நன்றி நண்பர்களே...

தேன்கூடு - ஜூலை மாதப்போட்டியில் வென்ற நிலா, லிவிங் ஸ்மைல் வித்யா, பொன்ஸ் ஆகியோருக்கு மனமார்ந்த பாரட்டுகள்...

அப்புறம் என்னுடைய கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மொத்தம் 11 ஓட்டுல 1 ஜி.கெளதம் போட்ட தர்ம ஓட்டு ஒண்ணு. அவருக்கு எனது நன்றி. ஒண்ணு யாருன்னு தெரிஞ்சு போச்சு மீதி பத்து ஆளுங்க யாருன்னு தெரியாம மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது. பின்னூட்டத்தில் வந்து தெரியப்படுத்தினால் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வசதியாக இருக்கும்... :-))

அப்புறம் அற்புதமான தலைப்பைத் தந்த வாத்தி ''இளவஞ்சிக்கு'' நன்றி. கிட்டத்தட்ட இருபது நாட்கள் எடுத்ததெனக்கு ''காற்றுக் குமிழி'' கதையை எழுத. ஆனாலும் மனதில் நினைத்தது எழுத்தில் வரவில்லை. அதில் கொஞ்சம் ஏமாற்றமே. அப்போதய பணிச்சூழலில் அதற்கு மேல் மண்டையை உடைத்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் முக்கிய காரணம். வெற்றிக்கோட்டைத் தொட இன்னும் அதிகம் உழைக்க வேண்டும், எழுதும் கலையை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதே இந்த போட்டி எனக்கு தந்திருக்கும் பரிசு. அறிவிப்பு கொடுத்தவுடன் பட் பட்டென்று படைப்புகளை எழுதுபவர்களைக் கண்டால் ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களின் திறமை வியக்க வைக்கிறது. ஆகஸ்டு மாத போட்டி இன்னும் விறுவிறுப்பாகவும், நல்ல பயிற்சி களனாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அடுத்த மாதம் வெல்ல போகின்றவர்களுக்கு என் முன் தேதியிட்ட வாழ்த்துகள்..

இறுதியாக

வாக்களித்த நண்பர்களுக்கு மீண்டுமொருமுறை

நன்றி! நன்றி!! நன்றி!!!

அமீரகத்தில் உமர்தம்பி அவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி
சமீபத்தில் மறைந்த தமிழ் கணிமை கொடையாளர் திரு. உமர்தம்பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அமீரகத்தில் வரும் வியாழன்(27.07.2006) மாலை 8 மணி அளவில் துபாய், கராமா சிவ்ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற இருக்கிறது. அமீரகத்தைச் சேர்ந்த இணைய நண்பர்களை இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புக்கு
பரத் வெள்ளைச்சாமி - 050 -5581859
முத்துகுமரன் - 050-6243115

முருகா!!

முருகா!!
பழநியில் நின்றது போதும்
புறப்படு சிதம்பரத்திற்கு.,

உங்கய்யனை மீட்டு வர.

காற்றுக் குமிழி - தேன்கூடு போட்டி

பரபரப்பின் உச்சத்திலிருந்தது மருத்துவமனை. வெளிச் சூழல்களால் எதுவும் பாதித்திடாத அமைதியோடு தீவிர சிகிச்சை பிரிவு. உடலில் உயிர் தொடர்வதற்கும் மரணம் வருவதற்கும் இடைப்பட்ட இடம். கண்விழித்திட வேண்டும், ஓரிரு வார்த்தைகளாவது கேட்டிட வேண்டும் என்னும் தவிப்புகளோடும், பிராத்தனைகளோடும் வெளியே கலக்கத்தோடு மனித
முகங்கள். பேரமைதிக்குத் தயார்படுத்தும் ஒத்திகை அறை போல் படுக்கைகளின் மேல் சலனமற்ற நோயாளிகள்.

உயிர்காக்கும் இயந்திரங்களும் அமைதியாக இயங்கிக்கொண்டிருக்க கடிகாரம் மட்டும் அதன் சத்தத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறது. வட்டத்தின் முற்றுப்புள்ளிக்கு அருகே துணையாக என் உயிரும் வந்துகொண்டிருக்கிறது. இந்த சுற்று
எத்தனை நேரத்திற்கென்று தெரியாது.

படுக்க வைக்கப்பட்டிருக்கிறேன் முக்கால் பிணமாக. இயந்திரங்கள் வரையும் படங்கள் சரியாக வருகிறதா என பார்த்துக்கொள்ள ஒரு செவிலி. இருக்கட்டும் என் பயணத்தின் செய்தியை அறிவிக்கக்கூடும். எனக்கோ கழுத்திற்கீழே ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. இதயம் துடிப்பதால்தான் இருக்கிறேன். ஆனால் இதயம் இருக்கும் இடம் தெரியவில்லை கால்கள், கைகள், உறுப்புகள் எல்லாம் மிதந்து கொண்டிருக்ககூடும். ஆன்மா என்று சொல்கிறார்களே
இப்படித்தான் திரியுமா??

என்ன இது மூளை அதிகமாக சிந்திக்கிறதே. நின்றுவிடப்போவதற்கு முன்னால் அதற்கு எத்தனை வேலைகளோ!

சமுத்திரம் போல கிடக்கிறேன். வெளிப்பார்வைக்கு சலனமில்லாத தோற்றம். உள்ளுக்குள் எண்ணக் குமிழ்களால் நுரைத்துத் ததும்பும் பேரலைகள். ஓயாத அலைகள் அல்ல இவை. நின்றிடப்போகும் அலை.என்ன நடக்க போகிறது எனக்கு?

மெல்ல மெல்ல இதயத்துடிப்பு குறையுமா? பார்வையின் ஒளி மங்குமா? வெளிச்சத்தங்கள் மறைந்து சத்தங்களற்ற அமைதி
தோன்றூமா? உள்ளே வந்து போய்க்கொண்டிருக்கும் மூச்சு நின்றுவிடக்கூடுமா? இதுவரை எத்தனை முறை உள்ளே போய்
வந்திருக்கிறது. ஒவ்வொரு சுவாசத்திற்கும் காத்து மரணமடைந்திருக்கிறதே! அப்போது அதைப்பற்றி கவலைப்படாத மனது
இப்போ நின்னிடுமோன்னு தவிக்குதே! ஏன்?
இன்னும் எவ்வளவு நேரத்திற்கு எனக்கிது புரியும்? பிறகென்னாகும்?
ஒளியமுடியுமா? இல்லை விடுபட முடியுமா? தடுக்க முடியுமா?
எல்லாம் ஒவ்வொன்றாய் நடக்கும்.பிறப்பின் போதே உறுதியான இறப்பும் வரவிருக்கிறது. நிரந்திரமாக வரவிருக்கிறது.

எதுவும் முடியாது. எனது இறுதி இயக்கம் என் கட்டுபாட்டில் இல்லை. நான் பிரபஞ்சத்தின் கட்டுக்குள் போய்க் கொண்டிருக்கிறேன். எனதுயிர் பிரபஞ்ச பெருவெளியில் ஒன்றுமேயில்லாதகப் போகிறது. நான் காற்றோடு கலக்கப்
போகிறேன். சுவாசித்த காற்றின் சுவடுகள் இல்லாததுபோல் நானும் சுவடற்று கரையப் போகிறேன். நிச்சயம் எல்லாம் நடக்கவிருக்கிறது. எல்லோருக்கும் நடந்தது என் அப்பாக்கும் அம்மாவுக்கும் நடந்தது எனக்கும் நடக்கப்போகிறது.

ஓயப்போகும் எண்ண அலைகளின் ஒழுங்கற்ற முட்டல் மோதல் தொடர்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக என் ஞாபக எல்லைகளிலிருந்து எல்லாம் விடுபடுகிறது. சின்ன வயசில் வசித்த கிராமத்து வீடு, சகதியில் விளையாடி கிணற்றில் குளித்து விளையாடிய வயக்காடு, பேச்சுத்துணையாயிருந்து தென்னை மரமும்,
நடந்துபோகும் பள்ளிக்கூட பாதை, இருளப்பசாமி கோயில், கல்லூரி, புதுவீடு எல்லாம் எல்லாம். வீடு முழுசும் நிறைச்சு வச்சிருந்த அமுதனோட பரிசுகள். இப்பத்தான் அவனை கையில் எடுத்து கொஞ்சியது போல இருந்தது. அவன் தூக்கிக் கொஞ்ச பிள்ளையும் வந்துவிட்டது. காலம் ஓடுவதே தெரியாதிருக்கிறது.

ஒன்றுமில்லாத வெற்றிடம் நோக்கி துவங்கிவிட்டது பயணம்.

கண்களின் திரைகளில் உதறமுடியாத உறவுகளின் பிம்பங்கள். ஒளி மங்குமுன் மீண்டுமொருமுறை பார்த்திட வேண்டும். வந்திடுவார்களா? என் துடிப்பை எல்லாம் சொல்லனும் மனசு ஏங்குதே. நாக்கும் மறத்துக்கொண்டிருக்கிறதே. வார்த்தை வருமா?பேச வருமா. வந்தாலும் எவ்வளவு நேரத்திற்கு? கண்ணாலதான் சொல்லனும். ஆனால் கண்ணீர்த்திரை தாண்டி அது போகுமா?

பாதியில விட்டுட்டு போறேனே! பாவம் அமுதன். எப்படித்தான் எல்லாத்தையும் தாங்குவான். இன்னும் எத்தனை நாளுக்கு இங்கிருக்கப்போறேன். இப்போ சுவாசிக்கிற காத்துக்கு விலை இருக்கே! அவந்தானே கொடுக்கணும். கொடுத்திட்டு சிரமப்படுவானே. பொழச்சு முக்காப்பொணமா சிரமப்படுத்தாம போகனும். இங்க வேணாம். வீட்டுல போனும். என் உசிரும்
உழைப்பும் கலந்திருக்கிற வீட்ல போகணும்

விக்கலெடுக்கிறது நிற்காமல்.

உள்ள போயிட்டு வரமுடியாம சிரமப்படுது மூச்சு.

என் சுயநினைவு குறைந்து குறைந்து எல்லாம் மறக்கத் தொடங்குகிறது

**


விமானத்தில் நுழைவதற்கு இறுதி அழைப்பு வர வெறுமையாக நடந்து வருகிறான் அமுதன். மகிழ்ச்சியாக வரும் போதெல்லாம் கிடைக்காத சன்னலோரம் இன்று கிடைத்திருக்கிறது. தளர்வாய் சாய்ந்து கொண்டான். விமான சிப்பந்தகளின் குரல்களேதும் அவனுக்கு கேட்கவில்லை. சன்னல் வழியே பார்க்க மேகம் மிதந்து கொண்டிருக்கிறது. விமானமும் கூட.விமானத்தின் கனமாய் அப்பாவின் நினைவுகள் அழுத்துகிறது. தன்னையறியாது உதடுகள் அப்பா அப்பா என உச்சரிக்கிறது. கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டான்.
எப்படிப்பா அமைதியா இருக்கீங்க. அசையாமலே இருக்கிங்களா? மத்த எல்லாத்தவிடவும் எனக்குத்தெரியும்பா,

என்னைப் படிக்க வைக்க காசுக்காக நடந்தே தேஞ்ச காலும், கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்த கையும், நான் உடஞ்சு போனப்ப ஆறுதலா சாஞ்சுகிட்ட தோளும் அசையாம இருக்கா? எப்படிப்பா அமைதியா இருக்கீங்க. அப்பா எனக்காக எத்தனை சிரமப்பட்டிருக்கீங்க. எனக்கு உயிர் தந்ததே நீங்க தான. இந்த உடம்பும் உங்க உடம்புதாம்பா. அப்பா நான் வந்திடுவேன்.
என்னை விட்டுப் போயிடாதிங்கப்பா. என் கூடவே வச்சுக்குவேன். நான் பார்த்துக்குவேன் உங்களை. நீங்க வேணும்பா. என்ன
செலவானாலும் பரவாயில்லை.

ஆண்டவா அப்பா பொழச்சுக்கணும்!

வேக வேகமாக விமான நிலைத்திலிருந்து வெளிவந்து நேராக மருத்துவமனைக்கு நுழைந்தான். அமரர் ஊர்தி தயாராக
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பதட்டம் கூடியவனாய் விறுவிறுவென உள்ளே சென்றான். அப்பாக்கு ஒன்னும் ஆயிருக்காது.அப்பா வந்துட்டேன்பா!
தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு வெளியே எல்லோரும் அழுது கொண்டிருக்க ஏதோ விபரீதமாக நடந்துவிட்டது என ஓடினேன்.

உள்ளா பார்த்தால் அப்பாவுக்கு மூச்சுத் திணறல். எவ்வளவோ போராடியும் கட்டுக்குள் வராமல் மெல்ல மெல்ல அடங்கி விட்டது. எனக்கு உயிர்நாடியே ஒடுங்கியது போலிருந்தது.

எதுவும் பேசவில்லை.
இருவரும்
எதுவும் பேசவில்லை

அப்பா இனி இல்லை.

இத்தனை நாள் பார்த்துகிட்டு இருந்தனே. இனிமே எப்பவுமே பாக்க முடியாது.

மரணம்

என் அப்பாவின் மரணம்.நிமிடமாய் கரைந்துவிட்டது ஓராண்டு...

வாழ்க்கையின் ஓட்டமும்தான்.

மரணம் இழப்புகளைத் தந்தாலும் அது வாழக்கற்றுக் கொடுக்கிறது. இழப்புகளைக் கடந்து வாழும் பக்குவம் மனித இனத்திற்கு
இருக்கிறது.

''எல்லா மரணங்களையும் கடந்து செல்லமுடியும்
நம் மரணத்தைத் தவிர...''

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP