஞ்ச நாள் கழித்து அதையும் விட்டு விட்டேன். இப்போது திரும்பத் தொடங்கி இருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

முத்துகுமரன்,

இந்த பதிவு ஒரு அதிர்ச்சி தான் எனக்கு. விபாஸனா தியான முறை பற்றிய பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் உங்களிடம் இருந்து எதை எதை எதிர்பார்க்கவேண்டும் என்ற அளவிற்கு உங்களுடன் பழகவும் இல்லை; உங்கள் எழுத்துகளைப் படிக்கவும் இல்லை என்ற உண்மையும் உறைத்தது. :-) இதுவும் நீளமான பிற்சேர்க்கையாய் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இராகவன் சொன்னது போல் இந்த தியான முறை/இதை ஒட்டிய தியான முறை தமிழ்நாட்டிலும் சித்தர்கள் செய்து வந்துள்ளனர். ஞானவெட்டியான் ஐயா இன்னும் விளக்கமாகச் சொல்ல முடியும் என்று எண்ணுகிறேன். ஆனால் அது இப்போது விவாதத்திற்குரியதன்று. எத்திசைத்தாயினும் நல்ல விஷயங்கள் நம்மை வந்தடையட்டும்.

நீங்கள் இந்த தியான முறையைக் கற்றுக் கொண்டது பற்றியும் அந்த தியான முறை பற்றியும் சுருக்கமாக பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி; மிக்க மகிழ்ச்சி. இங்கு நீங்கள் சொன்ன விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படாமல் நமக்குள் நிகழும் நிகழ்வுகளை ஒரு மூன்றாம் மனிதனாகக் கவனிப்பது, பழைய எதிர்மறையான நிகழ்வுகளையும் அவற்றின் தாக்கங்களையும் வெளியேற்றுவது போன்றவையே தவச் செயல்/ஞான வினை என்று ஞானவெட்டியான் ஐயா சொல்கிறார்கள் என்று எண்ணுகிறேன். சம்ஸ்காரங்கள்/பழக்க வழக்கங்கள் நம்மை வழி நடத்திச் செல்கின்றன. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற முதுமொழிக்கேற்ப அந்த சம்ஸ்காரங்களின் வலிமை அளவிட முடியாதது. அதன் வலிமையை நீங்கள் கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.

பற்றற்று இருத்தல் இந்த தியான பயிற்சிக்குத் தேவையானதாய் இருக்கலாம். ஆனால் அது தாய் தந்தையர் மனைவி மக்கள் சுற்றத்தார் நண்பர்கள் இவர்கள் மேலுள்ள அன்பின் நீக்கமாய் இருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து.

பற்று விடுதல் என்பது நாம் பற்றிக் கொண்டிருக்கும் ஒன்றை விடுதல் என்ற பொருளிலேயே நாம் எடுத்துக் கொள்கிறோம். அது தான் நேர்ப்பொருள் என்றாலும் இன்னொரு பொருளும் வழியும் இருக்கிறது. நம்மைப் பெற்றவர் மேல் நாம் கொள்ளும் அன்பினை மற்றவர் மேலும் நாம் கொள்ளத் தொடங்க வேண்டும். நம் குடும்பம் மேல் நாம் கொள்ளும் அன்பினை மற்றவர் மேலும் நாம் கொள்ளத் தொடங்க வேண்டும். கடினம் தான். ஆனால் அந்த நிலை - யாதும் ஊரே; யாவரும் கேளிர் - என்ற நிலை, பேச்சளவில் மட்டுமின்றி உணர்வளவில் வரும் போது பற்று தானே விடும்; அப்போது வலிக்காது. அன்பு இருக்கும்; பற்று விடும் - இரண்டுமே ஒரே நேரத்தில் நிகழும். பயிற்சி தான் தேவை.

தம்ம சேது என்பதும் ஒரு பௌத்த சமய வார்த்தை தான். பாலி மொழி என்று எண்ணுகிறேன். தர்ம சேது என்னும் வடமொழியின் திரிபு. தர்ம சேது என்றால் அறமெனும் பாலம் என்று பொருள் தரும்.

மற்றவருடன் பேசுவதைக் குறைத்து தான் பேசுவதை உள்முகமாய் கவனிக்கத் துவங்கினால் எத்தனையோ விஷயங்கள் பிடிபடும். உணர்ந்திருக்கிறேன்.

முத்துகுமரன் said...

நன்றி அழகப்பன்.

பிரதீப் நன்றி. நம் நாட்டில் ஏராளமான வாழும் கலைப்பயிற்சி முறைகளும் அவற்றை போதிப்பவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் வடிவம்தான் வேற்வேறே தவிர போய்ச் சேருமிடம் எல்லோருக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

முத்துகுமரன் said...

//அதே நேரத்தில் உங்களிடம் இருந்து எதை எதை எதிர்பார்க்கவேண்டும் என்ற அளவிற்கு உங்களுடன் பழகவும் இல்லை; உங்கள் எழுத்துகளைப் படிக்கவும் இல்லை என்ற உண்மையும் உறைத்தது. :-)//

குமரன் மனிதன் ஒற்றைச் சிந்தனையோடு மட்டுமே வாழ்வது இல்லை. பல்வேறு சிந்தனைகள் அவனுக்குள் எழும் போது அவன் அதை ஒரே மாதிரியாக அணுகுவதில்லை. வேறுபாடுகள், முரண்கள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள விசயங்கள்தான். நானும் அப்படித்தான். இந்த தியான முறையை பயின்றேன். அவர்கள் சொன்னது போலவே அதன் மீது எந்த அடையாளத்தையும் செலுத்தாமல் ஒரு பயிற்சியாக மட்டும் உள்வாங்கி கொண்டேன்.

உண்மையில் புத்தம் என்பது வழிபாடுகள் கொண்ட மதம் கிடையாது. அது ஒரு வாழ்க்கை முறை. இதுவும் அவர்கள் சொன்னதுதான்.

அந்த பயிற்சியின் போது ஒரு சிறு எறும்பை கூட துன்புறுத்த கூடாது. அதாவது ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர் வரை அனைத்திற்கும் எந்த விதமான துன்பமும் செய்யக்கூடாது. இதுவே அன்பு பகிர்வுதான்.அதை தொடர்வதுதான் சிரமாமாக இருக்கிறது.

பற்றற்ற நிலை குறித்து ஞானவெட்டியான் அய்யா போன்றவர்கள் விளக்கமளித்தால் இன்னும் நன்றாகவும் அனுபவப்பூர்வமானதாகவும் இருக்கும்.

தொடர்ந்து வாசித்து கருத்து சொல்வதற்கு நன்றி குமரன். என் கண்ணாடி என்ன வண்ணம் என்று யூகிக்க முடியவில்லையோ:-))

குமரன் (Kumaran) said...

நீங்களே சொன்ன மாதிரி கண்ணாடியின் வண்ணங்கள் மாறிக் கொண்டு தான் இருக்கின்றன. உங்களுக்கு மட்டும் அன்று. எனக்கும் தான். :-)

ஒரே நேரத்தில் வெவ்வேறு விஷயங்களை வெவ்வேறு வண்ணக் கண்ணாடி கொண்டு பார்ப்பதும் நிகழத் தான் செய்கிறது. தவிர்க்க முடியாதது.

G.Ragavan said...

// இராகவன் சொன்னது போல் இந்த தியான முறை/இதை ஒட்டிய தியான முறை தமிழ்நாட்டிலும் சித்தர்கள் செய்து வந்துள்ளனர். ஞானவெட்டியான் ஐயா இன்னும் விளக்கமாகச் சொல்ல முடியும் என்று எண்ணுகிறேன். ஆனால் அது இப்போது விவாதத்திற்குரியதன்று. எத்திசைத்தாயினும் நல்ல விஷயங்கள் நம்மை வந்தடையட்டும். //

குமரன், நானும் விவாதத்திற்காகச் சொல்லவில்லை. பொதுவாக இரண்டு கருத்துகள் இருக்கும் பொழுது, இரண்டிலும் வேறுபாடுகளைப் பார்ப்பதை விட பொதுமைப் பண்பைப் பார்ப்பதும் எனது வழக்கம். அந்த வகையில் நானும் தமிழில் இருக்கிறதைச் சொன்னேன். அவ்வளவே.

// பற்றற்று இருத்தல் இந்த தியான பயிற்சிக்குத் தேவையானதாய் இருக்கலாம். ஆனால் அது தாய் தந்தையர் மனைவி மக்கள் சுற்றத்தார் நண்பர்கள் இவர்கள் மேலுள்ள அன்பின் நீக்கமாய் இருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. //

குமரன், இதே கருத்தை அருணகிரியும் ஓரிடத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார். கந்தரநுபூதி அடுத்த வாரம் தொடங்க வேண்டுமே. ஆகையால் இங்கே சொல்லாமல் அந்தச் செய்யுள் வருகையில் சொல்கிறேன்.

நிலவு நண்பன் said...

விபஸன்னா..அப்படியொன்று இருக்கிறதா என்ன..? இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன் முத்துக்குமரா..

ம்..ம்..நட்சத்திரமா தேர்ந்தெடுத்தவுடனையே ..வித்தியாசமான தகவல்களை எழுத ஆரம்பிச்சுட்டீங்க..கலக்குங்க

அப்டிப்போடு... said...

நமெக்கல்லாம் 'மெய்ஞானம்' எப்பவோ வந்திருச்சு. முத்துக்குமரன்., இதை நீங்க நம்பவா போறிங்க?., பெண்ணாகப் பிறந்து., திருமணம் முடிந்து புகுந்த வீட்டில் நாத்தனார்கள், மாமியார் மற்ற சுற்றங்களுடன் வாழ்ந்து பார்க்கும்(சிறிது காலம் ஆனாலும்) பெண்கள் அனைவரும் என்னைப் பொறுத்தவரை மெய்ஞானம் அடைந்தவர்களே. மற்றபடி பதிவு., நல்லா இருக்கு. கொஞ்ச காலம் தியான புத்தகம் ஒண்ண வாங்கிவச்சுகிட்டு, ஒரு ரூம்க்குள்ள போயி, கதவச் சாத்திகிட்டு ஒரு மெழுகுவர்த்திய கொழுத்தி வச்சுகிட்டு உத்து பார்த்துகிட்டே இருந்தேன். இது ஏற்கனவே அரையா இருந்துச்சு., இப்ப முழுசா ஆயிருச்சு போலன்னு தலைக்குப் பின்னாடி 'வாய்ஸ்' கேட்டதுனால... தூக்கிப் போட்டத்துதான் மெழுகுவர்த்திய., அப்புறம் கரண்ட் கட் ஆனாக்கூட டார்ச்லைட்டதான்.

//மெய்ஞானமடைய முதல் தேவையே இந்த உலகத்தின் மீது பற்றற்று இருப்பதுதான்//.
இதெல்லாம் யாருக்காவது முடியுமா?., ரொம்பப் பெரியவங்களுக்கு முடியும்?., வர்ற சின்ன காய்ச்சலக் கூட மூளைக்காய்ச்சல் ரேஞ்சுல கற்பனை பண்ற எனக்கு முடியாதுப்பா.

குமரன் (Kumaran) said...

//வர்ற சின்ன காய்ச்சலக் கூட மூளைக்காய்ச்சல் ரேஞ்சுல கற்பனை பண்ற எனக்கு முடியாதுப்பா.
//

வாஸ்தவமான பேச்சு. நமக்கும் அதே தான். :-)

Ram.K said...

குறிப்பிடத்தக்கப் பதிவு.
நன்றி.

ramachandranusha said...

முத்துக்குமரன்., இதை நீங்க நம்பவா போறிங்க?., பெண்ணாகப் பிறந்து., திருமணம் முடிந்து புகுந்த வீட்டில் நாத்தனார்கள், மாமியார் மற்ற சுற்றங்களுடன் வாழ்ந்து பார்க்கும்(சிறிது காலம் ஆனாலும்) பெண்கள் அனைவரும் என்னைப் பொறுத்தவரை மெய்ஞானம் அடைந்தவர்களே//
:-))))))))))))))))))))))))))

அப்படிப் போடு, ஒவ்வொரு முறையும் இப்படி போகிறப் போக்குல எதையாவது கொளுத்திப் போட்டுட்டு போறீங்க, அத தாண்டிப்
போக முடியாம சிரிச்சிக்கிட்டு கிடக்கிறேன். அது சரி, வூட்டுக்காரரு, பிள்ள குட்டிங்க இத விட்டுட்டீங்களே!

அப்டிப்போடு... said...

//அது சரி, வூட்டுக்காரரு, பிள்ள குட்டிங்க இத விட்டுட்டீங்களே//

ஆங்... இடையிலே போன நமக்கே மெய்ஞானம்னா., ஆதியில இருந்து அந்த ஜோதில இருக்கறவங்க.... பரம மெய்ஞானம் அடைஞ்சு.... பரமசிவன கூப்பிட வேண்டியதுதான்... அவர் வந்து அருள் புரிய வேண்டியதுதான் ரேஞ்சுல இருப்பாங்க. பிள்ளைகள்... அதுக மாட்டும்தானப்பா இந்த திருமண வாழ்க்கையில் இருக்கும் ஒரே வரம்?. (நிச்சயம் நீங்க நினைச்சது இது இல்லைல்ல உஷா?)

சிவா said...

முத்துக்குமரன்! எனக்கு இந்த தகவல்கள் ரொம்ப புதிது. நமக்கு இந்த யோகா, தியானம் எல்லாம் ஒத்து வராது :-). இருந்தாலும் 10 நாள் பேசாம இருந்திருக்கீங்க. பாராட்டுக்கள் :-). அப்புறம் பேசி தீத்துட்டீங்களோ.

ramachandranusha said...

அப்படிப்போடு! புருஷன், பிள்ளைக்குட்டிகள் ஆன சில வருஷத்திலேயே வேண்டிய ஞானோபதேசம் பெற்று முக்தி கிடைத்து
விடுகிறதே :-)
நமக்கு இந்த "மெய்ஞானம்" எல்லாம் புரியாத சப்ஜெட்டு. யாராவது ஆன்மீகம் பேச ஆரம்பித்த, என் முகம் போகிற போக்கைப் பார்த்து "கூறாமல் சன்னியாசம்" ரேஞ்சுக்கு போயிடுவாங்க.

முத்துக்குமரன், சம்மந்தமில்லாத மேட்டரை இழுத்து விட்டதற்கு ஸாரி ப்ளீஸ்!

முத்துகுமரன் said...

நன்றி அப்பிடிபோடு,கமலியோன் சிவா, ரா.உ(ஜி.ரா பாணியில் படிக்கவும்:-) )

நிலா said...

முத்துக்குமரன்,
நல்ல சப்ஜெக்டை ஆரம்பிச்சு வச்சதுக்கு நன்றி.

10 நாள் மௌனம்னதும் கொஞ்சம் மிரண்டுட்டேன். நம்மளப் போல அவசரக் குடுக்ககைகளுக்கேத்தாப்பல சில ஈசியான தியான முறைகளை இங்கு போட்டிருக்கேன்:

http://nilaraj.blogspot.com/2006/01/blog-post_18.html

முடிஞ்சா பாருங்க

முத்துகுமரன் said...

நன்றி நிலா.

உங்கள் பதிவை படித்தேன். விரிவாக பதில் எழுத வேண்டும் என்று மனம் நினைப்பதால் பிறகு பதிலிடுகிறேன்

சந்திப்பு said...

முத்துக்குமரன் விபசன்னா - வாழும் கலை பயிற்சி பற்றிய சிறு விளக்கம் மிகுந்த ஆர்வமூட்டியது. படித்துக் கொண்டிருக்கும் போதே பல கேள்விகளை எழுப்பியது. இறுதியில் தங்களது பதிலே தீர்வாக அமைந்தது. (மெய்ஞானத்தை விட என் பெற்றோரின் மீதான அன்புதான் எனக்கு முக்கியம்). ஒரு மனிதன் இயற்கையோடும், சக மனிதர்களோடும், சுற்றுப்புறச் சூழலோடும் இணைந்து அதற்கேற்றார்போல் வாழுவதும், சமூகத்தில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த தன்னை அர்ப்பணித்துக் கொள்வதுமே உண்மையான மெய்ஞானமாக இருக்கும் என்று கருதுகிறேன். இவையன்றி ஒருவர் வாழும் கலையில் வித்தகராக இருப்பது அவருக்கு வேண்டும் என்றால் இன்பத்தை அளிக்கலாம். மாறாக சமூகத்திற்கு அளிக்காது. எனவே வாழ்க்கை யதார்த்தமாக இருக்க வேண்டும் இந்த வாழும் கலையில் நீங்கள் தேர்ந்து விட்டீர்கள் என்று நான் கருதுகிறேன்.
அதற்காக, இவையனைத்தையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறவில்லை. சமூகத்தில் வேறு எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள் தன்னைப் பற்றியாவது கவலைப்படுவது வரவேற்க வேண்டிய அம்சமே! உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு இதுபோன்ற கலைகள் அவசியமே! இதை வளர்க்க வேண்டியதும் சமூகத்தின் கடமையே! நான் சமீபத்தில் படித்ததை இங்கே உளறுகிறேன்.
கியூபா நாட்டில் மக்களின் உடல் நலம் மிக சிறந்த முறையில் பேணுவதாக அறிந்தேன். டாக்டர்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் அங்கு உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளை பார்ப்பது என்பது மிகவும் அபூர்வம் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி தற்போது கியூப நாட்டு டாக்டர்கள் 30,000 பேர் வெனிசுலாவிற்கு சென்று அந்த நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதாக படித்தேன். எனவே என்னைப் பொறுத்தவரை பொருத்தமான சமூக மாற்றம் நிகழ்ந்தால் மனநலமும், உடல் நலமும், வாழ்க்கை நலமும் ஒருங்கே வந்து சேரும்!

அய்யனார் said...

தாமதமாக இப்பதிவை படிக்கநேர்ந்ததிற்க்கு வருந்துகிறேன்.கடைசி சில வரிகளை தவிர்த்திருக்கலாம்.உங்களின் புரிதல்களில் சில பிரச்சினைகள் இருக்கிறது.விபாஸனா சொல்வது சம்ஹாரங்களில் இருந்து விடுபடல்.அன்பை மிகவும் சுருக்கி தன் சார்ந்த விஷயங்களில் மட்டும் செலுத்தாதிருத்தல்.தானிலிருந்து விடுபட்டு முழுமையாய் அன்புமயமாதல்.தியானத்தை சரியாய் புரிந்து கொள்ளுங்கள் அது உடற்பயிற்ச்சியல்ல.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP