அளம் - சு.தமிழ்ச்செல்வி

நண்பர் அய்யனாரை வியாழன் அன்று சந்தித்த போது மூன்று புத்தகங்களை வாசிக்க எடுத்து வந்திருந்தேன். அதில் சு.தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய அளம் நாவலும் ஒன்று. நேற்று நள்ளிரவு வாசிக்க ஆரம்பித்து அதிகாலை 5 மணி அளவில் வாசித்து முடித்தேன். சமீபத்தில் வாசித்த சிறப்பான ஒரு நாவல். தமிழ் நாவல்களிலே அதிகம் பதிவு செய்யப்படாத ''பெண் உழைப்பை'' அழுத்தமாக விவரித்திருக்கும் நாவல். ஏறத்தாழ முப்பது வருடத்தை கதைக்களத்திற்குள் உள்ளடக்கியிருக்கிறது.

கிராமப்பொருளாதாரத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்திலும் பெண்களின் உழைப்பு மிக முக்கியமானது. பெரும்பாலான குடும்பங்கள் பெண்களின் உழைப்பின் காரணமாக கிடைக்கும் வருவாயைக் கொண்டே தங்கள் வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். நகரம் சார்ந்த நடுத்தர வாழ்க்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் பலருக்கு பெண்களின் உழைப்பு என்பது அதிகம் அறிந்திடாத ஒன்றாகும். கிராமப்புறங்களில் இருப்போருக்கு இதை நேரில் கண்டுணர வாய்ப்பு கிடைத்திருக்கும்.அளம் என்று குறிப்பிடப்படுவது உப்பளங்களே. தமிழன் பண்பாட்டில் உப்பு மிக முக்கியமானதொரு இடத்தை பிடித்திருந்தது. உப்பு வளத்தின் அளவாக கணக்கிடப்பட்ட ஒன்றாகும். முந்தைய காலத்தில் நெல்லுக்கு இணையாக இடம் பெற்றிந்த ஒன்றாகும். பண்டை மாற்றில் சம்பா நெல்லுக்கு இணையாக உப்பு இருந்தது. இந்த அடிப்படையில்தான் சம்பளம் என்ற சொல் உருவாகி இருக்கிறது( சம்பளம் = சம்பா + அளம்).

கதை நிகழும் இடத்தில் பார்வையாளனாக உலவ விடும் எழுத்தாற்றல் நாவலாசிரியருக்கு இருக்கிறது. திருத்துறைப்பூண்டி நகருக்கு அருகே உள்ள கோயில்தாழ்வு என்னும் இடத்தில் கதை நிகழுகிறது. மூன்று பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு கணவனின் துணையின்றி தனியாக வாழ்வில் போராடும் சுந்திராம்பாளையும், அவளது மூன்று மகள்களையும் மையமாகச் சுற்றி கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.பிறந்த பச்சிளங்குழந்தை அஞ்சம்பாள், மூன்று வயதான ராசம்பாள், ஏழு அல்லது எட்டு வயதான வடிவாம்பாள் அவர்களோடு கதை தொடங்குகிறது. வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாகத் திரியும் சுதந்திராம்பாளின் கணவன் சுப்பையன் கப்பல் வேலைக்கு போகிறான். வேலை செய்யாது இருந்த போது திட்டிக்கொண்டேயிருக்கும் அவளுக்கு அவன் பிரிந்து போவது பெரும் துயரத்தை தருகிறது. சுப்பையன் அவளை சமாதானப்படுத்தி செல்கிறான். சென்றவன் மறுபடியும் ஊர் திரும்பவேயில்லை. உயிருடன் இருக்கிறான இல்லையா என்றே தெரியாத நிலையில் என்றாவது ஒருநாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு வாழுகிறாள் சுந்திராம்பாள், மூன்றும் பெண் குழந்தைகளாக அதுவும் மிகவும் கருப்பாக இருப்பதால் எப்படி அவர்களுக்கு திருமணம் செய்விப்பது கூடுதல் துயரத்திற்குள்ளாகிறாள்.

வடிவாம்பாள்-பெரியங்கச்சி, பெரியமொட்டை; ராசாம்பாள் நடுக்கச்சி, அஞ்சம்பாள் - சின்னங்கச்சி, சுந்தராம்பாள் - சுந்தரம் என்று நாவலின் பெரும்பகுதிகளில் அழைக்கப்படுகிறார்கள்.

வறுமை வாட்டி வதைக்கும் இவர்களுக்கு வாழ்வின் பசிபோக்கும் உயிர்மருந்தாய் கேட்பாராற்று தானாய் வளர்ந்து கிடக்கும் பலவகையான கிழங்குகளே உணவுகளாக அமைந்துவிடுன்றன. நாவலில் வரும் பெரும்பாலான கிழங்கு வகைகள் நான் இதுவரை கேள்விப்படாத ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வகை கிழங்குகளையும் உணவாக மாற்றிக்கொள்ளும் நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிற்றது. அத்தனை வறுமையிலும் தான் இருக்கும் கிராமத்தை விட்டு புலம் பெயர மறுக்கும் ஒரு வைராக்கியம் மிகுந்த மனுசியாக இருக்கிறாள் சுந்தரம். இந்த பிடிவாதத்திற்கு காரணம் மண் மீதான நேசம் என்பதைக்காட்டிலும் வெளிநாட்டில் மாயமாகிப்போன தன் கணவன் தன்னை இந்த இடத்திலேதான் விட்டு விட்டு போயிருக்கிறான், அவன் திரும்பி வரும்போது தான் அந்த இடத்திலேயே இருக்க வேண்டும் சமூகம் ஏற்படுத்தி வந்த வரைமுறைகளை கட்டிக்காத்து விட வேண்டும் என்பதுதான்.
காலங்கள் உருண்டோட இரண்டாவது மகள் ராசாம்பாளும் வயதிற்கு வந்துவிடுகிறாள். வறுமையோடு இரண்டாவது பெண்ணிற்கும் திருமணம் செய்ததுவைக்க வேண்டும் என்ற பொறுப்பும், கவலையும் அவளுக்கு வந்துவிடுகிறது. இந்த சூழலிலும் அவள் ஒப்பாரி வவத்து முடங்கிடாது தைரியாமாய் சூழலை எதிர்கொள்ளும் தன் போராட்டத்தை தொடர்ந்துநடத்துகிறார். என்றாவது ஒருநாள் தன் கணவன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையை மட்டும் மனதிற்குள் வைத்துக்கொண்டு தன் வாழ்க்கையை நகர்த்துகிறாள். இரண்டு பிள்ளைகள் வயதிற்கு வந்தவுடன் வெளி வேலைக்கு தன் கடைசி மகள் அஞ்சம்பாளை ஒத்தாசைக்கு வாத்துக்கொள்கிறாள். இருபத்தி மூன்று வயதாகியும் திருமணமாகாமல் இருக்கும் வடிவாம்பாளுக்கு இறுதியாக வரன் வருகிறது, ஏறத்தாழ அவள் அப்பன் வயதில், அதே சமயம் நடுக்கச்சிக்கும் வரன் வந்துவிட இருவரின் திருமணத்தையும் ஒன்றாக நடத்தி வைக்கிறாள். திருமணமான மூன்றாவது மாதமே முத்த பெண் மூளியாகி வீட்டுக்கு வந்துவிட சிறிய மனநிம்மதிகளுக்கு பிறகு அவள் போராட்டம் மறுபடியும் தொடங்கி விடுகிறது.

கிட்டத்தட்ட நாவலின் பாதி வரைக்கும் அளம் என்னும் உப்பளத்திற்குள் நிகழாமால் அதனை விட்டி விலகியிருக்கும் கிராமத்திலேயே நகர்கிறது கதை. ஆனால் உப்பளங்களின் தாக்கம் மட்டும் மெல்லிய இழையாக தொடருகிறது. பிற்பகுதியில் உப்பளத்தில் கூலிக்கு உழைப்பதும், பின் சிறிய அளவிலான பாத்திகளை சொந்தமாக்கி கொண்டு உழைக்கிறார்கள். சாண் ஏற முழம் சறுக்கல் என வாழ்க்கை போராட்டம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சுந்திரம்பாள் உழைத்துக் கொண்டே இருக்கிறாள். அவள் உழைப்பிற்கான காரணங்கள் மட்டும் பரம்பரையாகத் தொடர்கிறது. முன்பு தன் குழந்தைகளுக்காக உழைத்தவள் இறுதியில் மகளின் குழந்தைகளுக்காகவும் சேர்ந்து உழைக்கிறாள்.
*
தங்கைகள் இருவரையும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பினை உணர்ந்தவளாக, வயதிற்கு மீறிய முதிர்ச்சியோடு வாழ்கிறாள் வடிவாம்பாள். அவளுக்கு எப்போது உற்ற்றதுணையாக நம்புவது ஆவுத்திகத்தி சாமியைத்தான். வயதிற்கு வந்த இரண்டு ஆண்டுகளாகி யும் திருமணம் செய்து வைக்கமல் இருப்பது குறித்து சுந்தரம் புலம்பும் போதும், உன்னை எத்தன தடவ சொல்லியிருக்கேன், இந்த பேச்சை எடுக்காதென்னு நடக்கறப்ப நடக்கும் என்று சொல்லுவதும், குறிப்பு(சோதிடம்) கேட்க போய் தோசம் இருப்பதாக சொன்னதாக சொல்லும் தாயிடம் இரூக்கிற நிலமையில இது வேறயா என்று வினவுவதும், சொன்ன தோசங்களை நிவர்த்தி செய்துவிட்டால் நல்லது நடந்துவிடுமென்றூ உறுதியாக சுந்திரம் நம்புவதுமாக மிகவும் எதார்த்தமாக படைக்கப்பட்டிருகிறது இவரது பாத்திரம். ஏமாற்றத்தை விட நிராகரிப்பின் வலி அதிகம் என்பதை உணர்ந்தவளாக தன்னைவிட மிக கருப்பாக இருக்கும் வரனைப் பற்றி மற்றும் இனி தேடுங்கள் என்று சொல்லிவிடுகிறாள். தங்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் அம்மாவோடு சண்டை போட்டு நெல் பயிரடுவதும் அது வளர்ந்து விளைச்சல் தரும் சமயத்தில் புயல் மழையால் அழிந்து போகின்றது. மறுபடியும் வறுமை. இரண்டாவது முறையாக குறிப்பு பார்த்துவிட்டு வரும் சுந்தராம்பாள் ஐப்பசி கழிஞ்சு கல்யாணம் நடக்கும்னு குறிப்புகாரர் சொன்னதாக கூறும்போது வழக்கமான பதிஅலை உதிர்த்துவிட்டு சென்றாலும் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமைந்திருக்கிறது. திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையின் மகிழ்வில் நீண்ட நாட்களாக தரிசாக கிடக்கும் தங்கள் நிலத்தில் மீண்டும் பயிரட தன் தாயை சம்மதிக்க வைத்து பயிருடுகிறாள். சிலவருடங்களுக்கு முன்பு வந்ததை விட மிக அதிகமான புயல் மழையால்(புயல்மழையின் விவரிப்பு ஆழிப்பேரலைகளைப் போன்று அழிவுகளை ஏற்படுத்துவாதாக விவரிக்கப்பட்டிருக்கிறது நாவலில், அவ்வளவு கடுமையான சேதங்கள்மறுபடியும் அழிந்து போவதும், தன் துரதிர்ஷ்டத்தை எண்ணி நொந்துகொள்கிறாள். .தன்னைவிட அதிக வயதுடைய மணமகனுக்கு நிச்சயக்கபட்ட பின் தன் நடுத்தங்கையோடு ப்பேசும்போது தாத்தாவை கட்டிவிஅக்க போறாங்க என்றுணர்த்தும் பாட்டைப் பாடுகிறாள் இருந்தாலும் அந்த திருமணத்திற்கும் தன்னை தயார் செய்துகொண்டுவிடுகிறாள் மனதளவில். கணவனை இழந்த பின்பு தாய்வீட்டிற்கு வந்த பின்பு சிறிதுகாலம் முடங்கிகிடக்கிறாள். பிறகு சொந்தமாக சிறிய அளம் வாங்குகிறாள். தன் காலில் நிற்க வேண்டும் என்ற தீராத வேட்கையை மட்டும் மனதில் எப்போதும் சபதம் கொண்டிருக்கிறாள்
*
நடுக்கச்சி என்னும் ராசாம்பாள் நாவலில் வடிவாம்பாளின் நிழலாகவே வருகிறாள். அவள் போலவே தாய்க்கு துணையாக உழைக்கிறாள். ராசாம்பாளின் உழைப்பை நாம் வடிவாம்பாளின் உழைப்பைக் கொண்டு நாமே தீர்மானித்து கொண்டிருக்கும்படியே நாவலாசிரியர் கையாண்டிருக்கிறார். அக்கா திருமணம் நிச்சயமான சமயத்திலே இவளுக்கும் திருமணம் ஏற்பாடாகிவிட சிறுது காலத்திற்கு மகிழ்ச்சியான கவலையும் வறுமையுமற்று வாழ்கிறாள். அன்பான கணவன் அமைந்துவிட்டான் என்று மகிழ்வோடு வாழ்ந்து வரும் வேளையில் மூன்றாவது குழந்தை பிறந்த நேரம் அவள் வாழ்வில் மறுபடியும் சூறாவளி சுழற்றியடிக்கிறது. அவள் கணவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட அவன் கட்டிய தாலியை கோவில் உண்டியலில் போட்டு கழற்றிப்போட்டு விட்டு தாய் வீட்டிற்கு வந்துவிடுகிறாள். சிறுவயதில் காடுகளுகளில் மேடுகளில் உழைத்தவள் இப்போது உப்பளத்தில் உழைக்கிறாள்.
*
நாவல் தொடங்கும் போது முப்பது நாள் குழந்தையாக இருக்கும் அஞ்சம்பாவின் மெளனங்கலந்த உழைப்பினால் நாவலில் என்னை மிகவும் பாதித்தவள். நாவலாசிரியரின் கதைப்பார்வையை அஞ்சம்பாவின் கண்களினூடாகவே நான் காண்கிறேன். சின்னஞ்சிறு வயதில் வீட்டின் வறுமை போக்க உப்பளம் சென்று உழைக்க நினக்கும் மனது இவளது மனது. அங்கு அறிமுகமாகிறான் பூச்சி. உப்பளத்தில் பெண் சிறுமிகளை வேலைக்கு எடுத்துகொள்ள மாட்டார்கள் என்று அவன் கூற உன் காச்சட்டையை(கால் சட்டையை) எனக்கு தா நான் போட்டுகிறேன் என்று அவள் கேட்கும்போது என்னிடம் பின்னாடி ஓட்டையாயிருக்கும் ஒரே கால்சட்டைதானே இருக்கு என்று சொல்லியவன் சரி நான் தருகிறேன் என்று சொல்லித் தருகிறான் மறக்காமல் மறுநாள் அந்த ஓட்டையைத் தைத்து. அஞ்சம்பா டவுசர் சட்டௌயிலும், இவன் கோவணத்தோடும் சென்று வேலை செய்கிறார்கள். அந்த இடந்தில் மலர்ந்த அன்பு இறுதிவரை தொடர்கிறது. இரண்டாவதாக வரும் புயலின் காரணமாக பூச்சியின் குடும்பம் இடம் பெயர்துவிட இருவரும் வேறு வழியின்றி பிரிகின்றனர். மிகவும் குறைவான பேச்சுகளுடனே வளர்ந்த அன்பு அவள் வயதிற்கு வந்த பிறகு அவள் மெளனியாகிவிடுகிறாள். இருவருக்குமிடையே சொல்லப்படாத வார்த்தைகளுக்குள் அன்பு அழியாது இருக்கிறது. பிச்சை தன் தாயினை மீறி அவளை மணந்து கொள்ளும் பொருட்டு அவளிடம் மெளனம் கலைத்து எங்காவது ஓடீப்போய் பொழச்சுக்குவோமென்று சொல்லும் போது ''சொல்லாம கொள்ளாம ஓடிப்போற பொண்ணு நான் இல்ல. எங்கம்மா அப்படி வளக்கல'' என்று அவனிடம் சொல்லிவிட்டு உழைக்க செல்லும் தன் தாயுடனும் அக்காகளுடனும் சேர்ந்து கொள்வதோடு முடிகிறது நாவல்.

இந்த நான்கு கதாபாத்திரங்களைத் தவிர தன் தம்பி குடும்பத்திற்கு முடிந்தவரை உதவிடும் கணேசன், அஞ்சம்பா மீது அன்பு கொண்டிருக்கும் பூச்சி, வடிவின் கணவன்களாக வரும் வேலய்யன், முத்துசாமி, முதலில் அன்பான கணவனாகவும், பின்பு பெண் சுகம் தேடிப்போகும் ராசாம்பாளின் கணவன், சுந்தராவிற்கு கண்ணில் எறும்பு கடுத்துவிட மருந்தாக பிள்ளைப்பாலை பீச்சியடிக்கும் அந்த பெண்கள் என கிராமத்து மனிதர்களும் அளத்தில் அளவோடு இருக்கிறார்கள்.

அளம் பல கேள்விகளை வாசகனுக்குள் எழுப்பும் வல்லமை கொண்டது. அவைகளுக்கான விடைகளை நாம் தேடுவதே உண்மையானதாக இருக்கும்.

உப்பைப் போன்று கண்களுக்கு புலப்பாடத பெண் உழைப்பை உணர்வின் மூலமாக உறங்கிக்கிடக்கும் இதயத்துற்குள் பாய்ச்சும் ஒரு உன்னத படைப்பு ''அளம்''

16 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

கோவி.கண்ணன் said...

பெண் எழுத்தாளரை சிறப்பிக்கும் வண்ணம் மிகவும் அழகாகவும் நேர்மையாகவும் *அளம்* விமர்சிக்கப்பட்டு இருக்கிறது. எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்விக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்.

இடுகையை அறியதந்தமைக்கு நன்றி !

Thekkikattan|தெகா said...

அருமையான புதினமாக இருக்கும் போலவே. உங்களின் விமர்சனத்தைப் படிக்கும் போதே "அளம்" வாசிக்க வேண்டுமென்ற அவா வருகிறது.

நன்றி முத்துகுமரன்!

Boston Bala said...

நன்றி

தம்பி said...

நான் எழுதினதை விட விரிவா எழுதி இருக்கிங்க. படிச்சு அனுபவித்தால் மட்டுமே இங்கு எழுத்திலே சொல்லப்பட்டிருக்கும் கஷ்டங்கள் புரிய வாய்ப்பிருக்கிறது.

ஆமா இன்னும் ரெண்டு புத்தகம் என்னன்னு சொல்லவேல்லியே.

முத்துகுமரன் said...

//பெண் எழுத்தாளரை சிறப்பிக்கும் வண்ணம் மிகவும் அழகாகவும் நேர்மையாகவும் *அளம்* விமர்சிக்கப்பட்டு இருக்கிறது. //
நன்றி கோவி.கண்ணன்.

முத்துகுமரன் said...

//அருமையான புதினமாக இருக்கும் போலவே.//
ஆமாம். அருமையான புதினம்தான். வாசிக்க கையிலெடுத்துவிட்டால் முடிக்காது கீழே வைக்கவிடாத உணர்வுப்பூர்வமான எழுத்து ஆசிரியருடையது
// உங்களின் விமர்சனத்தைப் படிக்கும் போதே "அளம்" வாசிக்க வேண்டுமென்ற அவா வருகிறது.//
வாசித்த பின் உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள்
*
நன்றி பா.பா.

முத்துகுமரன் said...

// படிச்சு அனுபவித்தால் மட்டுமே இங்கு எழுத்திலே சொல்லப்பட்டிருக்கும் கஷ்டங்கள் புரிய வாய்ப்பிருக்கிறது. //
ஆமாம். உங்கள் இடுகையும் வாசித்துவிட்டுதான் எழுதினேன்.
//ஆமா இன்னும் ரெண்டு புத்தகம் என்னன்னு சொல்லவேல்லியே.//
முனைவர். தொ.பரமசிவன் அவர்கள் எழுதிய ''பண்பாட்டு அசைவுகள்'' & சமாயங்களின் அரசியல்'' தான் அந்த இரண்டு புத்தகங்கள்.

அய்யனார் said...

விரிவான இடுகை முத்து...

இந்த நாவலைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட சங்கடங்கள் மிகவும் அதிகம்.மனிதர்களைத் தவிர்த்து இயற்கையும் உழைப்பாளர்களை / ஏழைகளை நெருக்கடிகளுகுட்படுத்துவதும் மிக நேர்மையாக பதிக்கப்பட்டிருந்தது.துயரங்களைப் பற்றி பேசும்போது அவை மிகுந்து விடாமலிருப்பது மிகவும் முக்கியம்..

யூமாவின் இரத்த உறவு வலிகளைப் பேசும் இன்னொரு நாவல் மிகுந்த வார்த்தையலங்காரங்களால் அதொரு செண்டிமெண்ட் நாவல் என ஒரு வார்த்தையை வரச் செய்துவிட்டது ஆனால் தமிழ்செல்வியின் வார்த்தைகள் மிக நேர்மையாய் இருந்தது..

பகிர்வுக்கு நன்றி

இராம்/Raam said...

முத்துகுமரன்,

நல்ல விமர்சனம்.....

கதிரோட பதிவிலே இந்த புத்தகத்தை படித்ததும் வாங்கினேன்.... ஆனா இன்னும் படிக்கல.. படிச்சி நானொரு பதிவு போடுறேன்... :)

செல்வநாயகி said...

இந்த நாவல் ஆசிரியரின் செவ்வி ஒன்றையும், "அளம்" பற்றிய அறிமுகக் குறிப்பினையும் எங்கோ வாசித்திருந்தேன். ஆனால் நாவலைப் படிக்கும் வாய்ப்பு இன்னமும் அமையவில்லை.

ஒரு நாவலை நாவலாக மட்டும் படிக்காமல் அதை நிகழ்சமூகத்தோடு பொருத்திப் பார்த்து உங்கள் குறிப்புகளையும் சொல்ல நினைக்கும் பாங்கு உங்கள் வாசிப்பனுபவத்திற்கும் அதில் நீளும் தேடலுக்கும் சான்று.

நன்றி முத்துக்குமரன் பகிர்ந்துகொண்டமைக்கு.

முத்துகுமரன் said...

//மனிதர்களைத் தவிர்த்து இயற்கையும் உழைப்பாளர்களை / ஏழைகளை நெருக்கடிகளுகுட்படுத்துவதும் மிக நேர்மையாக பதிக்கப்பட்டிருந்தது//

ஆமாம் அய்யனார். பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால் அதை குறிப்பிடையலாமல் போய்விட்டது. எனக்குள் எழுந்த க்கெள்விக்கு விடையாக நான் கண்டது பெண் உழைப்பு. தேட தேட வேறு வகையான உணர்வுகளையும் நம்முள் எழுப்பக்கூடிய ஒரு நாவலே அளம்.

முத்துகுமரன் said...

//கதிரோட பதிவிலே இந்த புத்தகத்தை படித்ததும் வாங்கினேன்.... ஆனா இன்னும் படிக்கல.. படிச்சி நானொரு பதிவு போடுறேன்... :)//

கண்டிப்பா போடுங்க ராம்! இத்தனை நண்பர்களை வாசிக்க தூண்டிய என் ஆசான் ஆசிப் மீரானுக்கு நன்றி:-)

முத்துகுமரன் said...

வருகைக்கு நன்றி செல்வநாயகி. உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்ந்த பதிவை எழுதி முடித்தபின் எதிர்பார்த்திருந்த ஒரு பின்னூட்டமும் கூட. பொழுதை கழிப்பதற்கான ஒரு கருவியாக புத்தகங்களை நினைக்காது இருந்தாலே நமக்குள் பல புதிய தேடல்களை புத்தகங்கள் உருவாக்கிவிடும்.

லக்ஷ்மி said...

//நகரம் சார்ந்த நடுத்தர வாழ்க்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் பலருக்கு பெண்களின் உழைப்பு என்பது அதிகம் அறிந்திடாத ஒன்றாகும். கிராமப்புறங்களில் இருப்போருக்கு இதை நேரில் கண்டுணர வாய்ப்பு கிடைத்திருக்கும்.// இந்த கருத்தை நானும் ஒரு முறை சிந்தித்திருக்கிறேன். அதிலும் ஆண்களின் வருமானம் பெரும்பான்மையும் குடியில் அழிந்துவிடுவதால் குடும்ப ஜீவனம் என்பது பெண்களின் வருமானத்திலேயே பெரும்பான்மை குடும்பங்களில் நடக்கக் காணலாம். இதையும் தவிர்த்து விவசாயத்தில் ஒவ்வொரு வேலைக்குமே இவர்களுக்கு வழங்கப் படும் கூலியும் ஆண்களை விடவும் குறைவானதுதான். இது குறித்து மேல் விவரங்கள் சேகரித்து தனி பதிவாக இடும் எண்ணமும் இருக்கிறது. வெகுநாட்களாய் என் To Do பட்டியலில் இருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று.

//சம்பளம் = சம்பா + அளம்// இதுவரை யோசித்திராத விளக்கம். அருமை.

//உப்பைப் போன்று கண்களுக்கு புலப்பாடத பெண் உழைப்பை உணர்வின் மூலமாக உறங்கிக்கிடக்கும் இதயத்துற்குள் பாய்ச்சும் ஒரு உன்னத படைப்பு ''அளம்''// இப்படியான ஒரு படைப்பை தெளிவான விமர்சனம் மூலம் அறிமுகம் செய்ததற்கு நன்றி முத்துகுமரன். வாங்கவேண்டிய பட்டியலில் குறித்துக் கொள்கிறேன்.

முத்துகுமரன் said...

//விவசாயத்தில் ஒவ்வொரு வேலைக்குமே இவர்களுக்கு வழங்கப் படும் கூலியும் ஆண்களை விடவும் குறைவானதுதான். இது குறித்து மேல் விவரங்கள் சேகரித்து தனி பதிவாக இடும் எண்ணமும் இருக்கிறது//
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

///
//சம்பளம் = சம்பா + அளம்// இதுவரை யோசித்திராத விளக்கம். அருமை.///

முனைவர் தொ.பரமசிவன் அவர்களின் பண்பாட்டு அசைவுகள் நூல் வாசிக்கும் வரை நானே அறிந்திடாத விளக்கம்தான். அந்த நூலில்தான் நான் இந்த விளக்கத்தை அறிந்து கொண்டேன். பதிவிற்கு பொருத்தமாக இருந்ததால் உபயோகித்து கொண்டேன்.

வருகைக்கும் விரிவான கருத்திற்கும் நன்றி லட்சுமி.

Anonymous said...

FANTASTIC REVIEW OF THE NOVEL...VERY RICH LANGUAGE AND TRUE COMMENTS ...THANKING YOU

SOWPARNIKA

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP