நிலவுநண்பனுக்கு திருமணம்..

மகிழ்ச்சியான செய்தியோடு உங்கள் முன்னே....

கவிதைகளாலும், கருத்துகளாலும் மென்மையான உணர்வுகள் மூலமாகவும் நம் இதயம் நனைக்கும் நண்பர் நிலவுநண்பன் (ரசிகவ் ஞானியார்) தன் மனம் நிறைந்த நிலவை(ஜஹான்) கரம்பிடிக்கவிருக்கிறார். **காதல் திருமணம்**. :-)

திருமணம் வருகிற ஜுலை இரண்டாம் தேதி 02.07.2006, திருநெல்வேலி பாளையங்கோட்டை அன்னை திருமண மண்டபத்தில், காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் நடைபெற இருக்கிறது. அவரின் சார்பாகவும் அவர்களிருவரின் குடும்பத்தார் சார்பாகவும் அனைவரையும் திருமணத்தில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்.

* நிலவு நண்பன் இன்று இரவு இந்தியா செல்லவிருப்பதால் கொஞ்சம் பரபரப்பாக இருக்கிறார். வலைப்பூ அன்பர்களுக்கான அவரின் தனிப்ப்பட்ட அழைப்பும் விரைவில் வரும். **

மணமக்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்
மு.முத்துகுமரன்

கால்களின் ஆல்பம் - வா.மணிகண்டனுக்காக

நண்பர் வா.மணிகண்டன் கவிஞர். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை தன் வலைப்பூவில் இட்டு இருந்தார். இந்த கவிதை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டார். அவருக்காக இந்தப்பதிவு.

இன்றைய கவிஞர்களில் மிக முக்கியமான கவிஞர் திரு.மனுஷ்யபுத்திரன்.
அவருடைய என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் தொகுப்பின் முதல் கவிதையிது.

நுட்பமாண உணர்வகளை துல்லியமாக எழுத்தில் கொண்டுவரும் ஆற்றல் கொண்ட அவரின் கவிதைத் திறனுக்கு கட்டியம் கூறுவது போல் அமைந்திருக்கும் கவிதை இது.

வாசித்து முடித்தவுடன் கண்களின் ஓரத்தில் ஒரு துளி கண்ணீர்.

**

கால்களின் ஆல்பம்


ஆல்பம் தயாரிக்கிறேன்
கால்களின் ஆல்பம்

எப்போதும்
முகங்களுக்கு மட்டும்தான்
ஆல்பமிருக்க வேண்டுமா?

திட்டமாய் அறிந்தேன்
எண்சான் உடலுக்குக்
காலே பிரதானம்

படிகளில் இறங்கும் கால்கள்
நடனமாடும் கால்கள்
பந்துகளையோ
மனிதர்களையோ
எட்டி உதைக்கும் கால்கள்

கூட்டத்தில் நெளியும் கால்கள்
பூஜை செய்யப்படும் கால்கள்
புணர்ச்சியில் பின்னும்
பாம்புக் கால்கள்

கறுத்த வெளுத்த சிவந்த
நிறக்குழப்பத்தில் ஆழ்த்துகிற
மயிர் மண்டிய வழுவழுப்பான
கால்கள்

சேற்றில் உழலும் கால்கள்
தத்துகிற பிஞ்சு கால்கள்
உலகளந்த கால்கள்
அகலிகையை எழுப்பிய கால்கள்
நீண்ட பயணத்தை நடந்த
சீனன் ஒருவனின் கால்கள்

பாதம் வெடித்த கால்கள்
மெட்டி மின்னுகிற கால்கள்
ஆறு விரல்களுள்ள கால்கள்
எனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்குப்
பெருவிரல் நகம் சிதைந்த
நீளமான கால்கள்

குதிக்கிற ஓடுகிற தாவுகிற
விதவிதமாய் நடக்கிற
(ஒருவர்கூட மற்றவரைப் போல் நடப்பதில்லை)
பாடல்களுக்கு தாளமிடுகிற
நீந்துகிற மலையேறுகிற
புல்வெளிகளில் திரிகிற
தப்பியோடுகிற
போருக்குச் செல்கிற
(படைவீரர்கள் கால்கள் உண்மையானதல்ல)
நேசித்தவரை நாடிச் செல்கிற
சிகரெட்டை நசுக்குகிற
மயானங்களிலிருந்து திரும்புகிற
விலங்கு பூட்டப்பட்ட
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட
வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற
வரிசையில் நிற்கிற
தையல் எந்திரத்தில் உதறுகிற
சுருங்கிய தோலுடைய
நரம்புகள் புடைத்த
சிரங்கு தின்ற
குஷ்டத்தில் அழுகிய
முத்தமிட தூண்டுகிற கால்கள்

யாரைப் பார்த்தாலும்
நான் பார்ப்பது கால்கள்
ஒட்டுவேன்
என் கால்கள் ஆல்பத்தில்
எல்லாக் கால்களையும்

பெட்டிக்கடியில்
ஒளித்து வைத்துவிடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல்
என் போலியோ கால்களை மட்டும்.

வலைப்பூ ஆய்விற்காக - என்னைப் பற்றி கொஞ்சம்

வலைப்பதிவர் பெயர்:முத்துகுமரன்

வலைப்பூ பெயர் : முத்துகுமரன், என் பார்வையில்

சுட்டி(url) : www.muthukumaran1980.blogspot.com ; www.eenpaarvaiyil.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: துபாய் தற்சமயம். சொந்த ஊர் மதுரை
நாடு:தமிழ்நாடு
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நண்பன்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
முத்துகுமரன் - ஜூன் 25 2005
என் பார்வையில் - அக்டோபர் 21 2005

இது எத்தனையாவது பதிவு: 76
இப்பதிவின் சுட்டி(url): http://muthukumaran1980.blogspot.com/2006/06/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் எண்ணங்களை, கவிதைகளை வெளிப்படுத்த.
சந்தித்த அனுபவங்கள்: பலதரப்பட்ட மனிதர்களும், அவர்கள் குணங்களும்,
பெற்ற நண்பர்கள்: நேரில் காணாவிடினும் நெருங்கிய உறவுகள் போன்று கிடைத்திருக்கும் நண்பர்களும், ஒத்த சிந்தனையுடைய நண்பர்களும், மாற்றுச் சிந்தைனையிருபினும் பண்போடு பழகும் நண்பர்களும் என நிறைவான நண்பர்கள்.
கற்றவை: கற்றது கொஞ்சமே. கற்க வேண்டியிருப்பது நிறைய.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எனக்குள் தோன்றும் எண்ணங்களை சிந்தனைகளை சுயதணிக்கைக்குப்பிறகு எந்த வித தடையுமின்றி வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதே மிகப்பெரிய சுதந்திரம்தான்.
கிடைத்த சுதந்தரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதிலும் கவனம் கொண்டிருக்கிறேன்.

இனி செய்ய நினைப்பவை: சமூகத்திற்கு பயன்படத்தக்க வகையில் வாழ்க்கையை அமைத்துகொள்ள வேண்டும்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
வீட்டிற்கு மூத்தவன், பிறந்தது பின்பு பெரும்பகுதி வளர்ந்தது திருவரங்கம் என்றாலும் எப்போதும் மதுரைக்காரனாகவே உணர்பவன். படித்தது பொறியியல். பணிபுரிவது அமீரகத்தின் துபாயில். தமிழ் மீதும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் பற்று கொண்டிருப்பவன். கவிதைகளில் ஆர்வமுடையவன். விரைவில் முதல்கவிதைத் தொகுப்பு ''தமிழ்அலை'' வெளியீடாக விரைவில் வர இருக்கிறது.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
பெரியாரை நோக்கி என்னைத் திருப்பிய பேராசிரியர்.சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

அப்பா அம்மாவிற்கு இன்று 30ம் ஆண்டு மணநாள்.

அப்பா அம்மாவிற்கு இன்று 30ம் ஆண்டு மணநாள்.

அப்பா - அம்மாவிற்கு இன்று முப்பதாம் ஆண்டு மணநாள்(7-6-76). தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த நாளில் அவர்களோடு இருந்து வாழ்த்துகளைப் பெறமுடியவில்லை. அவர்கள் இன்று போல் என்றும் உடல் ஆரோக்கயத்தோடும், மன மகிழ்வோடுமிருந்து எங்களை வழிநடத்த வேண்டிக்கொள்கிறேன். அவர்களின் ஆசிர்வாதங்களுடன் என் மகிழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP