*நட்சத்திரம்* - நிறைவு செய்கிறேன் - நன்றி அறிவித்தலோடு

ஒரு வழியாக என்னுடைய நட்சத்திர வாரம் இன்றுடன் இனிதே நிறைவு பெறுகிறது. விடைபெறுமுன் நான் முக்கியமாக செய்ய வேண்டியது நன்றி அறிவித்தல்.

நன்றி தெரிவித்தல் ஒரு பண்பாடு. நம்மை மரியாதை செய்த சக மனிதனுக்கு நாமும் அதே மரியாதைத் தருவது. இதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதமெல்லாம் இல்லை. அதனால்தான் பெரும்பாலான பின்னூட்டங்களுக்கு பதில் அல்லது நன்றியைத் தெரிவித்திருக்கிறேன். யாரேனும் விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்

ஏறத்தாழ நட்சத்திர வாரம் தொடங்கியதிலிருந்து 1500 பார்வைகள். 13 பதிவுகள். நட்சத்திர அறிமுகத்தில் சொன்னதை ஓரளவிற்காவது செய்திருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழ் சார்ந்த சில கட்டுரைகளை எழுதத் திட்டமிட்டுருந்தாலும் அரைகுறையாக அவைகள் பதியப்படக்கூடாது என்பதாலேயே இந்த நட்சத்திர வாரத்தில் அந்த பதிவுகள் இடம் பெறவில்லை.மேலும் இது எனது 50வது பதிவு என்பது மகிழ்ச்சிகரமான ஒரு தற்செயல் நிகழ்வே.

என் பதிவுகளுக்காக நேரமொதுக்கி என்னை வாழ்த்தியும், வாசித்து, மனதில் தோன்றிய கருத்துகளையுச் சொன்ன குமரன், அப்படிப்போடு, ஜோ, என்னார், ஞானவெட்டியான், டி.பி.ஆர் ஜோசப், கோ.ராகவன், பிரதீப், வசந்தன், சிவா, சிங்.செயகுமார், அழகப்பன், ராமச்சந்திரன் உஷா, ஆசிப் மீரான், நிலா, துளசிகோபால், நண்பன், முத்து(தமிழினி), மூர்த்தி, பொட்டி கடை, நிலவு நண்பன், சதிஸ், பரஞ்சோதி, கமலியோன், நியோ, தருமி, கீதா, சந்திப்பு, ரவிசங்கர் இளவஞ்சி, சுந்தர், இலவச கொத்தனார், பூங்குழலி, மோகன்தாஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பின்னூட்டமிடாவிட்டாலும் வாசித்த நண்பர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.

விடைபெறும் எனக்குபட்ட சில எண்ணங்கள்.

முன்பு இணைய உலகைப் பற்றி ஒரு மிகப்பெரிய பிம்பம் இருந்தது. இன்று அது என்னிடம் இல்லை. இலக்கியம் சார்ந்து இயங்க நினைப்பவர்கள் எவருக்கும் இணையம் எந்த வகைப் பயனையும் தரப்போவதில்லை. அதை இந்த வலைப்பூ
உலகில் தெளிவாக உறுதிப்படுத்திக் கொண்டேன்.

சுயபிம்ப முன்னிறுத்தலுக்காக நண்பர்கள் படும் சிரமங்களை பார்க்கும் போது, மாயைகளின் மீது மயக்கமில்லாதார் யார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
ஒரு கலைக்கூத்தாடியின் வாழ்க்கையைப் போன்றுதான் வலைப்பதிவர்கள் நிலை இருக்கிறது. அவன் வாழ்க்கை நிலையைப் போன்றே நிச்சயமில்லாத சூழல்தான் பதிவுகளில் இருக்கிறது.

சிலர் மட்டும், மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே சிறப்பாக இயங்குகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தங்களை உயர்த்திபிடிக்க, முற்போக்கு சிந்தானாவாதிகளாகவும், சமாதான புறாக்களாகவும், தங்கள் நம்பிக்கைகளுக்கு மாறானவைகளாக இருந்தாலும் சரி, அதனால் தனக்கு பயனும், புகழும் வருகிறதென்றே பொருந்தாத அரிதாரங்களை எல்லாம் பூசிக்கொண்டு கோமாளிகளாக வந்து நிற்பதை காணும் போது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

ஆனாலும், அவ்வப்போது சிலரின் சுய வடிவங்கள் வீதிக்கு வருவதும் இது போன்ற தன்முனைப்புகளினால்தான் என்பது சற்று மகிழ்ச்சிக்குரிய விசயம்.

பொதுவாக ஓரளவிற்கு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட மனிதனிடம் காணும் மனநிலை, இருக்கும் இந்த செளகர்யத்தை இழக்க வேண்டாமே என்று சமரசங்களுடன் வாழத் தொடங்கிவிடுவது, மென்மையான அதிர்வுகளற்ற வாழ்க்கைச் சூழலின் மீதான ஒரு மயக்கம். ஒரு இலகுவான புழங்குதற்குரிய இயங்குதளத்திலேயே இயங்குவது. இப்படி இருப்பவர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஒருவன் முன்னேறுகிறான், முன்னேறி இருக்கிறான் என்பது அவனோடு முடிந்து போக வேண்டிய ஒரு நிகழ்வல்ல. அது ஒரு சங்கிலித் தொடர். தன்னைத் தொடர்ந்தும், தூரமாய் தன்னை பின் தொடர்ந்து வருபவனுக்கும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. அதைத் தட்டிக் கழிக்கும் போக்கே மிகப்பரவலாக காணபடுகிறது. இந்த மனப்பாங்கு வாழ்க்கையின் மிகக் கீழான நிலையிலிருந்து உயர்ந்தி நிலைக்கு வந்தவர்களிடத்தில் வந்துவிடுவதுதான் பெரும் சோகம். அது அவரைச் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒரு பின்னடவை, சறுக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

அதே போலத்தான் கலை, இலக்கியம் என எதுவானாலும் வாழும் சமூகத்திற்கும், மனிதர்களுக்கும் பயன்படாத எவையும் குப்பைத் தொட்டிக்கு போக வேண்டியதே. மக்கள் பிரச்சனைகளைப் இலக்கியங்களில் பேசுவதால் அதற்குண்டான புனிததன்மைக்கு பங்கம் வருகிறது என்று எவரரவது சொன்னார்கள் என்றால் தேவையில்லை அந்தப் புனிதப் புண்ணாக்குகள் என்று உண்மைகளை நிர்வான நிலையிலே உரத்து சொல்வோம் ஊருக்கு.

வலைப்பூவில் தீவிரமாக இயங்கத் தொடங்கிய குறிகிய காலத்திலேயே எனக்கு வாய்ப்பளித்த தமிழ்மணம் நிர்வாகத்திற்கும், காசி மற்றும் மதி கந்தசாமி அவர்களுக்கும் எனது நன்றிகள்.

எனக்கு மிகவும் பிடித்த இன்குலாப் அய்யா அவர்களின் கவிதையோடு என் நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன்.

எழுதமாட்டேன்

எழுதமாட்டேன்
ஒருவரி கூட
நீ
ஒப்பும்படி

எழுத்திலும் அதிரும்
என் பறையொலி
நாராசமாய்
உன்
செவியில் இறங்குதல் போல்

உன்
மெளனவரியும்
அருவருக்க ஊரும்
என்
கண்ணிலூம் மனசிலும்
ஒரு
கம்பளிப் புழுவாய்

என்
கவிதை முளைவிடும்
மனுசங்க வெளியை
உன்
கால்விரல் நகமும்
தீண்டாதது போலவே
மேட்டிமைத் திமிரும்
உன்
சபை வாசலில் கூட
நீளவே நீளாது
என் மயிரின்
நிழலும்

**
அன்புடன்
முத்துகுமரன்.

33 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

ramachandranusha said...

//மற்றவர்கள் எல்லாம் தங்களை உயர்த்திபிடிக்க, முற்போக்கு சிந்தானாவாதிகளாகவும், சமாதான புறாக்களாகவும், தங்கள் நம்பிக்கைகளுக்கு மாறானவைகளாக இருந்தாலும் சரி, அதனால் தனக்கு பயனும், புகழும் வருகிறதென்றே பொருந்தாத அரிதாரங்களை எல்லாம் பூசிக்கொண்டு கோமாளிகளாக வந்து நிற்பதை காணும் போது நகைப்புக்குரியதாக இருக்கிறது.//


இதில் நகைப்பது என்பது ஈகோவின் வெளிப்பாடாய் தோன்றுகிறது. எந்த 'அமரகாவியத்தையும்" நகைக்க சிலர் இருக்கத்தான் செய்வார்கள். வலைப்பதிவுகளின் நோக்கமே நாட்குறிப்பைப் போல சுதந்திரமாய் எண்ணத்தை சொல்ல, ஆக நமக்கு தேவையானவைகளை மட்டும் படித்துவிட்டு போகலாமே?
முத்துகுமரன், நல்ல கவிதைகளை எடுத்துப் போட்டதற்கு நன்றி.

சிங். செயகுமார். said...

வாழ்த்துக்கள் நண்பரே! கவிதையாகவே இவ்வாரம் ஓடிற்று . அனேகமாக கவிதையை முன் வைத்து வலம் வந்த நட்சத்திரம் இந்த வார நட்சத்திரமாகதான் இருக்கும் என நினைக்கின்றேன். இதுவரை ஐம்பதுதானா! கவிதைக்கு மன்றதில் வரவேற்பு எவ்வளவு சாத்தியமென எண்ணாமல் எழுதுங்கள் நிறைய!

பரஞ்சோதி said...

முத்துக்குமரன்,

வாழ்த்துகளும், நன்றிகளும்.

அருமையான வாரமாக அமைந்தது.

உங்களுக்கு ஒரு வாரம் போதாதுவே, ஒரு மாசம் கொடுத்திருக்கலாம்.

அப்போ வித்தியாசமான பதிவுகள் நிறையவே கொடுத்திருப்பீங்க.

அடுத்த சுற்றுக்கு இப்போவே வாழ்த்துகிறேன்.

மாயவரத்தான்... said...

இன்றைக்கு தான் உங்களது நட்சத்திர வாரப் பதிவுகளைப் படித்தேன். சூப்பர்.

G.Ragavan said...

முத்துக்குமரன், உங்கள் நட்சத்திர வாரத்திற்கு எனது வாழ்த்துகள்.

உங்களுக்கு ஒரு கருத்து மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விவாதிக்க அல்ல.

இலக்கியத்திற்கு இடமில்லை என்று இலக்கியவாதிகள் எல்லா ஊடகங்களையும் ஒதுக்கியாகி ஏற்கனவே விட்டதே. வானொலி, திரைப்படம், பதிப்பு ஊடகங்கள்...இப்பொழுது இணையம். இனி இலக்கியத்தை எங்கே குடி வைப்பதோ தெரியவில்லை.

உங்கள் எழுத்துகளுக்கு நீங்கள் விரும்பத்தக்க வகையிலேயே ஒரு நல்ல ஊடகம் அமைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

பிறகு மற்றொரு விஷயம். குற்றங்கள் எங்கும் உண்டு. உங்களிடமும் என்னிடமும் கூட. நீருக்கும் நுரையுண்டு நெல்லுக்கும் உமியுண்டு என்று தொடங்கும் பழந்தமிழ்ப் பாடலை நினைவிற் கொள்க. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

ஒவ்வொருவரிடமும் நல்லதைப் பார்த்து வருக. அதுவே நல்லதையும் கொடுக்கும். அது அரவணைப்பிற்கு வழிவகுத்து காலப் போக்கில் குற்றங்களைக் குறைக்க வாய்ப்பும் உள்ளது.

ஒவ்வொன்றையும் இழிந்ததாகக் கருதுவது எல்லா இடங்களிலும் உண்டு. இனத்தில், சாதியில், மதத்தில், மொழியில், தொழிலில், உணவில். எழுத்திலும் இழிந்தது கண்டு நீங்கள் நகைப்பது எனக்கு வியப்பாகத்தான் உள்ளது. அது சரி. எழுத்தில் நீங்கள் இலக்கிய மேல்தட்டு அல்லவா.
இவ்வளவுதான் நான் சொல்ல வந்தது.

நீங்கள் இன்னும் சிறப்பாக எழுதிப் பேரும் புகழும் பெற அன்பு நண்பன் இராகவனின் வாழ்த்துகள்.

பாலசந்தர் கணேசன். said...

உங்கள் பிம்பம் மறைந்து விட்டது சரியே. இணையம் இன்னொறு ஊடகமே மற்றதை போல. உங்களிடம் அந்த பிம்பம் முதலில் இருந்தது தவறான எதிர்பார்ப்பே. ஆனால் பிம்பம் மறைந்தவுடன் சரியான கணிப்பிற்கு வந்திருப்பீர்கள் என்று கருதினேன். ஆனால் மீண்டும் உங்கள் கணிப்பு தவறி விட்டதே.

ஒரு எழுத்து எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உண்டு. வலைபதிவுகளில் மற்ற ஊடகங்களொடு ஒப்பிடும்போது எழுத்து ஆரோக்கியமாகவே உள்ளது. ராகவன் சொன்னது போல நல்லது கெட்டது அனைத்திலும் உண்டு. விகிதசாரம் முக்கியம். இணைய தமிழ் பதிவுகளில் நல்லவை நிறையவே உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, தவறுகள் நிறைய இருப்பின், நல்ல பதிவுகளை கொணர்ந்து அதை மாற்ற அல்லவா நீங்கள் முயலவேண்டும்.

வெறுமே குறை சொல்லி விட்டு ஒடுவது மட்டுமே சமுக பொறுப்பாகுமா? அது வெறுமே ஏட்டிலக்கியம் ஆக இருக்கும். செயல் இலக்கியம் மட்டுமே பாராட்டபடும்.

முத்துகுமரன் said...

//அது சரி. எழுத்தில் நீங்கள் இலக்கிய மேல்தட்டு அல்லவா.
இவ்வளவுதான் நான் சொல்ல வந்தது.//

உங்கள் எண்ணம் தவறல்ல மிகவும் அபத்தமானது. நான் எந்த பீடத்தையும் சேர்ந்தவன் அல்ல, நீங்கள் ன்னை மேல்தட்டு என்று குறிப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். அவ்வாறு நடந்து கொண்டதற்கு ஒரு ஆதாரத்தை காட்டுங்கள். வலைப்பூவை விட்டு விலகி விடுகிறேன். என் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு, கனவு காண்பதற்கு எனக்கு முழு உரிமை உண்டு. அதை எவர் ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும்.

இலக்கியத்தில் புனிதம் என்றும் மேல்தட்டு, கீழ்தட்டு என்று சொல்லும் வர்க்கத் தட்டுகளை அடித்து நொறூக்க வேண்டும் என்றுதான் குரல் கொடுக்கிறேன். நான் இழிந்தது என்று யாருடைய எழுத்தையும் குறிப்பிடவில்லை. பலரின் எழுத்துகளில் தெரியும் போலித் தனத்தைதான் குறிப்பிட்டிருந்தேன். குறுகுறுப்பவர்கள் நெஞ்சிற்கெல்லாம் ஒத்தடம் கொடுத்து கொண்டிருப்பது என் வேலை அல்ல.

இலக்கியங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். ஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும் சூரியனை மறைக்க முடியாது. இலக்கியத்திற்கென ஊடகங்கள் நிறைய இருக்கின்றன. நீங்கள் அறியாதவராக இருப்பதாலே இல்லை என்று ஆகிவிடாது. மினுமினுப்பவைதான் உண்மையானவை என்று நம்பினால் அதில் நான் குறிக்கிடப் போவதில்லை.

உங்கள் நம்பிக்கையுடனே வாழுங்கள்

நன்றி

அன்புடன்
முத்துகுமரன்

முத்துகுமரன் said...

//வெறுமே குறை சொல்லி விட்டு ஒடுவது மட்டுமே சமுக பொறுப்பாகுமா? அது வெறுமே ஏட்டிலக்கியம் ஆக இருக்கும். செயல் இலக்கியம் மட்டுமே பாராட்டபடும். //

நன்றி பாலசந்தரகணேசன்,

குறை மட்டும் சொல்லிவிட்டு ஓடும் பழக்கம் எனக்கில்லை. செயல் இலக்கியத்தின் மீதுதான் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்..

இணையத்தில் நல்ல தமிழ்பதிவுகளே இல்லை என்று நான் சொல்லவே இல்லை. அவை குறைவாகவே, எண்ணிவிடக்கூடிய அளவில்தான் இருக்கிறது என்பதுதான் எனது ஆதங்கம்.

நன்றி

இளவஞ்சி said...

முத்து(க்!?)குமரன்,

நல்லதொரு வாரத்தில் நல்ல கவிதைகளின் அறிமுகத்திற்கு நன்றி!

உங்களது பதிவுகளை நிறைய எதிர்பார்த்தேன்!

இணைய தமிழ்ப்பதிவுகள் என்பது சுயம்புகள்! அவரவர் ரசனைக்கும் திறனுக்கும் பகிர்தலுக்குமான ஒரு சுதந்திரதளம். நீங்கள் சொல்லும் இலக்கியம் இங்கு இருக்கலாம்! இல்லாமலும் போகலாம்! குறையல்ல...

நிறைய எழுதுங்கள். பகிர்ந்துகொள்வோம்...

செல்வன் said...

முன்பு இணைய உலகைப் பற்றி ஒரு மிகப்பெரிய பிம்பம் இருந்தது. இன்று அது என்னிடம் இல்லை. இலக்கியம் சார்ந்து இயங்க நினைப்பவர்கள் எவருக்கும் இணையம் எந்த வகைப் பயனையும் தரப்போவதில்லை. அதை இந்த வலைப்பூ
உலகில் தெளிவாக உறுதிப்படுத்திக் கொண்டேன்./////

project madurai பற்றி தங்கள் கருத்தென்ன?தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரமும்,பத்திரிக்கை சுதந்திரமும் விலைக்கு வாங்கப்படும்போது அவற்றை தாங்கி நிற்பவை நீங்கள் எப்பயனும் தராது என்று சொல்லும் இந்த வலைப்பூக்கள் தான்.குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் எப்பத்திரிக்கையும் தரப்பயந்த ஆதரவை தமிழ்மணத்தில் எழுதும் சுயபிம்ப எழுத்தாளர்கள் தான் தந்தனர்.

இங்கு எழுதுவோர் தமது சுயபிம்பத்தை முன்நிறுத்துவதில்லை.தம் கொள்கைகளை முன்நிறுத்துகின்றனர்.விவாதம் மூலம் அவற்றை கூர்தீட்டிக்கொள்கின்றனர்,அல்லது செப்பனிட்டு கொள்கின்றனர்.எதிரெதிர் கொள்கை கொண்டோர் தமிழ்நாட்டில்,இந்தியாவில் எங்கும் விவாதம் நடத்த முடியாது,டீக்கடை பெஞ்சுகள் அரட்டை அரங்கங்கள் தவிர.ஆனால் இங்கு அவர்களுக்கு தளம் கிடைக்கிறது.தோல்வியுறும் கொள்கைகள் எவை என்று வாசகர்களுக்கு தெரிகிறது.

பொன்னியின் செல்வனை,கம்பனை,நீட்ச்சேவை,வள்ளுவனை விவாதிக்கும் இணையகுழுக்கள் இங்கு ஏராளம்.அவை எளிதில் நம் கண்முன் தட்டுப்படாது தான்.ஆனால் அதற்காக அவை இல்லை என்று சொல்லமுடியாது.

முத்துகுமரன் said...

/பொன்னியின் செல்வனை,கம்பனை,நீட்ச்சேவை,வள்ளுவனை விவாதிக்கும் இணையகுழுக்கள் இங்கு ஏராளம்.அவை எளிதில் நம் கண்முன் தட்டுப்படாது தான்.ஆனால் அதற்காக அவை இல்லை என்று சொல்லமுடியாது.//

செல்வன் project madurai சிறப்பான முயற்சி. அதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அந்த வலைக்குழுமத்தில் என்னையும் இணைத்து கொண்டு இருக்கிறேன்.

மேற்சொன்ன இணையக்குழுக்களை பற்றிய இணைப்புகளை இங்கு கொடுத்தால் விருப்படுவோருக்கு உபயோகமாக இருக்குமே

Dharumi said...

முத்துக்குமரன்,
கடைசிப் பதிவில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள் என்றே தோன்றுகிறது. "இலக்கியம் சார்ந்து இயங்க நினைப்பவர்கள் எவருக்கும் இணையம் எந்த வகைப் பயனையும் தரப்போவதில்லை." லியோனியின் பட்ட மன்றக் கருத்து போல தோன்றுகிறதே!

யார்தான் சுயபிம்ப முன்னிறுத்தலைப் புறந்தள்ள முடியும்?

வெளி உலக இலக்கியத்தில் ஒரே தரத்திலா எல்லோரும் எழுதுகிறார்கள்? அல்லது எழுத முடியும்? எழுதும் கைகள் எழுதிக்கொண்டே போகும்; அதில் எதிர்நீச்சலடித்து நிலைத்து நிற்பவை நிற்கும்; இலக்கியங்களாக நின்று நிலைக்கும். அது எங்கும் - இங்கும் - சாத்தியம்.

என்னைப் போன்றவர்களின் எழுத்தை மட்டும் வைத்து இணையங்களின் தரத்தைக் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களோ..? உங்கள் எழுத்துக்கு என்ன குறை..?

காசி (Kasi) said...

முத்துக்குமரன்,

புனைவு ஆக்கங்களில் ஆர்வக்குறைவாலும், இலக்கிய வட்டங்களில் பரிச்சயம் இல்லாததாலும், என்னால் பல இடுகைகளை வாசிக்க நேரம் ஒதுக்கமுடியவில்லை. ஆனாலும் நன்றாக சிந்தித்து கொண்டுபோனீர்கள் என்றே படுகிறது.

வலைப்ப்திவுகள் இலக்கியம் சார்ந்து இயங்குதல் போன்றவற்றிற்குள் செல்ல எனக்கு அனுபவமும் நேரமும் போதாது.
உங்கள் ஈடுபாட்டுக்கும் பங்களிப்புக்கும் நன்றி.

முத்துகுமரன் said...

நன்றி ராமசந்திரன் உஷா, சிங்.செயகுமார்,பரஞ்சோதி, மாயவரத்தான். கோ.ராகவன், பாலச்சந்திரன் கணேசன், இளவஞ்சி, செல்வன், தருமி, காசி....

நண்பர்களின் கருத்துகளுக்குப் பிறகு இறுதியாக மொத்தமாக நான் பதில் தருகிறேன்

குமரன் (Kumaran) said...

முத்துக்குமரன், இந்தப் பதிவை அல்லவா நான் இந்த நட்சத்திர வாரத்தின் முதல் பதிவாய் எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிடுவீர்களோ என்று எண்ணினேன். நன்றிப் பதிவில் போட்டுத் தாக்கிவிட்டீர்கள். :-)

உங்கள் கருத்துகளை இங்கே எடுத்து வைத்திருக்கிறீர்கள்; எடுத்துக்காட்டுகளுடன் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இது ஏதோ உணர்ச்சிவசப்பட்டவர் தம் கருத்தைத் தீர ஆலோசிக்காமல் எழுதியதாகத் தான் தோன்றுகிறது.

வழக்கம் போல் இதுவும் ஒரு நீண்ட பிற்சேர்க்கையாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது. அதனை இப்போதே சொல்லிக்கொள்கிறேன்.

இணைய உலகைப் பற்றி மட்டும் அன்று. எந்த விதமான ஊடகத்தைப் பற்றியும் பெரும் பிம்பம் இருக்கத்தான் செய்யும். அதனை நீங்கள் பல இடங்களில் காணலாம். ஏன் இன்றையச் சூழலைப் பற்றிப் பேசவேண்டும்? அந்தக் காலத்தில் ஒரு மன்னன் நான் என் எதிரிகளைப் போர்க்களத்தில் தோற்கடிக்காவிட்டால் என்னைத் தமிழ்ப் புலவர் பாடாதொழிக என்று பாடவில்லையா? அந்தப் பாடல் இன்றும் நிலைக்க வில்லையா? அப்படி எந்த ஊடகத்தைப் பற்றிய பிம்பமும் எப்போதும் இருப்பது தான்.

இலக்கியங்களில் பலவகை உண்டு என்று நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். நீங்கள் இலக்கியம் என்று நினைப்பதை மற்றவர்கள் இலக்கியம் என்று எண்ணாமல் இருக்கலாம். மற்றவர் இலக்கியம் என்று தூக்கிப் பிடிப்பவை உங்களுக்கு வெறும் கேலிக்கூத்தாகத் தெரியலாம். அது இயற்கை.

இலக்கியம் சார்ந்து இயங்க நினைப்பவர்கள் எவருக்கும் இணையம் எந்தப் பயனையும் தரப்போவதில்லை என்பதும் சுயபிம்ப முன்னிறுத்தலுக்காக நண்பர்கள் என்று நீங்கள் கூறுபவர்கள் சிரமப்படுகிறார்கள் என்பதும் உங்களுக்குத் தோன்றியுள்ள புதிய பிம்பமாய் இருக்கலாம். பழைய பிம்பம் போய் புதிய பிம்பம் தோன்றியிருக்கிறது. அது இயறகை. மாற்றம் மதியிலுறும் இயற்கை. அது நன்று.

பொருந்தாத அரிதாரங்களைப் பூசிக்கொண்டு கோமாளிகளாக நிற்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது நகைப்பிற்குரியது. ஒரு மனிதன் (பெண்பாலும் சேர்த்து) உண்மையில் மூன்று மனிதர்கள் - தன்னைப் பற்றித் தனக்கே உள்ள ஒரு பிம்பம், தன்னைப் பற்றி மற்றவர்க்கு இருக்கும் ஒரு பிம்பம், உண்மையான அவன் என்று மூன்று வகை எல்லா மனிதருக்கும் உண்டு. வெளிப்படுவதில் இந்த மூவரும் வெளிப்படலாம். சில நேரம் எல்லாரும் வெளிப்படலாம். சில நேரம் மூவரில் இருவரோ ஒருவரோ வெளிப்படலாம். அதனால் இதில் எது அரிதாரம் பூசிய கோமாளி போல் தோன்றுகிறது என்று சொல்ல முடியாது. அது உங்கள் பார்வையைப் பொறுத்ததே.

எடுத்துக்காட்டாக இந்த நட்சத்திர வாரத்தைத் சரியாகப் பயன்படுத்தி உங்கள் கருத்துகளை அவை எவ்வளவு தான் சூடாக இருந்தாலும் எடுத்து வைத்து சூடான ஒரு வாரமாக இது போகும் என்பதே நான் எதிர்பார்த்தது. பல பேரும் அதை எதிர்பார்த்தார்கள் என்பது உங்களின் முதல் நட்சத்திர வாரப் பதிவிற்கு வந்த பின்னூட்டங்கள் தெளிவாகச் சொல்கின்றன. ஆனால் நீங்கள் இந்தக் கடைசிப் பதிவில் மட்டுமே உங்கள் கருத்துகளை முன்னிருத்தினீர்கள்; மற்றதெல்லாம் ஏதோ விவகாரம் செய்யவேண்டாம் என்று பொருந்தாத அரிதாரங்களைப் பூசிக்கொண்டு வந்து நிற்பது போல் தான் தோன்றியது. ஏன்டா இவர் இப்படி நட்சத்திர வாரத்தை வீணாக்குகிறார் என்று தோன்றியது.

நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள் என்பதற்கு உங்களிடம் ஒரு விளக்கம் நிச்சயமாய் இருக்கும். அதனால் நீங்கள் அரிதாரம் பூசவில்லை என்ற எண்ணமும் உங்களிடம் இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு உங்கள் மேல் இருக்கும் பிம்பத்தால் நீங்கள் செய்தது அவர்களுக்கு பொருந்தாததாய்த் தோன்றும். அது போல் தான் உங்களுக்கு மற்றவர்கள் செயல்கள் தோன்றுவது. அது நகைப்பிற்குரியதாகத் தோன்றினால் நன்றாக நகையுங்கள். ஏனெனில் உங்களைப் பார்த்தும் மற்றவர் நகைக்கிறார்கள. அதனைப் பற்றி நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள் என்று எனக்குத் தோன்றுவது உங்கள் மேல் எனக்கு உள்ள பிம்பமே. அது சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம்.

//அதே போலத்தான் கலை, இலக்கியம் என எதுவானாலும் வாழும் சமூகத்திற்கும், மனிதர்களுக்கும் பயன்படாத எவையும் குப்பைத் தொட்டிக்கு போக வேண்டியதே. மக்கள் பிரச்சனைகளைப் இலக்கியங்களில் பேசுவதால் அதற்குண்டான புனிததன்மைக்கு பங்கம் வருகிறது என்று எவரரவது சொன்னார்கள் என்றால் தேவையில்லை அந்தப் புனிதப் புண்ணாக்குகள் என்று உண்மைகளை நிர்வான நிலையிலே உரத்து சொல்வோம் ஊருக்கு.
//

இந்தக் கருத்தில் ஒத்துப் போகிறேன். தொடர்ந்து அதனைச் செய்யுங்கள். இணையத்தில் இடமில்லை என்று சொல்லிவிட்டு ஓடாதீர்கள்.

//அது சரி. எழுத்தில் நீங்கள் இலக்கிய மேல்தட்டு அல்லவா.
இவ்வளவுதான் நான் சொல்ல வந்தது.
//

இந்தக் கருத்தை இராகவன் சொன்னதும் உங்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ஆனால் உங்கள் பதிவைப் பார்த்தால் இப்படித் தான் தோன்றுகிறது. அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. :-)

//என் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு, கனவு காண்பதற்கு எனக்கு முழு உரிமை உண்டு. அதை எவர் ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும். //

அதே போல் உங்கள் பார்வையில் பொருந்தாத அரிதாரம் போல் தோன்றுவதைப் பூசிக் கொண்டு நாகரீகக் கோமாளிகளாய்த் தோன்றுவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

//குறுகுறுப்பவர்கள் நெஞ்சிற்கெல்லாம் ஒத்தடம் கொடுத்து கொண்டிருப்பது என் வேலை அல்ல.
//

ஹாஹாஹாஹா. சிரிப்பாய்த் தான் இருக்கிறது நீங்கள் சினத்தினால் மதியிழந்து கத்துவதைப் பார்க்க. பேசுங்கள். பேசுங்கள். உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு உங்கள் கருத்தினைக் கூற.

//இலக்கியங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். ஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும் சூரியனை மறைக்க முடியாது. //

முத்துக்குமரன், இராகவன் சொன்னதை நீங்கள் சரியாகப் படிக்கவில்லையோ இல்லை அவர் சொன்னதில் அவரைப் பற்றிய உங்கள் பிம்பம் வந்து உங்கள் பார்வையை மறைத்துவிட்டதோ தெரியவில்லை. அவர் இலக்கியங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லவில்லை. இலக்கியங்களுக்கு இடமில்லை என்று இலக்கிய மேல்தட்டில் தங்களை வைத்துக்கொண்டிருக்கும் உங்களைப் போன்ற 'இலக்கியவாதிகள்' ஊடங்கங்களைத் தள்ளிவைத்திருப்பதாகத் தான் சொன்னார். நீங்கள் தானே ஐயா சொன்னது இணையத்தில் இலக்கியத்துக்கு இடமில்லை என்று? அவரா சொன்னார்? அவர் மீது பாய்கிறீர்?

//உங்கள் நம்பிக்கையுடனே வாழுங்கள்// உங்களுக்கும் அதே.

G.Ragavan said...

மிக்க நன்றி குமரன். நான் சொல்ல வந்ததை விளக்கமாகச் சொன்னமைக்கு. அன்பு முத்துக்குமரன் இப்பொழுதாவது நான் என்ன சொல்ல வந்தேன் என்று புரிந்ததா? :-(

ஜோ / Joe said...

முத்துக்குமரன்,
முதலில் உங்கள் தனித்துவமான இந்த வாரத்துக்கு என் பாராட்டுக்கள்.

இரண்டாவது ,என்ன ஆச்சு ,கடைசிப்பதிவில் இத்தனை சூடு .ஒரு வேளை நான் எதையோ கவனிக்காமல் விட்டு விட்டேனோ .நீங்களோ ,குமரன் ,ராகவன் ஆகியோரோ விவாதிக்கும் அடர்த்தியும் அர்த்தமும் மிகுந்த வாக்கியங்கள் நான் புரிந்து கொண்டேனா,அது குறித்து தொடர் கருத்து சொல்ல ,இலக்கியம் என்பது என்ன என்பது குறித்து குழப்பத்தின் உச்சியில் இருக்கும் எனக்கு தகுதியுண்டா தெரியவில்லை .

இலக்கியத்தின் பன்முகங்களில் படைக்கும் திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை .என்னுடைய பதிவுகளை பார்த்தீர்களானால் அவை பெரும்பாலும் என் அனுபவங்கள் வாயிலாக என் கருத்தை சொல்லுவதாக தான் இருக்கும் .அதைத் தாண்டி ஒரு கதையோ ,கவிதையோ சரளமாக எழுதும் திறமை உங்களைப்போல ,நண்பர் ராகவனைப் போல ,பெரியவர் ஜோசப் போல கிடையாது .ஆனால் ஒரு ரசிகனாக கவிதைகளை ரசிக்க முடிகிறது .கதைகளை அந்த அளவுக்கு ரசிக்க முடியவில்லை .ஆக எனக்கு கதையோ ,கவிதையோ படைக்க முடியவில்லையெனினும் ,அதை படித்து ரசிக்க முடிகிறது .எனக்கு வாய்க்கப் பெறவில்லை என்பதற்காக அதை நான் புறக்கணிப்பதில்லை .

இப்படி ஒவ்வொருவரும் சில தளங்களில் இயங்கிக் கொண்டும் ,சில தளங்களில் இயக்கத்திற்கு வெளியே நின்று பார்த்து ரசிப்பதுமாகவும் இருக்கிறோம் .

இதில் எந்த இடத்தில் உங்களுக்கு பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை .அல்லது நான் விஷயம் தெரியாமல் ஏதோ உளறிக்கொட்டுகிறேனோ என்றும் தெளிவாக தெரியவில்லை.

தொடர்ந்து உங்கள் பங்களிப்பை விரும்புகிறேன் .அது மட்டும் உண்மை.

துளசி கோபால் said...

என்னங்க முத்துக்குமரன்,
அரிதாரம், சுய பிம்பம் இப்படியெல்லாம் சொல்லிட்டீங்க?

எழுதறது எழுத்தாளரின் கடமை. அவரவர்க்கு விருப்பமானதை எழுதட்டும்.
இதைத்தான், இப்படித்தான்னு சொல்ல நாமெல்லாம் யார்?

அன்னப்பறவை போன்றவர்கள் இல்லையா வாசகர்கள்? பாலையும் நீரையும்
இனம் கண்டு பிரிச்சிற மாட்டாங்களா?

நல்ல எழுத்து நிலைச்சு நிக்கும். அவ்ளொதான் சொல்ல முடியுது.

50 வது பதிவுக்கு வாழ்த்து(க்)க்கள்

நல்லா இருங்க.

குமரன் (Kumaran) said...

அடடா. 50வது பதிவுங்கறத மறந்திட்டேனே. வாழ்த்துக்கள் முத்துக்குமரன். உங்கள் பெயரிலும் ஒற்று மிகலாம் இல்லையா? :-)

அப்டிப்போடு... said...

//முன்பு இணைய உலகைப் பற்றி ஒரு மிகப்பெரிய பிம்பம் இருந்தது. இன்று அது என்னிடம் இல்லை. இலக்கியம் சார்ந்து இயங்க நினைப்பவர்கள் எவருக்கும் இணையம் எந்த வகைப் பயனையும் தரப்போவதில்லை//

இக்கருத்து உங்கள் கருத்து., இதை வெளிச்சொல்லி புதிதாக வருபவர்களுக்கு அவ நம்பிக்கையூட்ட வேண்டுமா?. இங்கு இலக்கியத்தை மட்டும் தேடி பெரும்பாலோர் குறைவாக.... நான் வருவதில்லை. நம் எண்ணங்களைச் சொல்ல ஒரு இடம். அழகிய நட்புகள் தரும்., கோபம் வந்தால் (பதிவுகளினால்தான்) தவறாமல் கண்டிக்கும் உரிமை தரும்., புதிய, புதிய கோணங்களில் நம் சிந்தனையை விரிவுபடுத்தும் அற்புதத் தளமாகவே இதை நான் பார்க்கிறேன். பொதுத் தளங்களில் இயங்கும்(?!) பின் நவீனத்துவ தாணடவங்களைப் பார்த்து மிரண்டிருந்த எனக்கு., என்னைப் போன்ற சாமானியர்கள் இன்னும் நவீனத்துவவாதிகளாகி விடவில்லை என்ற உண்மையை சொன்னது இணையம். பொதுவாக நம் நம்பிக்கைகளை உரத்து சொல்லலாம். எதிராக வரும் பின்னூட்டங்களயும் முரட்டுத் தனமாக எதிர் கொள்ள வேண்டுமா?. இந்த நட்சத்திர வாரத்தில் நீங்கள் அதிகம் உங்கள் குரலில் பேசுவீர்கள் என எதிர்பார்த்தேன். அறிவுமதி அவர்களிடம் ஈடுபாடு கொண்டிருக்கும் இளைஞர் என்பதும் என் ஆர்வத்திற்கு காரணமாக இருந்தது. உண்மையை மறைக்காமல் சொன்னால் முத்துக் குமரன்., உங்களைப் போல் மனதில் பட்டதை துணிவாக முன்வைக்கும் இளைஞர்கள் குறைவு. எனவே நிதானம் அதிகம் தேவை. போக வேண்டிய தூரம் அதிகம்., எனவே எதையும் கண்ணை மூடி சட்டெனத் தீர்மானித்து விடாதீர்கள். அத்தகைய குணங்களால் நான் இழந்தது அதிகம் என்பதால் சொல்கிறேன்.

செல்வன் said...

////
மேற்சொன்ன இணையக்குழுக்களை பற்றிய இணைப்புகளை இங்கு கொடுத்தால் விருப்படுவோருக்கு உபயோகமாக இருக்குமே///

யாகூ குழுமத்தில் பொன்னியின் செல்வன் குழுமம்,fansof kalki,அகத்தியர்,PS-வரலாறு ஆகிய குழுமங்களில் வரலாற்றை விவாதிக்கிறார்கள்,வளர்க்கிறார்கள்.

கூகிள் குழுமத்தில் அன்புடன்,முத்தமிழ் இவற்றில் கலித்தொகை,நீட்ச்சே,குறள்,டார்வின்,புதுக்கவிதை,உலக இலக்கியங்கள் என விவாதிக்கிறார்கள்.

http://varalaaru.com/ என்றே வலைதளம் இருக்கிறது.வரலாற்று மாணவர்களின் இணையற்ற முயற்சி அது.பழபெரும் இலக்கியங்களை யுனிகோடில் தருவது chennainetwork.com.

இலக்கியசுவையை அள்ளி,அள்ளி தருகிறார் http://harimozhi.com/.

படைப்பாளிகள் தம் திறமையை வெளிக்காட்ட மரத்தடி,ராயர் காப்பிகிளப்,திண்ணை என இணையம் இலக்கியத்தை வளர்த்துக்கொண்டுதான் இருக்கிறது குமரன்.

குமரன் (Kumaran) said...

//படைப்பாளிகள் தம் திறமையை வெளிக்காட்ட மரத்தடி,ராயர் காப்பிகிளப்,திண்ணை என இணையம் இலக்கியத்தை வளர்த்துக்கொண்டுதான் இருக்கிறது குமரன்.
//

செல்வன்,

முத்துக்குமரன்னு சொல்ல வந்து குமரன்னு முடிச்சிட்டீங்கன்னு நெனைக்கிறேன். அந்தக் கேள்வியக் கேட்டது முத்துக்குமரன். நானில்லை.

முத்துகுமரன் said...

தொடர்ந்து எனது எல்லா பதிவுகளையும் வாசித்து உங்கள் கருத்துகளை விரிவாக சொன்னதற்கு மிக்க நன்றி குமரன்.


//மூன்று மனிதர்கள் - தன்னைப் பற்றித் தனக்கே உள்ள ஒரு பிம்பம், தன்னைப் பற்றி மற்றவர்க்கு இருக்கும் ஒரு பிம்பம், உண்மையான அவன்
என்று மூன்று வகை எல்லா மனிதருக்கும் உண்டு. வெளிப்படுவதில் இந்த மூவரும் வெளிப்படலாம். சில நேரம் எல்லாரும் வெளிப்படலாம். சில நேரம்
மூவரில் இருவரோ ஒருவரோ வெளிப்படலாம்.//

உண்மைதான் குமரன். வெளிப்பட வேண்டிய மனிதனைத் தீர்மானிப்பவன் உண்மையான மனிதந்தானே. அதைத்தான் அந்த சிந்தனைகள் குறித்துதான் எனது கருத்தை
தெரிவித்திருந்தேன்.


//ஆனால் நீங்கள் இந்தக் கடைசிப் பதிவில் மட்டுமே உங்கள் கருத்துகளை முன்னிருத்தினீர்கள்; மற்றதெல்லாம் ஏதோ விவகாரம் செய்யவேண்டாம்
என்று பொருந்தாத அரிதாரங்களைப் பூசிக்கொண்டு வந்து நிற்பது போல் தான் தோன்றியது//

நட்சத்திர வாரத்திற்கான என்னைப் பற்றிய குறிப்பிலே உங்களின் இந்த கேள்விக்கு பதில் இருக்கிறது.

அடிப்படையில் நான் கவிஞன். கவிதை கதை, கலை என்று தெளிவாகத்தான் பயணித்து கொண்டிருக்கிறேன். நட்சத்திர வாரத்திலும் அதைத்தான் செய்திருக்கிறேன்.

// இணையத்தில் இடமில்லை என்று சொல்லிவிட்டு ஓடாதீர்கள். //

ஓட வேண்டிய அவசியமில்லை. எனது கருத்தை நான் முறையாக பதிவு செய்திருக்கிறேன் ஆரோக்கியமான விவாதங்களை ஆதரிப்பவன் நான்.
எனது இந்த பதிவிற்கு பதிலாக செல்வன் பல இலக்கிய தளங்களை குறிப்பிட்டு இருக்கிறார், இதையும் இந்த விவாதத்தின் பலனாகத்தான் கருதுகிறேன்.
ஆர்வத்தோடு தொடங்கப்படும் பல முயற்சிகள் முழுமையடையாமல் கை விடப்படுவதற்கு காரணமே போதிய ஊக்கமின்மைதான். ஒரு கட்டத்தில் சோர்வு வந்து விடுகிறது. அம்முயற்சிகளும் கை விடப்படுகின்றன.
இது போல் இணையத்தில் நிகழ்ந்தது ஏராளம். இந்த விவாதங்களின் அவைகளை பற்றி பேச ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியே.


//அதே போல் உங்கள் பார்வையில் பொருந்தாத அரிதாரம் போல் தோன்றுவதைப் பூசிக் கொண்டு நாகரீகக் கோமாளிகளாய்த் தோன்றுவதற்கும்
ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. //

வலைப்பதிவுகளை பற்றியான என் கருத்து அது. அதை எல்லோரும் ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று நான் எதுவும் கட்டாயப்படுத்தவில்லையே,

//ஹாஹாஹாஹா. சிரிப்பாய்த் தான் இருக்கிறது நீங்கள் சினத்தினால் மதியிழந்து கத்துவதைப் பார்க்க. பேசுங்கள். பேசுங்கள். உங்களுக்கு எல்லா
உரிமையும் உண்டு உங்கள் கருத்தினைக் கூற. //

சிரிப்பு மனநலத்திற்கும், உடல் நலத்திற்கும் மிகவும் சிறந்தது. குமரன் உங்கள் நலனில் எனக்கு எப்போதும் அக்கறை உண்டு. அதனால் அதை தடுக்க போவதில்லை

//நீங்கள் தானே ஐயா சொன்னது இணையத்தில் இலக்கியத்துக்கு இடமில்லை என்று? அவரா சொன்னார்? அவர் மீது பாய்கிறீர்?//

இங்கு நடந்தது புரிதல் பிழை. அதை நான் மறுக்கவில்லை. மறைக்கவுமில்லை. நான் சொல்ல முனைந்தது இணையத்தை விடவும் இலக்கியத்திற்கென பல ஊடகங்கள் இருக்கின்றன,
அவைகள் பற்றி அறியததால் அவைகள் இல்லை என்றாகிவிடாது என்றே. இணையத்தின் மீதான என் கணிப்பிற்காக, அதற்கு எனக்கு ஒப்புமை இல்லாத மேல்தட்டு
என்னும் வட்டத்திற்குள் நிறுத்த முனைந்ததற்கான எதிர்ப்புதான் அது. சமத்துவமற்ற இந்த வர்க்கத் தட்டுகள் எங்கு வந்தாலும், எந்த வடிவத்தில் வந்தாலும்
அதை எதிர்க்கிறேன் என்பதைத்தான் சொல்லவிரும்புகிறேன்.

முத்துகுமரன் said...

நன்றி ஜோ.

தொடர்ந்த உங்கள் வாசிப்பிற்கும், அன்பிற்கும்.

முத்துகுமரன் said...

//50 வது பதிவுக்கு வாழ்த்து(க்)க்கள்

நல்லா இருங்க. //

பெரியவங்க வார்த்தை பலிக்கும் என்று சொல்வார்கள். உங்கள் வாக்கும் பலிக்கட்டும்:-)

செல்வன் said...

முத்துகுமரன் என்பதற்கு பதில் குமரன் என்று எழுதிவிட்டேன்.தவறுதான்

முத்துகுமரன் said...

//எதிராக வரும் பின்னூட்டங்களயும் முரட்டுத் தனமாக எதிர் கொள்ள வேண்டுமா?. இந்த நட்சத்திர வாரத்தில் நீங்கள் அதிகம் உங்கள் குரலில் பேசுவீர்கள் என எதிர்பார்த்தேன். அறிவுமதி அவர்களிடம் ஈடுபாடு கொண்டிருக்கும் இளைஞர் என்பதும் என் ஆர்வத்திற்கு காரணமாக இருந்தது. உண்மையை மறைக்காமல் சொன்னால் முத்துக் குமரன்., உங்களைப் போல் மனதில் பட்டதை துணிவாக முன்வைக்கும் இளைஞர்கள் குறைவு. எனவே நிதானம் அதிகம் தேவை. போக வேண்டிய தூரம் அதிகம்., எனவே எதையும் கண்ணை மூடி சட்டெனத் தீர்மானித்து விடாதீர்கள். அத்தகைய குணங்களால் நான் இழந்தது அதிகம் என்பதால் சொல்கிறேன்.//

முரட்டுத்தனமாக தோன்றி இருக்கிறதா. மதுரைங்கிறனால கூட அப்பிடி இருக்கலாம்:-),

முடிந்தவரை எல்லா பதிவுகளிலிம் என் குரலை பிரதிபலித்திருக்கிறேன் என்றே நம்புகிறேன்.

நிதானம் தேவை என்பதை நன்கு உணர்கிறேன் அப்படிபோடு. போக வேண்டிய தூரம் உண்மையில் மிக அதிகம். அதில் கவனம் சிதறாது போவதற்கு நிறைய பொறுமை வேண்டும். தங்கள் அக்கறைக்கு எனது நன்றீகள்.

கலகம் விளைந்தால்தானே நன்மை கிடைக்கும்.

Sarah said...

//பொதுவாக ஓரளவிற்கு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட மனிதனிடம் காணும் மனநிலை, இருக்கும் இந்த செளகர்யத்தை இழக்க வேண்டாமே என்று சமரசங்களுடன் வாழத் தொடங்கிவிடுவது, மென்மையான அதிர்வுகளற்ற வாழ்க்கைச் சூழலின் மீதான ஒரு மயக்கம். ஒரு இலகுவான புழங்குதற்குரிய இயங்குதளத்திலேயே இயங்குவது. இப்படி இருப்பவர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஒருவன் முன்னேறுகிறான், முன்னேறி இருக்கிறான் என்பது அவனோடு முடிந்து போக வேண்டிய ஒரு நிகழ்வல்ல. அது ஒரு சங்கிலித் தொடர். தன்னைத் தொடர்ந்தும், தூரமாய் தன்னை பின் தொடர்ந்து வருபவனுக்கும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. அதைத் தட்டிக் கழிக்கும் போக்கே மிகப்பரவலாக காணபடுகிறது. இந்த மனப்பாங்கு வாழ்க்கையின் மிகக் கீழான நிலையிலிருந்து உயர்ந்தி நிலைக்கு வந்தவர்களிடத்தில் வந்துவிடுவதுதான் பெரும் சோகம். அது அவரைச் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒரு பின்னடவை, சறுக்கலை ஏற்படுத்தி விடுகிறது.//


Yes.

Thank you


sarah

மூர்த்தி said...

கவிகளால் பூத்தொடுத்து மாலையாக்கப் பட்டிருந்தது சென்றவார தமிழ் இணைய உலகம். வாழ்த்துக்கள் முத்துக்குமரன்.

ENNAR said...

சிறந்த பதிவாளர் முத்துக்குமரனுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள். நன்றி

Satheesh said...

A very interesting week. I enjoyed. Thanks Muthukumaran.

-Satheesh

அப்டிப்போடு... said...

//முடிந்தவரை எல்லா பதிவுகளிலிம் என் குரலை பிரதிபலித்திருக்கிறேன் என்றே நம்புகிறேன்//.
சரியப்பு., கவிஞர்களின் வார்த்தைகளில். நான் உங்கள் வார்த்தைகளை எதிர்பார்த்தேன். நான் மிக மதிக்கும் கவிஞர்கள் பாரதிதாசனும், பாவலரேறும்... ஆனால் திராவிடத்தின் பால் நான் கொண்ட என்னுடைய எண்ணத்தை இவர்களது வரிகள் பிரதிபளிப்பதாக நான் எண்ணவில்லை. ஏன் அவ்வளவு உரத்து எழுதியவர்கள் கூட சரியாக சொல்லததுபோல் பல இடங்கள் எனக்குப் பட்டது. நீங்கள் மதிக்கும் அப்துல் ரஹ்மான் அவர்களின், இன்குலாப் அவர்களின் (மூ.மேத்தா எல்லாம் இதில் சேர்த்தியே இல்லை என்பதை தெளிவாக சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.)எழுத்துக்களை வெறி பிடித்தது போல் படித்திருக்கிறேன் ஒரு காலத்தில்... கால ஓட்டத்தில் சில பிம்பங்கள் மாறி வேறு தோற்றத்திற்கே இப்போது வந்துவிட்டது. (அவர்களது எழுத்தின் பிம்பங்கள் அல்ல).

பிரதீப் said...

அருமையான வாரமாய் அமைந்தமைக்கு வாழ்த்துகள் முத்துக்குமரன்.

நீண்ட தூரம் பயணிக்கப் போகும் உங்களுக்குத் தமிழ் துணையிருக்கட்டும்.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP