காங்கிரசு சிறையில் திராவிடச் சிங்கம்


உண்மையான தேசியம் என்பது தேச மக்களின் சுயமரியாதையைப் பொறுத்ததேயல்லாமல் சிலரின் ஜீவனோபாயத்திற்கு மாத்திரம் ஏற்படும் வழியல்ல. உண்மையான அரசியல் என்பது எல்லா மக்களும் சமமாய் அனுபவிக்கக் கூடியதாயிருக்குமே ஒழிய, ஒருவருடைய ஆதிக்கத்துக்கு மாத்திரம் கிடைக்கக் கூடியதல்ல - தந்தைப் பெரியார்.

திராவிட நாடும், ஏன் வேண்டும் இன்பத் திராவிடம் என்றும் வளர்ந்த திராவிடத்தின் உடன்பிறப்புகள் இன்று சுண்ணாம்புகளை நுகர்ந்து பார்த்தும், குருடர்களுக்கு பார்வை கொடுத்தும், கிழ சிங்கத்தின் கர்ஜனையில் சிலிர்த்துப் போய் சாதி பிரிக்கும் புரோகிதகர்களாக புதுப் பரிமாணம் எடுத்து திராவிடம் வளர்க்கிறார்கள். திராவிடத்தின் மொத்த குத்தகைதாரர்களின் புண்ணியத்தில் இன்று பலர் வன்னியர்களாகவும், நாயக்கர்களாகவும் சாதியேற்றம் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு சாதிமாற்றத்திற்கு உள்ளானவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்குமா என்பதை கேட்டுச் சொன்னால் பயனாக இருக்கும்.

ஈழத்தமிழர் விசயத்தில் உடன் பிறப்புகளுக்கு தன் மீதிருந்த உறுத்துதல்களை களையவும் கழகத்திற்கு வாக்களிப்பதில் இருந்த நெருடலை போக்கவும் நடத்திய நாடகம் அவர் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தி இருக்கிறது. இனி உடன் பிறப்புகள் எந்த வித குற்ற உணர்வுமின்றி உதய சூரியனுக்கும், கைக்கும், முத்திரையிட்டு சரித்திரம் படைப்பார்கள். நட்சத்திர முத்திரைகளில் தெரியும் அவர்தம் சாதிகள். கலைஞர் மீது கடுமையான விமர்சனங்களைச் சமீபத்தில் எழுப்பியிருந்தாலும் நேற்றுக் காலை தொலைக்காட்சியில் படுக்கையில் பார்த்தபோது மனம் லேசாக துணுக்குற்றதை மறைக்க விரும்பவில்லை. இந்த நெகிழ்வுணர்ச்சியை ஏற்படுத்தியது அவரது அரசியலின் வெற்றி எனினும் பெரும் தமிழினத்தின் தலைவனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பெரும் தலைவன் மிகவும் தரம் தாழ்ந்து தமிழனத்தின் மீது பேரவலைத்தை ஏற்படுத்திய காங்கிரசின் துரோகத்தை மறைக்க சேவகனாய் அரிதாரம் ஏற்ற அவலத்தைத்தான் காண முடிந்தது.

கலைஞரிடமும் அவர் உடன்பிறப்புகளிடமும் காணக்கூடிய ஒரு முக்கியப் பண்பு தாம் செய்யும் தவறுகளைப் பற்றி பேசும் போது அதற்குரிய பதிலைத் தராமல் பிறிதெருவரின் தவறை மட்டும் குறிப்பிடுவார்கள் அவர்களை சந்தர்ப்பவாதிகள் என்றும், கொள்கையற்றவர்கள் என்றும் தமிழினத்தை வஞ்சித்தவர்கள் என்றும் தாமே உத்தமர்கள் என்றும் தனக்குத் தானே அழைத்துக் கொண்டு பெருமிதம் அடைவார்கள். ஈழத் தமிழர்களை வஞ்சித்ததில் திமுகவிற்கு எத்தனை பங்கிருக்கிறதோ அதற்கு குறையாத பங்கு ஆட்சியில் பங்கேற்ற பாமகவிற்கும் உண்டு. அன்புமணியை நோக்கி விரலை நீட்டுபவர்கள் மற்ற விரல்கள் தங்களை நோக்கி நீள்வதை சுட்டிக் காட்டுபவனை சாதிச் சட்டகத்துள் அடக்கி புதுத் தத்துவம் பேசிவருகிறார்கள்.

நேற்றைய நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே புனிதர் பிரணாப் முகர்ஜி நாங்கள் இலங்கைக்கு ‘’Non Lethal Weapons’’ கொடுத்தோம் என்று சொன்னானே, சகோதரயுத்தம் பற்றி பேசியவர்கள் தாங்களும் அத்தைகய சகோதர யுத்தக் காரர்கள் என்பதை மறந்து விட்டார்கள். நளினியை சிறையில் பிரியங்கா பார்த்ததிலிருந்து தொடங்கிய ஈழத் தமிழர் அழிப்பு காதையில் தன் ஆத்ம நண்பர் சிவாஜி கணேசனையும் விஞ்சி விடும் ஒரு அதி அற்புத மிகைப்படுத்தாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் கலைஞரைப் பார்த்து உடன்பிறப்புகள் வேண்டுமானால் கிழச் சிங்கமாய் கொண்டாடலாம். ஏனையோருக்கு அந்தத் தேவையில்லை. சிங்கமாகவே இருந்தாலும் இப்போது அது காங்கிரசுக் கொட்டகைக்குள் அடைபட்டு கிடக்கிறது. மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் தமிழக அரசு அதிகாரத்தில் இருந்த காங்கிரசை தூக்கியெறிந்த இயக்கத்தின் தலைவர் காங்கிரசுக்கு எதிராக இன்று அதே போன்றதொரு எழுந்த எழுச்சியின் போது அவர்களைக் காக்கும் கவசமாக மாறிப்போனதே அவர் முன்னெடுத்த கொள்கையின் பரிணாம வளர்ச்சியாக இருக்கிறது.

ஜெயலலிதா தமிழினத்தின் நிரந்திர விரோதியாக இருப்பத்தால் தானே உங்கள் பின்னால் திரண்டோம், ஆட்சியதிகாரத்தில் சுரண்டல்களில், அடக்குமுறைகளில் அவருக்கு நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று நிருபிக்கும் போது உங்கள் இருவரையும் ஒரே எடைக்கல்லில் வைத்துத்தானே பார்க்க முடியும். காங்கிரசு அரசின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பட்டை மக்களிடம் எடுத்துச் சொன்னவர்களின் கருத்துச் சுதந்திரத்தை நெறித்துவிட்டு ஜனநாயக உரிமைகளைப் பற்றி பேசுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது. அதிலும் நாங்கள் நினைத்திருந்தால் அரசு வழக்கறிஞர்களை வைத்து வழக்கை நீட்டித்திருக்கு முடியாதா? புரிந்து கொள்ளுங்கள் எங்கள் கருணை உள்ளத்தை என்று உரைப்பது ஆட்சி சுகத்திற்காக எங்கள் வசதிக்காக நாங்கள் செய்யும் அடக்குமுறைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள் அடிமைகளே என்ற ஆண்டைகளின் மொழியாகத்தான் இருக்கிறது. சுதந்திரம் என்பது தவணைகளில் கிடைக்கும் உரிமைதானோ??

மழைவிட்டும் விடாத தூவாணத்தில் சிதறும் பிணங்களை எண்ணாது கலைஞரின் சாதனைக்காக மகிழ்ந்து கொள்ளுங்கள்.

மக்களுக்காக மக்களோடு இருப்பவன் ஆட்சி அதிகாரத்தை எதிர்பார்த்திருத்திருக்க மாட்டான்.

ஆனால் மரண வியாபாரிகளின் அடிமைச் சிங்கங்கள்???

ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்


ஏன் வேண்டும்?
இன்பத் திராவிடம்!!


கொடி


மூவர்ணக் கொடி
அறுக்கிறது
தமிழன் தொப்புள்கொடி
உதிர்த்துப் போன பூக்களில்
தேசத் தாயின் திலகத்தில்
வெடித்துச் சிதறிய எம் தாய்களின் சூல்கள்
கருவறைச் சதைகளோடு

கதறல்களுக்கு காதுகளையும்
பிணக்குருதி வாடை சுவாசிக்கவும்
ஆணையிடுகிறது சுதந்திரக் கொடி
அனுமதித்த அளவோடு அழ

மறத்துப் போகாத உணர்வெஞ்சியிருப்பின்
மரித்துப் போகலாம்
இல்லையேல்
மண்டியிடாது கொடி கிழித்துப் போகலாம்
நாளை நம் கொடி

அறுபடாதிருக்க

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP