அளம் - சு.தமிழ்ச்செல்வி

நண்பர் அய்யனாரை வியாழன் அன்று சந்தித்த போது மூன்று புத்தகங்களை வாசிக்க எடுத்து வந்திருந்தேன். அதில் சு.தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய அளம் நாவலும் ஒன்று. நேற்று நள்ளிரவு வாசிக்க ஆரம்பித்து அதிகாலை 5 மணி அளவில் வாசித்து முடித்தேன். சமீபத்தில் வாசித்த சிறப்பான ஒரு நாவல். தமிழ் நாவல்களிலே அதிகம் பதிவு செய்யப்படாத ''பெண் உழைப்பை'' அழுத்தமாக விவரித்திருக்கும் நாவல். ஏறத்தாழ முப்பது வருடத்தை கதைக்களத்திற்குள் உள்ளடக்கியிருக்கிறது.

கிராமப்பொருளாதாரத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்திலும் பெண்களின் உழைப்பு மிக முக்கியமானது. பெரும்பாலான குடும்பங்கள் பெண்களின் உழைப்பின் காரணமாக கிடைக்கும் வருவாயைக் கொண்டே தங்கள் வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். நகரம் சார்ந்த நடுத்தர வாழ்க்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் பலருக்கு பெண்களின் உழைப்பு என்பது அதிகம் அறிந்திடாத ஒன்றாகும். கிராமப்புறங்களில் இருப்போருக்கு இதை நேரில் கண்டுணர வாய்ப்பு கிடைத்திருக்கும்.அளம் என்று குறிப்பிடப்படுவது உப்பளங்களே. தமிழன் பண்பாட்டில் உப்பு மிக முக்கியமானதொரு இடத்தை பிடித்திருந்தது. உப்பு வளத்தின் அளவாக கணக்கிடப்பட்ட ஒன்றாகும். முந்தைய காலத்தில் நெல்லுக்கு இணையாக இடம் பெற்றிந்த ஒன்றாகும். பண்டை மாற்றில் சம்பா நெல்லுக்கு இணையாக உப்பு இருந்தது. இந்த அடிப்படையில்தான் சம்பளம் என்ற சொல் உருவாகி இருக்கிறது( சம்பளம் = சம்பா + அளம்).

கதை நிகழும் இடத்தில் பார்வையாளனாக உலவ விடும் எழுத்தாற்றல் நாவலாசிரியருக்கு இருக்கிறது. திருத்துறைப்பூண்டி நகருக்கு அருகே உள்ள கோயில்தாழ்வு என்னும் இடத்தில் கதை நிகழுகிறது. மூன்று பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு கணவனின் துணையின்றி தனியாக வாழ்வில் போராடும் சுந்திராம்பாளையும், அவளது மூன்று மகள்களையும் மையமாகச் சுற்றி கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.பிறந்த பச்சிளங்குழந்தை அஞ்சம்பாள், மூன்று வயதான ராசம்பாள், ஏழு அல்லது எட்டு வயதான வடிவாம்பாள் அவர்களோடு கதை தொடங்குகிறது. வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாகத் திரியும் சுதந்திராம்பாளின் கணவன் சுப்பையன் கப்பல் வேலைக்கு போகிறான். வேலை செய்யாது இருந்த போது திட்டிக்கொண்டேயிருக்கும் அவளுக்கு அவன் பிரிந்து போவது பெரும் துயரத்தை தருகிறது. சுப்பையன் அவளை சமாதானப்படுத்தி செல்கிறான். சென்றவன் மறுபடியும் ஊர் திரும்பவேயில்லை. உயிருடன் இருக்கிறான இல்லையா என்றே தெரியாத நிலையில் என்றாவது ஒருநாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு வாழுகிறாள் சுந்திராம்பாள், மூன்றும் பெண் குழந்தைகளாக அதுவும் மிகவும் கருப்பாக இருப்பதால் எப்படி அவர்களுக்கு திருமணம் செய்விப்பது கூடுதல் துயரத்திற்குள்ளாகிறாள்.

வடிவாம்பாள்-பெரியங்கச்சி, பெரியமொட்டை; ராசாம்பாள் நடுக்கச்சி, அஞ்சம்பாள் - சின்னங்கச்சி, சுந்தராம்பாள் - சுந்தரம் என்று நாவலின் பெரும்பகுதிகளில் அழைக்கப்படுகிறார்கள்.

வறுமை வாட்டி வதைக்கும் இவர்களுக்கு வாழ்வின் பசிபோக்கும் உயிர்மருந்தாய் கேட்பாராற்று தானாய் வளர்ந்து கிடக்கும் பலவகையான கிழங்குகளே உணவுகளாக அமைந்துவிடுன்றன. நாவலில் வரும் பெரும்பாலான கிழங்கு வகைகள் நான் இதுவரை கேள்விப்படாத ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வகை கிழங்குகளையும் உணவாக மாற்றிக்கொள்ளும் நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிற்றது. அத்தனை வறுமையிலும் தான் இருக்கும் கிராமத்தை விட்டு புலம் பெயர மறுக்கும் ஒரு வைராக்கியம் மிகுந்த மனுசியாக இருக்கிறாள் சுந்தரம். இந்த பிடிவாதத்திற்கு காரணம் மண் மீதான நேசம் என்பதைக்காட்டிலும் வெளிநாட்டில் மாயமாகிப்போன தன் கணவன் தன்னை இந்த இடத்திலேதான் விட்டு விட்டு போயிருக்கிறான், அவன் திரும்பி வரும்போது தான் அந்த இடத்திலேயே இருக்க வேண்டும் சமூகம் ஏற்படுத்தி வந்த வரைமுறைகளை கட்டிக்காத்து விட வேண்டும் என்பதுதான்.
காலங்கள் உருண்டோட இரண்டாவது மகள் ராசாம்பாளும் வயதிற்கு வந்துவிடுகிறாள். வறுமையோடு இரண்டாவது பெண்ணிற்கும் திருமணம் செய்ததுவைக்க வேண்டும் என்ற பொறுப்பும், கவலையும் அவளுக்கு வந்துவிடுகிறது. இந்த சூழலிலும் அவள் ஒப்பாரி வவத்து முடங்கிடாது தைரியாமாய் சூழலை எதிர்கொள்ளும் தன் போராட்டத்தை தொடர்ந்துநடத்துகிறார். என்றாவது ஒருநாள் தன் கணவன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையை மட்டும் மனதிற்குள் வைத்துக்கொண்டு தன் வாழ்க்கையை நகர்த்துகிறாள். இரண்டு பிள்ளைகள் வயதிற்கு வந்தவுடன் வெளி வேலைக்கு தன் கடைசி மகள் அஞ்சம்பாளை ஒத்தாசைக்கு வாத்துக்கொள்கிறாள். இருபத்தி மூன்று வயதாகியும் திருமணமாகாமல் இருக்கும் வடிவாம்பாளுக்கு இறுதியாக வரன் வருகிறது, ஏறத்தாழ அவள் அப்பன் வயதில், அதே சமயம் நடுக்கச்சிக்கும் வரன் வந்துவிட இருவரின் திருமணத்தையும் ஒன்றாக நடத்தி வைக்கிறாள். திருமணமான மூன்றாவது மாதமே முத்த பெண் மூளியாகி வீட்டுக்கு வந்துவிட சிறிய மனநிம்மதிகளுக்கு பிறகு அவள் போராட்டம் மறுபடியும் தொடங்கி விடுகிறது.

கிட்டத்தட்ட நாவலின் பாதி வரைக்கும் அளம் என்னும் உப்பளத்திற்குள் நிகழாமால் அதனை விட்டி விலகியிருக்கும் கிராமத்திலேயே நகர்கிறது கதை. ஆனால் உப்பளங்களின் தாக்கம் மட்டும் மெல்லிய இழையாக தொடருகிறது. பிற்பகுதியில் உப்பளத்தில் கூலிக்கு உழைப்பதும், பின் சிறிய அளவிலான பாத்திகளை சொந்தமாக்கி கொண்டு உழைக்கிறார்கள். சாண் ஏற முழம் சறுக்கல் என வாழ்க்கை போராட்டம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சுந்திரம்பாள் உழைத்துக் கொண்டே இருக்கிறாள். அவள் உழைப்பிற்கான காரணங்கள் மட்டும் பரம்பரையாகத் தொடர்கிறது. முன்பு தன் குழந்தைகளுக்காக உழைத்தவள் இறுதியில் மகளின் குழந்தைகளுக்காகவும் சேர்ந்து உழைக்கிறாள்.
*
தங்கைகள் இருவரையும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பினை உணர்ந்தவளாக, வயதிற்கு மீறிய முதிர்ச்சியோடு வாழ்கிறாள் வடிவாம்பாள். அவளுக்கு எப்போது உற்ற்றதுணையாக நம்புவது ஆவுத்திகத்தி சாமியைத்தான். வயதிற்கு வந்த இரண்டு ஆண்டுகளாகி யும் திருமணம் செய்து வைக்கமல் இருப்பது குறித்து சுந்தரம் புலம்பும் போதும், உன்னை எத்தன தடவ சொல்லியிருக்கேன், இந்த பேச்சை எடுக்காதென்னு நடக்கறப்ப நடக்கும் என்று சொல்லுவதும், குறிப்பு(சோதிடம்) கேட்க போய் தோசம் இருப்பதாக சொன்னதாக சொல்லும் தாயிடம் இரூக்கிற நிலமையில இது வேறயா என்று வினவுவதும், சொன்ன தோசங்களை நிவர்த்தி செய்துவிட்டால் நல்லது நடந்துவிடுமென்றூ உறுதியாக சுந்திரம் நம்புவதுமாக மிகவும் எதார்த்தமாக படைக்கப்பட்டிருகிறது இவரது பாத்திரம். ஏமாற்றத்தை விட நிராகரிப்பின் வலி அதிகம் என்பதை உணர்ந்தவளாக தன்னைவிட மிக கருப்பாக இருக்கும் வரனைப் பற்றி மற்றும் இனி தேடுங்கள் என்று சொல்லிவிடுகிறாள். தங்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் அம்மாவோடு சண்டை போட்டு நெல் பயிரடுவதும் அது வளர்ந்து விளைச்சல் தரும் சமயத்தில் புயல் மழையால் அழிந்து போகின்றது. மறுபடியும் வறுமை. இரண்டாவது முறையாக குறிப்பு பார்த்துவிட்டு வரும் சுந்தராம்பாள் ஐப்பசி கழிஞ்சு கல்யாணம் நடக்கும்னு குறிப்புகாரர் சொன்னதாக கூறும்போது வழக்கமான பதிஅலை உதிர்த்துவிட்டு சென்றாலும் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமைந்திருக்கிறது. திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையின் மகிழ்வில் நீண்ட நாட்களாக தரிசாக கிடக்கும் தங்கள் நிலத்தில் மீண்டும் பயிரட தன் தாயை சம்மதிக்க வைத்து பயிருடுகிறாள். சிலவருடங்களுக்கு முன்பு வந்ததை விட மிக அதிகமான புயல் மழையால்(புயல்மழையின் விவரிப்பு ஆழிப்பேரலைகளைப் போன்று அழிவுகளை ஏற்படுத்துவாதாக விவரிக்கப்பட்டிருக்கிறது நாவலில், அவ்வளவு கடுமையான சேதங்கள்மறுபடியும் அழிந்து போவதும், தன் துரதிர்ஷ்டத்தை எண்ணி நொந்துகொள்கிறாள். .தன்னைவிட அதிக வயதுடைய மணமகனுக்கு நிச்சயக்கபட்ட பின் தன் நடுத்தங்கையோடு ப்பேசும்போது தாத்தாவை கட்டிவிஅக்க போறாங்க என்றுணர்த்தும் பாட்டைப் பாடுகிறாள் இருந்தாலும் அந்த திருமணத்திற்கும் தன்னை தயார் செய்துகொண்டுவிடுகிறாள் மனதளவில். கணவனை இழந்த பின்பு தாய்வீட்டிற்கு வந்த பின்பு சிறிதுகாலம் முடங்கிகிடக்கிறாள். பிறகு சொந்தமாக சிறிய அளம் வாங்குகிறாள். தன் காலில் நிற்க வேண்டும் என்ற தீராத வேட்கையை மட்டும் மனதில் எப்போதும் சபதம் கொண்டிருக்கிறாள்
*
நடுக்கச்சி என்னும் ராசாம்பாள் நாவலில் வடிவாம்பாளின் நிழலாகவே வருகிறாள். அவள் போலவே தாய்க்கு துணையாக உழைக்கிறாள். ராசாம்பாளின் உழைப்பை நாம் வடிவாம்பாளின் உழைப்பைக் கொண்டு நாமே தீர்மானித்து கொண்டிருக்கும்படியே நாவலாசிரியர் கையாண்டிருக்கிறார். அக்கா திருமணம் நிச்சயமான சமயத்திலே இவளுக்கும் திருமணம் ஏற்பாடாகிவிட சிறுது காலத்திற்கு மகிழ்ச்சியான கவலையும் வறுமையுமற்று வாழ்கிறாள். அன்பான கணவன் அமைந்துவிட்டான் என்று மகிழ்வோடு வாழ்ந்து வரும் வேளையில் மூன்றாவது குழந்தை பிறந்த நேரம் அவள் வாழ்வில் மறுபடியும் சூறாவளி சுழற்றியடிக்கிறது. அவள் கணவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட அவன் கட்டிய தாலியை கோவில் உண்டியலில் போட்டு கழற்றிப்போட்டு விட்டு தாய் வீட்டிற்கு வந்துவிடுகிறாள். சிறுவயதில் காடுகளுகளில் மேடுகளில் உழைத்தவள் இப்போது உப்பளத்தில் உழைக்கிறாள்.
*
நாவல் தொடங்கும் போது முப்பது நாள் குழந்தையாக இருக்கும் அஞ்சம்பாவின் மெளனங்கலந்த உழைப்பினால் நாவலில் என்னை மிகவும் பாதித்தவள். நாவலாசிரியரின் கதைப்பார்வையை அஞ்சம்பாவின் கண்களினூடாகவே நான் காண்கிறேன். சின்னஞ்சிறு வயதில் வீட்டின் வறுமை போக்க உப்பளம் சென்று உழைக்க நினக்கும் மனது இவளது மனது. அங்கு அறிமுகமாகிறான் பூச்சி. உப்பளத்தில் பெண் சிறுமிகளை வேலைக்கு எடுத்துகொள்ள மாட்டார்கள் என்று அவன் கூற உன் காச்சட்டையை(கால் சட்டையை) எனக்கு தா நான் போட்டுகிறேன் என்று அவள் கேட்கும்போது என்னிடம் பின்னாடி ஓட்டையாயிருக்கும் ஒரே கால்சட்டைதானே இருக்கு என்று சொல்லியவன் சரி நான் தருகிறேன் என்று சொல்லித் தருகிறான் மறக்காமல் மறுநாள் அந்த ஓட்டையைத் தைத்து. அஞ்சம்பா டவுசர் சட்டௌயிலும், இவன் கோவணத்தோடும் சென்று வேலை செய்கிறார்கள். அந்த இடந்தில் மலர்ந்த அன்பு இறுதிவரை தொடர்கிறது. இரண்டாவதாக வரும் புயலின் காரணமாக பூச்சியின் குடும்பம் இடம் பெயர்துவிட இருவரும் வேறு வழியின்றி பிரிகின்றனர். மிகவும் குறைவான பேச்சுகளுடனே வளர்ந்த அன்பு அவள் வயதிற்கு வந்த பிறகு அவள் மெளனியாகிவிடுகிறாள். இருவருக்குமிடையே சொல்லப்படாத வார்த்தைகளுக்குள் அன்பு அழியாது இருக்கிறது. பிச்சை தன் தாயினை மீறி அவளை மணந்து கொள்ளும் பொருட்டு அவளிடம் மெளனம் கலைத்து எங்காவது ஓடீப்போய் பொழச்சுக்குவோமென்று சொல்லும் போது ''சொல்லாம கொள்ளாம ஓடிப்போற பொண்ணு நான் இல்ல. எங்கம்மா அப்படி வளக்கல'' என்று அவனிடம் சொல்லிவிட்டு உழைக்க செல்லும் தன் தாயுடனும் அக்காகளுடனும் சேர்ந்து கொள்வதோடு முடிகிறது நாவல்.

இந்த நான்கு கதாபாத்திரங்களைத் தவிர தன் தம்பி குடும்பத்திற்கு முடிந்தவரை உதவிடும் கணேசன், அஞ்சம்பா மீது அன்பு கொண்டிருக்கும் பூச்சி, வடிவின் கணவன்களாக வரும் வேலய்யன், முத்துசாமி, முதலில் அன்பான கணவனாகவும், பின்பு பெண் சுகம் தேடிப்போகும் ராசாம்பாளின் கணவன், சுந்தராவிற்கு கண்ணில் எறும்பு கடுத்துவிட மருந்தாக பிள்ளைப்பாலை பீச்சியடிக்கும் அந்த பெண்கள் என கிராமத்து மனிதர்களும் அளத்தில் அளவோடு இருக்கிறார்கள்.

அளம் பல கேள்விகளை வாசகனுக்குள் எழுப்பும் வல்லமை கொண்டது. அவைகளுக்கான விடைகளை நாம் தேடுவதே உண்மையானதாக இருக்கும்.

உப்பைப் போன்று கண்களுக்கு புலப்பாடத பெண் உழைப்பை உணர்வின் மூலமாக உறங்கிக்கிடக்கும் இதயத்துற்குள் பாய்ச்சும் ஒரு உன்னத படைப்பு ''அளம்''

அம்முலு பூனை

இருள் கவிந்திருந்த இரவுப்பொழுதில் விடாது மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகளைத் தவிர நிறைந்து காணப்பட்ட மரங்கள் எல்லாம் புதுமழையில் நனைந்து புத்துணர்ச்சியோடு காற்று வீசிக்கொண்டிருந்தது.

எண்களாக இல்லாமல் வீடுகளின் பெயர்களாலே அடையாளம் காணப்படும் மரங்கள் அடர்ந்த பசுமை நகரம்.பெய்த மழையில் மின்சாரம் தடைபட்டிருக்க விளக்கு வெளிச்சத்தில் விழித்துக் கொண்டிருந்தது கோவில் தெரு பிருந்தாவனம் வீடு. பக்கத்துவீடு உறக்கத்திற்கு சென்றுவிட ஒருவிதமான கலவர முகத்தோடு கீதா! ஓயாத பூனை உறுமல். முதன்முறையாய் இந்த அகால நேரத்தனிமை. இருளின் சூழலில் எந்த புதிய ஒலியும் அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.
ஏதோ சிந்தனையிலிருந்தவளை தொலைபேசி மணி அழைப்பு கலைத்தது.

கீதா! கணவனின் குரல்,
எப்ப வருவீங்க?
வழியெல்லாம் மழை, நான் வர இன்னும் கொஞ்ச நேரம் ஆகும், காத்திருக்காத!
நீ தூங்கிடுமா.
சரிங்க! ஏமாற்றமாகிப்போனது கீதாவிற்கு.

பயந்த சுபாவமான கீதாவிற்கு இந்த அனுபவம் புதிதாகவும் சிரமமாகவும் இருந்தது. விடாது பாடிய சுவாமி பாடல்கள் அவளுக்கு ஒரு தைரியியத்தை கொடுப்பதாக இருந்தது.

மாடி அறையிலிருந்து உர் உர் என உறுமல் சத்தம்! ஒரு மாதமாக வாசம் செய்யும் பூனையின் சத்தமது. இரவின் இருளும் தனிமையும் படபடப்பை அதிகரிக்க தானிருந்த அறையினை தாழிட்டு படுத்துக்கொண்டாள்.

புதிதாக இரண்டு பூனைகளை பிரசவித்திருந்த பூனை தூங்காது உறூமிக்கொண்டே இருந்தது. உறங்கிவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்களின் பூனைக்கு கீதாவின் மாடி வசதியாக விட்டது. பகலில் மாடிக்குப் போகும் போதும் கீதாவை பார்த்து உறும, மாடிக்கு போவதையே தவிர்த்து வந்தாள் கீதா!. பூனை மீது பயம் என்றாலும் குட்டிப்பூனைகளை கண்டுவிட ஒரு ஆவல் அவளுக்குள்.

விடிந்ததும் ஜன்னல் வழியாக தாய்ப்பூனை வெளியே சென்று விட்டது. வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு மாடிக்கு போனாள் கீதா. இரண்டு குட்டியும் நன்கு தூங்கிக்கொண்டிருந்தது. சாம்பல் வெள்ளை நிறத்தில் ஒன்றும் கருப்பு வெள்ளை நிறத்தில் ஒன்றும் இருந்தன. தூரத்திலிருந்தே பார்த்தாள் அதுவும் தாய்ப்பூனையின் உறுமல் ஏதும் இல்லாத தைரியத்தில்.

எப்போதும் ஒரு மெல்லிய, இனிமையான உணர்வு ததும்பி இருக்கும்படி வைத்துக்கொண்டாள் அவள் வீட்டை. வீணையும், பாட்டும் தெரிந்திருந்தால், அந்த பகுதி குழந்தகளுக்கு சொல்லிக் கொடுத்து வந்தாள். எப்போதும் இருபது பேருக்கு குறையாதிருக்கும் அவளது வகுப்பில்.
கண்டிப்பும் கனிவும் இருப்பதால் குழந்தைகளுக்கும் அவள் மேல் பிரியம். விளையாடி விட்டு அப்படியே வகுப்புக்கு வேர்வை வழிய வரும் பிள்ளைகளை தன்னருகே அழைத்து, சேலைத்தலைப்பால் துடைத்து விடுவாள். ஏதோ ஒரு திருப்தி கிடைப்பதாக உணர்வு அவளுக்கு இப்படிச் செய்யும் போதெல்லாம்.

மாடிக்குப் போகும் போதெல்லாம் சில நிமிடம் பூனைக்காக செலவளிக்க ஆரம்பித்துவிட்டாள். முதன் முதலாக குட்டிப்பூனை கண் திறந்து பார்க்கையில் அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அருகில் போகாமல் தூரத்திலிருந்தே பூனையின் அசைவினை ரசித்து விட்டு போனாள். இந்த புது அனுபவம் அவளுக்கு மகிழ்வைத் தந்திருந்தது

ஒருநாள் தாய்ப்பூனை குட்டிகளை எல்லாம் தூக்கிக் கொண்டு அடுத்த வீட்டுக்கு போய்விட்டது. பிரசவம் பார்க்க மட்டும் நம்ம வீட்டுக்கு வந்திருக்கு போல இந்த பூனை என்று நினைத்தவாறே வேலையில் ஆழ்ந்தாள். உறுமும் பூனை போய்விட்டதால் இனி பயமில்லை என்று மகிழ்ந்தாலும், அந்த குட்டி பூனைகளை பார்க்க முடியாது என்பது ஒரு விதமாய் அழுத்தியதாலோ என்னவோ சட்டென்று முகம் வாடிவிட்டது.

மாடிக்குப் போகும் பேதெல்லாம் பூனையிருந்த தடங்களின் மீது அவள் கண் படாதிருந்ததே இல்லை. மாதம் ஒன்று ஓடிவிட்டது. இரண்டு குட்டியில் ஒரு குட்டி காணமல் போய்விட்டது, சாம்பல் நிற குட்டி மட்டும் இருந்தது. ஏதோ சிறு குழந்தை சத்தம் போல் கேட்க கதவை திறந்து வந்து பார்த்தாள். குட்டி பூனை தனியாக வாசற்படியருகே நின்றது. அதன் சாந்தமான முகம் பூனைகள் குறித்தான அவள் அச்சத்தை நீக்குவதை போல இருந்தது. மிகவும் சிறியதாக கையளவே முகம் கொண்டிருந்த பூனைக்குட்டியை பார்த்ததுமே ஒரு சந்தோசம் அவளுக்குள் அது சன்ன குரலில் மியாவ் மியாவ் என சொல்ல மழலைச் சொல் கேட்டது போன்றே பூரிப்பு. சமயலறையிலிருந்து பால் கொண்டு வந்து சிறிய கிண்ணத்தில் வைத்து கொடுத்தாள். குட்டிப்பூனை அதை சமர்த்தாக குடித்தது.

இன்னிக்கு குட்டிப்பூனைக்கு பால் கொடுத்த்தேன். அப்படியே குடிச்சிட்டது. குழந்தை போல கீதா விவரிக்க புன்முறுவலுடன் கேட்டுக்கொண்டிருந்தான் அவள் கணவன்.

குட்டிப்பூனைக்கு இப்போது தினந்தோறும் பால் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. பசியெடுத்தால் கதவருகே வந்து மியாவ் மியாவ் என சத்தம் கொடுக்கும். பூனையின் மொழி அவளுக்கு புரியத் தொடங்கிவிட்டது. பால் குடித்து பழகிவிட்ட குட்டிப்பூனை அவள் அருகே வந்து வாலை ஆட்டிக் கொண்டு நின்றது. குட்டிப்பூனையின் ரோமங்கள் அழகாக மெதுமெதுவென்று இருக்க அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டாள். வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு பூனையின் வாலருகே கையை கொண்டு போனாள். குட்டி எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மெளனமாய் இருக்க ஒற்றை விரலால் வாலை நீவீ விட்டாள். மிக மிருதுவான வால், இங்கும் அங்கும் ஆடிக்கொண்டிருந்தது. குட்டிப்பூனை அவளின் பயம் போக்கி ஒரு நேசம் விதைத்திருந்தது. ஒரு வாரத்தில் குட்டிபூனையின் முதுகைத் தடவித்தரும் அளவிற்கு சிநேகம் வளர்ந்து விட்டது.காலை டீயூசன் ஆரம்பிக்கும் முன் வாசலுக்கு வருவாள். அதே நேரம் சரியாக குட்டிப்பூனை புதிதாக பிறந்த இன்னொரு பூனையோடு வந்து விளையாட ஆரம்பித்துவிடும். ஆட்டம் முடிந்து களைப்பு வந்தவுடன் ஒரு பார்வை இவளைப்பார்த்து. அதன் பார்வையை புரிந்து கொண்டு அவளும் பால் ஊற்றிவிடுவாள். கொலுசு சத்தம் கேட்டவுடன் குட்டிப்பூனை ஓடி இவளருகே வர இவளுக்கோ பேரானந்தம், குட்டிப்பூனையோடு சேர்ந்து அவளுடைய வயது பின்னோக்கி போனது.

வீட்டுக்காரர்கள் பூனைக்கு அசைவ உணவு போட்டாலும் இப்போது பாலுண்ணுவது தினசரி நிகழ்வாகிப்போனது. டீயூசனுக்கு வந்த சிறுமி பூனையை லாவகமாக தூக்கி மடியில் வைத்து கொஞ்சி விளையாடியது இவளக்குள் ஒரு குதூகலத்தை ஏற்படுத்தியது, இவள் கண்களில் விரிந்த ஆச்சர்யத்தை பார்த்துவிட்டு, என்ன டீச்சர் பூனையை தூக்கணுமா என்று கேட்டாள்.

அவளுக்கு தூக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது, பூனையின் உடம்பு எப்படி இருக்கும், எலும்பு சதை எல்லாம் இவ்வளவு சின்னதா இருக்கே, அதை தூக்கினா வலிக்குமா, எப்படி பிடிக்கணும்னு தெரியாதே, துள்ளி ஓடிடுமா என ஏராளமாய் மனதிற்குள் ஓட, அவள் கைகளில் பூனையை கொடுத்தாள். இலவம் பஞ்சு போல மேனி, பொசுபொசுவென்று அழகிய ரோமம், மெல்ல தடவிப்பார்க்கையில் தட்டுப்படும் எலும்பு, முதன் முதலாய் பூனையை தூக்கி வைத்திருப்பது அவளுக்கு மகிழ்வையும், வீரத்தையும் தந்தது போல கலவையான உணர்வைத் தந்தது. அம்முலு என்றாள். வெடுக்கென்று குட்டீப்பூனை திரும்பி பார்த்தது. அம்முலு அம்முலு என்று ஒவ்வொரு முறை கூப்பிடும் போது திரும்பி பார்த்தது அவளிடம் ஓடி வந்தது.


வீட்டு வேலைக்கு வந்திருந்த பெண்ணிற்கு வீட்டு பின்புறத்திலுல்ள முருங்கை மரத்திரலிருந்து ஐந்தாறு முருங்கைகாய்களை பறித்து தந்தாள். நீண்ட நாட்களாக கீதாவிடம் வம்பளக்க வாய்ப்பு தேடியவளுக்கு இதைப் பார்த்துகொண்டிருந்த வீட்டுகாரி எப்படி நீ அவளுக்கு தரலாம் என்று சண்டைக்கு வந்துவிட்டாள், அதிர்ந்து பேசிடாதா கீதாவிற்கு குரலுயர்த்தி பேசும் வீட்டுக்காரியின் பேச்சு கோவத்தை ஏற்படுத்திவிட்டது. அவளுக்கு தந்ததால் என்ன என்றூ திருப்பிக்கேட்க, பாட்டு சொல்லி கொடுக்கிற டீச்சருக்கு எப்படி நடந்துகிணம்னு தெரியலையே என கண்டபடி பொரிந்து தள்ளிவிட தாளாத வேதனை. மூதாதையர்களும் அவளது வசைபாடலில் தப்பவில்லை,

வீட்டுக்காரியின் ஆவேச பேச்சு கீதாவுக்குள் ரணத்தை ஏற்படுத்தி விட்டது. பத்து வருசமா இதே வீட்டில் இருந்தாலும் எந்த சச்சரவுக்குள்ளும் தலையிடாத தனக்கு நேர்ந்ததை எண்ணி வேதனையில் அமிழ்ந்து போனாள்.

மறுநாள் காலை டீயூசன் சீக்கிரம் ஆரம்பித்துவிட அம்முலு வாசலைச் சுத்தி வந்து எட்டிப்பார்த்தது, உள்ளே கீதா பாடம் நடத்திக்கொண்டிருக்க வாசலில் படுத்துகொண்டு காத்திருந்தது அவள் வருகைக்காக. எட்டு வருடங்களாக அருகருகே குடியிருந்தும் தன்னை புரிந்து கொள்ளத வீட்டுக்காரிக்கும், பிறந்து கொஞ்ச நாளே ஆனாலும் வகுப்பெடுப்பது தெரிந்து முழுமையாக இரண்டு மணி நேரம் வகுப்பு முடியும் வரை சத்தம் ஏதும் கொடுக்காமல் காத்திருந்த அம்முலு அவளுக்குள் ஏராளமான செய்திகளை சொல்லியாதாக உணர்ந்தாள்.எந்த சச்சரவுகளும் இல்லாதது போலவே கீதாவின் காலைச்சுற்றிக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்தது அம்முலு பூனை!

வைக்கம் வீரரா பெரியார்

பெரியார் வலைதளத்தில் வந்த என் கட்டுரை. சேமிப்பாக இங்கு

தந்தை பெரியாரின் நீண்ட நெடிய சமூகநீதி போராட்ட வாழ்க்கையில் வைக்கம் போராட்டம் (அ) வைக்கம் சத்யாகிரகம் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியமைக்காக வைக்கம் வீரர் என்று குறிப்பிடப்பட்டவர் பெரியார். ''வைக்கம் வீரராக'' பெரியாரை ஏற்க ஒருசிலருக்கு மட்டும் முடியாது இருக்கிறது. அவர்கள் யாரென்பதும் அவர்களின் பின்புலம் என்னவென்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வைக்கம் போராட்டத்திற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இந்த போரில் பங்காற்றியவர்கள் மிக அதிகமானோர். அவர்களில் முக்கியமானவர்கள் டி.கே.மாதவன். கே.பி.கேசவ மேனன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், தந்தை பெரியார், ஸ்ரீ நாரயண குரு, குரூர் நீலகண்டன் நம்பூதரி, மகாத்மா காந்தி. வைக்கம் போராட்டம் பலர் பங்கேற்று ஓராண்டுக்கு மேல் நீடித்து, பலநிலைகளை கடந்தே அதன் வெற்றியை அடைந்திருக்கிறது. இப்போராட்டத்தின் வெற்றி எந்த ஒரு தனிமனிதனுக்காக கிடைத்த வெற்றி இல்லை. பலருக்கும் பங்கிருக்கிறது. இந்த வெற்றி பெரியார் ஒருவரது தனிப்பட்ட வெற்றி என்று பெரியாரைப் பின்பற்றும் எவரும் சொல்லமாட்டார்கள். அதே சமயம் பெரியாரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதையும், அவரின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதையும் அனுமதிக்கவும் மாட்டான்.

1924ஆம் ஆண்டு மார்ச் 30 தேதி துவங்கிய இந்த போராட்டம் 1925நவம்பரில் முடிவு பெற்றது. எதற்காக இந்த போராட்டம். கோவில் நுழைவு போராட்டமா? இல்லை. கோவிலைச் சுற்றி இருந்த தெருக்களிலே நுழைய உரிமை மறுக்கப்பட்ட தீண்டத்தகாதவர்களெனவும், நெருங்கக்கூடாதவர்களென்று சமூதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த ஈழவர், புலையர் மக்களுக்காக சாலைகளை பயன்படுத்த உரிமை வேண்டும் என்று நடத்தப்பட்ட மாபெரும் போராட்டம். இந்த புரிதல் மிக அவசியமானது. ஏனென்றால் கோவில் நுழைவிற்கும், சாலை நுழைவிற்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. கோவில் நுழைவு என்பதில் மதம் சம்பந்தப்பட்டிருக்கிறது. சாலை நுழைவில் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டிருக்கிறது. இரண்டையும் ஒன்றோடொன்று குழப்பிக்கொள்வது போராட்டத்தின் நியாயங்களை புரிந்து கொள்ள மறுப்பதாகும். இந்த இடத்தில் ஒரு சிறு தகவல்: தமிழகத்தின் முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியவரும் தந்தை பெரியாரே.

வைக்கம் சத்யாகிரகம் 30.3.1924 ஆம் அன்று தொடங்கியது. போரட்டத்தின் பகுதியாக கே.பி.கேசவமேனன், டி.கே.மாதவன், ஜார்ஜ் ஜோசப் என ஒவ்வொரு முக்கிய பிரமுகர்களும் தொடர்ச்சியாக கைதாக பெரியார் வைக்கம் போராட்டத்தில் இணைந்து கொள்கிறார். சிறையிலிருந்த ஜார்ஜ் ஜோசப் அவர்களின் வேண்டுகோளை அடுத்து பண்ணைபுரத்திலிருந்த பெரியார் உடனடியாக தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு தான் திரும்பி வரும் வரை காங்கிரசு தலைவர் பொறுப்பை ராஜாஜி அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கடிதம் எழுதிவிட்டு ஈரோடு திரும்பி, நாகம்மை அம்மையாரிடம் சென்னை செல்வதாக கூறிவிட்டு வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். வைக்கம் சென்ற அவரை திருவிதாங்கூர் அரசாங்கத்தின் சார்பாக தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்கிறார்கள். வேண்டிய சவுகர்யங்களை செய்து தரும்படி அரசர் பணித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.( திருவிதாங்கூர் அரசர் டில்லி செல்லும் பொழுது ஈரோட்டிலுள்ள பெரியாருக்கு சொந்தமான சத்திரத்தில் தங்கி ஓய்வெடுத்து செல்வது வழக்கம்).

பெரியார் வந்து சேர்ந்தவுடன் தொய்வு நிலையிலிருந்த போராட்டத்திற்கு புத்துயிர் கிடைக்கிறது. பல்வேறு இடங்களுக்கு சென்று தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை கடுமையாக மேற்கொள்கிறார் பெரியார். பெரியாரின் பேச்சிற்கு பெரும் வரவேற்பும் சத்யாகிரக போராட்டத்திற்கு ஆதரவும் கிடைத்தது. பெரியாரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக கைது செய்யப்பட்டு அருவிக்குத்தி என்னும் இடத்தில் ஒரு மாதம் சிறை வைக்கப்பட்டார். இந்த சமயத்தில் நாகம்மையாரும், இன்னும் சில தோழர்களும் வைக்கம் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள். நாகம்மை அவர்கள் பல இடங்களில் பிரச்சாரம் செய்து போராட்டத்திற்கு ஆதரவும் நிதியும் திரட்டினர். போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் மனைவியர்களுடன் இணைந்து சத்யாகிரகத்தை தொடர்ந்தனர்.19.5.1924 ஆண்டு அவர்கள் பங்கு பெற்ற போராட்டம் நடைபெற்றது. அப்போதிருந்த இந்திய சமூக மனோபாவத்தை கருத்தில் கொள்ளும் போது இவர்களின் போராட்டத்தின் முக்கியதுவம் விளங்கும்.

சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின் பெரியார் மீண்டும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கிராமம் கிராமாக சென்று போராட்டத்திற்கு ஆதரவும் நிதியையும் திரட்டினார். இடையே ராஜாஜி மற்றும் சீனிவாச அய்யாங்கார் சென்னை திரும்ப அழைத்த போதும் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் காரணமாக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சமயத்தில் திடீரென்று திருவிதாங்கூர் மகாராஜா மரணம் அடைந்து விட மகாராணியார் அரசு பொறுப்பை ஏற்கிறார். சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் விடுவிக்கப்படுகிறார்கள். கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தீண்டத்தகாத மக்களை அனுமதிக்கும் மனநிலைக்கு ராணியார் வந்துவிடுகிறார். ஆனால் சனாதானிகள் அதை கடுமையாக எதிர்க்கின்றனர். அதன் பிறகு பல்வேறு தடைகளை கடந்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் மக்கள் நுழையும் உரிமை பெற்றனர். அதிலும் ஒரு தெருவில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

* * *

பெரியாரின் வைக்கம் போராட்டமும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஒரு வரலாறு. வைக்கம் வீரர் என்று அவரது சீடர்களால் உயர்த்தி சொல்லப்பட்டார் என்பது அதில் முக்கியமான குற்றச்சாட்டு. சோ.ராமசாமியின் துக்ளக் தொடங்கி ம.வெங்கடேசனின் ''ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்'' வரை அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இவை உண்மையான விமர்சனமாக இருந்தால் வரவேற்கலாம். அவை வெறும் காழ்ப்புணர்வு பிரச்சாரங்களாகவே இருப்பதினால் அவை எதிர்க்கப்படுகின்றது, நிராகரிக்கப்படுகின்றது. பெரியாரின் பேச்சினை அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைத்து மேற்கோள் காட்டி, இதுதான் உங்கள் பெரியாரின் யோக்கியதை என்று காட்ட முற்படும் அவரது அறியாமையை எண்ணி வருத்தப்படவே வேண்டி இருக்கிறது. தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று கூறும் அவரின் இந்த விமர்சன புத்தகம் பாரதிய பார்வர்ட் பிளாக் (முருகன் ஜி :-)) சார்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் பின்னணி என்னவென்பதும், எதற்காக ம.வெங்கடேசன் இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இது குறித்து விவாதிக்கும் முன் பல முக்கியமான செய்திகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வைக்கம் போராட்டத்தின் தொடக்கம், அதில் பங்கு பெற்றவர்களின் பங்கு குறிப்பாக அவர்கள் போராட்டத்தின் எந்த காலப்பகுதியில் பங்கேற்கிறார்கள் என்பதும், அவர்களின் சிந்தனை போக்கு என்னவென்பதையும் தீவிரமான வாசிப்புக்கும் ஆய்வுக்கும் உட்படுத்துதல் மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் காந்தியடிகளை மையமாக வைத்து ஏராளமான சர்ச்சைகள் இந்த போரட்டத்தை தொடர்புபடுத்தி இருக்கிறது. சிலரால் மகாத்மாவின் நிலைப்பாடு மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்டிருக்கிறது. சிலரால் பாராட்டவும் பட்டிருக்கிறது. ம.வெங்கடேசன் அவர்களின் விமர்சனமும் மகாத்மாவின் பங்கையும், காங்கிரசின் பங்கையும் மையமாக வைத்து எழுப்பப் பட்டிருக்கிறது. அவரைப் பொறுத்த வரையில் வைக்கம் போராட்டம் என்பது காங்கசின் போராட்டம், போராட்டத்தின் வெற்றி மகாத்மாவினுடையது, பெரியார் அப்போராட்டத்தில் பங்கு பெற்றவரில் ஒருவர் என்ற அளவுதான். இதே விமர்சனத்தைதான் இலக்கியவாதி ஜெயமோகனும் ''நாராயணகுரு'' என்னும் புத்தகத்தில் நாரயணகுருவை பற்றி அறிமுகம் செய்யும் பகுதியிலும் சொல்லியிருக்கிறார்.

வைக்கம் போராட்டத்தில் மிகத் தீவிரமாக செயலாற்றியவர்களுள் முக்கியமானவர் திரு.டி.கே.மாதவன் அவர்கள். இவர் ஸ்ரீ நாரயணகுருவின் மிக நெருக்கமான சீடராவார். எஸ்.என்.டி.பி. யோகம் என்னும் மையத்தின் செயலாளராக பணியாற்றியவர். ஈழவ மக்களின் ஆன்மீகத்தலைவராக விளங்கியவர் திரு.நாரயணகுரு. அவர் வெறும் ஆன்மீகத்தலைவர் மட்டும் அல்ல. சமுதாயத் தலைவரும் ஆவார். ஈழவ மக்கள் சமூக அளவில் வளர்ச்சி பெற கல்வியும், பொருளாதார வளர்ச்சியும் மிக முக்கியமான தேவைகள் என்று வலியுறுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல் அதை செயலிலும் காட்டிய முக்கியமான ஒரு தலைவர். இன்றைய கேரளாவில் ஈழவ மக்களை தவிர்க்க முடியாத, சமூக அரசியல், பொருளாதார சக்தியாக உருமாற அடித்தளமிட்டவர் ஆவார். வைக்கம் போராட்டத்திற்கான இவரது ஆதரவு அப்போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பது உண்மை.

சுதந்திர போராட்ட காலத்தில் மக்களின் நலன்களுக்காக போராடுபவர்கள் ஏதாவது ஒருவகையில் காங்கிரசோடு தொடர்பு கொள்ளும் ஒரு சூழல் நிலவி வந்தது என்பது வரலாறு. காந்தியின் வருகைக்கு பிறகு இது தவிர்க்க முடியாது என்கிற அளவில் இருந்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய செய்தியாகும்.

ம.வெங்கடேசன் போன்றோர் முன்வைக்கும் வாதங்களான காந்திக்கும், காங்கிரசிற்கும் வைக்கம் போராட்டத்தில் பங்கு உண்டு என்பதை முற்றிலும் நிராகரிக்க முடியாது. நிராகரிக்க வேண்டிய தேவையும் இல்லை. காங்கிரசுக்கும் வைக்கம் போராட்டத்தில் பங்கு உண்டு.

1921ல் திருநெல்வேலியில் காந்தியடிகளை சந்தித்த டி.கே.மாதவன் வைக்கம் போராட்டத்தின் அவசியம் குறித்தும், தீண்டாமை ஒழிப்பு குறித்தும் பேசினார். காந்தியடிகளும் தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்தார். 1923ல் காகிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வைக்கம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள பிரதேச காங்கிரஸ் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. கேரள பிரதேச காங்கிரஸின் தலைவராக இருந்த திரு.கே.பி. கேசவமேனன் தலைமையில் இதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. இதற்காக வைக்கத்தில் சத்யாகிரக ஆசிரமும் ஏற்படுத்தப்பட்டது.

காந்தி இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தந்தார் என்பது ம.வெங்கடேசனின் வாதம். இதற்கு ஆதரமாக 19.3.1924 காந்தி அவர்கள் கேசவ மேனனுக்கு எழுதிய கடிதத்தை ஆதராமாக காட்டுகிறார்.(ம.வெங்கடேசனின் புத்தகம் பக்கம்162-163). ஆனால் 6.4.1924 ஆண்டு காந்திக்கு கேசவமேனன் ஒரு தந்தி ஒன்றை அனுப்புகிறார். அதன் காரணம் முக்கியமானது. காந்தியடிகள் சத்யாகிரகத்தை நிறுத்த முயற்சி மேற்கொள்கிறார் என்பதை அறிந்து அதை விளக்குவதற்காக அனுப்பப்பட்ட தந்தி. அந்த தந்தி வைக்கம் போராட்ட வரலாறு என்னும் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதன் பிரதியை கீழே தந்திருக்கிறேன்.

கேசவமேனனின் தந்தி.

ம.வெங்கடேசன், போராட்டத்திற்கான காந்தியின் ஆதரவை நிரூபிப்பதற்காக 19.3.1924தேதியிட்ட கடிதத்தை ஆதரமாக காட்டுகிறார். ஆனால் போராட்டத்தை நிறுத்த கோரும் காந்தியின் மனமாற்றத்தை (அ) தடுமாற்றத்தை 6.4.1924 தேதியிட்ட கேசவமேனனின் தந்தி தெரியப்படுத்துகிறது. காந்தி இந்த தந்திக்கு பதிலளித்தாதாக எந்த தகவலும் இல்லை. திட்டமிட்டபடி போராட்டம் தொடர்கிறது. கேசவமேனன் கைதாகிறார். அவரைத் தொடர்ந்து ஜார்ஜ் ஜோசப் அவர்களும் கைதாகிறார். இதன் பிறகே பெரியார் போராட்டத்தில் பங்கேற்கிறார்.

போராட்டம் தீவிரமாக நடைபெற்று சமயத்தில் காந்தி வைக்கத்திற்கு வரவில்லை. ஆனால் நாரயண குரு செப்டெம்பர் 27, 1924 அன்று போராட்ட இடத்திற்கு வந்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.

வைக்கம் போராட்டத்தில் நாரயணகுரு அவர்களின் ஈடுபாட்டை ''நாரயண குரு" கே.சீனிவாசன் அவர்களின் நூல் மூலம் அறியலாம். நாரயண குருவிற்கும் அவரது சீடர்களில் ஒருவரான கேசவன் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் மூலம் இதை அறியலாம். ( நாரயணகுரு - பக்கம் 166-167)

''
குரு: சத்யாகிரகம் எப்படி நடக்கிறது?

கேசவன்:வேகமெடுத்து வருகிறது. அனேகமாக கொட்டும் மழையில் அவர்கள் இப்போது
நனைந்து விட்டிருக்க வேண்டும்

குரு: ஏன் அவர்களிடம் குடை இல்லையா?

கேசவன்: காந்திஜி மறுதரப்பினரின் அரசாங்கத்தின்-ஆதரவையும் பரிவையும் பெற வேண்டும் என ஆசைப்படுகிறார். சத்யாகிரகிகளின் தியாகத்தால் அவர்களை நெகிழச்செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். உடலை வருத்தி வரும் தியாகத்தின் மூலம் இறுதி வெற்றி வேண்டும் என்பது அவர் விருப்பம்.

குரு: உடல் துயரினைத் தாங்கும் சக்தியும், அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவமும் வேண்டியதுதான். அதற்காக மழையில் நனைந்து பட்டினி கிடக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஓரிடத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தால், வரும் விளைவுகளை கண்டு அஞ்சாமால் தடையை மீற வேண்டும். அடித்தால் பட்டுக்கொள்ள வேண்டும்.. பதில் தாக்குதல் நடத்த கூடாது. போகும் பாதியில் வேலியிருந்தால் திரும்பி விடக்கூடாது. தாண்டிப்போக வேண்டும். சாலையில் நடந்து செல்வதோடு நின்றுவிடாமல் கோவிலுக்குள்ளும் நுழைய வேண்டும். எல்லோரும் எந்நாளும் அனைத்துக் கோவில்களுக்கும் போய்வரவேண்டும். பிரசாதம் வழங்கப்படுமானால் எடுத்துகொள்ள வேண்டும். கோவிலில் அன்னதானம் வழங்கப்படுமானால் அன்னதானம் சமமாக பிறருடன் உட்கார்ந்து உணவருந்துங்கள். அரசாங்கத்திற்கு உங்கள் செய்கையின் நோக்கம் தெரியட்டும். இதற்காக உயிரை விடவும் தயங்கக்கூடாது. ஒருவன் தீண்டுவதானால் இன்னொருத்தன் பரிசுத்தம் கெடுமானால் அந்த பரிசுத்தம் அழியட்டும். இது என் செய்தி. இதை பத்திரிக்கை செய்தியாக்கி அனைவரிடம் இச்செய்தி சேரும்படி செய்யுங்கள். இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்பது மக்களுக்கு தெரியட்டும். ஆனால் வன்முறையும், அடிதடியும் ஒருபோதும் இருக்ககூடாது. வன்முறை அடக்குமுறை ஏவிவிடுதல் கண்டு மனம் தளர வேண்டாம்.

கேசவன்: சத்யாகிரகத்தின் இறுதி இலக்கு ஆலயபிரவேசமாகும். அதனை அடுத்த ஆண்டில் அடையவேண்டும் என்று வைத்திருக்கிறோம்.

குரு: ஏன் இன்னும் ஒருவருடம்? இப்போதே காலம் கடந்துவிடவில்லையா?''


நாரயணகுருவின் இந்த உரையாடலை இங்கே குறிப்பிட்டதற்கு முக்கிய காரணம் உண்டு. ஈழவமக்களின் ஆன்மீகத்தலைவரான நாரயணகுருவின் இந்த பேச்சு வன்முறையை தூண்டுவதாக இருக்கிறது என்றும் சத்யாகிரக விதிகளுக்கு மாறானதாக இருக்கிறது என்றும் காந்தியடிகள் கருதினார்.

மேலும் இந்த போராட்டத்தில் மாற்று மதத்தினரும், மாற்று மாநிலத்தவரும் கலந்து கொள்வதற்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் காந்தியடிகளின் அறிவிப்பிற்கு பிறகு விலகி கொண்டனர். ஜார்ஜ் ஜோசப்பும் தன் கட்டளைப்படி விலகிக்கொண்டார் என்று 1932ல் த யங் இந்தியா இதழில் குறிப்பிட்டார். இதை ஜார்ஜ் ஜோசப் கல்கத்தாவிலிருந்து வந்த Indian Social Reformer'' என்னும் இதழின் வாயிலாக அதை மறுத்தார். சாலை நுழைவு என்பது மதம் சம்பந்த பிரச்சனையில்லை, மனிதனின் உரிமை சம்பந்தமானது என்னும் நிலைப்பாடு கொண்டிருந்தார் ஜார்ஜ் ஜோசப்.

போராட்டத்தின் இறுதி கட்டத்திலே, அரசாங்கம் அனுமதி கொடுக்க முன்வந்த போதுதான், மார்ச் 1925ம் ஆண்டு காந்தியடிகள் வைக்கத்திற்கு வருகை தந்தார். கேரளத்திற்கு வந்த போது நாரயணகுருவை அவர் ஆசிரமத்தில் சந்தித்து பேசினார். அப்போது அங்கிருந்த மாமரத்தின் இலைகளைச் சுட்டிகாட்டி ஒவ்வொரு இலைகளுக்கும் வேறுபாடுகள் இருக்கிறது தானே என்று சொல்ல அதற்கு குரு அதன் சுவை ஒன்றுதானே என்று சொல்லியிருக்கிறார். இலையாக குறிப்பிடப்பட்டது மனிதனை தான் என்பதை அனைவரும் அறிவர்.

போராட்டத்தின் இறுதி தருணத்தில் நம்பூதிரிகளிடம் பேசவும், அவர்களிடம் மனமாற்றம் ஏற்படுத்தவும் காந்தி முயற்சித்தார். அங்கு அவருக்கு கிடைத்த அனுபவம் முக்கியமானது. காந்தியை நேரில் சந்திக்க நம்பூதிரிகள் மறுத்துவிட்டனர். காந்தியை தங்கள் இடத்திற்கு வரச்சொல்லிவிட்டார்கள். இந்த உரையாடல் வைக்கம் போராட்டம் பற்றிய ஆய்வு நூலை எழுதிய டாக்டர் ரவிந்தரனின் நூலின் 166ம் பக்கத்தில் இருக்கிறது. அதன் பிரதியை இங்கு இணைத்திருக்கிறேன்.

காந்தி-இந்தன்துரித்தியல் நம்பூதரி இடையேயான உரையாடல்:

போராட்டத்தில் பெரியார் மற்ற அனைவரையும் போல கலந்து கொண்டார் என்று கூறுபவர்களுக்கு பதிலாக சென்னை அரசின் தலைமை செயலருக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ கடிதத்திலேயே விளக்கமாக குறிப்பிடபட்டிருக்கிறது.இதுவும் ஆய்வாளர் ரவிந்தரனின் புத்தகத்திலே இடம் பெறிருக்கிறது.

அதில் பெரியார் போராட்டத்தில் கலந்து கொண்டதின் தாக்கம் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் சில:

''From
C.W.CCotton Esq. C.T.E., I.C.S.
Agent to the Governer General
Madras State

To Chief Secratery to the Government of Madras

------
6. Of the nine leaders who are in the central jail Trivandrum where they are treated with great consideration, five only Trivangoreans. Infact the movement would have collapsed long ago but the support it has received from outside-Travancore though the question of opening this road is purely domestic problem

........
...

But the support the Vaikom sathyagrahis received from Madras, both in money and leadership was very great and impressive. E.V.Ramasamy Naicker's lead gave a new life to the movement. His strong appeal on the eve of his journey to kerala had made deep impression on the mind of tamilnadu.

...."

காங்கிரஸ் கட்சி தான் போராட்டம் நடத்தியது என்று சொல்லும் ம.வெங்கடேசன் அவரின் அளவுகோலின்படியே காங்கிரஸ்காரரான பெரியார் தீவிரமாக உழைத்ததை ஏற்க மறுக்கிறார். காந்தியின் ஆலோசனையின் படியே போராட்ட குழுவில் இணைக்கப்பட்டார் என்று மங்கள முருகேசன் புத்தகத்தை கொண்டு வாதிடும் ம.வெங்கடேசன் பெரியார் போராட்டத்திற்கு வந்த விதத்தை கேலி செய்கிறார். போராட்டத்தில் தீவிரமாக பங்காற்றிய பெரியாரின் உழைப்பு பற்றி மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் போராட்டம் வெற்றியடைந்த நிலையில் களத்திற்கு வந்த காந்தியை வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு சொந்தக்காரராக்குகிறார்கள்.

தனது விமர்சனத்தை சாமி.சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் என்னும் நூலினை மேற்கோள் காட்டி இவ்வாறு வெளிப்படுத்துகிறார். (பக்கம் 159)

'' வைக்கம் போராட்டத்திலே 19பேர் திருவிதாங்கூர் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுவிட்ட பிறகு சிறையிலிருந்தபடியே யோசித்து தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்பும், குரூர் நீலகண்ட நம்பூதிரியும் ஈ.வே.ராவுக்கு உடனே வரவும் என்று ஒரு கடிதம் எழுதினார்கள்''(தமிழர் தலைவர் பக்கம் 70 - அடைப்புக்குறிக்குள் இருப்பது நான் தரும் தகவல்)

''ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?
எனக்கு பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவ மேனனும் சேர்ந்து கையெழுத்துப்போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள்'' என்று வைக்கத்தில் தீண்டாமையை ஒழித்த தந்தை பெரியார் என்ற தன் புத்தகத்திலே கூறுகிறார் ( வைக்கம் போராட்ட வரலாறு - பக்கம் 15). யார் அழைத்தார்கள் என்பதிலே முரண் இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.

பெரியாரை இப்போராட்டத்திற்கு அழைத்ததிலே முக்கிய பங்காற்றியவர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள். பெரியாருக்கு கடிதம் எழுதிய அந்த நேரம் போரட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் அனைவரும் சிறையிலே இருந்தனர். ஜார்ஜ்ஜோசப், கேசவமேனன், குரூர் நீலகண்டன் நம்பூதரி, டி.கே மாதவன் ஆகிய அனைவரும் சிறையிலே இருந்தனர். ( சிறை என்பது ஒரு பெரிய மாளிகையில் வீட்டுக்காவல் வைத்தது போன்றது. குற்றவாளிகளை அடைக்கும் சிறைக்கொட்டாரத்தில் அல்ல).

பெரியார் 1973ல் நடந்த வானொலி பேட்டியிலே இது பற்றி தெரிவித்து இருக்கிறார். ஜார்ஜ் ஜோசப் அவர்கள் பெயரை இதிலே குறிப்பிட்டு இருக்கிறார். பெரியாரின் வானொலி பேச்சை வைத்து ம.வெங்கடேசன் இன்னும் ஒரு திரிப்பைச் செய்து இருக்கிறார். மொத்த பேட்டியிலிருந்து தனக்கு தேவையான வாக்கியத்தை மட்டும் எடுத்து கொண்டு வாதம் புரிகிறார்.

''காந்திதான் இதைச் செய்ய வேண்டாம் என்று சொன்னவர். அவருக்கு இதில் சம்பந்தமே இல்லை''( ம.வெங்கடேசனின் நூல் - பக்கம் 159).

ம.வெங்கடேசன் மறைத்த அடுத்த சிலவரிகள் இதோ!
''காந்திதான் இதைச் செய்ய வேண்டாம் என்று சொன்னவர். அவருக்கு இதில் சம்பந்தமே இல்லை''அரசாங்கம்தான் இதை முடிவு செய்தது. ராஜாஜி காந்திக்கு கடிதம் எழுதினார். காந்தி உடனே புறப்பட்டு வந்தார்.

பெரியாரின் வானொலி பேட்டியின் மொத்தமும் கீழே இணைத்திருக்கிறேன்.

பெரியாரின் வானொலி உரை:
12


3

4.மேற்கண்ட வானொலி பேட்டியிலேயே பெரியாரின் பெருந்தன்மை தெரியவரும். இப்போராட்ட வெற்றியில் தன்னை முதன்மைப்படுத்திகொள்ளாது சத்யாக்கிரகத்தையே முன்னிலைப்படுத்தியவர் அவர். காந்தியின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பெரியார் அவருக்கு பெருமதிப்பு கொடுத்து வந்தார். தனது குடியரசு இதழ்களில் மகாத்மா காந்தி வாழ்க என்று அச்சிட்டவர் பெரியார். .

அவரின் பேச்சு இதோ.

வைக்கம் வெற்றிக் கொண்டாட்டத்தில் பெரியாரின் உரை.


யார் வந்து முட்டுக்கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலையிலும் இல்லை எம் தாடிக்கிழவன். வாசித்த தோழர்களே! பெரியார் வைக்கம் வீரரா என்று உங்கள் சிந்தனை கொண்டும், பகுத்தறிவு கொண்டும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்த கட்டுரையை பெரியாரின் பிறந்த தினத்தில் பதிவிடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெரியார் வலைதளத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு தந்த தோழர்.திரு அவர்களுக்கு என் நன்றி.


உதவிய நூல்கள்:
தமிழர் தலைவர் - சாமி சிதம்பரனார்
வைக்கம் போராட்ட வரலாறு -திராவிடர் கழக வெளியீடு
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் - ம.வெங்கடேசன்
நாரயண குரு - கே.சீனிவாசன் தமிழினி பதிப்பகம்

தொடர்புடைய சில சுட்டிகள்:
வைக்கம் - விக்கிபீடியா
A.J.பிலிப் - இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை
நாரயண குரு
நாரயண குரு - சிவகிரி ஆசிரமம்

நிறமற்று

ஒன்றிப்போயிட இயலாதொரு கோடு
நமக்கிடையே நிரந்திரமாக,
இதுவரை பிரித்திடவில்லை என்பதால்
அதன் மீது ஆர்வமேதும் இல்லை
அதைப்பற்றியும் பேசுவதேயில்லை
முரண்களாகவே இருந்தாலும்
நிறமற்று கரைந்து போகிறோம்
நமக்கான அன்பில்!

சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கங்கள்

தமிழீழ அரசியற்பிரிவு பொறுப்பாளர் திரு சுப.தமிழ்செல்வன் அவர்கள் இன்றைய ராணுவ தாக்குதலில் மரணம் அடைந்த செய்திகேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரு ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் மறைவிற்கு பிறகு சுப.தமிழ்செல்வன் மிக முக்கியமான தலைவாராக சர்வதேச சமூகத்தோடு தொடர்புகொள்ளும் தூதுவராக திறம்பட பணியாற்றியவர். ஈழ விடுதலை போராட்டத்தின் மிக முக்கிய தருணத்தில் நடந்திருக்கும் இந்த மரணம் தமிழீழ மக்களுக்கு ஈடு செய்ய இயலா இழப்பாகும்அம்மக்களின் துயரோடு என் வேதனையையும் பகிர்ந்து கொள்கிறேன்.பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் அவர்களுக்கு என் வீர வணக்கங்கள்

வண்ணங்கள் - புகைப்பட போட்டிக்கு

இந்த மாத புகைப்பட போட்டிக்காக எனது இரண்டு படங்கள்அப்பா, அட்லாஸ் சைக்கிள், நான்

இளவஞ்சி என்பீல்ட் புல்லட் பதிவை எழுதிய போது எழுத நினைத்த பதிவு இது. வழக்கம் போல மிக காலத்தாமதமாக இன்று எழுது நேரம் அமைந்திருக்கிறது. பழைய நினைவுகளை அசைபோடுதல் என்பது எப்போது மனதிற்கு இதமாகவும், ஒரு உற்சாகத்தையும் தரக்கூடியது. இதோ என் பங்கிற்கு

அப்பா, அட்லாஸ் சைக்கிள், நான்..

அப்பா பற்றி கொஞ்சம்,

அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அப்பா. மருந்தாளுநர் சங்கத்தில் மாநில அளவில் முண்ணனித் தோழராக பணியாற்றியவர். சங்கத்தின் மாவட்டத்தலைவராக தொடர்ந்து இருந்தவர். அவர்களுடைய சங்கத்தில் தொடர்ந்து 90 விழுக்காடுகளுக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஒரே நபர். கம்யூனிசவாதி.
இறை நம்பிக்கை உடையவர். இயல்பாக எளிமையாக பழகக்கூடிய மனிதர்.

அப்பாவின் பலகூறுகளை நான் உள்வாங்கி இருக்கிறேன். அப்பாவுடன் பணிபுரிந்த பலர் என்னை அப்பாவின் நகல் என்று கூறுவார்கள். கொஞ்சமே கண்டிப்பைக் காட்டி ஒரு தோழனாகவே இருப்பவர் இன்று வரை. அறிவுரைகளாக சொல்லாமல் வாழ்ந்து காட்டுபவர். எதிலும் எங்கும் நேர்மையோடு இருக்க வேண்டும், வெளிப்படையாக பேசுதல் வேண்டும், உண்மை என்று மனதிற்கு பட்டதை தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும், மனித நேயத்தோடும், சமூக அக்கறையோடும் வாழ்தல் வேண்டும் என்பதில் தீர்க்கமான நம்பிக்கை கொண்டவர் அதன்படியே இருப்பவரும் கூட.

அப்பாவை பற்றி நிறைய எழுத இருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அவரது எழுத்து நடையிலே அவருடைய பணிகளை, அனுபவங்களை பதிவு செய்யுங்கள் என்று பலமுறை வற்புறுத்தி வருகிறேன். கையெழுத்துப் பிரதியாகவோ அல்லது இணையத்திலோ எழுதுங்கள் என்று சொல்லி வருகிறேன். பிறதொரு சமயத்தில் எழுதுகிறேன் என்று தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார்.

இப்போ அட்லாஸ் சைக்கிளுக்கு வருவோம்.

என்னுடைய முதல் சொத்து இந்த சைக்கிள் என்பேன்.ஏறக்குறைய 12 வருடங்களுக்கு முன் எனக்கு கிடைத்த சொத்து. பத்தாம் வகுப்பு படித்த போது கிடைத்தது. நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது மிகத் தாமதமாகத்தான். ஏழாம் வகுப்பு படிக்கும் போதுதான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அப்போது அப்பா BSA சைக்கிள் பெரிய வண்டி வைத்திருந்தார். அந்த வண்டி இப்போது எங்களிடம் இல்லை. பழுதடைந்துவிட்டதால் சைக்கிள் கடைக்காரனிடமே கொடுத்து விட்டோம். அதன் மாதிரி


அப்பாவின் வண்டியெடுத்து ஓட்டத் தொடங்கிவிட்டாலும் உயரம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமப்பட்டேன். ஆனாலும் ஒருமுறை கூட வாய்திறந்து எனக்கு புது வண்டி வாங்கித் தாங்க என்று கேட்டதில்லை. இப்போதும் கூட இது வேண்டும் என்று எதையும் கேட்க மாட்டேன்.
பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள், வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். காலை அலுவலகப்பணியை முடித்துவிட்டு நேராக கடைக்குச் சென்று புதுவண்டியை வாங்கிக் கொண்டு, நான்தான் முதன் முதலில் ஓட்ட வேண்டும் என்று திருச்சியிலிருந்து திருவரங்கத்திற்கு உருட்டிக் கொண்டே வந்திருக்கிறார். பாவம் அப்பாவின் நண்பர் புகழேந்தி மாமாவும் கூடவே நடந்து வந்திருக்கிறார்.

அப்போது என் வயதை ஒத்தவர்களுடைய பெரும்பகுதி தேர்வு BSA SLR ஆக இருக்கும். ஆனால் அதை விட அட்லஸ் கொஞ்சம் உயரம் குறைவு என்பதால் அதை வாங்கி வந்தார். புதுவண்டி, நல்ல சிவப்பு நிறம் என ராஜா போல இருந்தது. நான் பள்ளியிலிருந்து வர அப்பா வாசலிலே காத்துக் கொண்டிருந்தார். நான் வரும் போதே பார்த்துவிட்டேன். புது வண்டி நிற்கிறதே யாருடையாதாக இருக்கும் என்று. ஏனெனில் அது எட்டு குடும்பங்கள் தங்கியிருந்த ஸ்டோர் வீடு. அதிகம் சபலப்படாமால், நமக்கேற்ற உயரத்தில் வண்டி இருக்கிறதே என்று யேசித்தவாறே மாடியேறி வீட்டுக்குப் போனேன். சைக்கிள் நல்லா இருக்குதாடா என்றூ அப்பா கேட்க எனக்கு ஆனந்த அதிர்ச்சி. அட எனக்கா புது வண்டி என ஆர்வத்தில் சாவி தாங்கப்பா என்றேன். முதல்ல சாப்பிடு அப்புறம் ஓட்டலாம் என்று சொல்ல வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு திருவரங்கம் முழுவதும் ஒரு சுற்று சுற்றினேன்.

என்னுடைய வண்டி - இப்போதைய தோற்றம் :


1995லிருந்து என்னோடு இருந்து வரும் சொத்து இதுவென்றே சொல்லுவேன். இந்த வண்டியில்தான் முதன் முதலில் டபுள்ஸ் அடிக்க கற்றுக் கொண்டேன். கற்றூக் கொண்டது முதல் அப்பாவை மருத்துவமனையில் காலையில் கொண்டு போய் விடுவது எனது அன்றாடபணியாகும். முதுகுத் தண்டுவட தேய்மானம் காரணமாக அப்பாவை அவ்வளவாக ஓட்ட விடுவது கிடையாது. பள்ளிக்கு அருகே வீடு என்பதால் பெரும்பாலும் பள்ளிக்கு கொண்டு செல்ல மாட்டேன். வீட்டுக்கு வந்து மதியம் சாப்பிட்டு விட்டு அப்பாவையும் கூப்பிட்டு வந்து விடுவேன். மதிய நேர பணியாக இருந்தால் அப்பாவை விட்டுவிட்டு சைக்கிளோடு பள்ளிக்கு வந்துவிடுவேன். அப்போது சக நண்பர்கள் தங்களுடைய வண்டிகளை வித விதமாக அலங்கரித்து வருவார்கள். நானும் அது போல ஆசைப்பட்டு வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு முன் மக்கார்டில் பச்சை வண்ணத்தில் என் பெயரை எழுதினேன். எழுதியது அசிங்கமாகத் தெரியவே அந்த பகுதி முழுவதையும் பச்சை வண்ணத்தால் நிரப்பிவிட்டேன். சிகப்பு வண்டியில் பச்சை மின்னியது. :-)

1997 ஆண்டு 12 ம் வகுப்பு முடித்து கல்லூரி போகவிருந்த சமயம்தான் என்னுடைய வண்டியோடும் அப்பாவோடும் மிக அதிக நேரம் செலவிட்டேன். 12வது வகுப்பு இறுதித் தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதால் பொறியியல் கிடைக்காது என்ற நிலை, அப்பாவின் முன் இரண்டே வாய்ப்புகள். ஒன்று ஏதேனும் இளங்கலை பாடப்பிரிவில் சேர்த்துவிடுவது அல்லது பணம் செலவழித்து பொறியியல் படிக்க வைக்க வேண்டியது.நேர்மையான அரசு ஊழியராக இருந்துவிட்டபடியால் சேமிப்பு என்று பெரிய அளவில் கிடையாது. சங்கத்தில் ஈடுபாடுடன் இருந்ததால் ஏற்பட்ட அதிகப்படியான செலவுகளாலும் கையிருப்பு இல்லாத நிலை. ஆனால் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை. சொந்தக்காரர்கள் பெரும்பாலனவர்கள் ''அகலக்கால்'' வைக்கிற, உன் சத்துக்கு இதெல்லாம் முடிகிற காரியமா முத்து என அப்பாவிடம் என்று சொன்னபோதிலும் அப்பா உறுதியாக இருந்தார். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என. அம்மா தன்னிடமிருந்த நகைகளை கழட்டிக் கொடுத்து முதலில் இதை அடகு வைத்து பணம் கொண்டு வாருங்கள் மீதித் தொகைக்கு வேறெங்காவது கடன் வாங்குவோம் என்று. அம்மாவின் ஒத்துழைப்பு இருந்ததாலே அவரால் எங்களை படிக்க வைக்க முடிந்தது.

அப்போது ஆரம்பித்ததுதான் நான் துபாய் வரும் வரை கடன், கடனை அடைக்க கடன் என்று வாழ்க்கை ஓடியது. என்னை படிக்க வைக்க வட்டிக்கு கடன் வாங்க வேண்டும் என்று இருந்த போது அதற்காக அப்பா பட்ட அலைச்சல் எத்தனை எத்தனை. எனது ஒரே வேலை அப்பாவை சைக்கிளில் வைத்துக் கொண்டு அவர் சொல்லுமிடங்களுக்கெல்லாம் கூட்டிச் செல்வது. அதனாலேயே வீட்டின் நிதிநிலமை என்னவென்பதும், எவ்வளவு கடன் வாங்குகிறோம், யாரிடம் வாங்குகிறோம் என்பதும் எனக்கு தெரிந்தே இருந்தது.

இவ்வளவு தெரிந்தும் கல்லூரிக் காலத்தில் கொஞ்சம் அதிகப்படியாகவே செலவு செய்தேன். என் நிலை அறிந்தும், நான் செய்த அளவுக்கதிகமான செலவுகள். நான் இறுதி ஆண்டு வந்த போது தம்பியும் பொறியியல் படிப்புக்கு வந்து விட்டான். இன்னும் அதிகப்படியான சுமை அப்பாவிற்கு. அப்போதும் அப்பாவிற்கு உற்ற துணை அட்லாஸ் சைக்கிள்தான். மிக மெதுவாக ஓட்டிக் கொண்டு வருவார். உயரம் கம்மியான சைக்கிள் என்பதால் அவருக்கு அது வசதியாக இருந்தது.

அப்பா ஓய்வு பெறும் 20 தினங்களுக்கு முன் எனக்கு துபாயில் பணி கிடைத்தது. அப்பா அவரது பணி ஓய்வு நிகழ்ச்சியின் ஏற்புரையில் சொன்னது என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ''இந்த இருபது நாளாத்தான் நான் நிம்மதியா தூங்குறேன். எனக்கு கை கொடுக்க பையன் வந்துட்டான்'' இனி கவலை இல்லை. நாம எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளை படிக்க வைக்கணும் கேட்டுகிறேன்னு சொல்லி நிறைவு செய்தார். கண்கள் கலங்க நான் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னை தனியே அழைத்து அப்பாவுடன் உடன் பணியாற்றியவர் ஒருத்தர் சொன்னது மிகப்பெருமையாக இருந்தது. கூட வேலை பாக்குறவங்க பைக், ஸ்கூட்டர்னு வரும் போது நீங்க சைக்கிள்ல வர்றீங்களே சார்னு நாங்க கூட பலமுறை கேலி பண்ணி இருக்கோம். உனக்கு வேலை கிடத்த பின்பு அவர் சிரித்த முகத்தோடு அதே சைக்கிளில் வந்த போது உண்மையாவே கம்பீரமா இருந்தது தம்பி. அப்பாவை பார்த்துக்குங்க என்றார். சரி சார் என சொல்லி வந்தேன். அப்பாவின் ஓய்வுக்குப் பின் மதுரை வந்துவிட்டோம்.

சென்ற ஆண்டு நான் சொந்த வீடு வாங்கிய போதும் அப்பாவிற்கு உற்ற துணைவன் என் அட்லஸ் சைக்கிள்தான். வீடு வாங்குவது தொடர்பாக எல்லா இடத்திற்கும் இதே சைக்கிளில்தான் அலைந்தார்கள். அப்பாவின் விருப்படியே நல்ல வீடாகவும் அமைந்தது. இதுவரை வெயிலிலும் மழையிலும் காய்ந்து கருவாடாக கிடந்த என் சைக்கிளுக்கும் யோகம் வந்தது.

ஆம் ! இப்போது அய்யாவிற்கு தனி அறை. வேறு எந்த வாகனும் இல்லாததால் அந்த அறையில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறார். நான் வாழ்வில் அதிகம் முறை தொலைத்தது எதுவென்றால் இந்த வண்டியின் சாவி தான். இன்று பூட்டப்படாமல் அறைக்குள் தனியாளாக இருக்கிறார்.

இந்த முறை ஊருக்குப் போன போதும் ஆசை தீர சைக்கிள் ஓட்டினேன். அடிக்கடி செயின் கழண்டு கொண்டாலும் அந்த கடக் கடக் சத்தம் ஒரு சந்தோசத்தை தருகிறது.

அப்பா அம்மா மணிவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. எல்லோருக்கும் மகிழ்ச்சி. அப்பாவை வைத்து டபுள்ஸ் அடித்து சென்றபோது சொல்லிக் கொண்டுவந்தேன். வீடு என் பேர்ல இருந்தாலும் அதுல எனக்கு பங்குதான் உண்டு. மொத்தமும் கிடையாது. அதுனால இன்னொரு வீடு வாங்குற வரைக்கும் எனக்கு இருக்கிற ஒரே சொத்து சைக்கிள்தான்பா என்றேன். சிரித்துக் கொண்டார்.

கொஞ்சம் நீளாமாகிப் போய்விட்டது பதிவு. ஏனோ இதையெல்லாம் சொல்ல வேண்டும் என்று ஓரு ஆசை.

ஏன்!

தனிமையின் ஏக்கம்!!

பிறந்தநாளன்று கூட அப்பா அம்மாவின் அருகாமையில் இல்லாமல்

இவ்வளவு தொலைவிலிருக்கும் தனிமையின் ஏக்கம்.........

அன்புடன் அழைக்கிறேன்

இனிய நண்பர்களுக்கு, என் மகிழ்ச்சியான கணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் நெகிழ்ச்சியோடு நான்.


வருகின்ற 01.08.2007 அன்று எனது பெற்றோர்க்கு மணிவிழா, மதுரையில் உள்ள எங்களுடைய இல்லத்தில் நடைபெற இருக்கிறது. நண்பர்கள் அனைவரையும் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறேன்.

அன்புடன்
முத்துகுமரன்.

******
நாளை இரவு என்னுடைய விடுமுறைக்காக தமிழகம் வருகிறேன். ஆகஸ்ட் 20 வரை தமிழ்நாட்டில் இருப்பேன். சென்னை பதிவர் பட்டறையிலும் கலந்து கொள்கிறேன். ஆகஸ்ட் 12ம் தேதி பெங்களூரில் இருப்பேன். மேலதிக விபரங்களுக்கு என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.
*******

மதுரை வலைப்பதிவர் கூடல் வருகிற 29.07.2007 மாலை 4 மணி அளவில் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. தவறாது கலந்து கொள்ளுங்கள்

இன்று சாகரனுக்கு பிறந்த நாள்மறைந்த நம் நண்பர் சாகரன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து போற்றுவோம்..

மதுரை வலைப்பதிவர் கூடல் - 29.07.2007

மதுரை வலைப்பதிவர் கூடல் - 29.07.2007.
சென்னை, கோவை, பெங்களூர், அமீரகம், அமெரிக்கா என பதிவர் சந்திப்புகளும், பதிவர் பட்டறைகளும் நடைபெற்று வருவது மகிழ்ச்சியான ஒன்று. வலைப்பதிவுகள் சரியான மாற்று ஊடகமாக வளர இது போன்ற ஒன்றுகூடல்களும் கூட்டு முயற்சிகளுமே துணை புரிகின்றன. அனைவரும் ஆகஸ்ட் 5 தேதி சென்னையில் நடக்கும் பதிவர் பட்டறையை பற்றி அறிந்திருப்பீர்கள். அதற்கு முன்பாக வருகிற 29ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை மதுரையில் வலைப்பதிவர் சந்திப்பு ஒன்று தருமி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடக்கவிருக்கிறது. மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டை சேர்ந்த பதிவர்களை சந்தித்து உரையாட வாய்ப்பாக இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அன்று மதுரை வரக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து வலைப்பதிவர்களையும் கட்டாயம் வாருங்கள் என் அன்புடன் அழைக்கிறேன்.

மதுரை வலைப்பதிவர் கூடல்

நாள்: 29.07.2007
நேரம்: மாலை 4மணி முதல் 7 மணி வரை
இடம் அமெரிக்கன் கல்லூரி, தமிழ்த்துறை அருகே உள்ள சிறிய கூடம்


அமெரிக்கென் கல்லூரி வரைபடம்.

1.அமெரிக்கன் கல்லூரி முகப்புமுகப்பிலிருந்து நேராக வந்து வலது புறம் திரும்ப வேண்டும்10. சந்திப்பு நடைபெறும் தமிழ்துறை கட்டிடம்நிகழ்வில் கலந்து கொள்ளவிரும்பும் நண்பர்கள் நிகழ்ச்சி நிரல் குறித்தான ஆலோசனைகளையும் பதிவிலோ அல்லது தனிமடலிலோ தொடர்பு கொண்டால் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற ஏதுவாக இருக்கும்.

*
பி.கு: வேற ஒன்னும் இல்லை மக்கா வரும் 27ம்தேதி விடுமுறைக்கு ஊருக்கு வர்றேன்.

முகம் மறைத்து

சிலவற்றில் அதீத வெளிச்சத்துடன்
சிலவற்றில் மங்கலாக
அடர்த்தியான
கருப்பு வெள்ளை நிழற்படமாக
வரையத் தொடங்கிய கோடுகளாக
ஓவியமாக
அறையெங்கும் நிறைந்துகிடக்கிறது
பிம்பங்கள்
எதில் நீயாக இருக்கிறாய் என
தேடிய பொழுதில்
உன் முகம் மறைத்துப் பறந்தது
காற்றில் ஒரு
வெள்ளைத் தாள்

துபாயில் கவிஞர். மு.மேத்தாவிற்கு பாரட்டு விழா

தனது ஆகாயத்திற்கு அடுத்த வீடு கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் புதுக்கவிதையின் முன்னோடியான திரு.மு.மேத்தா அவர்களுக்கு அமீரகக் தமிழ்க்கவிஞர்கள் பேரவையின் சார்பாக பாராட்டு விழா வருகின்ற வெள்ளி(15.06.2007) மாலை 6 மணி அளவில் இந்திய தூதரக அரங்கில் நடைபெற இருக்கிறது. அமீரகத்தில் வசிக்கும் நண்பர்கள் அனவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அழைப்பிதழ்:

அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை
தனித்தன்மையோடு நடத்தவிருக்கும்
கவிதைத்திருவிழா
ஜூன் 15 ஆம் நாள் , துபாய் இந்திய தூதரக அரங்கில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில்

சாகித்ய அகாதெமி
விருது பெற்ற


புதுக்கவிதையின் தாத்தா
மு.மேத்தா


முனைவர்- கவிஞர்
சேது குமணன்

எழுத்தாளர், இன உணர்வாளர்
சு. குமணராசன்

பேராசிரியர், ஆய்வாளர்
கம்பம் சாகுல் அமீது

உள்ளிட்ட சான்றோர்களும்
தமிழ், கவிதை ஆர்வலர்களும்
கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

அனைத்து நண்பகளும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்

மேலும் விவரங்கள் அறிய
இசாக் 050 4804113, கவிமதி 050 5823764, சேர பட்டணம் மணி 050 7763653

மின்னஞ்சல் thuvakku@gmail.com

காய்ச்சல்இனிக்கவில்லை
நேற்று வந்த காய்ச்சல்!
அருகில்
நீ இல்லாது போனதால்.

மணமாலையும் மஞ்சளும் சூட...இன்று எனது உயிர்நண்பன் M. பாலாஜி க்குத் திருமணம். கல்லூரியில் இரட்டையர்கள் என்றழைக்கப்படும் அளவிற்கு நாங்கள் நெருக்கம். ஒரே அறையில்லாவிட்டாலும் அறைநண்பன். கல்லூரி சேர்ந்த போது இவனது ஊரை அறிந்து கொண்டு நிச்சயம் இவனை நண்பனாக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்( ஏன் என்பது இப்போது அவ்வளவு முக்கியம்ற்றது. சிரித்துகொள்ள மட்டும் நினைத்துக்கொள்வேன்). ஆனால் இயல்பாகவே நண்பர்களாகிவிட்டோம். என் மனமறிந்த உற்ற நண்பன். இயல்பான இனிமையான சோம்பேறி அவன். அவன் திருமண பத்திரிக்கை கூட நான் தொலைபேசி வாங்கினேன். அதுவும் சென்ற வாரத்தில்தான் :-).

தொலைபேசியில் அழைத்து மண்டகப்படி அர்ச்சனை செய்ய போதும்டா விடுடா என்றான். ஒழுங்கா 5 நிமிடம் திட்டு வாங்கிக் கொள் என்று சொல்ல பொறுமையாக கேட்டுக் கொண்டு திட்டி முடித்தவுடன் இரு கான்பிரன்ஸில் போடுறேன் அவங்ககிட்ட பேசு என்றான். அதான் என் பாலாஜி. இணைப்பு கிடைத்ததும் முதல் வார்த்தை சொன்னேன் உனக்கு நான் இன்றையிலிருந்து அண்ணன்மா. எதுவும் சேட்டை செய்தான் என்றால் சொல் கவனித்துக் கொள்கிறேன் என்று. சரி அண்ணா என்று சொன்னதும் அன்றைய ஒரு மணி நேர உரையாடலில் ஆத்மார்த்தமாக அண்ணா என்று அழைத்ததும் மனதில் இனிமையாக நிற்கிறது. இனிமையான நட்பு இன்று உறவாக அடுத்த நிலைக்கு நகர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கம் போல் வெளிநாட்டு சம்பாத்தியத்தினால் இன்னொரு முறை ஏமாற்றம். நேரில் காண மிகவும் விரும்பிய திருமணம். மறுபடியும் அதே ஓரிரு மாத இடைவெளியினால் இழந்திருக்கிறேன்.இன்று மணமாலை சூடிக் கொள்ளும் பாலாஜி-மல்லிகா
தம்பதியினருக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.


என்னோடு நீங்களும் வாழ்த்துங்களேன்


அம்மாக்கு பிறந்த நாள்வாழ்த்துஉன் முகம்
காண காத்திருந்த தருணம்
என் இரண்டாம் கருவறைக் காலம்.

ஒட்டாத எதிர் வாழ்முறையில்
நாமிருந்தாலும்
கறை களைந்து,
கனம் மறந்து
தாய்மையோடு
ஒவ்வொரு நொடியும்
சுமக்கிறாய் என்னை
மழலையாய்.

என் சொந்தப் பெயர்போலவே
இனிக்கிறது
என்னை நீ அழைக்கும்
உன் தெய்வத்தின் பெயரும்.

வானமாய் விரிந்திருக்கும்
உன் அன்பை
சொற்களில் சிறைபிடித்திடாமல்
சொல்கிறேன்.

அம்மா உனக்கு
பிராத்தனைகளோடு
என் பிறந்தநாள் வாழ்த்து

நான் பிடித்த மயில்


சென்ற வெள்ளி மாலை துபாயில் இருக்கும் விலங்குகள் சரணாலயம் சென்றிருந்தேன். அப்போது மயில் அழகாக தோகை விரித்தாடியது. அந்த அழகை கம்பிகள் தெரியாவண்ணம் படம்பிடிக்க முயற்சி செய்தேன். ஓரளவே வெற்றி.


என்னை இயக்கியபடி

முன்னறிவிப்புகளின்றி
வார்த்தைகளினால்
நான் கீறினாலும்
மருந்திடுகின்றது
உன் புன்னகை.

பிரிந்தாலும்
தொலைந்தாலும்
நினைவின் ஓரச்சுவர்களில்
உயிர்த்துடிப்பாய்
தங்கிவிடுகின்றன
உன் பிரியங்கள்

என்னை இயக்கியபடி!!

நண்பர் சாகரனுக்கு அஞ்சலி.

நேற்று மதி அவர்களின் பதிவில் நண்பர் சாகரன் மரணம் என்ற செய்தியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டோம். திரும்ப திரும்ப இந்த செய்தி தவறானதாக இருந்துவிடக்கூடாத என்ற பதைபதைப்புடன் வாசித்தாலும் இழப்பை உனர்ந்தோம். மிகவும் அதிர்ச்சியானதாகவும், நம்ப இயலாததாகவும் இருக்கிறது.

துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக புதிதாக இணையதளம் தொடங்க எண்ணியபோது மனதில் தோன்றியவர் நண்பர் சாகரன். ஏற்கனவே தமிழ்மன்றம், முத்தமிழ் மன்றம் போன்ற களங்களில் ஏற்பட்ட பரிச்சயமும் நட்பும் அவரை தொடர்பு கொள்ள வைத்தது. நாங்கள் துவக்கு மாதிரி இதழ்கள் வெளியிட்டபோது வாழ்த்துகளையும், கருத்துகளையும் சொல்லி மிகுந்த உற்சாகத்துடன் எங்களின் முயற்ச்சிக்கு ஆதரவு கொடுத்ததுடன் எங்களுக்கான இணையதளத்தையும் உடனடியாக ஏற்படுத்தி தந்தார். தமிழின் மீதும் தமிழ் ஆர்வலர்களின் மீதும் அவர் கொண்டிருந்த மதிப்பும், நட்பும், அன்பும் மிகச்சிறப்பானது. தேன்கூடு என்ற வலைதிரட்டியின் மூலம் இணயத்தமிழுக்கு அவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தகுந்தது. ஆனால்
நொடிப்பொழுதில் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பதை தாங்க இயலாததாக இருக்கிறது.

அவரின் மரணச்செய்தி எங்கள் இதயத்தை அறுக்கிறது. இந்த பெருந்துயரில் துவக்கு இலக்கிய அமைப்பு தங்களையும் இணைத்துக் கொள்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய எங்களது பிராத்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக
இசாக், நண்பன், கவிமதி, முத்துகுமரன். ஆசிப் மீரான், சே.ரா. பட்டணம் மணி, ந.தமிழன்பு.

**

நண்பர்களுக்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள்.

திரு சாகரன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அவர்தம் குடும்பத்தினர் இந்த பெருந்துயரிலிருந்து மீண்டு வருவதற்கான மனவலிமையை பெற்றிடவும் நம் இணைய நண்பர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்யலாம். எண்ணற்ற இதயங்களின் ஆதரவு அவர்தம் குடும்பத்திற்கு மனவலிமையை தந்திடும்.

நேரம் பற்றி நண்பர்கள் சொல்லுங்கள்

நெஞ்சு பொறுக்குதில்லையே

//Why you oppose Brahmins and their duties?can you all opposites be happy if all Brahmins are dead in this world?..it is better to kill them than to seduce them in this way...SORRY...NENJAM PORUKUTHILAYAE.... //


என்னுடைய முந்தைய பதிவான மகாத்மாவின் அரசியல் என்னும் பதிவில் வந்த அனானிப்பின்னூட்டம்தான் மேலே இருப்பது. இது போன்ற வினாக்கள் பலமுறை பலவடிவில் பலரால் கேட்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் திரும்ப திரும்ப பதிலளிக்க வேண்டிய நிர்பந்தங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அனானியாக வந்திருந்தாகும் உங்களின் ஆதங்கம் என்பது புரிந்து கொள்ளக்கூடியது என்பதும் திறந்த மனதோடு கேட்கப்பட்ட கேள்வியாக நான் கருதுவதாலும் உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த பதிவை எழுதுகிறேன்.


திறந்த மனதோடும், நேர்மையோடும் நடைபெறும் கருத்துப்பரிமாற்றங்களினால் புரிதல்களில் இருக்கும் முரண்களை நாம் களைந்து கொள்ள இயலும். அத்தைகையதொரு செயல்களை அடுத்த நிலைக்கு நம்மை நகர்த்திச்செல்ல உதவும்.


உங்கள் புரிதலிலே பிழை உள்ளது. என்னுடைய (அ) எங்களுடைய எதிர்ப்பு என்பது பிராமணர்களையோ அவர்களது தனிப்பட்ட கடமைகளையோ அல்ல. சிலருடைய எதிர்ப்பு வெறும் பிராமண எதிர்ப்பாக அமைந்துவிடுவதை மறுப்பதற்கில்லை என்றாலும் என்னுடையது பிராமணர் எதிர்ப்பு இல்லை.


உங்கள் கடமைகள் எதிர்க்கப்படுகிறது என சொல்லியிருக்கிறிர்கள். தனிமனித உரிமைகளோ, அல்லது பழக்க வழக்கங்களோ அவர்களோடு நின்று விடும்போது அதற்குள் யாரும் தலையிடுவது இல்லை. அந்த கடமைகள் சமூகத்தின் மீது தாக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்தும் போது அவைகள் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. மனிதர்களின் மீதான பாகுபாடு உங்களுக்கு புனிதமாக இருக்கும் வேதங்கள் மூலமாகவும் ஸ்மிருதிகளின் மூலமாகவும்தான் பிறர்மீது பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதை மறுத்துவிட இயலாது. உங்களுடைய நம்பிக்கைகள் என்பது உங்களுடைய எல்கைக்களைத்தாண்டி பொதுச்சமூகத்தில் தன் தாக்கத்தினை ஏற்படுத்தும் போது அது விமர்சிக்கப்படுகிறது. எதிர்க்கப்படுகிறது.


சமூகத்தில் ஏற்றத்தாழ்வையும் சகமனிதனிதனிடம் காட்டப்பட வேண்டிய சமத்துவத்தையும் மறுத்து தீண்டாமை என்றும் வர்ணம் என்றும் பேதமைப்படுத்தி அதை நீங்கள் தொடர வேண்டிய கடமையாக ஆக்கிச்சென்றிருக்கும் உங்கள் புனிதங்களை மூர்க்கத்தனமாக எதிர்க்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது, இங்கு நடைபெறுவது தனிமனித எதிர்ப்பு அல்ல,அந்த தனிமனிதன் தான் நம்பிக்கைக் கொண்ட, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தத்துவத்தையே எதிர்ப்பதாகும்.


பிராமணர்களின் கடமைகள் என்பது பெரும்பான்மை மக்களின் உரிமைகளை நசுக்குவது மேலாண்மை செய்வது என்று வரும்போதுதான் அவை கண்டிக்கப்படுகின்றன. பிராமணர்களை விட பிராமணியமே இங்கு நீக்கமற கலந்திருக்கிறது. ஆகவே பிராமணர்களை அழித்துவிடுவதால் மட்டுமே பிராமணியம் அழிந்துவிடப்போவதில்லை. அது எல்லாச் சாதிகளிலும் மிக ஆழமாக வேருன்றீ இருக்கிறது.


ஒரு பதிவிலோ ஒரு உரையாடலிலோ தீர்வு காணக்கூடிய சாத்தியதை உள்ள பிரச்சனை அல்ல இது. மிக ஆழமாக அதே சமயம் விருப்பு வெறுப்பின்றி, தொடர்ச்சியாக விவாதிக்கக்பட வேண்டிய பிரச்சனை.அத்தகையதொரு விவாதத்திற்கு நீங்கள் தயார் என்றால் முழுமையாக விவாதிக்க நான் தயராகவே உள்ளேன்.


அடக்குமுறைக்குட்பட்ட சமூகம் தன் குரல் அதன் மொழியில் சிறிய அளவில் வெளிப்படுகையிலே நெஞ்சு பொறூக்குதில்லையே என்று வேதனைப்படுகிறீர்கள். இலக்கியரசம் சொட்ட தேர்ந்த மொழியில் வெளிப்படும் வஞ்சத்தை என்னவென்று சொல்ல. நெஞ்சம் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான் இருக்கிறது. அவை உரத்து ஒலிக்கத்துவங்கினால் உண்மையின் சூடு தாளாது உங்கள் நெஞ்சம் வெடித்துவிடக்கூடும்.

எனவே தயாராக இருங்கள் .


இது உங்களுக்கான தனிப்பட்ட பதிவு என்றாலும் உங்களைப் போல எண்ணிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் பொருந்தக்கூடியதே.

மகாத்மாவின் அரசியல்

சாதி மதத்தோடு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதது. சாதி ஒரு நடைமுறை வழக்கமே. சாதியின் மூலம் எதுவென்று எனக்குத் தெரியாது.
என் ஆன்மீக வேட்கையைத் தணித்துக்கொள்ள சாதியின் மூலத்தை நான் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் சாதி ஆன்மிக வளர்ச்சிக்கும், தேச வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்க கூடியது என்பது எனக்குத் தெரியும். வர்ணம், ஆசிரமம் ஆகிய நிறுவனங்கள் சாதிகளோடு சிறிதும் தொடர்பு இல்லாதவை.

வருணச்சட்டம் நமக்குக் கற்பிப்பது என்ன?

பரம்பரைத் தொழிலை மேற்கொண்டு ஒவ்வொருவருவரும் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ள வேண்டும் என்பதுதானே. வர்ணச்சட்டம் நம் உரிமைகள் என்ன என்பதைக் கூறவில்லை. கடமை என்ன என்பதையே கூறுகிறது. மனித குலத்திற்கு நன்மை செய்வதற்கான தொழில்களைப்பற்றியே அது பேசுகிறது. வேறு எதையும் அல்ல. மிகவும் உயர்ந்த தொழில் அல்லது மிகவும் தாழ்ந்த தொழில் என்று எந்த தொழிலும் இல்லை என்பதும் இதனால் விளங்கும்.

எல்லாத் தொழில்களும் நல்லவைதான். சட்டத்திற்கு உட்பட்டவைதான். ''எல்லா வகையிலும் சம அந்தஸ்து கொண்டவைதான். ஆன்மீக குருவாக இருப்பது என்னும் பிராமணனின் தொழிலும் கோட்டி ஒருவனின் தொழிலும் சமமானவையே. தத்தமக்குரிய கடமைகளைபிராமணனும் கோட்டியும் சரிவரச் செய்து ஒரு காலத்தில் கடவுளின் கண்களுக்கு சமமான சிறப்பு உடையதாகவே காட்சியளித்தது. மனிதனிடமுருந்தும் ஒரே மாதிரியான ஊதியத்தையே பெற்று வந்ததாக தெரிகிறது.பிராமணன் ஆனாலும் சரி கோட்டி ஆனாலும் சரி வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவே அவர்கள் அத்தொழிலை மேற்கொண்டார்கள். வேறு எதற்காகவும் இல்லை. இன்றுங்கூட கிராமங்களில் இந்த சட்டம் சிறப்பான முறையிலே செயல்பட்டு வருகிறது என்பதற்கு சில அடையாளங்கள் காணப்படுகின்றன. 600 பேரே உள்ள சீகன் என்ற ஊரில் பிராமணர்கள் உள்ளிட்ட பலவேறு தொழிலாளிகளின் ஊதியத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.


சீரழிந்த இந்தக்காலத்திலும் நான் உண்மையான பிராமணர்களைப் பார்க்கிறேன். அந்தப் பிராமணர்கள் அவர்களுக்குப் பிறர் மனமுவந்து இடும்பிச்சையால் உயிர்வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய ஆன்மிக அறிவு, அனுபவம் என்கிற அரிய சொத்தை மனமுவந்து பிறருக்கு வழங்குகிறார்கள். தாங்கள் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தை சேர்ந்தவர்கள் எனக்கூறிக் கொண்டு அதே நேரத்தில் அந்த வர்ணத்திற்குரிய ஒரே ஒரு செயல்பாட்டு விதியையும் வெளிப்படையாக மீறி நடக்கிற மனிதர்களின் வாழ்க்கையில் காணப்படும் கேலிக்கூத்துகளை கொண்டு வர்ண சட்டத்தை ஆராய முற்படுவது பிழையானது. முற்றிலும் முறையற்றது. மற்ற எந்த வர்ணத்தை விடவும் தங்கள் வர்ணமே உயர்ந்த அந்தஸ்து கொண்ட வருணம் என்று எந்த வருணத்தாரும் உரிமை கொண்டாடுதல் கூடாது. அவ்வாறு செய்வது வர்ணச் சட்டத்தை மறுப்பதே ஆகும்.


தீண்டாமையை நம்பச் சொல்கிற எந்த அம்சமும் வருணச் சட்டத்தில் இல்லை. ( சத்தியமே கடவுள், அகிம்சையே மனித குலத்தின் சாரம் என்பது இந்து மதத்தின் சாராம்சம்)

டாக்டர் அம்பேத்கார் மட்டும் அல்ல இந்து மதம் பற்றி நான் தந்திருக்கிற இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து இன்னும் பல தலைவர்கள் எதிர்வாதம் புரிவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இவர்களின் எதிர்வாதத்தால் என் நிலையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது. இந்த விளக்கத்தின் படிதான் கடந்த 50ஆண்டுகளாக நான் வாழ்ந்து வருகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு என் வாழ்க்கையை அந்த விளக்கத்திற்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.

-''மகாத்மா'' காந்தி - 'ஹரிஜன்', ஜூலை 18, 1936. *

விடுதலை கோரி
போராட்டம்- ஆங்கிலேயனிடம்
தன்னைத் தக்கவைக்க
அடமானம் ஆரியனிடம்

ஹே ராம்!!! *

பெண்களுடமையாக

முக்தி பெற வந்து
சதைகளை பார்த்து
மூர்ச்சையாகிப் போகும்
ஆண்களைத் துரத்தி
ஆக்கிடுவோம் ஆலயங்களை
பெண்களுடைமையாக

சாமி வரும்


சூத்திரன் வீட்டுக்கும்

சாமி வரும்

அரசு அதிகாரம் அவனிடமிருந்தால்...

மறைந்த நிலா

இரவின் பனி தலைநனைக்க
நின்று கொண்டிருந்தேன்
பேருந்து நிறுத்தமொட்டிய
பூங்காவில் .

இங்குமங்கும்
சிறகடித்துத் திரியும் பட்டாம்பூச்சிகளாக
பல மொழிகளில் மழலைகளின்
இசை மழை.
இதயம் நகராது நிற்க
வந்துவிட்ட கடைசிப் பேருந்தில்
ஏறிக்கொண்டேன்.
ஏதோ யோசனையிலிருந்தவனை
கலைத்துப்போட்டது ஒரு பெரும்சிரிப்பு.

முன் இருக்கையில்
காதலன் வேண்டாமென்று
மறுத்தும்
விழுந்துவிட்ட தூசியை
ஊதி எடுத்துக்கொண்டிருந்தாள்
காதலி


ஒரு புன்னகை உதிர்த்து
இருக்கையில் சாய்ந்து கொண்டேன்
வானில் மேகத்திற்குள்
தன்னை மறைந்து கொண்டது
நிலா

மெளனமாய்

நேசத்தின் பயணமாக நீள்கிறது
பிரிவின் முற்றுப்புள்ளிகள்!
இடைவெளிகளெங்கும்
அன்பை நிறைத்திட்ட
இதயம் துடிக்கிறது
மெளனமாய்!!

அப்பத்தாவின் ஆத்மா

//மெய்மறந்த நிலையில் வரது ஆழ்மனதில் அவர் மானசீகமாகப் பின்பற்றும் இந்துதருமம் வார்த்தைகளாக வந்து வெளிப்பட்டிருக்கிறது. மெய்மறத்தல் விடுதலை செய்த உண்மை கறுப்புச்சட்டை போட்டு கடவுள் இல்லை என்பவர் தனது அப்பத்தாவின் ஆத்மா அக்காவின் மகளாக மீண்டும் தம்மிடம் வரவேண்டும் என்கிற அவாவாக வெளிப்பட்டு இருக்கிறது.//

கடவுள் இல்லை என்பவர் - ஹரிஹரன் வர்ணத்தை போதிக்கும் கடவுளர்களைத்தான் நான் இல்லை என்று சொல்லியிருக்கிறேன். தன் குழந்தைகளிடமே வேறுபாடு காட்டுபவன் கடவுளாக இருக்க முடியாது. நான்
எனது பிராத்தனைகளை சமர்பித்தது உங்கள் இந்து மத வேதநெறி கடவுளர்களிடம் இல்லை. என் அப்பத்தாவிடம் மட்டுமே. இரண்டுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. முன்னோர் வழிபாட்டில் மிக ஆழமான நம்பிக்கை கொண்டவன் என்பதை சொல்வதில் எனக்கு தயக்கமேதும் இல்லை.

விரிவாக பேசும் முன்னர் சில சுய விளம்பரங்கள்.

என் வலைப்பதிவின் வாசகத்தை படித்திருப்பீர்கள். எங்கும் எதிலும் அன்பையும் நட்பையும் விரும்பும் எளியன். ஆமாம். எல்லா மனிதர்களிடமும் அன்பையும் நட்பையும் தனிப்பட்ட முறையில் விரும்புவேன். இது என்னோடு பழகியவர்களுக்கு மிக தெளிவாக புரியும். மேலும் உறவுகளின் மீது நான் அளவு கடந்த அன்பைக் கொண்டவன். மிகவும் மென்மையான இதயம் என்னுடையது. என் அன்பை பல இடங்களில் வெளிக்காட்டிக் கொள்ளாது இதயத்திலேயே பூட்டி வைத்துக் கொண்டவனும்கூட. அதனால் அவை வெளிப்படுகையில் எந்த விதமான அரிதாரங்களும் இன்றி அப்படியே வெளிப்படும். மேலும் எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை பெண்கள் மீது மிக அதிக மதிப்பு கொண்டவர்கள். பெண்களை, உண்மையான செல்வங்களாக நினைப்பவர்கள். சனாதானம் வகுத்திருக்கும் கீழானவர்களாக பெண்களை நடத்துவது கிடையாது. நாங்கள் எங்கள் சகோதரிகளையோ, எங்கள் வயதை ஒத்த பெண்களையோ விளையாட்டுத்தனமாய் கூட ஏய் என்றெல்லாம் கூப்பிட முடியாது. எந்த பக்கமிருந்து யாருடமிருந்து அறை விழும் என்று தெரியாது

இப்போது அப்பத்தா விசயத்திற்கு வருவோம்.

நான் அந்தக் கவிதை எழுதியது 2004 மத்தியில். அப்போதே உடல்நலம் குன்ற ஆரம்பித்துவிட்டது. நான் எழுதிய கவிதை வரிகளைப்போலவே நாட்களாக நாட்களாக உருவத்தில் சிறியவர்களாகவும் ஆகிக் கொண்டே வந்தார்கள். மரணம் எதிர்பார்த்தது என்றாலும் அதன் இழப்பு மிக ஆழமானது. என் அப்பத்தா வாழ்ந்த வாழ்க்கை அத்தகையது. என் பிராத்தனையை படித்த நீங்கள் கொஞ்ச நேரம் ஒதுக்கி அந்த கவிதையும் வாசித்திருந்தீர்களானால் நன்றாக இருந்திருக்கும். என் எழுத்தகளால் இயன்றவரை என் அப்பத்தாவை அந்தக் கவிதையில் கொண்டு வந்து இருப்பேன். அப்பத்தாவின் மூத்த மகன் ( பெரியப்பா) அவர்களின் மகள்தான் என் அக்கா. எங்கள் வீட்டு முதல் பெண்.
அதனால் அளவு கடந்த பிரியம் அவர்கள் மீது. இப்போது அவர்களீன் பெற்றோர் இருவரும் கிடையாது.

எங்கள் வீட்டில்(எங்கள் வீடு, சித்தப்பாவீடு) பூனைக்குட்டி உண்டு. அது எப்போதும் எங்கள் அப்பாமார்களின் மடியில்தான் இருக்கும் குழந்தையைப் போல. அத்தனை அரவணைப்போடு இருக்கும். அத்துனை ஏக்கம் நிறைந்த வீடு எங்களுடையது. பேரப்பிள்ளைகளை ஏந்தி கொஞ்சி விளையாட வேண்டிய தருணத்தில் அவர்கள் பூனைகளைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பத்தாவிற்கு இறக்கும் முன்பு எப்படியாவது பேத்திகளின் பிள்ளைகளை பார்த்துவிட வேண்டுமென்று. உடலில் உயிர்மட்டும் வைத்துக்கொண்டு கடைசி இரண்டு ஆண்டுகளை கழித்தார்கள். பாட்டி இறக்கும் நேரம் அக்காவிற்கு மருத்துவம் செய்து கொண்டிருந்தோம். தொடர்ந்து கொண்டிருகிறது இப்போதும்

சமீபத்தில் நான் புதுவீடு வாங்கினேன். பால் காய்ச்சிய அன்று எல்லோரும் புதிய வீட்டில் தங்கினார்கள். நான் மட்டும் தங்கவில்லை. காரணம் என் அக்காவின் குழந்தை அந்த வீட்டில் தவழும் போதுதான் நான் தலைசாய்க்க வேண்டும் என்ற என் எண்ணம்( அக்கா திருமணத்தின் போது மச்சினன் மோதிரம் போட்டவன் நான் - எனவே அவர் குழந்தையின் தாய்மாமன்). என் வீடு என் அக்காவின் தாய்வீடு. வீடு வாங்கியதில் பெற்றோருக்கு அளவு கடந்த மனநிறைவு. ஆனால் எனக்கு என் அக்காவின் குழந்தை தவழ்கையில்தான் வீடு வாங்கியதின் நிறைவு வரும். அப்பத்தா போன்று எல்லோரையும் அரவணைக்கும் வகையாக எங்களை மகிழ்வில் திளைக்க வைக்க அக்காவின் மகளாக வரவேண்டும் என்றேன். சொல்ல வந்தது பிறக்கும் குழந்தை பெண்ணாக பிறக்க வேண்டும். அப்போதுதான் ஒரு மாமன்காரனாய் தொடர்ந்து சீர் செய்து கொண்டே இருக்க முடியும். அது அப்பாத்தா மாதிரியான அன்பானவள் என்றால் மகிழ்விற்கு எல்லையே இல்லை.

என் பிராத்தனை என்ற வார்த்தைக்கு பின்பு பலசூழல் உண்டு. முக்கியமாக உறவுகளற்ற தனிமை. உணர்வு ரீதியான காரணங்கள் உண்டு. நீங்கள் குறிப்பிடும் சனாதான வேதநெறி இந்து தரும வெங்கய உணர்வுகள் கிடையாது

அன்புடன்
முத்துகுமரன்

பி.கு:
தரமற்ற அனானிமஸ் பின்னூட்டங்களுக்கு இந்த பதிவில் அனுமதி கிடையாது.
Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP