மரணங்கள்

நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன மரணங்கள்
உணர்தலின் தொலைவிற்கேற்ப
துயரின் அதிர்வுகள்

மனதில்,

எந்தவித சலனங்களையும் ஏற்படுத்திடாது,
நம்மைச் சுற்றி கேட்பாராற்று கிடக்கிறது
கவனிக்கபடாத மரணங்கள்
வாழ்தலின் போது உயிர் சுமந்த மதிப்பிற்கான
விலைப்பட்டியலோடு அல்லது
விதிக்கப்பட்ட பாவப்பட்டியல்களோடு
மண்ணிற்குள் மறைகின்றன சவங்கள்
மீட்டெடுக்கபடாமலே கிடக்கிறது
மரணங்களுக்குப் பின்னும் சமத்துவம்!

ரசித்ததற்காக, தோழமைக்காக, உணர்வுக்காக, உறவுக்கானதென
கவனமாக தரம் பிரிக்கபடுகின்றன

உதிர்க்கப்பட்ட கண்ணீர்த்துளிகள்

சில நேரம் துரோகமென்றெழைக்கப்படினும்
விடைபெற்ற உயிர்க்கான
மெளனத்தில் எஞ்சியிருக்கிறது
அடையாளங்களைக் கடந்த
மனிதம்

10 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

தம்பி said...

மரணம் மட்டும் முடிவில்லாதது.
ஒன்றின் ஆரம்பன் மற்றொன்றின் முடிவுபோல.

ஜமாலன் said...

//வாழ்தலின் போது உயிர் சுமந்த மதிப்பிற்கான
விலைப்பட்டியலோடு அல்லது
விதிக்கப்பட்ட பாவப்பட்டியல்களோடு
மண்ணிற்குள் மறைகின்றன சவங்கள்
மீட்டெடுக்கபடாமலே கிடக்கிறது
மரணங்களுக்குப் பின்னும் சமத்துவம்!//

அருமையான வரிகள். விலைப்பட்டியல் அல்லது பாவப்பட்டியல் இதைதவிர வேறு பட்டியல் இல்லை மனிதருக்கு. இரண்டு மதிப்பீடுகளே சாத்தியம் என்பதை சொல்லும் வரிகள்.

பாச மலர் said...

//மீட்டெடுக்கபடாமலே கிடக்கிறது
மரணங்களுக்குப் பின்னும் சமத்துவம்//

உண்மைதான்..நல்ல கவிதை..

முத்துகுமரன் said...

//மரணம் மட்டும் முடிவில்லாதது.//

உண்மைதான். ஆனால் எல்லா மரணங்களும் சமமானதாக இருப்பதில்லை

முத்துகுமரன் said...

//அருமையான வரிகள். விலைப்பட்டியல் அல்லது பாவப்பட்டியல் இதைதவிர வேறு பட்டியல் இல்லை மனிதருக்கு. இரண்டு மதிப்பீடுகளே சாத்தியம் என்பதை சொல்லும் வரிகள்.//

நன்றி ஜமாலான். திணிக்கப்படும் பாவப்பட்டியல்களுக்கு யாரும் இங்கே பொறுப்பேற்று கொள்வதே கிடையாது

முத்துகுமரன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி பாசமலர்

அருட்பெருங்கோ said...

/சில நேரம் துரோகமென்றெழைக்கப்படினும்
விடைபெற்ற உயிர்க்கான
மெளனத்தில் எஞ்சியிருக்கிறது
அடையாளங்களைக் கடந்த
மனிதம்./

சில மரணங்கள் அதிர்ச்சியையோ, துயரையோ, அழுகையையோ உண்டாக்கிவிடாதபோதும் எதையும் சிந்திக்கவிடாமல் மௌனமாக்கியிருக்கின்றன.

நல்ல வரிகள்.

sathish said...

//சில நேரம் துரோகமென்றெழைக்கப்படினும்
விடைபெற்ற உயிர்க்கான
மெளனத்தில் எஞ்சியிருக்கிறது
அடையாளங்களைக் கடந்த
மனிதம்//

சில நேரங்களில் மௌனம் தான் எத்தனை மொழிந்துவிடுகிறது!!

மிக இரசித்தேன் முத்துகுமரன் :)

சுல்தான் said...

ரசித்ததற்காக, தோழமைக்காக, உணர்வுக்காக, உறவுக்காக என
கவனமாக தரம் பிரிக்கப்படும் கண்ணீர் - அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
(உறவுக்காகனதென = உறவுக்கானதென)

முத்துகுமரன் said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சதிஷ்.

//கண்ணீர் - அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
(உறவுக்காகனதென = உறவுக்கானதென)//
நன்றி சுல்தான். அது எழுத்துபிழைதான், திருத்தி விட்டேன்

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP