கால்களின் ஆல்பம் - வா.மணிகண்டனுக்காக

நண்பர் வா.மணிகண்டன் கவிஞர். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை தன் வலைப்பூவில் இட்டு இருந்தார். இந்த கவிதை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டார். அவருக்காக இந்தப்பதிவு.

இன்றைய கவிஞர்களில் மிக முக்கியமான கவிஞர் திரு.மனுஷ்யபுத்திரன்.
அவருடைய என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் தொகுப்பின் முதல் கவிதையிது.

நுட்பமாண உணர்வகளை துல்லியமாக எழுத்தில் கொண்டுவரும் ஆற்றல் கொண்ட அவரின் கவிதைத் திறனுக்கு கட்டியம் கூறுவது போல் அமைந்திருக்கும் கவிதை இது.

வாசித்து முடித்தவுடன் கண்களின் ஓரத்தில் ஒரு துளி கண்ணீர்.

**

கால்களின் ஆல்பம்


ஆல்பம் தயாரிக்கிறேன்
கால்களின் ஆல்பம்

எப்போதும்
முகங்களுக்கு மட்டும்தான்
ஆல்பமிருக்க வேண்டுமா?

திட்டமாய் அறிந்தேன்
எண்சான் உடலுக்குக்
காலே பிரதானம்

படிகளில் இறங்கும் கால்கள்
நடனமாடும் கால்கள்
பந்துகளையோ
மனிதர்களையோ
எட்டி உதைக்கும் கால்கள்

கூட்டத்தில் நெளியும் கால்கள்
பூஜை செய்யப்படும் கால்கள்
புணர்ச்சியில் பின்னும்
பாம்புக் கால்கள்

கறுத்த வெளுத்த சிவந்த
நிறக்குழப்பத்தில் ஆழ்த்துகிற
மயிர் மண்டிய வழுவழுப்பான
கால்கள்

சேற்றில் உழலும் கால்கள்
தத்துகிற பிஞ்சு கால்கள்
உலகளந்த கால்கள்
அகலிகையை எழுப்பிய கால்கள்
நீண்ட பயணத்தை நடந்த
சீனன் ஒருவனின் கால்கள்

பாதம் வெடித்த கால்கள்
மெட்டி மின்னுகிற கால்கள்
ஆறு விரல்களுள்ள கால்கள்
எனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்குப்
பெருவிரல் நகம் சிதைந்த
நீளமான கால்கள்

குதிக்கிற ஓடுகிற தாவுகிற
விதவிதமாய் நடக்கிற
(ஒருவர்கூட மற்றவரைப் போல் நடப்பதில்லை)
பாடல்களுக்கு தாளமிடுகிற
நீந்துகிற மலையேறுகிற
புல்வெளிகளில் திரிகிற
தப்பியோடுகிற
போருக்குச் செல்கிற
(படைவீரர்கள் கால்கள் உண்மையானதல்ல)
நேசித்தவரை நாடிச் செல்கிற
சிகரெட்டை நசுக்குகிற
மயானங்களிலிருந்து திரும்புகிற
விலங்கு பூட்டப்பட்ட
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட
வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற
வரிசையில் நிற்கிற
தையல் எந்திரத்தில் உதறுகிற
சுருங்கிய தோலுடைய
நரம்புகள் புடைத்த
சிரங்கு தின்ற
குஷ்டத்தில் அழுகிய
முத்தமிட தூண்டுகிற கால்கள்

யாரைப் பார்த்தாலும்
நான் பார்ப்பது கால்கள்
ஒட்டுவேன்
என் கால்கள் ஆல்பத்தில்
எல்லாக் கால்களையும்

பெட்டிக்கடியில்
ஒளித்து வைத்துவிடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல்
என் போலியோ கால்களை மட்டும்.

5 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Vaa.Manikandan said...

Thankyou Muthukumaran.

நிலவு நண்பன் said...

கண்ணீர் வரவழைக்கும் கவிதைகள் என்று அதிகப்படியாக உவமை செய்கின்றீர்களோ என்று அலட்சியமாகத்தான் படித்தேன்.. ஆனால் வாசிப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவில்லையென்றாலும் கண்ணீர்த்துளிகளின் ஈரத்தையாவது உணர்ந்திரப்பார்கள்

நல்ல கவிதை குமரா..

Kuppusamy Chellamuthu said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி முத்துக்குமரன்.

மாதங்கி said...

மிகவும் நன்றி இப்படி ஒரு அருமையான கவிதையை
பகிர்ந்துகொண்டதற்கு

பொன்ஸ்~~Poorna said...

ஆல்பம் என்று பேசிக் கொண்டிருந்ததை நாலைந்து கவிதைகளின் தொகுப்பு என்று நினைத்தேன். நல்ல கவிதை...

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP