அப்பா, அட்லாஸ் சைக்கிள், நான்

இளவஞ்சி என்பீல்ட் புல்லட் பதிவை எழுதிய போது எழுத நினைத்த பதிவு இது. வழக்கம் போல மிக காலத்தாமதமாக இன்று எழுது நேரம் அமைந்திருக்கிறது. பழைய நினைவுகளை அசைபோடுதல் என்பது எப்போது மனதிற்கு இதமாகவும், ஒரு உற்சாகத்தையும் தரக்கூடியது. இதோ என் பங்கிற்கு

அப்பா, அட்லாஸ் சைக்கிள், நான்..

அப்பா பற்றி கொஞ்சம்,

அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அப்பா. மருந்தாளுநர் சங்கத்தில் மாநில அளவில் முண்ணனித் தோழராக பணியாற்றியவர். சங்கத்தின் மாவட்டத்தலைவராக தொடர்ந்து இருந்தவர். அவர்களுடைய சங்கத்தில் தொடர்ந்து 90 விழுக்காடுகளுக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஒரே நபர். கம்யூனிசவாதி.
இறை நம்பிக்கை உடையவர். இயல்பாக எளிமையாக பழகக்கூடிய மனிதர்.

அப்பாவின் பலகூறுகளை நான் உள்வாங்கி இருக்கிறேன். அப்பாவுடன் பணிபுரிந்த பலர் என்னை அப்பாவின் நகல் என்று கூறுவார்கள். கொஞ்சமே கண்டிப்பைக் காட்டி ஒரு தோழனாகவே இருப்பவர் இன்று வரை. அறிவுரைகளாக சொல்லாமல் வாழ்ந்து காட்டுபவர். எதிலும் எங்கும் நேர்மையோடு இருக்க வேண்டும், வெளிப்படையாக பேசுதல் வேண்டும், உண்மை என்று மனதிற்கு பட்டதை தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும், மனித நேயத்தோடும், சமூக அக்கறையோடும் வாழ்தல் வேண்டும் என்பதில் தீர்க்கமான நம்பிக்கை கொண்டவர் அதன்படியே இருப்பவரும் கூட.

அப்பாவை பற்றி நிறைய எழுத இருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அவரது எழுத்து நடையிலே அவருடைய பணிகளை, அனுபவங்களை பதிவு செய்யுங்கள் என்று பலமுறை வற்புறுத்தி வருகிறேன். கையெழுத்துப் பிரதியாகவோ அல்லது இணையத்திலோ எழுதுங்கள் என்று சொல்லி வருகிறேன். பிறதொரு சமயத்தில் எழுதுகிறேன் என்று தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார்.

இப்போ அட்லாஸ் சைக்கிளுக்கு வருவோம்.

என்னுடைய முதல் சொத்து இந்த சைக்கிள் என்பேன்.ஏறக்குறைய 12 வருடங்களுக்கு முன் எனக்கு கிடைத்த சொத்து. பத்தாம் வகுப்பு படித்த போது கிடைத்தது. நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது மிகத் தாமதமாகத்தான். ஏழாம் வகுப்பு படிக்கும் போதுதான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அப்போது அப்பா BSA சைக்கிள் பெரிய வண்டி வைத்திருந்தார். அந்த வண்டி இப்போது எங்களிடம் இல்லை. பழுதடைந்துவிட்டதால் சைக்கிள் கடைக்காரனிடமே கொடுத்து விட்டோம். அதன் மாதிரி


அப்பாவின் வண்டியெடுத்து ஓட்டத் தொடங்கிவிட்டாலும் உயரம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமப்பட்டேன். ஆனாலும் ஒருமுறை கூட வாய்திறந்து எனக்கு புது வண்டி வாங்கித் தாங்க என்று கேட்டதில்லை. இப்போதும் கூட இது வேண்டும் என்று எதையும் கேட்க மாட்டேன்.
பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள், வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். காலை அலுவலகப்பணியை முடித்துவிட்டு நேராக கடைக்குச் சென்று புதுவண்டியை வாங்கிக் கொண்டு, நான்தான் முதன் முதலில் ஓட்ட வேண்டும் என்று திருச்சியிலிருந்து திருவரங்கத்திற்கு உருட்டிக் கொண்டே வந்திருக்கிறார். பாவம் அப்பாவின் நண்பர் புகழேந்தி மாமாவும் கூடவே நடந்து வந்திருக்கிறார்.

அப்போது என் வயதை ஒத்தவர்களுடைய பெரும்பகுதி தேர்வு BSA SLR ஆக இருக்கும். ஆனால் அதை விட அட்லஸ் கொஞ்சம் உயரம் குறைவு என்பதால் அதை வாங்கி வந்தார். புதுவண்டி, நல்ல சிவப்பு நிறம் என ராஜா போல இருந்தது. நான் பள்ளியிலிருந்து வர அப்பா வாசலிலே காத்துக் கொண்டிருந்தார். நான் வரும் போதே பார்த்துவிட்டேன். புது வண்டி நிற்கிறதே யாருடையாதாக இருக்கும் என்று. ஏனெனில் அது எட்டு குடும்பங்கள் தங்கியிருந்த ஸ்டோர் வீடு. அதிகம் சபலப்படாமால், நமக்கேற்ற உயரத்தில் வண்டி இருக்கிறதே என்று யேசித்தவாறே மாடியேறி வீட்டுக்குப் போனேன். சைக்கிள் நல்லா இருக்குதாடா என்றூ அப்பா கேட்க எனக்கு ஆனந்த அதிர்ச்சி. அட எனக்கா புது வண்டி என ஆர்வத்தில் சாவி தாங்கப்பா என்றேன். முதல்ல சாப்பிடு அப்புறம் ஓட்டலாம் என்று சொல்ல வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு திருவரங்கம் முழுவதும் ஒரு சுற்று சுற்றினேன்.

என்னுடைய வண்டி - இப்போதைய தோற்றம் :


1995லிருந்து என்னோடு இருந்து வரும் சொத்து இதுவென்றே சொல்லுவேன். இந்த வண்டியில்தான் முதன் முதலில் டபுள்ஸ் அடிக்க கற்றுக் கொண்டேன். கற்றூக் கொண்டது முதல் அப்பாவை மருத்துவமனையில் காலையில் கொண்டு போய் விடுவது எனது அன்றாடபணியாகும். முதுகுத் தண்டுவட தேய்மானம் காரணமாக அப்பாவை அவ்வளவாக ஓட்ட விடுவது கிடையாது. பள்ளிக்கு அருகே வீடு என்பதால் பெரும்பாலும் பள்ளிக்கு கொண்டு செல்ல மாட்டேன். வீட்டுக்கு வந்து மதியம் சாப்பிட்டு விட்டு அப்பாவையும் கூப்பிட்டு வந்து விடுவேன். மதிய நேர பணியாக இருந்தால் அப்பாவை விட்டுவிட்டு சைக்கிளோடு பள்ளிக்கு வந்துவிடுவேன். அப்போது சக நண்பர்கள் தங்களுடைய வண்டிகளை வித விதமாக அலங்கரித்து வருவார்கள். நானும் அது போல ஆசைப்பட்டு வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு முன் மக்கார்டில் பச்சை வண்ணத்தில் என் பெயரை எழுதினேன். எழுதியது அசிங்கமாகத் தெரியவே அந்த பகுதி முழுவதையும் பச்சை வண்ணத்தால் நிரப்பிவிட்டேன். சிகப்பு வண்டியில் பச்சை மின்னியது. :-)

1997 ஆண்டு 12 ம் வகுப்பு முடித்து கல்லூரி போகவிருந்த சமயம்தான் என்னுடைய வண்டியோடும் அப்பாவோடும் மிக அதிக நேரம் செலவிட்டேன். 12வது வகுப்பு இறுதித் தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதால் பொறியியல் கிடைக்காது என்ற நிலை, அப்பாவின் முன் இரண்டே வாய்ப்புகள். ஒன்று ஏதேனும் இளங்கலை பாடப்பிரிவில் சேர்த்துவிடுவது அல்லது பணம் செலவழித்து பொறியியல் படிக்க வைக்க வேண்டியது.நேர்மையான அரசு ஊழியராக இருந்துவிட்டபடியால் சேமிப்பு என்று பெரிய அளவில் கிடையாது. சங்கத்தில் ஈடுபாடுடன் இருந்ததால் ஏற்பட்ட அதிகப்படியான செலவுகளாலும் கையிருப்பு இல்லாத நிலை. ஆனால் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை. சொந்தக்காரர்கள் பெரும்பாலனவர்கள் ''அகலக்கால்'' வைக்கிற, உன் சத்துக்கு இதெல்லாம் முடிகிற காரியமா முத்து என அப்பாவிடம் என்று சொன்னபோதிலும் அப்பா உறுதியாக இருந்தார். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என. அம்மா தன்னிடமிருந்த நகைகளை கழட்டிக் கொடுத்து முதலில் இதை அடகு வைத்து பணம் கொண்டு வாருங்கள் மீதித் தொகைக்கு வேறெங்காவது கடன் வாங்குவோம் என்று. அம்மாவின் ஒத்துழைப்பு இருந்ததாலே அவரால் எங்களை படிக்க வைக்க முடிந்தது.

அப்போது ஆரம்பித்ததுதான் நான் துபாய் வரும் வரை கடன், கடனை அடைக்க கடன் என்று வாழ்க்கை ஓடியது. என்னை படிக்க வைக்க வட்டிக்கு கடன் வாங்க வேண்டும் என்று இருந்த போது அதற்காக அப்பா பட்ட அலைச்சல் எத்தனை எத்தனை. எனது ஒரே வேலை அப்பாவை சைக்கிளில் வைத்துக் கொண்டு அவர் சொல்லுமிடங்களுக்கெல்லாம் கூட்டிச் செல்வது. அதனாலேயே வீட்டின் நிதிநிலமை என்னவென்பதும், எவ்வளவு கடன் வாங்குகிறோம், யாரிடம் வாங்குகிறோம் என்பதும் எனக்கு தெரிந்தே இருந்தது.

இவ்வளவு தெரிந்தும் கல்லூரிக் காலத்தில் கொஞ்சம் அதிகப்படியாகவே செலவு செய்தேன். என் நிலை அறிந்தும், நான் செய்த அளவுக்கதிகமான செலவுகள். நான் இறுதி ஆண்டு வந்த போது தம்பியும் பொறியியல் படிப்புக்கு வந்து விட்டான். இன்னும் அதிகப்படியான சுமை அப்பாவிற்கு. அப்போதும் அப்பாவிற்கு உற்ற துணை அட்லாஸ் சைக்கிள்தான். மிக மெதுவாக ஓட்டிக் கொண்டு வருவார். உயரம் கம்மியான சைக்கிள் என்பதால் அவருக்கு அது வசதியாக இருந்தது.

அப்பா ஓய்வு பெறும் 20 தினங்களுக்கு முன் எனக்கு துபாயில் பணி கிடைத்தது. அப்பா அவரது பணி ஓய்வு நிகழ்ச்சியின் ஏற்புரையில் சொன்னது என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ''இந்த இருபது நாளாத்தான் நான் நிம்மதியா தூங்குறேன். எனக்கு கை கொடுக்க பையன் வந்துட்டான்'' இனி கவலை இல்லை. நாம எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளை படிக்க வைக்கணும் கேட்டுகிறேன்னு சொல்லி நிறைவு செய்தார். கண்கள் கலங்க நான் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னை தனியே அழைத்து அப்பாவுடன் உடன் பணியாற்றியவர் ஒருத்தர் சொன்னது மிகப்பெருமையாக இருந்தது. கூட வேலை பாக்குறவங்க பைக், ஸ்கூட்டர்னு வரும் போது நீங்க சைக்கிள்ல வர்றீங்களே சார்னு நாங்க கூட பலமுறை கேலி பண்ணி இருக்கோம். உனக்கு வேலை கிடத்த பின்பு அவர் சிரித்த முகத்தோடு அதே சைக்கிளில் வந்த போது உண்மையாவே கம்பீரமா இருந்தது தம்பி. அப்பாவை பார்த்துக்குங்க என்றார். சரி சார் என சொல்லி வந்தேன். அப்பாவின் ஓய்வுக்குப் பின் மதுரை வந்துவிட்டோம்.

சென்ற ஆண்டு நான் சொந்த வீடு வாங்கிய போதும் அப்பாவிற்கு உற்ற துணைவன் என் அட்லஸ் சைக்கிள்தான். வீடு வாங்குவது தொடர்பாக எல்லா இடத்திற்கும் இதே சைக்கிளில்தான் அலைந்தார்கள். அப்பாவின் விருப்படியே நல்ல வீடாகவும் அமைந்தது. இதுவரை வெயிலிலும் மழையிலும் காய்ந்து கருவாடாக கிடந்த என் சைக்கிளுக்கும் யோகம் வந்தது.

ஆம் ! இப்போது அய்யாவிற்கு தனி அறை. வேறு எந்த வாகனும் இல்லாததால் அந்த அறையில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறார். நான் வாழ்வில் அதிகம் முறை தொலைத்தது எதுவென்றால் இந்த வண்டியின் சாவி தான். இன்று பூட்டப்படாமல் அறைக்குள் தனியாளாக இருக்கிறார்.

இந்த முறை ஊருக்குப் போன போதும் ஆசை தீர சைக்கிள் ஓட்டினேன். அடிக்கடி செயின் கழண்டு கொண்டாலும் அந்த கடக் கடக் சத்தம் ஒரு சந்தோசத்தை தருகிறது.

அப்பா அம்மா மணிவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. எல்லோருக்கும் மகிழ்ச்சி. அப்பாவை வைத்து டபுள்ஸ் அடித்து சென்றபோது சொல்லிக் கொண்டுவந்தேன். வீடு என் பேர்ல இருந்தாலும் அதுல எனக்கு பங்குதான் உண்டு. மொத்தமும் கிடையாது. அதுனால இன்னொரு வீடு வாங்குற வரைக்கும் எனக்கு இருக்கிற ஒரே சொத்து சைக்கிள்தான்பா என்றேன். சிரித்துக் கொண்டார்.

கொஞ்சம் நீளாமாகிப் போய்விட்டது பதிவு. ஏனோ இதையெல்லாம் சொல்ல வேண்டும் என்று ஓரு ஆசை.

ஏன்!

தனிமையின் ஏக்கம்!!

பிறந்தநாளன்று கூட அப்பா அம்மாவின் அருகாமையில் இல்லாமல்

இவ்வளவு தொலைவிலிருக்கும் தனிமையின் ஏக்கம்.........
Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP