*நட்சத்திரம்* - தம்பிக்கொரு கவிதை

நாம்
அதிகமாக பேசியது கிடையாது
சேர்ந்திருக்க வேண்டிய பருவத்தில்
பிரிந்தே இருந்து விட்டோம்

கேபிள்டீவிக்காக
தெருத்தெருவாய்
ஆளுக்கொரு பக்கம் சுற்ற
ஒழுக்கம் வர வைக்க
நீ விடுதிச் சிறையில்
வயது விதிகளினால் நான் தப்ப
வெற்றி பெற்ற ஏழாம் வகுப்பே
மறுபடி பயிலும் தண்டனை உனக்கு

நானோ தினம் அம்மாவுடன் இருக்க
உனக்கோ பார்ப்பதற்கே
மாதமிருமுறைதான் அனுமதி
பச்சப்பிள்ளை நீ எப்படி துடித்திருப்பாய்
அதனால்தானோ
அம்மாவைக் காணும்போதெல்லாம்
புன்னகையால்
விரிப்பாய்

அப்பாவும் நானும்
உன்னை பார்க்க வந்தது குறைவுதான்
விடுமுறைகலெல்லாம்
அம்மாவின் முந்தானை பிடித்து திரிந்தது
புரிகிறது இன்று

நீ யாரோடும் ஒட்டாது
நீ மெளனம் கொள்ள
நாங்களே காரணமென்றுணர்ந்த மனம்
அழுத்துகிறது

உன் உடல்நலனறிந்துதான்
விருப்பத்திற்கு மாறாய்
கல்லூரியிலும்
விடுதிச் சிறை நீட்டிப்பு

நான்
உன் ஆசைகளை காயப்படுத்தியே
இத்துணை நாள் வாழ்ந்திருக்கிறேன்

உணர உணர
உறுத்தாலாய் இருக்குதுடா
இருந்தாலும்
நிச்சயம் தெரியும்
வழக்கமான உன் மெளனப்புன்னைகையாலே
என்னை புரிந்து கொண்டதை
உணர்த்துவாய்
நீ என் தம்பியென்று

14 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

G.Ragavan said...

ம்ம்ம்ம்ம்....நேரில் சொல்லாததைக் கவிதையில் சொல்கின்றீர்களா.....உண்மைதான்..கவிதை உதவுகிறது. நானும் என்னுடைய பெற்றோரிடத்தும் உடன் பிறந்தோரிடத்தும் மனதுக்குள் சொல்லிய கவிதைகள் ஏராளம் ஏராளம். அவைகளை என்னையும் ஆண்டவனும் தவிர யாரும் கேட்கவில்லை என்பதும் உண்மை. நீங்கள் நட்சத்திரவாரத்திலேயே போட்டிருக்கிறீர்கள். நன்று.

குமரன் (Kumaran) said...

முத்துகுமரன். இந்த உணர்வு உங்களுக்கும் எனக்கும் மட்டும் தானா? இல்லை எல்லாருக்கும் தம்பிகளிடம் சொல்ல இப்படிப் பட்ட உணர்வுகள் இருக்குமா? தெரியவில்லை.

நீங்கள் கவிதையாய் எழுதிவிட்டீர்கள். நான் எழுதியிருக்க மாட்டேன். என் தம்பிக்குப் புரியுமா தெரியாது. அதனால்.

நீங்கள் சொன்ன அத்தனையும் எனக்குப் பொருந்தாது என்றாலும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான்.

நேரில் பார்த்தால் அண்ணன் என்ற கெத்து வந்துவிடுவதால் கவிதை என்ன சாதாரணமாகவே சொல்வேனோ இல்லையோ. ஈகோ தடுக்கும் என்று தான் நினைக்கிறேன்.

என்ன நீங்கள் நினைத்த மாதிரி பின்னூட்டங்கள் வராமல் எழுதிய இருவருமே எனக்கும் இந்த மாதிரி உணர்வுகள் உண்டு அப்படிங்கற மாதிரி தான் சொல்லியிருக்காங்களா? வரும் வரும். கவிஞர்கள் இனிமேல் படித்துக் கவிதையைப் பற்றிப் பேசுவார்கள். :-)

முத்துகுமரன் said...

//நீங்கள் நினைத்த மாதிரி பின்னூட்டங்கள் வராமல் //

இந்த கவிதை எந்த மாதிரியுமான பின்னூட்டங்களை எதிர்பார்த்தும் எழுதவில்லை. கவிதைகளுக்கு எப்படி பின்னூட்டம் வரும் எத்தனை வரும் என்று அறியாமலா இருப்பேன்.

உங்கள் உணர்வைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி குமரன்

முத்துகுமரன் said...

நன்றி ராகவன்.

நீங்களும் நல்ல கவிஞர்தானே, கவிதையிலலே சொல்லலாமே? ஆண்டவனுக்கு ஏகப்பட்ட வேலை இருக்கும். இதுக்கெல்லாம் போயி எதுக்கு அவரை தொந்தரவு படுத்திகிட்டு...

ஜோ / Joe said...

உங்கள் மெல்லிய உணர்வை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் .சில நேரம் நேரடியாக சொல்ல முடியாததை எழுத்தில் சொல்வது சுலபம்.

என்ன தான் தொலைபேசியில் உரையாடினாலும் ,நேரடியாக பேச்சினாலும் ,எழுத்தில் சொல்லுவதன் சிறப்பே தனி.

தொடருங்கள்..

சிங். செயகுமார். said...

இனிமை வாழ்வில் இளமை காலம்
இழந்த சொர்க்கம் இல்லத்தை
விட்டு பிறிந்த நாட்கள்!
கவலைகள் இல்லா காலாரா
கால் போன போக்கில்
கடந்து போன நாட்கள்
உடன் பிறப்போடு
ஊடலும் கூடலும்
சின்ன மிட்டாயுக்கும்
சிலேட்டு குச்சிக்கும்
சில நேரம் சன்டை
இப்போதும் நினைத்து பார்க்கிறேன்
கனத்த மனதோடு
கடந்து போனதை
நண்பரே நானும்
பங்கேற்கிறேன்
உங்களின் நினைவில்.........

அப்டிப்போடு... said...

எங்கள் சித்தி மகனும் இப்படி ஒழுக்கம் வர விடுதியில் சேர்க்கப்பட்டவந்தான். மற்றவர்கள் எல்லோரும் பகட்டாக வளர., அவன் மட்டும் பள்ளி, கல்லூரி வாழ்வு முழுமையும் தனித்தே விடுதியில் வளர்ந்தான். சிறு வயதில் அவன் குறும்புகளினலேயே நிறைய பேருக்கு இதய வியாதி வந்திருக்குது(குடும்பத்தில்தாங்க). இப்போது வீட்டில் மிகப் பொறுப்பான பிள்ளை அவன் மட்டும்தான். நெகிழச் செய்த படைப்பு. அந்த சிங்கக் குட்டிக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் பொறுப்பான மனிதராகத்தான் அவர் இருப்பார்.

கீதா said...

"ஒழுக்கம் வர வைக்க
நீ விடுதிச் சிறையில்"

இதெல்லாம் ரொம்ப அநியாயங்க. எப்பவும் சின்ன பசங்களை இப்படித்தான் பயமுறுத்துவாங்க.. ஒழுங்கா இல்லைன்ன ஹோஸ்டல்ல சேர்த்துடுவேன்.. அங்க 5 மணிக்கு எழுந்துக்கணும், உன் துணியெல்லாம்நீயே துவைக்கணும் இப்படி ஏகத்துக்கு பயமுறுத்துவாங்க..

ஒழுங்கா வளர்க்கிறதும், ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்குறதும் பெற்றோர்கள் கடமை. என்னதான் முரடா இருந்தாலும் பெற்றோர்கள் அன்பா சொன்னா கேட்டுப்பாங்க.

இப்ப கல்யாணமாகி பிரிய நேர்ந்திருக்கும்போதே மனசு வலிக்குது.. அந்த பிஞ்சு குழந்தைகள் என்னம்மா தவிச்சிருக்கும்.

முத்துகுமரன் said...

//சில நேரம் நேரடியாக சொல்ல முடியாததை எழுத்தில் சொல்வது சுலபம்.//

நேரடியாக சொல்ல முடியாமல் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி வந்துவிடுகிறது. சில நேரங்களில் அருகில் இருப்பதை விட தூரத்தில் இருந்து அழகாக புரிய வைத்திடலாம்.

நன்றி ஜோ

முத்துகுமரன் said...

கவிதையாக கருத்து சொன்ன சி.மா(சிங்கப்பூர் ----வுக்கு நன்றி:-))

முத்துகுமரன் said...

//நெகிழச் செய்த படைப்பு. அந்த சிங்கக் குட்டிக்கு வாழ்த்துக்கள். //

நன்றி அப்படி போடு(மரம்). வேருக்குள் இருக்கும் ஈரம் போல இருக்கிறது உங்களது பாராட்டு. மகிழ்ச்சியாக இருக்கிறதெனக்கு

முத்துகுமரன் said...

//இப்ப கல்யாணமாகி பிரிய நேர்ந்திருக்கும்போதே மனசு வலிக்குது.. அந்த பிஞ்சு குழந்தைகள் என்னம்மா தவிச்சிருக்கும்.//

இந்த எண்ணங்களை உங்களுக்குள் என் கவிதை தோற்றுவித்தது எனக்கு மகிழ்வைத் தருகிறது.

கருத்துக்கு நன்றி கீதா

பிரதீப் said...

செல்லமாக அடித்தேன்
ஏற்றுக் கொள்ள ஏசுவா என
கோபமாகவே அடித்தாய்

அப்போது அம்மாவிடம் கேட்டேன்:
"என் ஒருத்தனோட நிறுத்தி இருக்க வேண்டியதுதானே?"
அம்மா சிரித்தார்.

ரோட்டில் என்னிடம்
வம்பிழுத்தவனை
அதே கோபத்துடன் சிதறடித்தாய்

இப்போதும் அம்மாவிடம் கேட்டேன்:
"எனக்கு முன்னாலேயே அவனைப் பெத்திருக்க வேண்டியதுதானே?"
இப்போதும் அம்மா சிரித்தார்.

-- முத்துக்குமரன்,
இதையெல்லாம் சினிமா பாணியில வீட்டில சொல்லிக்கிற முடியலை. அன்புக்கு இல்லை அடைக்குந்தாழ்! ஆனா வெளிப்படும் விதம்தான் வீட்டுக்கு வீடு மாறுது.

முத்துகுமரன் said...

//-- முத்துக்குமரன்,
இதையெல்லாம் சினிமா பாணியில வீட்டில சொல்லிக்கிற முடியலை. அன்புக்கு இல்லை அடைக்குந்தாழ்! ஆனா வெளிப்படும் விதம்தான் வீட்டுக்கு வீடு மாறுது.//

நெசந்தான் பிரதீப்

நமக்குள்ள சொல்லாம கிடக்கிற விசயங்கள்(நேசங்கள்)ஏராளம்தான்

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP