*நட்சத்திரம்* - வேரோடு பெயர்ந்த உயிர்

வெளியே மழை விட்டிருந்தது.

காலையிலிருந்து பெய்த மழைக்குபிறகு வானம் இப்போதுதான் சற்று வெறித்திருக்கிறது. கையில் குடையை எடுத்துக் கொண்டு நானும் தேனும் பூங்காவிற்கு நடக்கத் தொடங்கினோம். சாலைகள் எல்லாம் ஈரப்பதமாக இருக்க காலை கவனமாக ஊன்றி நடக்க வேண்டியிருந்தது. சாலைகள் மரங்கள் சுவர்கள் எல்லாம் புதுக்குளியலை முடித்த புத்துணர்வோடு பளிச்சென இருந்தன. இந்த பாதையில் நடப்பது 40 வருடங்களாக தொடரும் விசயம். எங்கள் வாழ்க்கையைப் போலவே காலவோட்டத்தில் இந்தச் சாலையின் மாற்றங்களும் ஏராளம். நாங்கள் வரும் போது இது சின்னத் தோட்டமும் கொஞ்சம் காலிமனையும் உள்ள வீடாக இருந்தது. இன்றுநெரிசல்களால் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.

தேனு, செந்தில் போன் பண்ணினா?.

எப்ப ஊர்ல இருந்து வர்றேன்னு எதுவும் சொன்னானா? மருமக, பேரன் எல்லாம் சொகந்தானா?

எல்லாம் சொகந்தானாம். அவனுக்கு இப்ப வேல கொஞ்சம் அதிகம். இன்னும் ஒரு மாசந்தான, பொங்கலை ஒட்டி வந்தா சேர்ந்த மாதிரி நாளுஞ்சு நாளைக்கு இருக்கலாம்ன்னு சொன்னான், அப்புறம் எம்பேரந்தான் பள்ளிக்கூடத்தில பர்ஸ்ட் ரேங்காம், ஸ்கூல் டீச்சரெல்லாம் அவளப் பத்தித்தான் பேசிக்கிறாங்களாம், சொல்லும் போதே தேனுவின் முகம் சந்தோசத்தில் பூரித்தது.

வாங்கய்யா, வாங்கம்மா, பூங்காவிற்கு அருகில் பூ விற்கும் ரஞ்சிதத்தின் கணீர் குரல். செளக்கியங்களா, நல்ல செளக்கியம்தான். 100மல்லிகைப்பூ கொடுத்தா. மறக்காமா பொங்க நாள்ல வீட்டு வந்து பூ கொடுத்திடு. அப்புறம் மல்லிகைப்பூ, கனகாம்பரம் எல்லா சேத்து எடுத்திட்டு வா. ஊர்ல இருந்து மருமக பேரன்லாம் வர்றாங்க.சரிம்மா. நான் கடைக்கு வர்றப்ப அப்படியே வீட்ல கொடுத்திட்டு வந்திடறேன்.

இருவரும் பூங்காவின் பெரிய அரச மரத்திற்கு கீழிருக்கும் அந்த மூலை பெஞ்சை நோக்கி நடந்தோம். எனக்கு ரெம்ப பிடித்த மரம். விவரம் தெரிந்ததிலிருந்து அதற்கும் எனக்கும் ஏதோ ஒரு உறவு இறுக்கமாக இருக்கிறது.பலமுறை அதன் நிழலில் இளைப்பாறியிருக்கிறேன். தேனுவோடு பலமுறை இங்கு வந்திருக்கிறேன். என் கவலைகள் மறந்திருக்கிறேன். இப்பவும் பேரனை கூட்டி வந்து விளையாட்டு காட்டினது, அவங்கூட ஓடியாடி, ஒளிஞ்சு விளையாண்டது எல்லாம் இந்த மரத்தை சுத்திதான்.என்ன உங்க சிநேகதருகூட எதுவும் பேசலையா, மரத்தையும் என்னையும் பார்த்து கிண்டலடித்தாள். போறப்ப பேசிக்க வேண்டியதுதான். சரி ஈரமா இருக்கு நான் துண்ட விரிக்கிறேன், அப்புறமா உக்காரு.

தேனு, உனக்கு பொங்கலப்ப வேலை அதிகமாகப்போகுது, எல்லாத்தையும் இழுத்து போட்டுகிட்டு செஞ்சா ஒத்துக்குமா? அப்புறம் மூட்டு வலிக்குது , இடுப்பு வலிக்குதுன்னு சொல்லப் போற?

என்ன பேசுறீங்க, ஜீவன் இருக்கும் வரை உழைக்கபோறேன், மருமவதான் கூடமாட ஒத்தாசை பண்ணுவாள அப்புறம் என்ன. எம்புள்ளைங்களுக்கு செய்யுறதுனால நோவுன்னு ஒன்னும் சொல்ல மாட்டேன்?

ம் நல்ல மாமியார்தான். விட்டுக் கொடுக்காம பேசுறியே. அதுக்குதான் தூரத்தில இருக்கிறது எப்பவுமே நல்லது.

அடடா, வயசாயிட்டாலே என்ன பேசுறோம்ன்னு தெரியாதா உங்களுக்கு?

நான் சிரித்தேன்.

என்ன சிரிக்கிறீங்க.

இல்லை கல்யாணமான புதுசுல உன்னை அடிக்கடி சீண்டுவேன் ஞாபகம் இருக்கா? கோவத்துலதான் நீ ரொம்ப அழகா இருப்ப, அதை ரசிக்கத்தான்அப்படி செய்வேன். அது மாதிரித்தா இப்பவும் நீ அழகா இருக்க...

அட ராமா, விவஸ்தையே கிடையாதா, எந்த வயசில எதை பேசனும்ன்னு,
இது என்னடி புதுக்கூத்தா இருக்கு, எம்பொண்டாட்டி அழகுன்னு நான் சொன்னா தப்பா? அறுபதாம் கல்யாணம் முடிஞ்சு இரண்டு வருசந்தானடி ஆகுது.நான் இன்னும் புது மாப்பிள்ளைதான்.

சரி சரி போதும் உங்க ராமயணம். இந்த வாட்டியும் பேரனை கூட்டிக்கிட்டு இதே பூங்காவுக்கு வராம வேற இடங்களுக்கெல்லாம் கூட்டிட்டு போங்க
சரி ஆத்தா, நேரம் ஆயிடுச்சு, இருட்ட ஆரம்பிச்சிடுச்சு, நாம புறப்படலாம்.
அதிகம் பேசாமலே வீடு வந்து சேர்ந்தோம்.

மழை திரும்பவும் வலுவாக பெய்ய மார்கழி குளிர் இன்னும் அதிகமாக வாட்ட ஆரம்பித்துவிட்டது இந்த வருசம் ரெம்ப ஜாஸ்திதான். ஸ்வெட்டர் போட்டும் நல்ல குளிர். கம்பளியை போர்த்திக் கொண்டு தூங்கினோம். காலிங் பெல் அடிக்க, முழிப்பு வந்தது, பால்காரன் வந்துட்டானா என்றவாரே அடுப்படியிலிருந்து பால்பாத்திரத்தை எடுத்து கொண்டு போனேன்.
தேனு நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்

பாவம் ரெம்ப அசதி போல இருக்கு, விலகியிருந்த போர்வையை நன்கு போர்த்தி விட்டு நானும் மறுபடியும் படுத்துக் கொண்டேன்.
குட்டித் தூக்கம் முடித்து எழுந்த போதும் எழுந்திருக்கவில்லை

தேனு, தேனு,

என்ன உடம்புக்கெதுவும் சொகமில்லையா, இவ்வளவு நேரம் தூங்க மாட்டியே, அவளிடம் பதிலேதும் இல்லை. எனக்கு அடிவயிறு பிசைய ஆரம்பித்துவிட்டது என்னம்மா என்னாச்சு என்று தலையில் கை வைத்து பார்த்தேன். உடம்பு ஜில்லுன்னு இருக்கே.எனக்குள் பதட்டமாக மூக்கின் அருகே விரலை கொண்டு போனேன், என் இதயம் நின்று விட்டது. அவளிடம் மூச்சு இல்லை. இருக்காது தேனு, உனக்கும் ஒன்னும் இல்ல, இரு இப்பவே நான் டாக்டரை கூட்டிட்டு வரேன், என்உதடுகள் உளரத் தொடங்கின. ற்கும் அவசியமில்லாது போல் உன் இறுதி தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாய்.

போர்வையை விளக்கி அவள் தலையை என் மடியில் வைத்துக் கொண்டேன். உங்கள்ட்ட சொல்லாம எதாவது செஞ்சிருக்கேனான்னு சொல்லுவியே, இதை மட்டும் ஏம்ம சொல்லாம செஞ்ச, ஏன் என்கிட்ட சொல்லிட்டு போகுறதுக்கு ஒன்னுமே இல்லையா? எம் மேல அப்படி என்னமா கோபம் உனக்குதலையில் அடித்து கொண்டேன். உண்மையை மறுக்க முடியாது. நீ என்னை விட்டு போயிட்ட, என்னை விட்டுட்டு போயிட்டியே?தள்ளாடியபடியே எழந்து செந்திலுக்கு சேதியைச் சொன்னேன்.

செந்திலும் மருமகளும், பேத்தியும் வந்து சேர, எல்லாக் காரியங்களும் நடக்கத் தொடங்கியது. பாவம் பேரன்தான் ரெம்ப ரெம்ப அழுதுதீர்த்து விட்டான்.பாட்டி திரும்ப வரமாட்டாங்களா சொல்லுதாத்தா, சொல்லு என்றவனை பதிலில்லாமல் என்னோடு இறுக அணைத்து கொண்டேன்.

நேற்று இருவரும் சேர்ந்து போன அதே சாலையில் இன்றும் பயணம்.

இன்று அவள் மட்டும் அலங்காரமாய், ரதத்தில்

பூங்காவைக் கடந்த போது பேரன் சொன்னான்.

தாத்தா உம் மரம் சாஞ்சி கெடக்கு.

ஆமாண்டா,

என் உயிர்தான் வேரோடு பெயர்ந்து என்னை விட்டு போயிட்டிருக்கே....

23 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

குமரன் (Kumaran) said...

முத்துகுமரன்,

கரு ஏற்கனவே பலமுறை படித்தது தான் என்றாலும் உங்கள் எழுத்தில் படிக்க நெகிழ்வாக இருக்கிறது.

சிவா said...

கதை நல்லா இருக்கு முத்துகுமரன். குமரன் சொன்ன மாதிரி கரு இப்போ 'தவமாய் தவமிருந்து'ல பார்த்த மாதிரி இருந்தாலும், உங்கள் கதை சொல்லும் நடை சூப்பர். கட்டுரை, கவிதை, இப்போ கதை...அடுத்தது என்ன..ஆவலாக உள்ளேன்.

G.Ragavan said...

கதையும் உங்களுக்குக் கைவரத் துவங்கியிருக்கிறது. எனது வாழ்த்துகள். இன்னும் நிறைய கதைகளை சிறப்பாக எழுதுங்கள்.

முத்துகுமரன் said...

நன்றி குமரன்,

அத்தனை கதைகளையும் மிகச் சிறிய வட்டத்திற்குள் அடக்கி விடலாம். நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

முத்துகுமரன் said...

//கரு இப்போ 'தவமாய் தவமிருந்து'ல பார்த்த மாதிரி இருந்தாலும், உங்கள் கதை சொல்லும் நடை சூப்பர்.//

எனக்கும் எழுதும்போது இந்த உறுத்தல் வந்தது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அந்த சாயல் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் மரணத்தோடு கதையை முடித்துவிட்டேன்.அதனால் என் க.குதிரை ஓடினவரை எழுதியிருக்கிறேன்.

கதை சொல்லும் நடை - பாராட்டு, நட்பின் மிகுதியால் சொல்லப்பட்டது போலத்தான் இருக்கு சிவா.

நன்றி

முத்துகுமரன் said...

//கதையும் உங்களுக்குக் கைவரத் துவங்கியிருக்கிறது. எனது வாழ்த்துகள். இன்னும் நிறைய கதைகளை சிறப்பாக எழுதுங்கள்//

உங்கள் வாழ்த்திற்கு நன்றி ராகவன்.

பரஞ்சோதி said...

முத்துகுமரன்,

அருமையாக இருக்குது. தொடர்ந்து எழுதுங்க.

அப்டிப்போடு... said...

என்னுடைய தோழர் ஒருவர்., அவருடைய 72 ஆம் வயதில் அவரது மனைவி இறந்தார். இறக்கும் போது இவர் அருகில் இல்லை. அந்த குற்ற உணர்வு காரணமாக அதன் பின் அவர் காலை உணவு உண்பதில்லை. இது என்ன வயசான காலத்துல உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுத்துக் கொண்டு., இறப்பு எல்லோருக்கும் நிகழ்வது, எப்போது வருமென யார் கூற முடியும் இதில் உங்கள் தவறென்ன? எனக் கேட்டேன். 'இல்லப்பா... அவ்வளவு காலம் கூட இருந்தவளின்., கடைசி நிமிடத்தில் நான் இருந்திருக்க வேண்டும். இது தண்டனை இல்லை., ஒரு நினைவுகூறல் மாதிரி. என் பிள்ளைகள் ஒவ்வொரு காலையிலும் தவறாமல் அம்மாவை நினைப்பார்கள் என்றார். இப்போது அவரில்லை. அவர் நினைவுகளைக் கிளறி விட்டது இப்பதிவு. நன்றி.

tbr.joseph said...

ரொம்ப நல்லாருக்கு மு.குமரன்..

அப்பப்போ இந்த மாதிரி சிறு கதைகள் எழுதுங்க..

வாழ்த்துக்கள்

முத்துகுமரன் said...

நன்றி பரஞ்சோதி, விடுமுறை நன்றாக கழிந்ததா?

முத்துகுமரன் said...

//'இல்லப்பா... அவ்வளவு காலம் கூட இருந்தவளின்., கடைசி நிமிடத்தில் நான் இருந்திருக்க வேண்டும். இது தண்டனை இல்லை., ஒரு நினைவுகூறல் மாதிரி. என் பிள்ளைகள் ஒவ்வொரு காலையிலும் தவறாமல் அம்மாவை நினைப்பார்கள் என்றார். இப்போது அவரில்லை. அவர் நினைவுகளைக் கிளறி விட்டது இப்பதிவு. நன்றி.//
அப்படிபோடு,
இந்த கதை உங்களீன் ஞாபகங்களை கிளறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நான் இதைவிட சிறப்பாக எழுத நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. இதை எழுத துவங்கும் போது அதிகாலை 1.30 முடிக்கும் போது 3.15 ஒரே மூச்சில் எழுதியதால் சரியாக பிழைகள்கூட திருத்தவில்லை

நன்றி

முத்துகுமரன் said...

//ரொம்ப நல்லாருக்கு மு.குமரன்..

அப்பப்போ இந்த மாதிரி சிறு கதைகள் எழுதுங்க..

வாழ்த்துக்கள்//

வாழ்த்துற்கு நன்றி ஜோசப் சார். உங்களை இந்த கதை கவர்ந்திருப்பது மகிழ்வாய் இருக்கிறது.

பிரதீப் said...

அருமையான கதைக்கரு.
நீங்கள் சொல்லிய விதம் கதைக்கருவை அப்படியே காட்டினாலும் இன்னும் கொஞ்சம் நெகிழ்வைத் தந்திருக்க வேண்டுமோ?

முத்துகுமரன் said...

நேரக்குறைவுதான் நெகிழ்வுக் குறைவுக்கும் காரணம் பிரதீப்:-)

சிவா said...

யோவ் முத்துகுமரன்! நல்லாருக்குன்னு சொன்னது நட்பின் மிகுதியால் அல்ல, என் திறமையின் அளவு கோளில் (இங்கே என்ன கிழியுது :-)). புரிஞ்சுக்கோங்க நண்பரே. படம் பாக்கலைன்னு சொல்லறீங்க. இன்னும் பாக்காம என்ன பண்ணறீங்க.?

ENNAR said...

நன்றாக உள்ளது

மூர்த்தி said...

பாசத்தினை விளக்கும் அருமையான கதை. துணை கிளியைப் பிரிந்தால் வாடும் காதல் கிளி நிலைமையில் அவர். நடைபிண வாழ்க்கை.

வாழ்த்துகள் முத்துக்குமரன்.

சிங். செயகுமார். said...

ஏதோ பீச் பார்க்குனு வருதே ரொமான் -ஸ் இருக்கும்னு பார்த்தா............தலிவா ஒரே சென்டிமென்டா போய்ட்டே! கதையோட்டம் நல்லா வந்திருக்கு முத்து.

முத்துகுமரன் said...

நன்றி என்னார்.

சிவா தமிழ் படங்கள் எதுவும் பார்க்காததால்தான் தெளிவாக இருக்கிறேன். அடுத்த முறை ஊருக்கு போறப்ப பாக்குறதுக்கு படம் வேணுமுல்ல அதான் இப்ப பாக்காம விட்டு வச்சிருக்கேன்:-)(காதல் படம் கிட்டத்தட்ட 9 மாதம் கழித்துதான் பார்த்தேன்)

முத்துகுமரன் said...

//துணை கிளியைப் பிரிந்தால் வாடும் காதல் கிளி நிலைமையில் அவர். நடைபிண வாழ்க்கை//

நான் சொல்ல வந்ததை மிகச் சரியாக பார்த்திருக்கிறீர்கள் மூர்த்தி.

உங்கள் வாழ்த்திற்கு நன்றி

முத்துகுமரன் said...

//ஏதோ பீச் பார்க்குனு வருதே ரொமான் -ஸ் இருக்கும்னு பார்த்தா//

அடப்பாவி, அப்ப கதையில ரொமான்ஸே இல்லைங்கிறீங்களா????

சுண்டால் வாங்கி திண்ணு பண்றதுதான் ரொமான்ஸுன்னா நமக்கு அது சரிப்பட்டு வராது சாமி

ஜோ / Joe said...

முத்துக்குமரன்,
பொதுவா எனக்கு கதைகள்ல அவ்வளவு ஆர்வம் கிடையாது .இருந்தாலும் உங்க கதைய நகல் எடுத்து நேற்றிரவு படித்தேம் .சிறிய கதையாக இருந்தாலும் உங்கள் நடை மிக நன்றாக இருக்கிறது .உங்கள் கதை எழுதும் திறமையை வளர்த்துக்கொள்ள என் வாழ்த்துக்கள்!

முத்துகுமரன் said...

உங்கள் வாழ்த்திற்கு நன்றி ஜோ.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP