அப்பத்தாவிற்கு அஞ்சலி

இன்று காலை 8.17, மணி அளவில் எனது அப்பத்தா மரணம் அடைந்தார்கள். நீண்ட காலமாய் உடல்நலன் குன்றியிருந்த அவர்கள் இன்று தனது வாழ்க்கைப்பயணத்தை நிறுத்தி கொண்டுவிட்டார்கள். இந்த நேரத்தில் என் தந்தை என்னிடம் பேசியதுதான் நினைவிற்கு வருகிறது. குமரா என் அம்மா ராணி போல வாழ்ந்தவர்கள் அவர்கள் மரணம் வாடகை வீட்டில் நடக்ககூடாது சொந்த வீட்டில்தான் நடக்க வேண்டும் என்று. தந்தையின் அந்த விருப்பத்தை நிறைவேற்றிய நிறைவில்தான் நான் கலந்து கொள்ளமுடியாத வருத்தத்தை தேற்றிக் கொள்கிறேன். நீண்ட வருடங்களால குழந்தை பேறில்லாமல் இருக்கும் என் அக்காவின் மகளாக மறுபடியும் எங்களிடம் வருவார்கள் என்ற பிராத்தனையோடு என் அஞ்சலிகளை அவர்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். இந்த நேரத்தில் அப்பத்தா பற்றி நான் எழுதிய கவிதையை மட்டும் இங்கு இடுகிறேன்.

வருத்தத்துடன்
முத்துகுமரன்.
*
அப்பத்தா

இலையுதிர்காலம்..
பாதையெங்கும்
உதிர்ந்த சருகுகள்..
காத்திருக்கிறது
சருகான இலையொன்று
மரத்திலிருந்து மண்ணிற்கு பயணப்பட....

சருகுகள் எல்லாம்
குப்பைகள் அல்ல
அது பசுமையின் பரிணாமம்....

பெண்மையின் தன்மையாய்
செடியாய் இருக்கையிலே
நிழல் தந்தவள் நீ..
வயது பதினான்கில் தாரமாய்
ஆனவள் நீ..

அணைக்காத உன்வீட்டு அடுப்பு...
பிள்ளை சோறு பொங்கிப் பொங்கி
ஈரமான உன் மனது..
சித்தமருந்துகள் அரைத்து அரைத்து
அழகான உன் கைகள்....

உலகின் சுழற்சியில்
துக்கங்களும் நேசம் கொண்டன
உன்னிடம்...
திடீரென்று ஓய்வெடுத்த
உன்னவரின் இதயம்
திசைமாறிய காற்றாய்
உன் வாழ்வு...

ஈன்ற தலைமகனை
மடியெடுத்தாய் மறுபடியும்
சடலமாய்......
உன் சோகம் சொல்ல
முடியாமல்
தடுமாறுகிறதுஎன் தமிழறிவு...

எண்ணிப் பார்க்கிறேன் உன்னுடனான என் நாட்களை......
நீ கூறிய பாட்டிகதை முதல்
கைலாயத்தில் தாத்தாவைப்
பார்த்ததாக கூறிய செய்திவரை...
அவை கற்பனை அல்ல
நீ உணர்ந்த மரணத்திற்குப்பிறகான
வாழ்வது........

வயது உயர
உயரம்குன்றி
குழந்தையாய் உன் உருவம்
எதை உணர்த்துகிறாய்.....

மறைந்த பார்வை
மறந்த தன்னிலை
குறைந்த உணவு
குழறிய பேச்சு
மரணத்தோடும் வாழ்கிறாயே....

சத்தம் எழும்பா உன்கடைசி உணர்வுகளில்
என்னென்ன நினைக்கிறாய் ....
பிறர் சொல்ல கடினம்தான்..
எனக்கு மட்டும் தெரியும்
உன் மெளனப் பிராத்தனை.....
பேத்திகளின் வயிற்றில்
பிறந்திடவேண்டுமென்ற அந்த,,,,,,,,

28 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

கோவி.கண்ணன் [GK] said...

//நீண்ட வருடங்களால குழந்தை பேறில்லாமல் இருக்கும் என் அக்காவின் மகளாக மறுபடியும் எங்களிடம் வருவார்கள் என்ற பிராத்தனையோடு என் அஞ்சலிகளை அவர்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்//

கடைசி கடைசியாக பார்த்து வந்திருக்கிறீர்கள்.

அப்பத்தாவை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

உங்கள் விருப்பம் ஞாயமானது நிச்சயம் நிறைவேறும்.

செந்தில் குமரன் said...

ஆழ்ந்த அனுதாபங்கள். கவிதையில் சோகமும் உங்களின் பாசமும் தெரிகிறது.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

உங்கள் அப்பத்தாவின் இழப்பிற்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

luckylook said...

உங்களது சோகத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம் முத்துக்குமரன். அப்பத்தா மீண்டும் அவதரிப்பார்.

பொன்ஸ்~~Poorna said...

ஆழ்ந்த அனுதாபங்கள் முத்துகுமரன் :(

சீக்கிரம் உங்கள் வீட்டுக்கு அப்பத்தா திரும்பி வர வேண்டுகிறேன்...

செல்வன் said...

மிகவும் வருந்துகிறேன் முத்துகுமரன்.என்ன சொல்லி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.

//நீண்ட வருடங்களால குழந்தை பேறில்லாமல் இருக்கும் என் அக்காவின் மகளாக மறுபடியும் எங்களிடம் வருவார்கள் என்ற பிராத்தனையோடு என் அஞ்சலிகளை அவர்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்//

இது நிறைவேற ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

துளசி கோபால் said...

அடடா...... மனம் வருத்தமாப் போச்சுங்க.
ஆனா இன்னிக்கு ரொம்ப நல்ல நாள். மஹாளய அமாவாசை. இன்னிக்கு உலகத்தைவிட்டுப்
போறதும் பாக்கியமாம், எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. அவுங்களுக்கு அந்த பாக்கியம்
கிடைக்கலை(-:

அப்பத்தாவுக்கு எங்கள் அஞ்சலிகள்.

உங்கள் நண்பன் said...

ஆழ்ந்த அனுதாபங்கள் முத்துக்குமரன்!
கோவி சொன்னது போல் சமீபத்தில் ஊருக்குச் சென்று அப்பத்தாவை பார்த்து வந்திருப்பீர்கள்,அப்பாவின் ஆசைப்படி சொந்தவீட்டில் நடந்தது மனநிறைவு!

உங்களின் ஆசைப்படி நிச்சயம் அப்பத்தா உங்கள் அக்காவின் குழந்தையாக பிறப்பொடுப்பார்கள்,

அப்பத்தாவை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்,

அன்புடன்...
சரவணன்.

அருண்மொழி said...

ஆழ்ந்த அனுதாபங்கள் முத்துகுமரன்.

chella said...

i am brougt up by my appatha only. so i know the pain and love. great ppl. my wishes for her eternal peace.

enRenRum-anbudan.BALA said...

அற்புதமான, உணர்வுபூர்வமான இக்கவிதை அஞ்சலி, அப்பத்தாவின் மீதான உங்கள் பேரன்பை காட்டுகிறது.

உங்களது / அவரது விருப்பப்படி, அவர் மறுபடி பேத்தியின் மகளாகப் பிறக்க என் பிரார்த்தனைகள் !
எ.அ.பாலா

ILA(a)இளா said...

அப்பத்தாவை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

மஞ்சூர் ராசா said...

சத்தம் எழும்பா உன்கடைசி உணர்வுகளில்
என்னென்ன நினைக்கிறாய் ....
பிறர் சொல்ல கடினம்தான்..
எனக்கு மட்டும் தெரியும்
உன் மெளனப் பிராத்தனை.....
பேத்திகளின் வயிற்றில்
பிறந்திடவேண்டுமென்ற அந்த,,,,,,,,


அன்பு முத்து, மனம் நெகிழ்ந்தேன். உங்கள் வேதனையில் நாங்களும் பங்குக்கொள்கிறோம்.

அப்பத்தாவின் ஆத்மா சாந்தியடைய ஆழ்ந்த பிரார்த்தனையில்.

முத்து(தமிழினி) said...

என் ஆழ்ந்த அனுதாபங்கள்

இராம.கி said...

ஆழ்ந்த வருத்தங்கள், அன்பரே!

அன்புடன்,
இராம.கி.

முரளிதரன் said...

ஆழ்ந்த வருத்தங்கள்.
அப்பத்தா என்றதும்
பெரும்பாலும் நினைவுக்கு
வருவது வெத்திலையும்
வெள்ளைச்சீலையும் தான்.
ஆத்மா சாந்தியடையட்டும்

SP.VR.சுப்பையா said...

எங்கள் பகுதியிலும் (காரைக்குடி) அப்பாவைப் பெற்றவரை 'அப்பத்தா' ( அகத்தில் + இருப்பவள் = ஆத்தாள் : அப்பாவின் அகத்தில் இருப்பவள் = அப்பத்தாள்) என்றுதான் அழைப்போம்

//என் தந்தை என்னிடம் பேசியதுதான் நினைவிற்கு வருகிறது. குமரா என் அம்மா ராணி போல வாழ்ந்தவர்கள் அவர்கள் மரணம் வாடகை வீட்டில் நடக்ககூடாது சொந்த வீட்டில்தான் நடக்க வேண்டும் என்று. தந்தையின் அந்த விருப்பத்தை நிறைவேற்றிய நிறைவில்தான் நான்//

அப்பத்தாவிற்கு சொந்த வீட்டில் காலமாகும் அமைப்பை நீங்கள் ஏற்படுத்திற்க்கொடுத்தீர்கள்
உங்கள் ஆசையையும் உங்களின் அப்பத்தாவின் ஆன்மா நிறைவேற்றும்!

முத்துகுமரன் said...

பிராத்தனை செய்த, இரங்கல் தெரிவித்த்த அத்தனை நட்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி

Sivabalan said...

அப்பத்தாவை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

சதயம் said...

அப்பத்தாவே உங்கள் மருமகளாகக் கடவது....ம்ம்ம்ம்ம்

வருத்தங்களை பகிர்ந்துகொள்ளும்

அன்பன்
சதயம்

மதி கந்தசாமி (Mathy) said...

என் ஆழ்ந்த அனுதாபங்கள்

தினேஷ் said...

அப்பத்தாவை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

வெற்றி said...

முத்துக்குமரன்,
அப்பத்தாவின் பிரிவால் துயருறும் உங்களுக்கும் உங்கள் சுற்றத்தினர்க்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அப்பத்தாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

வாழ்த்துக்கள் முத்துக்குமரன்..
அப்பத்தாவையே தூக்கி கொஞ்சும் வாய்ப்பு எத்தனை பேருக்கு வாய்த்திடப் போகிறது.
அப்பத்தாவிடமும் அதையே வேண்டுவோம்.

Hariharan # 26491540 said...

முத்துக்குமரன்,

என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

உங்கள் விருப்பப்படியே தங்கள் அப்பத்தா மறுஜென்மத்தில் தங்கள் தமக்கையின் வீட்டில் விரைந்து மழலையாக வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

ramachandranusha said...

முத்துகுமரன், நீங்கள் அன்பும் பாசமும் வைத்திருந்த ஆன்மா உங்களுக்கு வழிக்காட்டியாய் விளங்கும்.
ஒரு சந்தேகம் அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை, ஆனாலும் அவர் காதலிக்கும் பெண்ணை நீங்கள் அண்ணி என்று அழைக்கிறீர்களா?

aaradhana said...

ஆழ்ந்த வருத்தங்கள்.

முத்துகுமரன் said...

ஆறுதல் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP