ஆகாயத்திற்கு அடுத்தவீடு

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் தமிழ் புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான திரு.மு.மேத்தா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

விருது பெற்ற ''ஆகாயத்திற்கு அடுத்த வீடு'' கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை


''கவிதையின் கதை''

அலங்கார வளைவுகளைத்

தாண்டிய பின்னும்

அரங்கிற்குள் நுழையத்

தயங்கி நின்றது கவிதை!

''உன்னைப்பற்றித்தான்

பேசுகிறார்கள்!

உள்ளே போ''

உபசரித்தார் ஒருவர்!

உள்ளே

நிற்கவும் இடமில்லா

நெருக்கடி!

அலட்டிக் கொள்ளத் தெரியாத

மேடைவரை நடந்துபோய்

மீண்டும் திரும்பி

இருக்கை தேடி

ஏமாற்றமடைந்தது!

சாகித்ய மண்டல

சண்ட மாருதங்கள்..

ஞானபீட

வாணவேடிக்கைகள்..

இசங்களைக் கரைத்து

ரசங்களாய் குடித்தவர்கள்..

தமிழ்

செத்துப் போய்விடக்கூடாதே

என்ற

கருணையால்

பேனாவைப் பிடித்திருக்கும்

பிரும்மாக்கள்...

ஒருவர் கூட

கவிதையை

உட்காரச் சொல்லவில்லை!

இடம் தேடும் கவிதையை

ஏறிட்டும் பார்க்கவில்லை!

சுற்றிச் சுற்றிப் பார்த்து

சோர்ந்த கவிதை

அரங்கிலிருந்து

வெளியே வந்தது!

விமர்சனத்தின்

கிழக்கு மேற்கு அறியாத

கிராமத்து ரசிகர் ஒருவர்

கேட்டார்:

''உன்னைப் பற்றித்தான்

விவாதம் நடக்கிறது..

நீயே வெளியேறுவது

நியாயமா?''

கவிதை அவரிடம்

கனிவுடன் உரைத்தது:

''அவர்களின் நோக்கமெல்லாம்

என்னைப் பற்றி

விவாதிப்பது அல்ல..

தம்மைப் பற்றித்

தம்பட்டம் அடிப்பதே!''

இடைவேளை

ஒன்றரை வருடங்களாக இயங்கினாலும் இதுவரை 101 பதிவுகளே பதிந்திருக்கிறேன். இணையத் தொடர்புக்கு பின் என்னுள் எழுந்த மாற்றங்கள் பல. நான் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை சரியானதாகவே இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. எப்போதாவது பதிவிடுவதற்கு முதல் காரணமாக நான் நினைப்பது எனது சோம்பேறித்தனமே. புத்தாண்டில் அதை களைவதாய் உத்தேசம். ஒரு கவிஞானாய் எனக்குள் ஒரு தேக்கம் இருப்பதை உணர்கிறேன். அதற்காகவே இந்த சிறிய இடைவேளை. எழுதுவதிலிருந்து வாசிப்பதிலிருந்து. ( இப்ப மட்டும் என்ன வாழுதாம் என்று கேட்பவர்களுக்கு நற நற :-) ).

மீண்டும் புதுப்பொலிவுடன் வருகிற தமிழ்ப் புத்தாண்டாம் ''தை'' திங்களில் இனிப்பான செய்தியோடு வருகிறேன்.

என் பங்கிற்கு ஒரு அறிவிப்பு

வேற எதாயாச்சும் எதிர்பார்த்து வந்து இருந்தீங்கனா நான் பொறுப்பு அல்ல:-)

இன்று தமிழ்மணத்தின் அறிவிப்பு பகுதியில் இடம் பெற்றிருந்த
பதிவில் வாசித்த போது என்னுடைய பெயரும் இருந்தது. அங்கே பின்னூட்டமிட வசதியில்லாததால் என் பதிவிலே என் எண்ணத்தை சொல்லிச்விடுகிறேன்.

//தமிழ்மணத்திலே திரட்டப்பட்ட ஒரு பதிவிலே சொல்லப்பட்டதுபோல, தமிழ்மணம் நியோ, பாலச்சந்தர் கணேசன், முத்துக்குமரன், வரனையான் ஆகியோரின் பதிவுகளை நீக்கவோ ஓரம் கட்டவோ எத்தருணத்திலும் முயலவில்லை என்பதைத் தெளிவாக இவ்விடத்திலே தெரிவிக்க விரும்புகிறது. //

நான் எந்த தருணத்திலும் தமிழ்மணத்தால் ஓரங்கட்டப்படுவதாக உணரவில்லை. வலைபதிய தொடங்கிய சில மாதங்களிலேயே நட்சத்திர வாய்ப்பை வழங்கியது தமிழ்மணம்தான் என்பதை இன்றும் நினைவு கூற விரும்புகிறேன்.

பொதுவாக அவதூறுகளை நான் பதிலளிப்பதில்லை என்பதோடு அதற்கு எதிர்வினை புரியாதிருப்பது அதனை நான் நிராகரிக்கிறேன் என்பதால்தான். என் பதிவுகள் விதிகளுக்குட்படாததாக இருந்தால் அதை நீக்க அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் மதிக்கவே செய்கிறேன்.

என்னுடைய நூறாவது பதிவில் சொன்னது போல் பதிவொழுக்கம் என்பது தனிமனித விடயம். அதற்கு திரட்டிகளோ இன்ன பிற அமைப்புகளோ பொறுப்பாகாது. எப்போதும் போல ''தமிழ்மணத்தில்'' தொடர்கிறேன் என்று தெரிவித்து கொள்கிறேன்.

பதிவுகள் தேவையா?? 100வது பதிவு

99 பதிவு எழுதி இருந்த எனக்கு சோதனை, மாநாடு கண்டான் ஆசிப் வடிவில் வந்தது. நேற்று 2.12.2006 துபாயில் நடைபெற்ற வலைபதிவர் சந்திப்பில் வாசித்த அல்லது பேசிய தலைப்புதான் ''பதிவுகள் தேவையா''.
இதை விட சொந்த செலவில் சூன்யம் யாராலும் வைத்துக்கொள்ள முடியாது :-).

பதிவுகள் தேவையா? என் பதில் நிச்சயம் தேவை. இன்னும் அதிகமாகவே பதிவுகள் வர வேண்டும் என்பதே என் விருப்பமும். இணையம் ஒரு சுதந்திரவெளி. கட்டுப்பாடுகளற்ற வெளி. கணினியும் ஆர்வமும் இருக்கும் அனைவருமே பங்கேற்கும் சாத்தியம் உள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு. இணையத்தின் வழியான கருத்துப்பரிமாற்றத்திற்கு பயன்படும் ஒரு வடிவம் வலைப்பதிவுகள்.

எழுத்தும், கருத்தும் ஒரு சாராருக்கு என்று இருந்து வந்த நிலையை இணையம் தகர்த்திருக்கிறது. எழுத்து அனைவருக்குமானது. இங்கு பல குரல்கள் இருக்கின்றன. பல பார்வைகள் இருக்கின்றன. பல சூழல்கள் இருக்கின்றன. அவற்றின் தேவைகளும் முக்கியமானவை. கவனம் பெறப்பட வேண்டியவை. பொது என்ற சொல் அனைத்தையும் உள்ளடக்கியது என்பதை குறிப்பது. ஆனால் இன்றய பொதுத்தன்மை என்பது அனைவருக்குமானது என்றில்லாமல் திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துவருகிறது. வரலாறு முதல் வாழ்வியல் வரை பன்முகத்தன்மை பிரதிபலிக்க, பன்முகத்தன்மையை அனுமதிக்கும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இன்றி ஆதிக்கம் செய்வதாகவே இருந்துவருகிறது.

இத்தகைய சூழலிலில்தான் கருத்தியல் தளத்தில் வலைப்பதிவுகள் முக்கியம் வகிக்கின்றது. அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளியிட ஏதுவானதாக இருக்கிறது. இங்கும் ஆதிக்க மனோபாவம் இருக்கத்தான் செய்கின்றது. தர நிர்ணயாளர்களவும், அங்கீகார மையங்களாகவும் தங்களை பாவித்து கொள்ளும் போக்கு இருக்கிறது. அதற்கான மறுப்புகளும், எதிர்வினைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

சுதந்திரம் இருக்கும் அளவிற்கு இதில் ''இடர்களும்'' இருக்கத்தான் செய்கின்றது. ஒரு ஆரோக்கியமான கருத்து பகிர்வுக்கு, விவாதங்களுக்கு என மிகச்சிறப்பாக வலைப்பதிவுகளை பயன்படுத்த முடியும்.

''கருத்தில் நேர்மையும் உண்மையும் இருந்தால் எதிராளியை உன் வார்த்தைகள் காயம் செய்யாது''
. ஆனால் கருத்தை கருத்தால் எதிர் கொள்ளாது கீழ்த்தரமான, மனித தன்மையற்ற வகையில் எதிர்வினை புரிவது என்று மிகவும் வேதனை கொள்ளும் வகையிலும் எதிர்வினைகள் நிகழ்ந்து வருகிறது.

பதிவுக்கான பின்னூட்டங்களாகவோ, கருத்தாகவோ இல்லாமல் பதிவருக்கான கருத்துகளாகவே அணுகும் முறையும் தொடர்ந்து வருகிறது. அறிந்தோ அறியாமலோ, இந்த சுழலில் பெரும்பாலோனோர் சிக்கிக்கொள்ளும் போக்கும் இருந்தும் வருகிறது. இந்த குறை களையப்பட வேண்டும். இதை நாம் அனைவரும் இணைந்து களைய வேண்டும். இங்கு தேவைப்படுவது ''மனமுதிர்ச்சியே''

நேர்மையாகவும் உண்மையாகவும் இயங்குவது, கீழ்த்தரமாக இயங்குவது இது எல்லாமே தனிமனிதனின் குணநலனே. வலைப்பூ என்ற வடிவத்திற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. ஒரு சில தனிமனித ஒழுக்க குறைவினர்களால் இந்த வலைப்பதிவுகளை அச்சத்தோடு அணுகத்தேவையில்லை. விலகியிருக்கவும் தேவையில்லை. ஏனெனில் வலைப்பதிவுகள் என்பதை அச்சப்படக்கூடிய ஒன்றாக்கும் பிம்பங்களும் கட்டப்படுகின்றன. அவைகளும் நிராகரிக்கத்தக்க ஒன்றே.


''அணுவைக் கொண்டு ஆக்கமும் செய்யலாம்
அழிவும் செய்யலாம்
. ''

பயன்படுத்துபவர் கைகளில் இருக்கிறது ஆக்கமும் அழிவும். அணு ஆயுதங்கள் ஆபத்தானவை என்பதற்காக யாரும் அணுவைப் புறக்கணிப்பதில்லை.

**

நூறாவது பதிவாக இணையம் மூலம் நான் பெற்ற அனுபவங்களை எழுதலாம் என்ற யோசனையில், அசைபோடலில் நாட்களை கடத்திக்கொண்டிருந்த்தேன். 100வது பதிவை நண்பர்கள் முன் வாசித்ததும் ஒரு இனிமையான அனுபவமே. இணைய அனுபவங்கள் அடுத்த பதிவில்
Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP