அப்பத்தாவின் ஆத்மா

//மெய்மறந்த நிலையில் வரது ஆழ்மனதில் அவர் மானசீகமாகப் பின்பற்றும் இந்துதருமம் வார்த்தைகளாக வந்து வெளிப்பட்டிருக்கிறது. மெய்மறத்தல் விடுதலை செய்த உண்மை கறுப்புச்சட்டை போட்டு கடவுள் இல்லை என்பவர் தனது அப்பத்தாவின் ஆத்மா அக்காவின் மகளாக மீண்டும் தம்மிடம் வரவேண்டும் என்கிற அவாவாக வெளிப்பட்டு இருக்கிறது.//

கடவுள் இல்லை என்பவர் - ஹரிஹரன் வர்ணத்தை போதிக்கும் கடவுளர்களைத்தான் நான் இல்லை என்று சொல்லியிருக்கிறேன். தன் குழந்தைகளிடமே வேறுபாடு காட்டுபவன் கடவுளாக இருக்க முடியாது. நான்
எனது பிராத்தனைகளை சமர்பித்தது உங்கள் இந்து மத வேதநெறி கடவுளர்களிடம் இல்லை. என் அப்பத்தாவிடம் மட்டுமே. இரண்டுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. முன்னோர் வழிபாட்டில் மிக ஆழமான நம்பிக்கை கொண்டவன் என்பதை சொல்வதில் எனக்கு தயக்கமேதும் இல்லை.

விரிவாக பேசும் முன்னர் சில சுய விளம்பரங்கள்.

என் வலைப்பதிவின் வாசகத்தை படித்திருப்பீர்கள். எங்கும் எதிலும் அன்பையும் நட்பையும் விரும்பும் எளியன். ஆமாம். எல்லா மனிதர்களிடமும் அன்பையும் நட்பையும் தனிப்பட்ட முறையில் விரும்புவேன். இது என்னோடு பழகியவர்களுக்கு மிக தெளிவாக புரியும். மேலும் உறவுகளின் மீது நான் அளவு கடந்த அன்பைக் கொண்டவன். மிகவும் மென்மையான இதயம் என்னுடையது. என் அன்பை பல இடங்களில் வெளிக்காட்டிக் கொள்ளாது இதயத்திலேயே பூட்டி வைத்துக் கொண்டவனும்கூட. அதனால் அவை வெளிப்படுகையில் எந்த விதமான அரிதாரங்களும் இன்றி அப்படியே வெளிப்படும். மேலும் எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை பெண்கள் மீது மிக அதிக மதிப்பு கொண்டவர்கள். பெண்களை, உண்மையான செல்வங்களாக நினைப்பவர்கள். சனாதானம் வகுத்திருக்கும் கீழானவர்களாக பெண்களை நடத்துவது கிடையாது. நாங்கள் எங்கள் சகோதரிகளையோ, எங்கள் வயதை ஒத்த பெண்களையோ விளையாட்டுத்தனமாய் கூட ஏய் என்றெல்லாம் கூப்பிட முடியாது. எந்த பக்கமிருந்து யாருடமிருந்து அறை விழும் என்று தெரியாது

இப்போது அப்பத்தா விசயத்திற்கு வருவோம்.

நான் அந்தக் கவிதை எழுதியது 2004 மத்தியில். அப்போதே உடல்நலம் குன்ற ஆரம்பித்துவிட்டது. நான் எழுதிய கவிதை வரிகளைப்போலவே நாட்களாக நாட்களாக உருவத்தில் சிறியவர்களாகவும் ஆகிக் கொண்டே வந்தார்கள். மரணம் எதிர்பார்த்தது என்றாலும் அதன் இழப்பு மிக ஆழமானது. என் அப்பத்தா வாழ்ந்த வாழ்க்கை அத்தகையது. என் பிராத்தனையை படித்த நீங்கள் கொஞ்ச நேரம் ஒதுக்கி அந்த கவிதையும் வாசித்திருந்தீர்களானால் நன்றாக இருந்திருக்கும். என் எழுத்தகளால் இயன்றவரை என் அப்பத்தாவை அந்தக் கவிதையில் கொண்டு வந்து இருப்பேன். அப்பத்தாவின் மூத்த மகன் ( பெரியப்பா) அவர்களின் மகள்தான் என் அக்கா. எங்கள் வீட்டு முதல் பெண்.
அதனால் அளவு கடந்த பிரியம் அவர்கள் மீது. இப்போது அவர்களீன் பெற்றோர் இருவரும் கிடையாது.

எங்கள் வீட்டில்(எங்கள் வீடு, சித்தப்பாவீடு) பூனைக்குட்டி உண்டு. அது எப்போதும் எங்கள் அப்பாமார்களின் மடியில்தான் இருக்கும் குழந்தையைப் போல. அத்தனை அரவணைப்போடு இருக்கும். அத்துனை ஏக்கம் நிறைந்த வீடு எங்களுடையது. பேரப்பிள்ளைகளை ஏந்தி கொஞ்சி விளையாட வேண்டிய தருணத்தில் அவர்கள் பூனைகளைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பத்தாவிற்கு இறக்கும் முன்பு எப்படியாவது பேத்திகளின் பிள்ளைகளை பார்த்துவிட வேண்டுமென்று. உடலில் உயிர்மட்டும் வைத்துக்கொண்டு கடைசி இரண்டு ஆண்டுகளை கழித்தார்கள். பாட்டி இறக்கும் நேரம் அக்காவிற்கு மருத்துவம் செய்து கொண்டிருந்தோம். தொடர்ந்து கொண்டிருகிறது இப்போதும்

சமீபத்தில் நான் புதுவீடு வாங்கினேன். பால் காய்ச்சிய அன்று எல்லோரும் புதிய வீட்டில் தங்கினார்கள். நான் மட்டும் தங்கவில்லை. காரணம் என் அக்காவின் குழந்தை அந்த வீட்டில் தவழும் போதுதான் நான் தலைசாய்க்க வேண்டும் என்ற என் எண்ணம்( அக்கா திருமணத்தின் போது மச்சினன் மோதிரம் போட்டவன் நான் - எனவே அவர் குழந்தையின் தாய்மாமன்). என் வீடு என் அக்காவின் தாய்வீடு. வீடு வாங்கியதில் பெற்றோருக்கு அளவு கடந்த மனநிறைவு. ஆனால் எனக்கு என் அக்காவின் குழந்தை தவழ்கையில்தான் வீடு வாங்கியதின் நிறைவு வரும். அப்பத்தா போன்று எல்லோரையும் அரவணைக்கும் வகையாக எங்களை மகிழ்வில் திளைக்க வைக்க அக்காவின் மகளாக வரவேண்டும் என்றேன். சொல்ல வந்தது பிறக்கும் குழந்தை பெண்ணாக பிறக்க வேண்டும். அப்போதுதான் ஒரு மாமன்காரனாய் தொடர்ந்து சீர் செய்து கொண்டே இருக்க முடியும். அது அப்பாத்தா மாதிரியான அன்பானவள் என்றால் மகிழ்விற்கு எல்லையே இல்லை.

என் பிராத்தனை என்ற வார்த்தைக்கு பின்பு பலசூழல் உண்டு. முக்கியமாக உறவுகளற்ற தனிமை. உணர்வு ரீதியான காரணங்கள் உண்டு. நீங்கள் குறிப்பிடும் சனாதான வேதநெறி இந்து தரும வெங்கய உணர்வுகள் கிடையாது

அன்புடன்
முத்துகுமரன்

பி.கு:
தரமற்ற அனானிமஸ் பின்னூட்டங்களுக்கு இந்த பதிவில் அனுமதி கிடையாது.

11 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Hariharan # 26491540 said...

வெகுவிரைவில் தாய்மாமனாகி தங்களது சொந்த வீட்டில் மகிழ்ச்சியோடு தங்கி மகிழ்ந்திருக்கும் காலம் கனிந்து வர ஆத்மார்த்தமாக ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

கார்மேகராஜா said...

இந்த பதிவில் ஏதோ உள்குத்து இருந்தாலும் பாசத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!

உங்கள் வீட்டை போலத்தான் எங்கள் வீட்டிலும். அக்கா தங்கையை திட்டினால் மடாரென்று ஏதாவது வந்து தலையில் விழும்.

Anonymous said...

மற்றவர்களின் சோகத்தில் கூட தன் கருத்தைத் திணிக்கும் ஒரு சிலரின் போக்கிலும், அதற்கு சிலர் ஜால்ரா அடிக்கும் சூழ்நிலையிலும் நீங்கள் கோபம் கொள்ளாமல் அமைதியாக அளித்திருக்கும் பதில் உங்களின் சிறந்த மனப்பக்குவத்தைக் காட்டுகிறது.

அனைத்தும் நல்லபடியாக நடக்க என் பிரார்த்தனைகள்.
- MKK

Anonymous said...

/சொல்ல வந்தது பிறக்கும் குழந்தை பெண்ணாக பிறக்க வேண்டும். அப்போதுதான் ஒரு மாமன்காரனாய் தொடர்ந்து சீர் செய்து கொண்டே இருக்க முடியும்./

ஒரு பெண் குழந்தையுடையத் தாய்மாமனின் உணர்வுகளை அழகாக சொல்லிவிட்டீர்கள்.

உங்கள் பிரார்த்தனை (உங்கள் சூழலுக்கான புரிதலோடே சொல்கிறேன்... வெங்காய உணர்வுகளையல்ல) ஈடேற வாழ்த்துகிறேன்...

தங்களுக்கும் , தங்கள் குடும்பத்தினருக்கும் இனியப் பொங்கல் திருநாள் வாத்துக்கள்!!!

Anonymous said...

\\மெய்மறந்த நிலையில் வரது ஆழ்மனதில் அவர் மானசீகமாகப் பின்பற்றும் இந்துதருமம் வார்த்தைகளாக வந்து வெளிப்பட்டிருக்கிறது. மெய்மறத்தல் விடுதலை செய்த உண்மை கறுப்புச்சட்டை போட்டு கடவுள் இல்லை என்பவர் தனது அப்பத்தாவின் ஆத்மா அக்காவின் மகளாக மீண்டும் தம்மிடம் வரவேண்டும் என்கிற அவாவாக வெளிப்பட்டு இருக்கிறது\\

அப்படியா? இந்து மதத்தின் கொள்கைகளில் ஒன்றான பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு அதை முத்துக்குமரன் எதிர்க்கிறார் அப்படியானால் அதுவும் உண்மையின் ஆழ்மன வெளிப்பாடா?. மெய்மறந்த நிலையில் இந்து தருமம் இல்லை இல்லை மனித தருமம் வந்தாக எடுத்துக்கொள்ளலாமா?. தனது மூட கொள்கைகளுக்கு ஆதாயம் தரும் கருத்தென்றால் உடனே இப்படியொரு.. என்னத்தச் சொல்ல.

உங்கள் தாய்மாமன் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.

Anonymous said...

தங்களுக்கும் , தங்கள் குடும்பத்தினருக்கும் இனியப் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!

எழில் said...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது அய்யன் திருவள்ளுவன் வாக்கு.

நீங்கள் குறிப்பிட்டது சரி.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பினாத்தல் சுரேஷ் said...

"வாய்யா இப்பதான் உன்னை நெனைச்சேன், உனக்கு நூறு வயசு" என்று சொல்பவர், நினைத்தால் நூறு வயசு வாழ்வார்கள் என்ற நம்பிக்கை (மூடம் or otherwise) கொண்டவராகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்ற எளிய புரிதல் இருந்தால் இப்படிப்பட்ட கேள்விகள் எழாது.

உங்கள் அவா பூர்த்தியடைய பிரார்த்திக்கிறேன்.

அழகு said...

இப்போதுதான் மூச்சு சீரானது!

சற்று முன்னர் சாக்கடைப் பக்கம் தலை காட்ட வேண்டியிருந்தது. அங்கிருந்து நேராக இங்கு வந்தேன்.

தங்கள் ஏக்கத்தைத் தீர்த்து வைக்க மருமகள்/கள் பிறக்க வாழ்த்துகளோடு,

முத்துகுமரன் said...

பிராத்தனை செய்திட்ட நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

தனிமடல் இட்ட நண்பர் மணிக்கும் எனது நன்றி

தம்பி said...

வலைப்பதிவின் வாசகத்தைப் போலவே உங்கள் எழுத்தும் மனமும்.

எண்ணங்கள் ஈடேற எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
தம்பி

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP