நண்பர் சாகரனுக்கு அஞ்சலி.

நேற்று மதி அவர்களின் பதிவில் நண்பர் சாகரன் மரணம் என்ற செய்தியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டோம். திரும்ப திரும்ப இந்த செய்தி தவறானதாக இருந்துவிடக்கூடாத என்ற பதைபதைப்புடன் வாசித்தாலும் இழப்பை உனர்ந்தோம். மிகவும் அதிர்ச்சியானதாகவும், நம்ப இயலாததாகவும் இருக்கிறது.

துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக புதிதாக இணையதளம் தொடங்க எண்ணியபோது மனதில் தோன்றியவர் நண்பர் சாகரன். ஏற்கனவே தமிழ்மன்றம், முத்தமிழ் மன்றம் போன்ற களங்களில் ஏற்பட்ட பரிச்சயமும் நட்பும் அவரை தொடர்பு கொள்ள வைத்தது. நாங்கள் துவக்கு மாதிரி இதழ்கள் வெளியிட்டபோது வாழ்த்துகளையும், கருத்துகளையும் சொல்லி மிகுந்த உற்சாகத்துடன் எங்களின் முயற்ச்சிக்கு ஆதரவு கொடுத்ததுடன் எங்களுக்கான இணையதளத்தையும் உடனடியாக ஏற்படுத்தி தந்தார். தமிழின் மீதும் தமிழ் ஆர்வலர்களின் மீதும் அவர் கொண்டிருந்த மதிப்பும், நட்பும், அன்பும் மிகச்சிறப்பானது. தேன்கூடு என்ற வலைதிரட்டியின் மூலம் இணயத்தமிழுக்கு அவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தகுந்தது. ஆனால்
நொடிப்பொழுதில் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பதை தாங்க இயலாததாக இருக்கிறது.

அவரின் மரணச்செய்தி எங்கள் இதயத்தை அறுக்கிறது. இந்த பெருந்துயரில் துவக்கு இலக்கிய அமைப்பு தங்களையும் இணைத்துக் கொள்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய எங்களது பிராத்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக
இசாக், நண்பன், கவிமதி, முத்துகுமரன். ஆசிப் மீரான், சே.ரா. பட்டணம் மணி, ந.தமிழன்பு.

**

நண்பர்களுக்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள்.

திரு சாகரன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அவர்தம் குடும்பத்தினர் இந்த பெருந்துயரிலிருந்து மீண்டு வருவதற்கான மனவலிமையை பெற்றிடவும் நம் இணைய நண்பர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்யலாம். எண்ணற்ற இதயங்களின் ஆதரவு அவர்தம் குடும்பத்திற்கு மனவலிமையை தந்திடும்.

நேரம் பற்றி நண்பர்கள் சொல்லுங்கள்

1 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

நண்பன் said...

பரஞ்சோதி,

நான் அவருக்கு இன்னமும் கடனாளியாகவே இருக்கிறேன் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள் - உங்களைப் போலவே மற்றொரு கடனாளியாகவே நானும், மற்ற துவக்கு நண்பர்களும் உள்ளனர். துவக்கு.காம் என்றொரு தளத்தை உருவாக்கிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்ட பொழுது, நாங்கள் கேட்டுக் கொண்டோம் என்பதானால், உடன் செய்ய வேண்டிய பணிகளைச் செய்து ஒரு மாதத்திற்குள்ளாக தயார் செய்து கொடுத்தார் - பின்னர் அவரிடம் தொலைபேசி செலவு எத்தனை ஆயிற்று, எப்படி திருப்பித் தருவது என்றெல்லாம் கேட்ட பொழுது, அதற்கென்ன, நண்பன், அவசரம் - எப்பொழுதாவது சந்திக்கும் பொழுது வாங்கிக் கொள்கிறேனே என்று சொல்லி தட்டிக் கழித்து விட்டார். இத்தனை விரைவாக அவர் சந்திக்க முடியாத இடத்திற்குச் சென்று விடுவார் என்று நினைக்கவே இல்லை.

நேற்று இரவு, வலைப்பூவில், தமிழ்மண லோகோவை இணைப்பதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்த பொழுது, இரவு 12 மணிக்கு, அப்பொழுது தான் அறைக்குத் திரும்பிய, முத்துகுமரன், சாகரன் இறந்து விட்டார் தெரியுமா என்ற கேள்வியுடன் தான் அறைக்கதவையே திறந்தார். முதலில், ஏதோ தமிழ்நாட்டில் பிரபலமான ஒருவர் இறந்து விட்டார் என்ற தகவலைத் தான் தருகிறார் என்ற நினைப்பில், யார் அவர்? என்று தான் கேட்டேன். பின்னர் தான் அவர் சொன்னார், நமக்கு துவக்கு.காம் உருவாக்கித் தந்த சாகரன் - தமிழ் மன்ற நண்பர் என்று சொன்னதும் தான், மதிகந்தசாமியின் பதிவைப் படித்தேன். நம்ப முடியவில்லை.

அவருடைய மரணம் நம்பமுடியாதது போலவே, அளவற்ற அச்சத்தையும் விதைத்து சென்றிருக்கிறது என்றும் சொல்லலாம். இன்று மீண்டும், அலுவலகத்தில் இருந்து திரும்பும் வழியில், முத்து குமரனுடன் பேசிக் கொண்டே வரும் பொழுது, மீண்டும் சாகரனைப் பற்றிய விவாதம் தான். புகைப் பழக்கம் இல்லாதவர், அசைவ உணவுகள் சாப்பிடாதவர், இளம் வயது - ஒரு மாரடைப்பை எதிர்பார்க்கும் எந்த ஒரு சாத்தியக் கூறும் இல்லாத ஒரு வாழ்க்கையே இத்தனை அதிர்ச்சியுடன், இறைவனால் முடித்து வைக்க முடியுமென்றால், இவை மற்றும் இன்ன பிற பழக்கங்களும் உள்ள மற்றவர்களின் கதி என்ன? ஏனோ, நம்மை இவையெல்லாம் அண்டாது என்ற ஒரு மமதையுடன் வாழ்வதாகவே படுகிறது. ஆனால், இவையெல்லாவற்றையும் விட, நம்மை மீறிய ஒரு சக்தியால், நம்மை நாம் அறியாமலே முற்றிலுமாக துடைத்தெறிந்து விட முடியும் என்ற உண்மை முகத்தில் அறைந்தாற் போன்று உரைக்கிறது.

ஒருவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை வாழ்ந்து கழிக்க வேண்டிய, உற்ற உறவினர்களுக்குத் தான் அதன் துயரமும் தாக்கமும் அதிகமாக இருக்கும். அத்துடன், விட்டுப் போன பொறுப்புகளும், கூட இருந்தால், அதன் துயரம் அதிகமாகவே இருக்கும். இந்த வெற்றிடங்களையும், துயரங்களையும் அனுபவித்தவன் என்பதினாலே, நண்பர் சாகரனின் மறைவு இன்னமும் அதிக தாக்குதலை ஏற்படுத்துகிறது.

அவரது குடும்பத்தாரின் துயரத்தில் பங்கு கொள்வதில் நானும் இணைந்து கொள்கிறேன் - அத்துடன், அவரது குடும்பத்தாருக்கு, உதவியாக ஏதேனும் செய்யும் பொழுது, கண்டிப்பாக என்னையும் அழைத்துச் சொல்லுங்கள். இது உதவி அல்ல - நீங்கள் கூறியது போல, கடன் தீர்க்கும் பணி மட்டுமே.

உங்கள் அழைப்பிற்காக காத்திருக்கிறோம்.

அன்புடன்
நண்பன்

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP