அப்பத்தாவிற்கு அஞ்சலி

இன்று காலை 8.17, மணி அளவில் எனது அப்பத்தா மரணம் அடைந்தார்கள். நீண்ட காலமாய் உடல்நலன் குன்றியிருந்த அவர்கள் இன்று தனது வாழ்க்கைப்பயணத்தை நிறுத்தி கொண்டுவிட்டார்கள். இந்த நேரத்தில் என் தந்தை என்னிடம் பேசியதுதான் நினைவிற்கு வருகிறது. குமரா என் அம்மா ராணி போல வாழ்ந்தவர்கள் அவர்கள் மரணம் வாடகை வீட்டில் நடக்ககூடாது சொந்த வீட்டில்தான் நடக்க வேண்டும் என்று. தந்தையின் அந்த விருப்பத்தை நிறைவேற்றிய நிறைவில்தான் நான் கலந்து கொள்ளமுடியாத வருத்தத்தை தேற்றிக் கொள்கிறேன். நீண்ட வருடங்களால குழந்தை பேறில்லாமல் இருக்கும் என் அக்காவின் மகளாக மறுபடியும் எங்களிடம் வருவார்கள் என்ற பிராத்தனையோடு என் அஞ்சலிகளை அவர்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். இந்த நேரத்தில் அப்பத்தா பற்றி நான் எழுதிய கவிதையை மட்டும் இங்கு இடுகிறேன்.

வருத்தத்துடன்
முத்துகுமரன்.
*
அப்பத்தா

இலையுதிர்காலம்..
பாதையெங்கும்
உதிர்ந்த சருகுகள்..
காத்திருக்கிறது
சருகான இலையொன்று
மரத்திலிருந்து மண்ணிற்கு பயணப்பட....

சருகுகள் எல்லாம்
குப்பைகள் அல்ல
அது பசுமையின் பரிணாமம்....

பெண்மையின் தன்மையாய்
செடியாய் இருக்கையிலே
நிழல் தந்தவள் நீ..
வயது பதினான்கில் தாரமாய்
ஆனவள் நீ..

அணைக்காத உன்வீட்டு அடுப்பு...
பிள்ளை சோறு பொங்கிப் பொங்கி
ஈரமான உன் மனது..
சித்தமருந்துகள் அரைத்து அரைத்து
அழகான உன் கைகள்....

உலகின் சுழற்சியில்
துக்கங்களும் நேசம் கொண்டன
உன்னிடம்...
திடீரென்று ஓய்வெடுத்த
உன்னவரின் இதயம்
திசைமாறிய காற்றாய்
உன் வாழ்வு...

ஈன்ற தலைமகனை
மடியெடுத்தாய் மறுபடியும்
சடலமாய்......
உன் சோகம் சொல்ல
முடியாமல்
தடுமாறுகிறதுஎன் தமிழறிவு...

எண்ணிப் பார்க்கிறேன் உன்னுடனான என் நாட்களை......
நீ கூறிய பாட்டிகதை முதல்
கைலாயத்தில் தாத்தாவைப்
பார்த்ததாக கூறிய செய்திவரை...
அவை கற்பனை அல்ல
நீ உணர்ந்த மரணத்திற்குப்பிறகான
வாழ்வது........

வயது உயர
உயரம்குன்றி
குழந்தையாய் உன் உருவம்
எதை உணர்த்துகிறாய்.....

மறைந்த பார்வை
மறந்த தன்னிலை
குறைந்த உணவு
குழறிய பேச்சு
மரணத்தோடும் வாழ்கிறாயே....

சத்தம் எழும்பா உன்கடைசி உணர்வுகளில்
என்னென்ன நினைக்கிறாய் ....
பிறர் சொல்ல கடினம்தான்..
எனக்கு மட்டும் தெரியும்
உன் மெளனப் பிராத்தனை.....
பேத்திகளின் வயிற்றில்
பிறந்திடவேண்டுமென்ற அந்த,,,,,,,,

மீண்டும்

அப்பாடா

மறுபடியும் அமீரகம் வந்து சேர்ந்தாகிவிட்டது. இந்த விடுமுறை மிக பரபரப்பான விறுவிறுப்பான விடுமுறையாக இருந்தாலும் மனநிறைவானதொரு விடுமுறையாக அமைந்துவிட்டது.
எத்தனை அலைச்சல், எத்தனை குடைச்சல்கள் என ஓடிக்கொண்டே இருந்தாலும் ஒருவழியாக 14ம் தேதி துபாய்க்கரையோரம் ஒதுங்கிவிட்டேன்.

ஆம். நிறைய மனநிறைவுகள் இந்த விடுமுறையில்

1.சொந்த வீடு வாங்கி குடியேறியாகிவிட்டது.

2. ஒப்புதல் கிடைத்துவிட்ட அண்ணா- அண்ணி காதல்

3. வலை நண்பர்கள் உடனான சந்திப்பு(டோண்டு முதல் சந்திப்பு வரை)

4. திராவிட தமிழர்களுடனான சந்திப்பு.

5.லிவிங் ஸ்மைல் உடனான சந்திப்பு

6. அறிவுமதி அண்ணனுடனான சந்திப்பு (கொளத்துர் மணியுடன்)

6.புலவர். கலியபெருமாளின் மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்தேசிய சிந்தனையாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் ஒருங்கே காணும் வாய்ப்பு பெற்றது

7. சுப.வீ அவர்களுடனான சந்திப்பு

8. முத்து தமிழினியுடன் சென்று அய்யா. பழ. நெடுமாறனுடன் கழித்த அந்த ஒன்றரை மணி நேரம்

9. குமுதம் உதவியாசிரியர் கடற்கரய் மற்றும் ஓவியர் கண்ணாவுடன் கழித்த மணித்துளிகள்

10. மதுரை புத்தகக்கண்காட்சியில் கவிஞர்.பிரான்சிஸ்கிருபாவுடன் செலவிட்ட மணித்துளிகள், புத்தகங்கள் வாங்கசெலவழித்த 4 மணி நேரங்கள்

இடைவிடாத ஒட்டத்தில் மனதிற்கு இதமளித்த சந்திப்புகள் புத்துணர்வைத் தந்தன. ஓடிக்கொண்டே இருந்ததால்தான் என்னவோ வீட்டை விட்டு பிரியும் போது மனம் வலித்தது. வெறுப்புடன் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு ஏக்கப் பெருமூச்சோடு சென்னை புறப்பட்டேன். துபாய் வந்தும் சேர்ந்தேன்.

சந்திப்புகளை நேரம் கிடைத்தால் விரிவாக எழுதுவேன்.

எனவே மக்களே

மத்தபடிக்கு

கச்சேரி

மீண்டும் ஆரம்பம்..
Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP