பெரியார்

நஞ்சாய் தழைத்திருந்த
வேத விருட்சங்களில்
அமிலம் பாய்ச்சியவன்

செல்வங்களை துரத்தி
கோபுரங்களில் வீற்றிருந்த
குப்பைகளை
துடைத்தெறிந்த சூறாவளி

ஆதிக்கத்தின்
ஆணிவேரை சாய்க்க வந்த
கோடாரி

கற்பனைக் கவிதைகளில்
பெண்ணியம் பேசாது
வாழ்வில் பேசிய
மக்கள் கவி

குப்பைக் கழிவுகளே!
உம்
ஆணவ மழையில் கரைந்திட
அவன் உப்புத் துகளல்ல
பகைவர் நடுங்கிடும்
கரும் பாறை!
கரும் பாறை!

இலவசமானவன்

பத்து மாத கருவறை
நீள் துயிலும் கல்லறை
இரண்டுக்கும் இடையே
உயிரூட்டிய காற்று.

வாழ்க்கைப் பாதையெங்கும்
உள்ளும் புறமும்
விலையிட்டு வாங்கிட முடியா
இயற்கையின்
இலவசங்களாலானவன்
மனிதன்

பூமாலையே தோள் சேரவா....

இன்று ஒரு இனிப்பான நாள் எனக்கு.

எனது அன்பு நண்பன் லட்சுமிநாரயணனுக்கு இன்று திருமணம்.

கல்லூரியில் ஒரே வகுப்பில், ஒரே அறையில் என் கூட இருந்த நண்பன். மிக நெருக்கமான நண்பன். எப்போதும் எல்லோரும் நலமாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். என் மீது தனிப்பட்ட பிரியம் கொண்டவன். அரியர் எனும் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த என் மீது கவனம் செலுத்தி, மீள உதவி செய்தவன். தன்னுடைய ரகசியங்களை மற்ற நண்பர்களைவிட என்னிடம் மட்டுமே உரிமையாய் இயல்பாய் பகிர்ந்து கொள்பவன்.

காதலர்கள் என்றாலே கிண்டல் செய்து மகிழ்பவன். அவர்களை கோபப்படுத்தி ரசிப்பவன். இன்று திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறான்.

அவன் திருமணம்!! காதல் திருமணம்!!

நண்பர்கள் குழாம் எல்லாம் மண்டபத்தில் இருக்கிறது. நான் மட்டும் கணினி முன்பே. வெளிநாட்டிற்கு வந்தபின்பு தனிமையை உணர்த்தும் மற்றுமொரு தினம். கடந்த ஆகஸ்டில் திருமணம் வைக்கிறேன் என்று என்னிடம் சொல்லியிருந்தான். நானும் அந்த மாதத்தில் விடுப்பு எடுத்து சென்றேன். ஆனால் திருமணம் தள்ளி போய் விட்டது. இந்த வருடத்தில் இது இரண்டாவது ஏமாற்றம். இன்னொரு உயிர் நண்பன் குப்புசாமி திருமணம் மே மாதம் நடந்தது. இவனுடையது நவம்பர். மூன்று மாத முன் பின்னாக இருவரின் திருமணத்திலும் கலந்து கொள்ள இயலாது போயிற்று.

கல்லூரி படிக்கும்போது சொல்லிக்கொண்டேயிருப்பேன் உங்கள் திருமணத்தில் எல்லா வேலைகளும் நான் பார்ப்பேன் என்று. ஆனால் சொன்ன சொல்லை காக்க இயலாத சூழல் எனக்கு!!

காலையில் தொலைபேசினேன். திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. நண்பர்களின் ஆரவார இரைச்சலை கேட்க கேட்க மகிழ்வாய் இருந்தது.

உங்களோடு இணைந்து லட்சுமிநாராயணன் - வளர்மதி தம்பதியினருக்கு எனது இனிய திருமண வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க பல்லாண்டு!!
எல்லா வளங்களோடும், நலங்களோடும்

வாழ்க பல்லாண்டு!!

மன அடுக்குகள்

ஓவியத்திலிருந்து சிதறி
உறைந்து போன நிறங்களாய்
என் மனது
சிலபிம்பங்கள்,
சில மயக்கங்கள்,
சில தேடல்கள்,
சில தவிப்புகள்,
சில தெளிவுகள் என
மனதின் அடுக்குகளெங்கும்
திரைகளாய்
வெவ்வேறு முகங்கள்..

யாரும் பார்த்திடா
அடுக்குகளில்
வடிகட்டப்படாது
வலியோடு மிதக்கிறதென்
சுயம்
நிர்வாணத்தை தேடுகிறேன் நானும்
உடைகளிணிந்து...
Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP