கலைஞர் பிக்சர்ஸின் ''செம்மொழி மாநாடு''

இன்றிலிருந்து 5 நாட்களுக்கு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மிகக்கோலாகலமாக நடைபெற இருக்கிறது. உணர்வோடு பங்கேற்று தமிழுக்கான தங்கள் பங்களிப்பைச் செய்ய இருக்கும் தமிழ்ப் பற்றாளர்களுக்கு வாழ்த்துகள். செம்மொழி மாநாட்டை ஆதரிப்போர் என்றும் எதிர்ப்போர் என்றும் இருவேறு கூறுகளாக தமிழினம் பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொருவருவரின் நிலைப்பாட்டிற்கும் பின் அவரவர் சார்ந்த நம்பிக்கைகள் ஆதாரமாய் இருக்கின்றது. என்னளவில் இந்த மாநாட்டை இரண்டு தளத்தில் வைத்துப் பார்க்க விரும்புகிறேன். மொழி, மொழிவளர்ச்சி, மொழிப்பயன்பாடு என்ற தளத்தில் தங்கள் ஆய்வுகளை, தகவல்களை பகிர்ந்து கொள்ளும் தமிழறிஞர்கள்/ஆய்வாளர்களின் பதிவுகள் முக்கியமானவை. அவைகள் முறையாக அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டும். குறைந்தப்பட்சம் முறையாக ஆவணப்படுத்தப்படவாவது வேண்டும். அந்த வகையில் மாநாட்டை வரவேற்கிறேன். இரண்டாவது செம்மொழி மாநாட்டை அரிதாரமாகக் கொண்டு நடத்த்தும் சுயலாப அரசியலும் அதன் பிண்ணனியில் உறுத்திக் கொண்டிருக்கும் செய்துவிட்ட துரோகத்திற்காக ஒப்பனை பரிகாரத்தினூடாக தன் மீதான வரலாற்றுக் கறைய கழுவும் முனைப்போடு அரங்கேற்றப்படும் ஓரங்க நாடகமாக இருக்கிறது. அந்த தளத்தின் இந்த மாநாட்டின் மறை நோக்கத்தினை கடுமையாக எதிர்க்கிறேன்


செம்மொழியாம் தமிழ்மொழிக்காக எடுக்க்கப்படும் மாநாடு நடக்க எதற்காக அதில் அரசியல் கலப்பினை கொண்டு வரவேண்டும் என்பது மாநாட்டை தீவிரமாக ஆதரிப்பவர்களால் முன்வைக்கப்படுகிறது. மொழியும் அரசியலும் பின்னிபிணைந்த ஒன்றே. மொழி வெறும் தகவல் தொடர்பு ஊடகமாக மட்டும் இருப்பதில்லை. அது இனமாக இருக்கிறது. இனத்தின் அடையாளமாக இருக்கிறது. ஏன் இனத்திற்கான விடுதலையாகக் கூட இருக்கிறது. கலைஞர் கருணாநிதி தன் அரசியல் சுயலாபத்திற்காக மொழியை பயன்படுத்தும் போது எழும் விமர்சனங்களை தவிர்க்க இயலாது. முதலில் செம்மொழியாக தமிழ்மொழி அறிவிக்கப்பட்டதிலியே பல ஒவ்வாமைகள் இருக்கிறது. இந்திய அரசால் நுட்பமாக இரண்டாம் தர செம்மொழியாகத்தான் நம் தமிழ்மொழி அறிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர உயர்தனிச் செம்மொழியாக இல்லை. நம் மொழியின் தொன்மையோடு ஒப்பிட்டால் பாதியளவிற்கு நெருங்கமுடியாத மற்ற மொழிகளும் கூட செம்மொழியாக வகைப்படுத்தப்படும் வாய்ப்புகளோடு அமைக்கப்பட்டிருக்கும் பட்டியலோடுதான் இணைக்கப்பட்டிருக்கிறது. 2005ஆம் ஆண்டு இதுகுறித்து தமிழறிஞர் மணவை முஸ்தபா தனது ஆதங்கத்தை பதிவு செய்திருந்தர்.அதற்கு மறுப்பாக மத்திய அமைச்சர் ராசா பதில் கட்டுரை எழுதி இருந்தார். இதுவரை மனிதவள மேம்பாட்டு துறையில் செம்மொழி என்று எந்த பட்டியலும் இல்லை. தமிழ்தான் அவ்வகையில் முதன் முதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று நியாயப்படுத்தி பேசி இருந்தார். எந்த பட்டியலுமே தயாரிக்கப்படாத போதும் சமஸ்கிருந்த ஆண்டாக மத்திய அரசியால் அறிவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்றதில் இருந்து சமஸ்கிருந்த வளர்ச்சிக்காக தொடர்ச்சியாக நிதியும் ஒதுக்கப்படுகிறது. இதிலிருந்தே நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம் நாம் இந்தியாவில் இரண்டாம் தர குடிகளே என்பது உறுதிப்படும்.

மாநாட்டின் அழைப்பிதழிலேயே இது கருணாநிதிக்கான மாநாடு என்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு விடுகிறது. மாநாட்டில் வழங்கப்படும் விருதின் பெயர் ''கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது''. நம் உயர்தனிச் செம்மொழிக்காக எடுக்கப்படும் மாநாட்டின் விருதிற்கு தகுதியான பெயர்வைக்கும் அளவிற்கு அறிஞர்களே இல்லாத அளவிற்கு செம்மொழியில் வறட்சி நிலவுகறதா என்ன?
மாநாட்டை புறக்கணிப்பவர்கள் கலைஞரின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அதைச் செய்கிறார்கள் என்பது தொடர்ந்து உடன்பிறப்புகளால் வைக்கப்படும் வாதம். ஆமாம் உண்மைதான். ஆனால் அது காழ்ப்புணர்ச்சி அல்ல, ஏமாற்றப்பட்ட சோகம், இனவழிப்புக்கு ஒரு சிறு எதிர்ப்பும் காட்டாது உடன் பணிந்த துரோகம், எதிர்ப்புகளை நீர்க்கச் செய்த அடக்குமுறை என அத்தனையும் தமிழினத்தின் தலைவராக/தமிழனத்தின் முகவரியாக தன்னை முன்னிறுத்திச் செய்த வஞ்சகம். இவைகளை ஒரு நாளும் வரலாறு மறக்காது. இறுதி வரை தாய்த் தமிழகம் என்று நம்பியிருந்த ஈழ மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த அவலத்திற்கு தமிழக மக்களை நிறுத்தியதை அவ்வளவு எளிதாக மறக்க வேண்டுமா என்ன? ஒபாமா சொல்லியே கேட்காத சிங்கள அரசின் மீது கலைஞரால் என்ன அழுத்தத்தை செலுத்தியிருக்க முடியும் என்று புத்திசாலித்தனமாக முன்வைப்பார்கள். அவர்கள் அடிப்படையாக புரிந்து கொள்ள வேண்டியது, ஒபாமாவோ, மேற்குலக நாடுகளோ ஒரு எல்லைக்கு மேல் இந்த விடயத்தில் எதுவும் செய்ய இயலாது போனதற்கு காரணம் இப்போரில் இருந்த இந்தியாவின் பங்களிப்பே. தங்களின் பெரும் வணிக சந்தையான இந்தியாவின் மனம் கோணும் படி நடந்து கொள்ள அவைகள் தயக்கம் காட்டின. போர் முடிந்த பின் ஐக்கிய நாடுகள் சபையில் போரின் போதான மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் பொருட்டு தீர்மானாம் கொண்டுவரப்பட்ட போது அணி சேரா நாடுகளை ஒருங்கிணைத்து அதைத் தோற்க முக்கியமான காரணியாக இந்தியா செயல்பட்டது. இவை அத்தனையும் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்குத் தெரியும். இறுதிகட்ட போரின் ஒவ்வொரு அசைவுவும் கருணாநிதிக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டே வந்தது என்பதை மறந்துவிட முடியாது. அப்போது அவர் உதித்த முத்துக்கள்தான் தூயவர் பிரணாப் முகர்ஜி, சொக்கத் தங்கம் சோனியாகாந்தி. இனத்தை அழிப்பவனுக்கு பட்டமளிப்பு விழா நடத்திக்கொண்டிருந்தவர்தான் கலைஞர் கருணாநிதி. இவைகள் அனைத்தயும் தன் மொழித்திறன் கொண்டு வார்த்தை விளையாட்டின் துணை கொண்டும் ஒரு உணவு இடைவேளைக்குட்பட்ட உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றி மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்ற வாக்கியம் கொண்டு இறுதிப்போரில் அழிந்த 30000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் மரணத்தைப் பற்றி எந்த உறுத்தலுமின்றி இருந்தாரா அதை எங்கனம் மறப்பது? தமிழினத்தின் தலைவராக வரித்துக் கொண்டவர் இங்கு குமுறி எழுந்த தமிழின உணர்வை மத்திய அரசிற்கு தெரிவித்திருக்க வேண்டும், மக்கள் எழுச்சியை கொண்டு மத்திய அரசை/ உலகத்தை திரும்பி பார்திருக்க செய்ய வேண்டும். அப்போதெல்லாம் அவருக்கு கடிதம் எழுத மட்டுமே நேரம் இருந்தது. தமிழ்மக்கள் என்றால் கடிதம் தம்மக்கள் என்றால் அடுத்த நொடி புதுடில்லியில் கூடாரம் என்று தன் சுயநலனோடு இருந்தவரை புறக்கணிப்பது எந்த வகையிலும் பிழையன்று.

கலைஞர் மீதான இந்த விமர்சனங்களுக்கு அவரது தொண்டரடிப்பொடிகள் சொல்லும் பெரும்பாலான பதில் நீ அதிமுககாரன் இல்லை என்றால் ராமதாசை ஆதரிக்கும் வன்னியர். இந்த இரு எல்லைகளுக்குள் எதிர்ப்பவர்கள் எல்லோரையும் சுருக்கிவிடுவதை வழக்கமாக கொள்வது. இதே சட்டகத்தைத்தான் செம்மொழி மாநாட்டை எதிர்ப்பவர்களுக்கும் பொருத்துவது என இயங்கி வருகிறார்கள். கலைஞரின் மீது விமர்சனம் செய்யத் தொடங்கிய நாளிலிருந்து எனக்கு வன்னியசாதி மாற்றம் நிகழ்த்தியதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.பெரியாரை பின்பற்றும் இவர்கள் சாதி சான்றிதழ் கொடுக்கும் தாசில்தார்களாக மாறுவது பார்த்து நகைக்கத்தான் தோன்றுகிறது இவர்கள் போடும் இந்த சட்டகத்துக்கு வெளியே நிற்கும் பலரும் கலைஞரின் துரோகத்தை எதிர்க்கிறார்கள். எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு ஆயுதம்தான் புறக்கணிப்பு.

இன்று விடுதலைப்புலிகள் இயக்கத்திலுருந்து(அதிகாரப்பூர்வமானதோ/அதிகாரப்பூர்வமற்றதோ) செம்மொழி மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து வந்த மடலுக்கு ஞாயிற்றுக்கிழமையே அரசாங்க அறிக்கையின் மூலம் நன்றி தெரிவிக்க மட்டும் நீங்களும் உங்கள் தலைவரும் கெட்டியாக பிடித்துத் தொங்கும் இந்திய இறையாண்மை அனுமதித்து இருக்கிறதா அல்லது ஈழத்து மக்களை காப்பாற்றுங்கள் என்று மன்றாடும் போது மட்டும்தான் கடைபிடிப்பீர்களா என்ன? மொழிக்கான வாழ்த்தைக்கூட அரசியலாக்கும் நீங்கள் மற்றவர்களை பார்த்து அரசியல் செய்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுவது எப்படி முறையாகும்?

செம்மொழி மாநாட்டை ஆதரிக்கும் இந்த கோமகன்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்று கடந்த 10 நாட்களாக மதுரையிலும் சில தினங்களாக சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழுணர்வாளர்களின் போராட்டத்தைப் பற்றி அயோக்கியத்தனமான மவுனம்சாதிப்பது எதற்காக? ஏன் அவர்கள் தமிழுக்காக போராடவில்லையா? அதைக் கண்டும் காணாது இருப்பது எதனால்? அவர்கள் போராட்டத்தை கலைஞருக்கு எதிரான போராட்டமாக எடுத்துக்கொள்வது எதனால்? அவ்வாறு உங்களை சிந்திக்க வைப்பது எது உங்கள் கட்சி அரசியல்தானே? உங்கள் தேவைக்காக தமிழ் உணர்வாளர்களின் இந்த போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன என்ற அரசியல் செய்வீர்கள் அது குறித்து எந்த சுய கேள்வியும் கிடையாது, வருத்தமும் கிடையாது ஆனால் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு மட்டும் அரசியல் காழ்ப்புணர்வாகி விடுமா? துதிபாடிகள் நிறைக்கும் சட்ட மேலவைக்கான ஒப்புதலை ஜனாதிபதியிடம் இருந்து ஒரு வாரத்தில் பெற்றுவிட முடிந்த வல்லமை கொண்ட கலைஞரால் நீதிமன்றத்தில் தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை 4 ஆண்டுகளாகியும் பெறமுடியாத கையாலதத்தனம் எதனால்?

கலைஞரைத் தூக்கிப்பிடிக்கும் தேவை மனிதாபிமானத்தின் எல்லையை அறிவாலயத்துக்குள் சுருக்கிக் கொண்ட அடி மட்ட திராவிட உடன்பிறப்புகளுக்கும்/கலைஞரின் பிரைவேட் கம்பெனி ஊழியர்களுக்கு வேண்டுமானல் இருக்கலாம். எல்லாத் தமிழனுக்கும் அல்ல

தனிமை

வளர்ப்பு நாயை மருத்துவமனைக்கு
கூட்டிச் செல்லும்
அப்பா
தன் நோய் தீர்க்க செல்கிறார்
தனியாக
Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP